ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

0

மகாதேவஐயர்  ஜெயராமசர்மா 
B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , Dip . in . com , M.Phil Edu ,SLEAS
மேனாள் தமிழ் மொழி கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தமிழர்கள்

பல இடங்களிலிருந்தும் தமிழர்கள் புலம்பெயர்ந்து கங்காரு நாடு என்று சிறப்பித்து அழைக்கும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் வருகை எப்படி அமைந்தது என்பதை அறிந்து கொண்டால்த்தான் தமிழர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் எந்தவகையில் தங்களின் அக்கறையைச் செலுத்தினார்கள் என்று அறிவதற்கு பொருத்தமாக இருக்கும் என்னும் காரணத்தால் தமிழரின் வருகை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

நியூசிலாந்தின் தலைநககரமான வெலிங்டனில் உள்ள நூதனசாலையில் வெண்கல மணி ஒன்று இருக்கிறது. இந்தமணி வில்லியம் கொலன்சோ என்பவரால் நியூசிலாந்தின் நோர்த்லாண்ட் என்னும் இடத்தில் 1836 இல் கண்டுடெடுக்கப்பட்டது. அந்த மணியின் அடியில் இருபத்து மூன்று எழுத்துக்கள் சுற்றிவர இருக்கிறது. இவ்வாறு இருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்தாக இருப்பதுதான் இங்கு மிகவும் முக்கியம் எனலாம். இதனால் இதனைத் தமிழ் மணி என்று அழைக்கலாம்.  இந்த மணியின் அடிப்பாகத்தில் “முகைய்யதின் வகுசுவின் கப்பல் மணி” என்ற கருத்தில் அதிலுள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன. கி.பி 200 இலிருந்து இன்று வரை எக்காலத்தைச் சேர்ந்ததாகவும் இதில் காணப்படும் எழுத்துக்களை அடக்கலாம் என்று Archaeological Survey of India கருதுகிறது. இங்கு காணப்படும்

‘முகைய்யதின்’ என்னும் பெயரைக் கொண்டு இஸ்லாமியா செல்வாக்கு வந்திருக்க இடமுண்டு எனக் கொண்டால் இந்த மணி கி.பி 1500 தொடக்கம் 1600 வரையானகாலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கருதமுடிகிறது. அதே வேளை சோழர் காலத்தில் வெண்கலத்தாலான பொருட்கள் மிகவும் சிறப்புப் பெற்றிருந்தன. நியூசிலாந்தில் ஓக்லண்டில் வசிக்கும் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ராசநாதன் கருத்துப்படி இம்மணியானது சோழர் காலத்தைச் சேர்ந்ததேஎன்றும் – சோழர்களால்த்தான் இம்மணியை இங்கு கொண்டுவரும் ஆற்றல் இருந்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக 1994 இல் தெரிவித்திருக்கிறார்.

தமிழர்கள் குடியேற்றமானது கங்காரு நாட்டில் 1778 இலிருந்து ஆரம்பமாகியதுஎன அறியமுடிகிறது. இப்படியான குடியேற்றமானது 1837, 1838 ஆம் ஆண்டுகளில் அதிகமாக நடந்திருக்கிறது. கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களால் தமிழர்கள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. 1901 க்குப் பின்னர் தமிழர் குடியேற அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. 1965 இலிருந்து தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்குகிறார்கள். ஆரம்பத்தில் வந்தவர்கள் திறமைஅடிப்படையில் தொழில் செய்ய அனுமதிபெற்றே வந்திருக்கிறார்கள். குடியுரிமை பெற்று வாழலாம் என்னும் வாய்ப்பு 1970 ஆம் ஆண்டு வந்ததால் தமிழர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நாட்டுச் சூழல் காரணமாக பெருமளவில் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துசேருகிறார்கள். 2009 ஆம் ஆண்டுக்குபின்னர் படகுகள் மூலமாகவும் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வந்துவிடுகிறார்கள்.

ஏனைய உலக நாடுகளைவிட ஆஸ்திரேலியா வளத்தாலும் இடத்தாலும் பெரியது. அரசியல் ரீதியிலும் நூறுசத விகிதம் ஜனநாயகத்தைப் பேணும் நாடாகவும் விளங்குகிறது. இதனால் மனித மாண்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் உயர்வான பண்பாடும் இங்கு காணப்படுகிறது. இதனால் பலரும் இங்கு குடியேறி வாழ்வதற்குப் பெருவிருப்பத்தோடு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கங்காரு நாடு எனப்போற்றப்படும் ஆஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களும் இரண்டு மண்டலங்களும் என மொத்தம் எட்டு சமஷ்டி அரசாட்சிப் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்தநாட்டினது சனத்தொகை ஏறக்குறைய இரண்டு கோடி எனலாம். இந்தச் சனத்தொகை கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகையினை ஒத்ததாகும். ஆனால் இலங்கையைவிட ஆஸ்திரேலியா நிலப்பரப்பளவில் ஐம்பத்திரண்டு மடங்கு பெரியது என்பது முக்கியமாகும்.

ஆஸ்திரேலியாவில் கூடுதலாகத் தமிழர்கள் வாழுமிடமாக சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தையே கொள்ளலாம். இங்கு தமிழர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் வாழுகிறார்கள் என்பது நோக்கத்தக்கது. அதற்கடுத்ததாக மெல்பேணைத் தலைநகரமாகக் கொண்ட விக்டோரியாவைக் குறிப்பிடலாம். மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா (அடிலெயிட்) தலைநகரமான கன்பரா, வட மண்டலமான டார்வின், தஸ்மேனியா (ஹோபார்ட்) ஆகிய மாநிலங்களிலும் தமிழர்கள் வாழுகிறார்கள்.

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், பீஜி, தென் ஆபிரிக்கா, போன்ற இடங்களில் இருந்தெல்லாம் தமிழர்கள் காலத்துக்குக் காலம் வந்து குடியேறி இருக்கிறார்கள். வேலைக்காகவும், படிப்புக்காகவும், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், வர்த்தகம் செய்யும் நோக்காகவும், என பல்வித நோக்கங்களால் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி உள்ளார்கள் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன.

இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் நாட்டுப் பிரச்சினை காரணமாக வந்தவர்கள் அல்லர். அவர்கள் படிப்பாலும் தொழிலாலுமே இங்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பலர், பல இழப்புகளைச் சந்திந்த பின்பே, இருக்க முடியாமல் உயிரினைக் காப்பாற்றி, மிச்சமிருக்கும் காலத்தை வாழ எண்ணி வந்தவர்கள் எனலாம். இதனால் இந்த இருவகைத் தமிழர்களின் சிந்தனை, செயற்பாடுகள் வேறு வேறாய்  இருப்பதையும் இங்கு கொள்ள முடிகிறது. இவர்களைவிட இன்னொரு வகைத் தமிழர்களாக, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் விளங்குகின்றார்கள். பீஜி, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெயரளவில் தமிழர்களே அல்லாது அவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக இங்கு இருக்கிறார்கள்.

ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும் குடிசன மதிப்பீட்டுப்படி ஐம்பதாயிரம் என்று கணக்குச் சொல்கிறது. குடிசன மதிப்பீட்டினை எடுக்கும்பொழுது வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றும் குறிப்பிடாமல் விடப்படுவதனால் இந்தக் குறைபாடு ஏற்பட்டு, தமிழரின் சரியான தொகை வராமல் இருக்கிறது என்பது முக்கியக் குறிப்பு எனலாம்.

 ஆஸ்திரேலியாவில் தமிழ் அமைப்புகள்

தமிழர்கள் சேருமிடமெல்லாம் கலகலப்பும் இருக்கும். கலவரங்களுக்கும் குறைவிருக்காது. பண்பாடு கலாசாரம் என்பவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காகவே எப்படியோவெல்லாம் உழைப்பார்கள். அப்படி உழைக்கும் பொழுதில் அவர்களுக்கிடையே ஏற்படும் ஒவ்வாத தன்மைகளாலும், கருத்து முரண்பாடுகளாலும் தொடங்கவிருக்கும் அமைப்பு, பல அமைப்புகளாய், பல பெயர்களில் உருப்பெற்று வருவதை எல்லா இடங்களிலும் காணுகிறோம். இப்போட்டி சரியானதா, பிழையானதா என்பதற்கு அப்பால், இப்போட்டியினால் பல தமிழ் அமைப்புகள் உருவாகும் நிலை வருவது மகிழ்ச்சியானதுதானே! இப்படி ஒரு நிலை கங்காரு மண்ணிலும் தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே இப்படியாக விளக்கும் நிலை ஏற்பட்டது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

அமைப்புகளுக்குள் போட்டி. தனிமனித ஆளுமைக்கிடையிலான போட்டி என்று இப்போட்டி, பல அமைப்புகளின் தோற்றத்துக்கு வழிவகுத்து விட்டதையே காண முடிகிறது. என்றாலும் தமிழ் அமைப்புகள் பல, நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழ் மக்கள் வாழுகின்ற கங்காரு மண்ணில் நூற்றுக்கு அதிகமான சங்கங்கள் இருக்கின்றன. தமிழ் மக்களின் ஒன்றுகூடலுக்கும், தாயக மண்ணின் துயர் துடைக்கும் நோக்கத்துக்குமாக ஆரம்பத்தில் இச்சங்கங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட மனோபாவங்களின் விளைவால் சங்கங்கள், அமைப்புகள் பிளவுக்கு ஆளாகின என்பதும் நோக்கத்தக்கதே.

டாக்டர் ஆர். சிவகுருநாதன் தலைமையில் “இலங்கைத் தமிழர் சங்கம்” சிட்னியில் நிறுவப்பட்டது, இச்சங்கம் 1982 முதல் “ஈழத் தமிழர் கழகம்” என்று இன்றுவரை இயங்கி வருகிறது. சிட்னி “தமிழ் மன்றம்” 1978இல் ஆரம்பிக்கப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் பேராசிரியர் எலியேசர் அவர்களால் 1978இல் “விக்டோரியா இலங்கைத் தமிழ்ச் சங்கம்” தொடங்கப்பட்டது. பின்னர் இச்சங்கம் 2000ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதியில் அப்போதைய தலைவர் சட்டத்தரணி பாடுமீன் சு. ஶ்ரீ கந்தராசா தலைமையில் “விக்டோரியா ஈழத் தமிழ்ச் சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டது.

1979இல் மேற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1986இல் “இலங்கைத் தமிழர் சங்கம்” 1990 குயின்ஸ்லாந்து ஈழத் தமிழர் சங்கம், 1983 கன்பரா தமிழ்ச் சங்கம், 1983 தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1984 தென் துருவத் தமிழ்ச் சம்மேளனம், இவ்வாறு சங்கங்கள் இருக்கின்ற வேளை சிட்னி, விக்டோரியா போன்ற இடங்களில் மேலும் பல சங்கங்கள் தோற்றம் பெற்றுத் தமிழ்ப் பணிகள், சமூகப் பணிகள் ஆற்றி வருகின்றன.

சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் – ஆஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கம், மெல்பேணைத் தலைநகராகக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் – ஆஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், விக்டோரியா தமிழ் கலாசாரக் கழகம், மெல்பேண் தமிழ்ச் சங்கம், விற்றல்சீ தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலிய தமிழ் கலை இலக்கியச் சங்கம், கே சீ தமிழ் மன்றம் என்றும் தமிழ்ச் சங்கங்கள் இருந்து பணியாற்றி வருகின்றன. இவற்றைவிட மூத்த பிரஜைகளுக்கான சங்கங்கள், பல மாநிலங்களில் அமைந்து செயலாற்றி வருகின்றன. 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விக்டோரியா மூத்த பிரஜைகள் சங்கமே கங்காரு மண்ணில் முதலில் அமைக்கப்பட்டது என்னும் பெருமையைப் பெற்றுக்கொள்கிறது. இப்படிப் பல சங்கங்கள். தமிழர் அமைப்புகள் தொடங்கப்பட்டதற்குக் காரணங்கள்தான் என்னவாக இருக்கும் என்பதை மேலோட்டமாக ஆரம்பத்தில் கண்டோம். ஆனால் அப்படியான சிந்தனைகள் காலவோட்டத்தில் விரிவடைந்து தமிழர் கலை, கலாசாரம், தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம்

ஆஸ்திரேலியாவில் தமிழரின் பரம்பல். அதனால் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் அமைப்புகள் இவற்றுக்கும் குழந்தை இலக்கியத்துக்கும் என்னதான் தொடர்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? தமிழர்கள் பலவகையினராய் பல நாடுகளில் இருந்து பல தேவைகளுக்காக வந்தாலும் – தமிழ் பேசும் தமிழர்களும் அவர்களது சிந்தனையும் தங்களின் மொழிமீதும், தங்களின் பண்பாடு மீதும், மாறாத பற்றுடன் இருந்தது – இருக்கிறது என்பதைத்தான் ஆஸ்திரேலியாவில் அவர்களது செயற்பாடுகளினால் கண்டுகொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமெனலாம். இலக்கு + இயம் என்பதுதான் இலக்கியம் ஆகிறது என்பதை இங்குள்ள தமிழ் பேசும், தமிழை நேசிக்கும், தமிழைச் சுவாசிக்கும் அத்தனைத் தமிழர்களும் நம்புகிறார்கள்.

தமிழ்ப் படைப்பாளிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் சஞ்சிகைகள் பல, இங்கிருக்கின்றன. தமிழ் விழாக்கள், தமிழ்ப் போட்டிகள், விவாத அரங்குகள், நாட்டிய நிகழ்ச்சிகள் யாவும் இங்கு இடம்பெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் அதன் வழியில் செல்லுகிறார்கள் என்பதே.

குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும். எழுதுவதற்கு மிகவும் சிரமமான இலக்கியம் எது என்றால் அது “குழந்தை இலக்கியமே” குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டால்தான் அது சாத்தியமாகும். குழந்தைகளின் இலக்கியம், இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் “குழந்தை இலக்கியமே”. ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களே ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கான படைப்புகளை ஒரு முக்கியப் பணியாக நினைத்தே அவர்கள்  படைக்கின்றார்கள்.

சிறுகதைகள், நாடகங்கள், பாடல்கள், இறுவெட்டுகள், என்ற வகையிலும் நாட்டிய நாடகங்கள், நடனங்கள், வில்லுப்பாட்டுகள், என்ற வகையிலும் குழந்தைகளுக்கான படைப்பு முயற்சிகள் இங்கு அமைந்து காணப்படுகின்றன. தமிழைத் தங்களின் பிள்ளைகள் மறவாமல் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பெற்றோர்கள் பலர் விரும்பும் காரணத்தால் ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பமாகின. ஆங்கிலத்தையே மொழியாகக் கொண்ட ஆஸ்திரேலியாவில் வளரும் தங்கள் பிள்ளைகள், ஆங்கிலத்தையே முதல் மொழியாகப் பயிலும் நிலை இருப்பதனால் நாளடைவில் தாய் மொழியான தமிழையும், பண்பாட்டையும் மறந்துவிடுவார்களோ என்னும் ஏக்கமும் பயமும் பெற்றோர் பலரிடம் இங்கு அடிமனத்தில் வேரூன்றி இருக்கிறது. அதனால் எப்படியும் அவர்களுக்குத் தாய் மொழியான தமிழினைக் கற்றிடும் நிலையினை ஏற்படுத்த எடுத்த முயற்சியாய் அமைந்தனவே இங்கு இருக்கும் தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

தமிழ் அமைப்புகள் பலவும் தமிழர்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளை ஆரம்பித்திருக்கின்றன. அப்பள்ளிகள் வார இறுதி நாட்களில் மட்டுமே இயங்குகின்றன. அங்கு பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகத்து முன் தேர்வுக்குமான பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகத்து முன்தேர்வுக்குத் தமிழ்  ஒரு பாடமாக எடுக்க, ஆஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது நல்லவொரு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் பலர், தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு ஆர்வத்துடன் அனுப்பி வைக்கிறார்கள். இப்பள்ளிகளிலே ஆடல், பாடல், கதை சொல்லல், நாடகம் என்று குழந்தை இலக்கியம், தன்னையறியாமலேயே வளர்ந்து வருகிறது.

குழந்தை இலக்கியம் என்று தெரியாமலேயே அங்கிருக்கும் ஆசிரியர்கள் குழந்தை இலக்கியத்தினைப் பல்வேறு வகைகளில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எவருமே ஆசிரியப் பணி ஆற்றியவர்கள் அல்லர். ஒரு சிலரே ஆசிரியராக இருந்து அனுபவம் பெற்றவர்கள். ஏனையோர் வைத்தியராகவும், பொறியியலாளராகவும், தொழில்நுட்பவியலாளராகவும், கணக்காளராகவும் இருக்கிறார்கள்.

இவர்களுக்குக் குழந்தை இலக்கியம் என்றால் என்ன என்பது தெரியாது. ஆனால் இவர்கள் குழந்தை இலக்கியத்தைக் கற்பிப்பதில் தம்மை அறியாமலே ஈடுபடுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தமக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளார். அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர். சமூக அக்கறை கொண்டவர். அடுத்த  தலைமுறையினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை, சிறப்பினைப் பெற்றது எனலாம்.

ஆரம்பத்தில் சிறுகதை எழுதியவர் பின்னர் கவிஞராகவே மலர்ந்தார். கவிஞராகவே இருக்கவே ஆசையும் கொண்டார். தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் என்றதும் எல்லோர் நினைவிலும் வந்து நிற்பவர் கவிமணி அவர்களே. அம்பியையும் ஈழத்துக் கவிமணி என்றுதான் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் பற்றும் பாசமும் கொண்டு அவர்களுக்காக கவிதை இலக்கியத்தை வளர்த்து நின்றார். கணித ஆசிரியராய் இருந்தவரின் எண்ணத்தில் குழந்தைகள் இலக்கியம் கருக்கொண்டது என்றால் அந்த அளவுக்கு அம்பியின் ஈடுபாடு குழந்தைகள் பால் மிக்கிருந்தது என்றுதான் கருதமுடிகிறது.

குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதற்கு கடின உழைப்பு. பொறுமை, சொற்களஞ்சிய அறிவு மிகவும் முக்கியம் ஆகும். குழந்தைகளின் கவிதைகள் அவர்களின் நாட்டப் பொருட்களை மையமாகக் கொண்டிருக்கவும் வேண்டும். வீண் சொற்களையோ, வர்ணனைகளையோ, குழந்தைப் பாடல்கள் கொண்டிருப்பது கூடாது. இவற்றையெல்லாம் மனமிருத்தியே கவிஞர் அம்பி அவர்கள் குழந்தை இலக்கியத்தைப் படைத்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கான கவிதைகளையும் தந்திருக்கிறார். ஆஸ்திரேலிய தமிழ்க்குழந்தைகள் தமிழில் பேச வேண்டு. பேசிப் பேசி மகிழ வேண்டும் என்பதே அவரின் பேரவாக இருந்தது. இந்த எண்ணத்தை மனமிருத்தியே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தைக் கட்டி எழுப்புவதில் அம்பி அவர்கள் பெரும்பங்கு வகித்தார் என்பதை இங்கு வாழும் தமிழர்கள் அனைவருமே ஒரு மனதாக ஏறுக்கொள்ளுவார்கள்.

“கொஞ்சும் தமிழ்”, “பாலர் பைந்தமிழ்” என்னும் கவிதை நூல்களை குழந்தை இலக்கியமாய் அளித்திருக்கிறார். இவரின் அணுகு முறை ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தியதுதான் என்பதே இங்கு முக்கியமாகும். சூழலுக்கு ஒவ்வாத விடயங்களை யார் படைத்தாலும் அஃது பொருத்தம் அற்றதாகவே ஆகிவிடும். அப்படிப் பாடிஅமைப்பதை விட படைக்காமலே இருந்திடலாம். நீண்ட கால ஆசிரியப்பணி. பல நாடுகளில் ஆசியப்பணி. புலம் பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளின் உள்ளக்கிடக்கை இவற்றை எல்லாம் மிகவும் உன்னிப்பாகாகக் கவனத்தில் கொண்ட  காரணத்தினால்த்தான் அம்பி அவர்களின் குழந்தை இலக்கியம் ஆஸ்திரேயாவில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது எனலாம்.

“நீங்கள் இனிய தமிழ் வேச வேண்டு. பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேசி மகிழவேண்டும். நீங்கள் இனிய பாடல்கள் பாட வேண்டு. பாடப் பழக வேண்டும். இனிமையாகப் பாடி மகிழ வேண்டு. நீங்கள் பாடல்கள் பாடி ஆட வேண்டும். பாடி ஆடி மகிழ வேண்டும். பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடும்போது அபிநயம் செய்து மகிழ வேண்டும். அபிநயம் செய்யப் பழக வேண்டும். அபிநயத்தால் எல்லோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடி அபிநயஞ் செய்து மகிழும்போது அறிந்த சொற்களின் பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். புதிய சொற்களையும் அறிதல் வேண்டும். புதிய சொற்களுடன் அறிவு வளர்ச்சியும் பெறுதல் வேண்டும்.” என்று – ” கொஞ்சும் தமிழ் பாடல்கள்” நூலில் அம்பி அவர்கள் தனது மனத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பியின் பாடல்கள் தனித்துவம் மிக்கன. குழந்தைகளின் நாவில் உச்சரிக்கக் கூடிய எளிய தமிழ், அவர்களின் சிந்தையில் பதியக் கூடிய ஓசை நயத்துடனான சொற்கோலங்கள். இதனால் குழந்தைகள் அந்நியப்பட்டு விடாமல் பாடலுடன் நெருங்கி ஒட்டுற வாடுகின்றனர். இதுவேதான் “அம்பி” என்னும் குழந்தை இலக்கியப் படைப்பாளருக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் எனலாம். வினா விடை முறையிலே பல பாடல்களை அமைத்திருக்கிறார். அங்கு குழந்தைகளின் உளவியலை அவர் நன்கு அறிந்து எழுதியிருக்கிறார் என்பதையே காணமுடிகிறது. ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி

“அம்பி மழலை” என்னும் குழந்தை இலக்கிய நூலை ஆக்கியிருக்கிறார். கங்காரு ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளம். அதனை சிறியவர் முதல் பெரியவர்வரை விரும்பி இரசிப்பார்கள். இந்த நாட்டில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு விளங்காத விலங்குகளை அறிமுகப்படுத்தவோ அல்லது அவை பற்றி சொல்லுவதோ பொருத்தம் அற்றது என்பதை அம்பி அவர்கள் தெரிந்து காரணத்தால் “ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக்குட்டி” என்று பாடாமல்

   முன் இரண்டு காலைத் தூக்கி
   முன்னே பாய்ந்து செல்குவேன்

   பின் இரண்டு காலில் துள்ளி
   பாய்ந்து பாய்ந்து செல்லுவேன்

   சின்னக்குட்டியை வயிற்று பையில்
   செருகிக் கொண்டு செல்லுவேன்

   என்னைப் போன்ற அன்னை யாரோ
   என்று கேட்டுச் செல்லுவேன்

   என்னைத் தெரியுமா – என்
   பெயரைத் தெரியுமா?    

   என்று கங்காரு பற்றி குழந்தைகளுக்கு காட்டுகிறார் அம்பி.

“கொஞ்சும் தமிழ்” அழகிய வண்ணப்படங்களுடன் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியமாய் வந்திருக்கிறது. அத்துடன் “பாலர் பைந்தமிழ்” படைப்பும் சேர்ந்துவிட்டது.

“தமிழில் சிறுவர் இலக்கியம் இல்லாமை பெருங்குறையாகும். சிறுவர் இலக்கியத்தில் நாம் பின்தங்கி விட்டோம். அத்துறையில் “அம்பி யுகம் ” ஆரம்பமாகி விட்டது என்று நாம் பெருமையும் பூரிப்பும் அடைய வேண்டும்.” என ஈழத்து அறிஞர் அஸீஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

“ஆஸ்திரேலியச் சிறுவருக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து பிறமொழிச் சூழல்களில் வளரும் எல்லாச் சிறுவருக்கும் ஏற்ற வகையில் அம்பியின் பாடல்கள் அமைகின்றன” என்று கலாநிதி. கவிஞர் கந்தவனம் குறிப்பிடுகிறார். இப்படி பலரும் அம்பியின் குழந்தை இலக்கியம் பற்றி விதந்தே நிற்கிறார்கள். தற்பொழு தொண்ணூறு அகவை கடந்து ஆஸ்திரேலிய மண்ணில் அம்பி அவர்கள் வாழுகிறார்கள் என்பது குழந்தை இலக்கியத்துக்கே பெருமை எனலாம். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைபோல், இன்று ஆஸ்திரேலிய கவிமணியாய் வாழும் அம்பி ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கிறார் என்பதுதான் உண்மை.

அம்பிக்கு அடுத்த நிலையில் குழந்தை இலக்கியத்தை கையில் எடுத்தவர் என்னும் வகையில் வானொலிமாமா என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு நா. மகேசன் அவர்கள் விளங்குகிறார்கள். கணக்காளராக வேலை பார்த்தாலும் இவர் இதயத்தில் குழந்தைகள் பற்றிய சிந்தனையே கருக்கொண்டு இருந்தது எனலாம். இலங்கை வானொலியில் “சிறுவர் மலர்” என்னும் நிகச்சியைத் தொகுத்து வழங்கி பிரபல்யம் அடைந்தமையால் அவரை  “வானொலி மாமா” என்று அழைக்கும் அளவுக்கு செல்வாக்கினைப் பெற்றுவிட்டார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தபின்பும் அவர் வானொலி மாமா ஆகவே இருக்க விரும்பினார்.

ஆஸ்திரேலியாவில் வாழும் குழந்தைகளை மனதில் வைத்து அவர்களுக்காக பாடல்கள், நாடகங்கள், கதைகள், என்று தனது ஆளுமையை வெளிப்படுத்தி பயனுறச் செய்தார். சிறுவர்களுக்காக பாடல்கள் எழுதினார்.  “பாட்டும் கதையும்” என்று கதைப்பாடல் நூலையும். சிறுவர் கவியரங்கக் தொகுதியாய் “நாகடக்கவியரங்கு நூலையும், “ஒளவை வந்தாள்” என்னும் மாணவர் மேடை நாடக நூலையும், தந்ததோடு நின்றுவிடாமல் சிறுகதையாக சிறுவர்களுகாக ” ஆஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்னும் அருமையான நூலையும் தந்திருக்கிறார். அதுமட்டுமன்றி “திருவிழா” என்னும் சிறுவர் சைவசமய நாவலையும் தந்து சிறப்பித்து இருக்கிறார்.

“ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ச் சிறுவர்களோடு பழகியபோது அவர்களின் தமிழ் ஆர்வத்தை உணர்ந்தேன். ஆர்வம் இருப்பினும் அவர்களது வாழ்க்கை நிலை அவர்களின் தமிழ் அறிவுக்கும் – தமிழ் நாட்டுச் சூழல் அறிவுக்கும் தடையாகவே இருந்தது.

ஆத்திசூடி வாக்கியங்களை ஆஸ்திரேலியச் சூழலில் பொதிந்து கதைகளாக தந்தால் இங்குவாழும் சிறுவர்கள் விளங்கிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன். பல நண்பர்கள் இதை ஆதரித்து எழுதும்படி தூண்டினார்கள். அதன் விளைவுதான் “அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்று இக்கதை நூலின் முன்னுரையில் வானொலிமாமா மகேசன் கூறுவது மனமிருத்த வேண்டிய விடயம் எனலாம்.

பன்னிரண்டு கதைகள் இதில் இடம் பெறுகின்றன. அறச்சாலைப் பெண் – (அறஞ்செய விரும்பு) , பூங்காவில் புகுந்தவன் – (ஆறுவது சினம்) புத்தகம் போயிற்றே – (இயல்வது கரவேல்) கண்தானம் – (ஈவது விலக்கேல்), குத்துச் சண்டை – (உடையது விளம்பேல்) மோட்டார் ஓட்டுநர் – (ஊக்கமது கைவிடேல்), கல்வியா செல்வமா – (எண் எழுத்து இகழேல்), மதிய உணவு – (ஏற்பது இகழ்ச்சி), தமிழ்க் கிழவர் – (ஐயம் இட்டுண்), வாழைப்பழத் தோல் – (ஒப்புர ஒழுகு), அறிவுச் சக்கரம் – (ஓதுவது ஒழியேல்),  பரிசளிப்பு விழா – (ஒளவியம் பேசேல்) என்னும் வகையில் ஒளைவையின் ஆத்திசூடியை விளக்கும் பாங்கில் அமைந்திருபதுதான் இதன் சிறப்பு எனலாம். வானொலி மாமாவாய் ஆகிவிட்ட மகேசன் அவர்கள் ஆஸ்திரேலியாவிலே இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இன்பத்தமிழ் வானிலியில் “சிறுவர் மலர்” நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பதும் மனங்கொள்ளப் படவேண்டிய முக்கிய அம்சம் எனலாம். அம்பியும் வானொலிமாமா மகேசனும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

பச்சையப்பன்கல்லூரியில் அறிஞர் மு. வ. அவர்களிடம் கல்வி கற்று இலண்டனில் பக்தி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பல உயர் பதவிகளை வகித்த ஆ. கந்தையா அவர்கள் இன்று எம்மிடையே இல்லாது விட்டாலும் அவரும் குழந்தை இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி அவர்களுக்காக “மழலை அமுதம்” என்னும் குழந்தைப் பாடல் நூலையும், “கங்காரு தாவித் தாவி ஓடுவதேன்”, வால் நீண்டது எப்படி” என்னும் சிறுவருக்கான நூலினையும் தந்திருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்து அங்கேயே தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு  செய்த தமிழ் ஆராய்ச்சி அறிஞரான முனைவர் ஆ. கந்தையா அவர்களும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டார் என்பது உண்மையான விடயமாகும்.

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநராக விளங்கிய ஜெயராமசர்மா அவர்கள் அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி பல கவிதைகளையும் இசைப்பாடல்களையும் தந்திருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அநேகமானவர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடிவருகின்றனர். இதனை அவதானித்த ஜெயராமசர்மா அவர்கள் இங்குள்ளவர்கள் பிறந்தநாள் விழாவில் பாடத்தக்க வகையில் குழந்தைகளை வாழ்த்தி குழந்தைகளின் இலகுவான மொழிநடையிலேயே “தமிழில் பிறந்தநாள் வாழ்த்து” பாடியிருக்கிறார். அதனை பலரும் விரும்பி இப்பொழுது தங்கள் வீடுகளில் பிறந்தநாளின் பொழுது குழந்தைகளை வாழ்த்திப் பாடிவருவது குறிப்பிடத்தக்கதாகும். மெல்பேணின் தென்கிழக்குப் பகுதியில்

கேசி தமிழ் மன்றத்தத்தால் “இளவேனில்” என்னும் சஞ்சிகை சிறுவர்களை மையப்படுத்தியே வெளிவருகிறது. ஆஸ்திரேலியாவில் சிறுவர்களை மையப்படுத்தி வெளிவரும் சஞ்சிகை இதுவாகவே இருக்கிறது. இச்சஞ்சிகையில் ஜெயராமசர்மா குழந்தைகளுக்காக கவிதைகளை எழுதி வருகிறார். அதனைப் படித்த குழந்தைகள் ஆர்வமாய் வாசித்து சுவைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். “குருவிக்கூடு” , ²உயர்ந்திடுவோம் வாழ்வினிலே”, ²அழகுதமிழ் பேசிடுவோம்” ஆகிய பாடல்களை இளவேனில் தாங்கி பல குழந்தைகளின் மனதில் இருத்தியே வைத்திருக்கிறது.

“உணர்வுகள்” என்னும் கவிதை நூலினை ஜெயராமசர்மா அவர்கள் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். அதில் மொழி என்னும் பகுதியில் குழந்தைகளுக்கான பல கவிதைகள் இடம் பெறுகின்றன. “புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யிருக்கிறது. தமிழ் மொழியை அழிந்துவிடாமல் காப்பாற்றக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் பலவற்றை அடுத்துவரும் “மொழி”  என்னும் பிரிவிலே காண்கிறோம் என்று “ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஞானசேகரன் ஜெயராமசர்மாவின் உணர்வுகள் கவிதை நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அன்னைத் தமிழ்மொழிமீது அலாதி கொண்டு பிள்ளைகட்கு தமிழ் மொழிமேல் மோகம்வர யாத்த கவிதை சொல்லனைத்தும் சுகம்தரவே சுந்தரக் கவிதையென்பேன். “மாண்மிகு அம்மாவை மம்மியென்றழைக்கலாமோ?” அருமை வரிகளிட்டு அவசியக் கருத்தை அசத்தியிருக்கின்றீர்” என்று கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை (பம்மல்) நிறிவியவரும் அதன் பொதுச் செயலாளருமான காவிரி மைந்தன் “உணர்வுகள்” கவிதை நூலில் “சுவைத்தவர்கள் சொல்லுகிறார்கள்” பகுதியில் தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்தி இருக்கிறார். கவிதைகளுடன் ஜெயராமசர்மாவால் சிறுவருக்காக ‘மலர்கள்”, “சிரிப்பு” “பொங்கல்”, என்னும் நாட்டிய நாடகங்களும் – “மாமா வருகிறார்”, “நல்ல காலம்” ஆகிய வில்லுப்பாட்டும் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆஸ்திரேலியாவின் குழந்தை இலக்கியத்தில் நாடகம் என்னும் சொல்லினை உச்சரித்தால் அங்கு நிச்சயமாய் வந்து நிற்பவர் மாவை நித்தியானந்தன் அவர்கள்தான். விக்டோரிய மாநிலத்தில் பல தமிழ் பள்ளிகள் இருந்தாலும் மாவை நித்தியால் தொடங்கப்பட்ட “பாரதி பள்ளி” கற்பித்தல், ஒழுங்கமைப்பு, ஆசிரியர் கட்டமைப்பு, தமிழ் ஆர்வம், யாவற்றிலும் முன்னிற்கிறது என்பதுதான் அதன் விசேடம் எனலாம். இருபத்து ஐந்து வருடமாக இயங்கிவரும் இப்பள்ளியில் தமிழ் கற்க பல மாணவர்கள் விரும்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு நித்தி அவர்கள் நல்ல ஆசிரியராய் நல்ல நிர்வாகியாய் தமிழின்மீது ஆராக் காதல் கொண்டவராய் விளங்குகிறார்.

 “பாப்பா பாரதி” என்னும் இறுவெட்டு இங்குள்ள சிறுவர்களை மையப்படுத்தி முதலில் வெளிவந்த மிகவும் சிறந்த குழந்தை இலக்கிய படைப்பு எனலாம். இதுவரை மூன்று பாகங்கங்களில் “பாப்பா பாரதி” இறுவெட்டு வந்திருக்கிறது. இங்குள்ள சிறுவர்களின் மனங்களில் நித்தியின் இம்முயற்சி பதிந்திருக்கிறது – வெற்றி பெற்றிருக்கிறது என்பதையே காட்டுகிறதல்லவா? சிறுவர்களுக்கென்றே “சட்டியும் குட்டியும்”, “நாய்க்குட்டி ஊர்வலம்”, “சின்னச் சின்ன நாடகங்கள்”, என்னும் நாடக நூல்களையும் நித்தி தந்திருக்கிறார்கள். ஐந்து வயதுமுதல் பத்துவயது வரையும், எட்டு வயது முதல் பதின்மூன்று வயது வரையும், பின் பதின்மூன்று வயதுக்கு மேற்பட்டோர் என்று தனது நாடகங்களை நித்தி அவர்கள் வகுத்துத் தந்திருக்கிறார். வயதுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் அவ்வவ் வயதினருக்கு ஏற்ற சொற்களை அங்கே அவர் முக்கியத்துவப்படுத்தி இருப்பது அவரிடம் காணப்பட்ட  குழந்தைகளின் உளவியல் அறிவு என்றேதான் கருதமுடிகிறது.

“சிறுவருக்காக எழுதுவது என்றுமே எனக்கு மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக இருந்திருக்கிறது. கணிசமான காலமாக நான் எழுத்துத் துறையில் ஈடுபட்டு அது தரும் ஆத்ம திருப்தியை அனுபவித்து வந்திருந்தாலும், நூல் வெளியீட்டீல் அக்கறை செலுத்தவில்லை. இப்பொழுது எனது சிறுவர் நாடகங்கள் தொகுப்புகள் வெளிவர உள்ளன. அவற்றில் இது முதலாவது. இத்தொகுப்புகள் வயதின் அடிப்படையில் அமைய உள்ளன.

வளர்ந்தோருக்கான நாடக முயற்சிகளில் ஈடுபட்டிருந்த எனது ஆர்வம் சிறுவர் நாடகத்தின் பால் திரும்பியதற்கு புலப்பெயர்வு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. குழந்தைகள் தமிழ் கற்கவென 1994 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பாரதி பள்ளியை ஆரம்பித்தேன். இது குழந்தைகள் பற்றிய அறிவையும், அவர்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள எனக்கும் ஒரு பள்ளியாயிற்று. ஒவ்வொரு வருடமும் இருநூற்றுக்கு மேற்பட்ட ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்குத் தமிழிற் பேசி நடிக்க பயிற்றுவித்து அவர்களை மேடையில் காண்பது ஒரு தேவையாக இருந்தது. இருந்து வருகிறது.

இந்த நாடகங்களை எழுதுகையில் சொற்சிக்கனம், எளிமை, வயதுக்கேற்ற சொற்கோவை ஆகிய அம்சங்களில் கவனம் சுலுத்த முயன்றுள்ளேன். பாடல்களும் ஓசை நயத்துடன் கூடிய வார்த்தைக் கோலங்களும் இந் நாடகங்களில் முக்கியத்துவம் பெறுவதையும் காணமுடியும். இந்த நாடகங்கள் யாவும் பாரதி பள்ளியில் முதல் மேடையேற்றம் கண்டவை. அத்துடன் சிறுவர் சிறுமியரை நன்கு கவர்ந்தமையுமாகும். தமிழிலுள்ள சிறுவர் நாடகத்தின் அகலமும் ஆழமும் மேலும் விரிதல் வேண்டும். வகை வகையான தன்மையில் வித்தியாசப்படும், கலைத்துவம் மிக்க நாடகப் பிரதிகள் பல்வேறு வயதினருக்கும் தேவைப்படுகிறது. இந்தத் தேவைக்கான ஒரு துளி பங்களிப்பாக எனது நாடகத் தொகுப்புகள் அமையுமாயின் அதுவே நான் அடைய விரும்புவதாகும், என்று மாவை நித்தியே குறிப்படுவது இங்கு நோக்கத்தக்கதாகும்.

வானொலி மாமாவாக மகேசன் அவர்கள் இருப்பதுபோல வானொலி மாமியாக புவனா இராஜரட்ணம் அவரகள் ஆஸ்திரேலியாவில் விளங்குகின்றார். சிறுவர் நாடகங்களை எழுதினார். இசைப்பாடல், நாட்டியப்பாடல், வில்லுப்பாடு என்று இவரின் ஆளுமை ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இடம் பெற்றது எனலாம். இவரின் வழியிலே ராணி தங்கராசா அவர்கள் மாண வர்களை மையப்படுத்தி நாடகங்கள் எழுதி இயக்கியும் உள்ளார்.இவர்களுடன் திரு சந்திரகாசன் அவர்களும் வந்து நிற்கிறார். இவரும் சிறுவர் நாடகத்தை வளர்பத்தில் பெரும் ஊக்கமுடையவராக விளங்குகின்றார்.

மெல்பேண் மணி என்று அழைக்கப்படும் கனகமணி அவர்கள் நாடகங்கள், கதைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், வானொலிச் சித்திரங்கள் என்று பன்முகமாக தன்னை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் “சிறுவர் கதம்பம்”

“மணியாரம்” என்னும் பல்சுவைக் கதம்ப மாலை “பாசத்தின் வலிமை” என்னும் நூலில் இடம்பெறும் நாடகங்கள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இணைந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் சிறுவர்களுக்காக பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். அவர் ஒரு சிறந்த ஊடகவிலாளராக இருக்கின்ற காரணத்தால் ஆஸ்திரேலிய குழந்தைகளின் மனநிலையினை நன்கு அறிந்து வைத்து அதற்குத் தகுந்தாற் போல தனது பங்களிப்புக்களை வழங்கிவருகிறார் எனலாம். இங்குள்ள சிறார்கள் கணனியிலேயே தங்களின் பொழுதினை செலுத்திவருவதைக் கண்ணுற்ற முனைவர் சந்திரிகா அவர்கள்

“சிறுவருக்கான கணனி” என்னும் நூலினை ஆக்கிக் கொடுத்திருக்கிறார். “வர்ணம்” என்னும் பெயரில் ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு நல்ல ஒரு கதை நூலினையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் முனைவர் சந்திரிகா அவர்களினால் “கொசுவீட்டில் பாயசம்” என்னும் வர்ணப்படங்கள் கொண்ட கதை நூல் தொகுத்து வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முனைவர் சந்திரிகாவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

யசோதரா பாரதி சிங்கராயர் பல்மருத்துவர். ஆனால் நடனம், இசை, யாவற்றையும் கற்றுத் தேர்ந்தவர். ஈழத்தில் வாழ்ந்த புகழ்பூத்த தமிழ் புலவர் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் பேரனின் மகளாவார். இவரின் தந்தையார் சோமசுந்தர பாரதியும் பல்மருத்துவராவார். அதேவேளை இவர் ஒரு வரகவியாகவும் விளங்குகிறார். வாழையடி வாழையென தமிழும் இவர்களுடன் இணைந்தே வந்து கொண்டிருக்கிறது. மருத்துவம் படித்தாலும் மருத்துவத்தில் ஈடுபடாமல் குழந்தைகளை மனமிருந்தி – அவர்களுக்கு தமிழ் கற்பிப்பதிலும், தான் கற்ற இசையை , நடனத்தை, கற்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி ஆத்மதிருப்தி அடைகின்றார் என்றுதான் சொல்லல் வேண்டும்.

1997 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த இவர் சிட்னியிலேயே வாழ்ந்து வருகிறார். சிட்னியிலுள்ள தமிழ் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு நடனம், நாட்டிய நாடகம், என்று தனது பணியினை மேற்கொண்டு வெற்றியும் ஈட்டி உள்ளார். இவரால் 400 க்கு மேற்பட்ட சிறுவர் நாட்டிய நடன நிகழ்ச்சிகள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. மூன்று வயது தொடக்கம் பதினாறு வயது வரைக்குமான குழந்தைகளை மையப்படுத்தி இவரின் செயற்பாடுகள் இன்றும் சிட்னியில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

 “பரா ஒலம்பிக் 2000” சிட்னியில் நடைபெற்ற வேளை 68 குழந்தைகளை நடன நிகழ்வும், கிருஷ்ண அவதாரங்களைக் காட்டும் நாட்டிய நாடகமும் இவரின் ஆற்றலை யாவரும் அறியப் பண்ணியது எனலாம். 6 வயது தொடக்கம் 10 வயதுவரையுள்ள  52 குழந்தைகளை வைத்து வீதியிலே காவடி நடனம் ஆடச்செய்து யாவரையும் பிரமிக்க வைத்தார். “கார்த்திகை மாலை”,  “சுனாமி”, “கிருஷ்ண வதாரம்”, என்பன ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கும் பாங்கில் அமைந்திருக்கின்றன என்பதுதான் உண்மையெனலாம்.

 “புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சிகளைப் பார்ப்பதும், வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டு அதனையே வெறித்துப் பார்த்துக்கொண்டும் கெடும் குழந்தைகள் எண்ணிக்கை கூடுதலாகவும், பெற்றோரின் பங்கெடுப்பு குடும்பநேரங்களில் குறைந்தபடியாலும் , பல வித்தியாசங்களை உணர்ந்தேன். இந்த நிலையை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்கள், மூலம் மாற்றி என்னிடம் பயிலும் மாணவர்கள் மத்தியில் வெற்றியும் கண்டுள்ளேன். நடனப் பயிற்சியின் முன் கதையாக அந்த நடனக் காட்சிகளை சொல்லிக் கொடுப்பேன். பெற்றோர் சில பேருக்கும் கதைகள் பல சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.இதனால் குழந்தைகள் அந்தக் கதைகளை தாங்களாகவே ஆராய்ந்து படிக்கும் ஆர்வம் தூண்டப்படுகின்றது. என்னைச் சில பேர் கேட்பார்கள் – நல்ல பாட்டிமாதிரி கதை சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று ….. அது எனக்கு பெரிய திருப்தியைக் கொடுக்கும். ஆம் நான் அந்த பாட்டியின் இடைவெளியை நிரப்பும் திருப்திதான் அது. இவ்வாறு யசோ அவர்கள் தன்னுடை அனுபவத்தை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் இப்படியான முயற்சிகள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு நல்லதோர் பக்க பலம் என்றே எண்ண முடிகிறது.

மாத்தளைச் சோமு அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர். இவர் பல படைப்புகளை சிறுவர் அல்லாதவர்க்கே வழங்கி வந்திருக்கிறார் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவருள்ளும் ஒரு குழந்தைகள் உலகம் இருந்திருக்கிறது என்பதை இவரின் குழந்தை களுக்கான கவிதைகளும், குட்டிக்கதைகளும், காட்டி நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழும் இவர் “தமிழ் ஓசை” என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக விளங்குகிறார். சுட்டி விகடன், தினமணி – சிறுவர் கதிர், ரத்தினமாலா போன்ற பத்திரிகையில் குழந்தைகளுக்கான கவிதைகள், குட்டிக்கதைகளை எழுதிக்கொண்டு வருகிறார். “ஆஸ்திரேலிய ஆதிவாசிக்கதைகள்”  என்று ஒரு கதை நூலினை 2012 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். இக்கதைகள் பெரியவர்களுக்கு என்று படைக்கப்பட்ட போதும் – இதில் ஏறத்தாள பத்துக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றனவாக இருக்கிறது என்று மாத்தளைச் சோமுவே கூறுகின்றார். இந்தியப் பத்திரிகைகளில் இவரின் குழந்தைகள் பற்றிய படைப்புகள் வெளிவந்தாலும் – அவைகள் அனைத்துமே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கும் வலு சேர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். தான் குழந்தைகளுக்காக படைத்த அனைத்தையும் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட இருபதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

மாத்தளைச் சோமு அவர்களைப் போல நல்ல எழுத்தாளர்தான் திரு முருகபூபதி அவர்கள். இவர் மெல்பேண் நகரில் வாழ்கிறார். இவரும் சிறுவர்கள் அல்லாதவர்க்கே பலவற்றையும் படைத்தளித்தார். என்றாலும் தனது சிறிய பராயத்தில் தனது பாட்டி தனக்குச் சொன்ன கதைகளை அவரால் மறந்துவிடவே முடியவில்லை. பாட்டிகள்தான் உண்மையில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை முருகபூபதி நம்பினார். அதனால் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் வளரும் எங்களின் தமிழ்க் குழந்தைகளை மனமிருத்தி “பாட்டி சொன்ன கதைகள்” என்னும் சிறுவருக்கான கதை நூலினை வெளியிட்டுவைத்தார். பன்னிரண்டு கதைகள் கொண்ட இந்தக் கதைநூல் இங்குள்ள சிறுவர்கள் படித்து பயன் பெற உதவியாய் அமைகிறது.

இவர்களின் வழியிலே உஷா ஜவகர் அவர்களும் இணைந்து கொள்ளு கின்றார். “குறும்பபுக்கார இளவரசியும் கனிவான தேவதையும்”, “மாயக்கிழவியின் மந்திரம்”, “அதிசய உயினங்களைப் பற்றிய அரிய செய்திகளும் கதைகளும்”, ஆகிய நூல்களை அளித்து ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கு ஒரு அடையாளத்தை இவர் எடுத்துக் கொள்ளுகிறார் எனலாம். வர்ணப் படங்கள். பெரிய எழுத்துக்கள். பளிச்சிடும் காகிதம். கவர்ச்சியான வசனங்கள். குழந்தைகள் மனம்விரும்பும் தலைப்புகள். இவைகள் அனைத்துமே உஷா ஜவகர் அவர்கள்  குழந்தைகளின் உளவியலை நன்கு தெரிந்தவர் என்பதையே காட்டுகிறது எனலாம்.

“பாப்பா பாரதி” என்னும் இசைவடிவான இறுவெட்டு ஆஸ்திரேலிய குழந்தைகளுக்காக வெளிவந்து பல ஆண்டுகள் கடந்து நிற்கும் நிலையில் 2013 ஆம் ஆண்டில் “மலரும் மொட்டுகள்” என்னும் இசைவடிவான இறுவெட்டு வெளிவந்திருக்கிறது. சங்கீத பூஷணம் திருமதி பொன்னம்மா சத்தியமூர்த்தி அவர்களின் நெறியாள்கையில் இது வெளிவந்திருக்கிறது.

சிறுவர்களுக்காக வெளிவந்த பாடல்களுக்கும், புதிய பாடல்களுக்கும் இசைவடிவம் கொடுத்து சிறுவர்களின் அபிநயத்துடன் வெளிவந்திருப்பதே மிகவும் சிறப்பான அம்சம் எனலாம்.” ஆஸ்திரேலியாவில் வளருகின்ற குழந்தைகளுக்கு நல்லறிவையும், நமது கலாசாரத்தையும், ரசனையுடன் புரிந்து கொள்ளவும், தாய்மொழியான தங்கத் தமிழை வளர்த்துக் கொள்ளவும் நல்ல சிறுவர் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மெட்டு அமைத் திருக்கின்றார்.” என்று இசை இறுவெட்டு பற்றி ஆஸ்திரேலியாவின் மிருதங்க வித்துவான் திரு ரவி ரவிச்சந்திரா விதந்து பாராட்டியமை மனங் கொள்ளத் தக்கது எனலாம்.

புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தாலும் தங்களின் வருங்கால சந்ததிகளை தங்களின் மொழி, பண்பாடு, மறவாமல் வளரப்பண்ணல் வேண்டும் என்னும் அவா இங்குள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவரிடமும் மேலோங்கி இருக்கிறது என்பதையே இதுவரை நாம் பார்த்தோம். எவ்வளவுதான் இலக்கியப் படைப்புகள் படைத்தாலும் – குழந்தைகளுக்கான இலக்கியம் வளர்ச்சியடையாவிட்டால் அங்கு பூரணத்துவம் வந்துவிடாது என்பதை ஆஸ்திரேலிய படைப்பாளர்கள் முழுமையாகவே நம்புகிறார்கள். இதனால் குழந்தை இலக்கியத்தை எப்படியெல்லாம் ஆஸ்திரேலியாவில் மேலும் வளர்ச்சி அடையச் செய்யலாம் என்று சிந்தித்தும் செயலாற்றிக் கொண்டுமே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தினுள் இன்னும் பல புதிய படைப்பாளிகளும், ஆர்வலர்களும் இணைந்து கொள்ள காத்திருக்கிறார்கள் என்னும் இனிப்பான நல்ல செய்தினை வழங்கி நிற்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *