நாங்குநேரி வாசஸ்ரீ

85. புல்லறிவாண்மை

குறள் 841:

அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

புத்தியில்லாம போவுததுதான் கொடும் பஞ்சம். மத்த பஞ்சத்தையெல்லாம் பெரிசா எடுத்திக்கிடமாட்டாக ஒலகத்து பெரிய மனுசங்க.

குறள் 842:

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்

கூறுகெட்டவன் ஒரு பொருளக் கொடுத்தாம்னா அதுக்குக் காரணம் அத வாங்கிக்கிடுதவங்க செஞ்ச நல்லகாரியந்தான்னு நெனச்சிக்கிடணும்.

குறள் 843:

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

பகையாளியால கூட செய்ய ஏலாத அளவு எடஞ்சல கூறுகெட்டவன் தனக்குத்தானே செஞ்சிக்கிடுவான்.

குறள் 844:

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

அறியாமைங்கது என்னன்னா ஒருத்தன் தன்னயத்தானே அறிவாளினு நெனச்சி அகராதி புடிச்சு அலயுததுதான்.

குறள் 845:

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்

புத்தியில்லாதவன் தான் படிக்காத நூலையும் படிச்சாமாரி பேசிக்கிட்டுத் திரிஞ்சாம்னா அவன் நெசமாவே படிச்சு தெரிஞ்சுக்கிட்டது மேலயும் மத்தவங்களுக்கு  சந்தேகம் வரும்.

குறள் 846:

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

தங்கிட்ட  இருக்க குத்தங்கொறைய களையாம ஒடம்ப மறைக்க உடுப்பு உடுக்க நெனயுததும் புத்திகெட்ட காரியந்தான்.

குறள் 847:

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

நல்ல புத்திமதிகளக் கேட்டு அதுகணக்கா நடந்துக்கிடாதவக தனக்குத்தானே பெரிய தீங்க செஞ்சுக்கிடுவாக.

குறள் 848:

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

சொந்தபுத்தியும் இல்லாம சொல்புத்தியும் கேக்காம இருக்கவங்களுக்கு அதுவே அவுக ஆயுசுக்கும் நோயா வந்துமுடியும்.

குறள் 849:

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு

கூறுகெட்டவன புத்திசாலியாக்க நெனச்சி பேசுதவன் அவன் முன்ன புத்திகெட்டவனாத்தான் நெனக்கப்படுவான். ஏம்னா கூறுகெட்டவன் தனக்குத் தெரிஞ்சத வச்சிக்கிட்டு தான் பெரிய புத்திசாலினு காட்டிக்கிடுதது தான் காரணம்.

குறள் 850:

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்

இருக்குனு ஒலகத்து பெரியமனுசங்க சொன்ன விசயத்த வேணும்னே இல்லன்னு எதித்துப் பேசுதவன பேயா நெனச்சி வெலக்கி வச்சிடுவாக ஒலகத்து மனுசங்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *