செண்பக ஜெகதீசன்

சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்

வறுமை தருவதொன் றில்.

                                     – திருக்குறள் -934 (சூது)

 

புதுக் கவிதையில்…

இதனை விரும்பி

ஏற்றுக் கொள்வோர்க்கு,

இதுவரை இல்லாத

இன்னலெல்லாம் தந்து

இருக்கும் பெருமையையெல்லாம்

இல்லாததாக்கும்

இந்தச் சூதினைப்போல்

வறுமை கொடுப்பது

வேறொன்றுமில்லை…!

 

குறும்பாவில்…

விரும்பி ஏற்றிடுவோர்க்குத் துன்பந்தந்து,

இருந்த பெருமையும் அழித்திடும் சூதினைப்போல

வறுமை தரவல்லது வேறில்லை…!

 

மரபுக் கவிதையில்…

விரும்பியே யிதனை மேற்கொள்வோர்

விரும்பா வகையில் பற்பலவாய்

வருந்தச் செய்யும் துன்பமதை

வழங்கிக் கெடுத்தே யிதுவரையில்

இருந்த பெருமை யாவையுமே

இலாம லாக்கும் சூதினைப்போல்

திருவிலாத் தீதாம் வறுமையதைத்

தந்திட வல்லது வேறிலையே…!

 

லிமரைக்கூ..

ஈடுபடில் இன்பமழிக்கும் ஈது,

இருக்கும் பெருமையெல்லாம் அழித்துவிடும்

இல்லாத வறுமையேதரும் சூது…!

 

கிராமிய பாணியில்…

ஆடாத ஆடாத

சூதாட்டம் ஆடாத,

சோகத்தக் கொடுக்கும்

சூதாட்டம் ஆடாத..

விரும்பி அதுல

ஈடுபடுபவுனுக்கு

இதுவர இல்லாத

துன்பமெல்லாம் சேந்துவரும்,

இருந்த பெருமயெல்லாம்

இல்லாம அழிஞ்சிபோவும்..

இந்தச் சூதுபோல

வறுமயத் தாறது

வேற எதுவுமேயில்ல..

அதால

ஆடாத ஆடாத

சூதாட்டம் ஆடாத,

சோகத்தக் கொடுக்கும்

சூதாட்டம் ஆடாத…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *