ஏறன் சிவா

எழுந்து எழுந்து குதியுங்கள்! — உங்கள்
இதழில் சிரிப்பைப் பதியுங்கள்!
விழுந்தும் எழுந்தும் ஓடுங்கள்! — நாட்டின்
வீதி யெங்கும் ஆடுங்கள்!

புழுதி மண்ணில் நீந்துங்கள்! — நாற்
பொழுதும் குறும்பை ஏந்துங்கள்!
அழுது அழுது புரளுங்கள்! — ஆட்டம்
ஆடிப் பாடத் திரளுங்கள்!

நோயைக் கண்டால் சிரியுங்கள்! — வந்தால்
நொடியில் அதனை முறியுங்கள்!
தாயின் மொழியைப் பயிலுங்கள்! — மொழித்
தாயின் மடியில் துயிலுங்கள்!

நிலவில் சென்று உறங்குங்கள்! — முழு
நிலவின் ஒளியில் கிறங்குங்கள்!
மலரைப் போல விழியுங்கள்! — நாளும்
மகிழ்ச்சி மணத்தைப் பொழியுங்கள்!

இரவில் கூட மின்னுங்கள்! — வீட்டில்
இன்பத் தொல்லை பண்ணுங்கள்!
மிரட்டும் அன்பர் உடன்வந்தால் — சற்றே
மிரண்ட தைப்போல் நடியுங்கள்!

வீணாய்ப் பிறந்தோம் என்றெண்ணி — விதியில்
விழுந்த மனிதர் நிலைகண்டு;
காண்பீர்! இதுவெம் உலகமென — அவர்முன்
கையைக் கொட்டிச் சிரியுங்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *