அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (29.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 238

  1. கோலங்கள்…

    ஒழுங்காய் வராது ஒருநிலாவும்
    ஒருசில நாளில் மறைந்துவிடும்,
    எழுந்தன மார்கழிக் காலையிலே
    எழிலுடன் நிலத்து நிலவுகளே,
    அழுது வடியும் பனியினிலும்
    அழகுக் கோலமாய்த் தெருவினிலே,
    எழுதிய ஈசனும் அதிசயிக்க
    எழுதினர் பல்வகைக் கோலங்களே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. நல்வரவு

    விருந்தினர் வருகையும்
    இல்லத்தின் நிறைவும்
    வாசலில் அறிவிப்போம்.

    அரிசிமாவில் கோலமிட்டு
    பல்லுயிர் வாழ்ந்திடவே
    தமிழ்மறையில் ஒளித்துவைத்தோம்.

    காலையும் மாலையும்
    கோலமிடும் உடற்பயிற்ச்சியினை
    கலையுடன் இணைத்துவைத்தோம்.

    குடும்பத்தில் உள்ள
    நெழிவு சுழிவுகளை
    சிக்கல் கோலங்களில் பயிற்றுவித்தோம்.

    கூரிய சிந்தனைகளுடன்
    மனதை ஒருநிலைபடுத்திடவே
    புள்ளிகள் இணைப்பதில் கடத்திவைத்தோம்.

    மார்கழி திங்கள்
    (இறை)சக்தியின் வருகை
    அதிகாலை அறிந்திடுமே
    எம்மனை பெண்கள் நலம்பெற்றிடவே
    வாசலை அலங்கரித்து தொழவைத்தோம்.

    கற்பனை ஓவியங்களை
    கைத்திறன் நேர்த்தியின் அழகினிலே
    வீதியில் பிரதிபலித்தோம்.

    மனதின் மாசினை போக்கிடவும்
    பகைமை மறந்திடவும்
    எந்நாளும் நல்வரவை போற்றிடுவோம்
    அதை பறைசாற்றிடும் வகையிலே
    வாசலில் கோலமிட்டு உறுதிசெய்வோம்.

    ராவணா சுந்தர்.

  3. தைப்பொங்கல் கோலம்

    வாழும் மக்கள் வயிற்றுப்பிணித் தீர்த்துவிடும் கோலம்
    வஞ்சமில்லா நெஞ்சம் மகிழ் பச்சைப்பசுங்கோலம்
    கழனிபுகு விவசாயி கதி உயர்த்தும் கோலம்
    உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்

    கதிரவனின் தேர் திரும்ப வரவேற்கும் கோலம்
    நிலமடந்தை கதிராடை உடுத்தி நின்றக் கோலம்
    பசுஞ்சோலைப் பூக்கப் பிஞ்சு மொட்டுவிடும் கோலம்
    வசந்த காலம் வருவதையே கட்டியஞ்சொல்லும் கோலம்

    காடுவளர் காளைக்கெல்லாம் கணிவளிக்கும் கோலம்
    கன்னிப்பெண்கள் குடி உயர்த்தும் கதிர்மணிக் கோலம்
    கூடி நாமும் வாழவழிச் செய்யும் சீர்க் கோலம்
    கன்னித் தமிழ்நாடு போற்றும் தைப்பொங்கல் கோலம்

  4. வாசலிலே நீர் தெளித்து
    வண்ண கோலம் போட்டு வைத்து
    யார் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும்
    இத்திருப்பாவை……

    நாணயத்தை கோலத்தில் சேர்த்து
    நாராயணனுக்கு நாகரீகமாய் உணர்த்தியதோ
    லட்சுமி குடியிருக்கும் இவ்விடத்தை
    இத்திருப்பாவை……

    பூக்கோலம் போட்டு வைத்து
    பூமாலை தொடுத்து வைத்தேன்
    பாமாலை தொடுத்து உன் திருத்தோள்களில்
    மணமாலை சூடிட காத்துநிற்கும்
    இத்திருப்பாவை……

    வாய்ப்புத்தேடி வாழ்க்கையைத்தேடி
    வீடு வாசல் துறந்தவன்
    வானுயர்ந்த மாளிகையில்
    வாசல் சுருங்கிட வாழ்கின்றான்

    மார்கழி மறந்து போர்வை சிறைக்குள்
    விடிந்தும் உறங்குகிறான்
    இவன் வாசல் கூட அழகாய் ஜொலித்திடும்
    வண்ண வண்ண மையால் எழுதிய
    அழியாத கோல ஒட்டிகளால்

    காலம் மாறிப்போச்சு…..
    கோலமும் மாறிப்போச்சு …….

Leave a Reply to Ravana sundar

Your email address will not be published. Required fields are marked *