முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

 

சையத் ஹக்கீம் அன்சாரி சந்தைக்கு போயிருந்தார். சில பொருள்களுடன் திரும்பி வரும்போது இதுவரை கேட்கப்படாத ஒரு விசித்திரமான சத்தம் கேட்பதாக அவருக்கு  தோன்றியது. அவர் வழி ஓரத்தில் செவிமடுத்து நின்றார்.

“என்ன இப்படி நிக்கிறீங்க?” கொய்யாப்பழ வண்டியை தள்ளிக் கொண்டு செல்கின்ற குருதாஸ் அவரிடம் கேட்டான். கொஞ்சம் பின்னால் பல பாதைகள் கூடுகின்ற இடத்தில் வைத்துதான் குருதாஸிடமிருந்து பத்து ரூபாய்க்கு கொய்யா வாங்கியிருந்தார்.

”எனக்கு சாகறதுக்கு நேரம் ஆச்சுனு தோணுது” அவர் மெதுவாக சொன்னார்.

அடிக்கடி யாரோ சத்தம் விடுவது போல முழங்கிக் கொண்டு செல்கின்ற சர்வன் ரயில் வண்டியின் சப்தங்கள், டாக்ஸிகளினுடையவும் இரண்டு அடுக்கு பஸ்ஸினுடையவும் இரு சக்கர வண்டிகளினுடையவும் சத்தங்கள் வழிவாணிபக் காரர்களின் ஓசைகள் சிறுவர்களின் ஓசைகள் இவையெல்லாம் சையத் ஹக்கீம் அன்சாரியின் காதுகளிலிருந்து அகன்றது. முன்பு எப்போதும் கேட்கப்படாத ஒரு சத்தம் அசாதாரணமான விதத்தில் அவருடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தது.

ஹௌசான்!………… அவர் சத்தமாக தனது மூத்த மகனை அழைத்தார்.

ஹௌசான் கேட் வே ஆஃப் இந்தியாவின் எலிபன்ட் குகைகள் உள்ள வழியில் ஒரு படகில் இருந்தான். சக்தமான அலைகளில் பட்டு ஆடுகின்ற படகை கட்டுப்படுத்துகின்ற வேலைக்கிடையில் தனது உதவியாளனிடம் கூறினான்.

”யாரோ என்னை கூப்பிடுறாங்க..”

அப்போது, சையத் ஹக்கீம் அன்சாரியின் இரண்டாவது மகன் இஸ்மாயில் நரிமன் பாயின்ட் வழியாக பூக்களால் அலங்கரித்த குதிரை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். பெல்ஜியத்தில் இருந்து வந்த ஒரு குடும்பம்தான் குதிரை வண்டியில்/ அலங்கரித்த தொப்பிகள் அணிந்த இரண்டு மக்களும் அவர்களுடைய பெற்றோரும். அவர்கள் நால்வரும் நகர காட்சிகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் அடிக்கடி எங்கெங்கோ கை நீட்டி உற்சாகத்துடன் சத்தம் போட்டனர் அவர்களவெச்சு சவாரி செய்வது இஸ்மாயிலுக்கு அளவற்ற மகிழ்ச்சியாய் இருந்தது. அவன் அவர்கள் கேட்பதற்காக உடலை அசைத்து பாடினான்.

அச்சி மும்பை……………… அச்சி மும்பை………………………..

”இஸ்மாயில்…………….. சையத் ஹக்கிம் அன்சாரி அழைத்தான்.

பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆச்சரியத்துடன் திரும்பினான். அவனுடைய பெயரும் இஸ்மாயில் என்பதாயிருந்தது.

“மரணம்னா  என்னன்னு உனக்குத் தெரியுமாப்பா………”

”தெரியாது நான் வளர்த்த கிளி ரெண்டு நாள் முன்னாடி செத்திடுச்சு. அவன் கூறினான்.

”நானும் சாகப் போறேன்.” அவர் வெளிப்படுத்தினார் .

அது இஸ்மாயிலுக்கு நம்பமுடியவில்லை.

”பாபா இப்போதைக்கு ஒன்றும் சாகமாட்டீங்க, பார்த்தா நோய் ஒன்றும் இல்லையே”

”அதனாலே இல்ல, ஒவ்வொருத்தருக்கும் இத்தனை காலம்னு இருக்கு. அது முடிஞ்சி கூடுதலா ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது. மரணத்தின் சுவை என்ன என்பதை நான் அறிந்து கொண்டு இருக்கிறேன்.”

மரைன் டிரைவில் தாராபோரிவாலா அக்வோரியத்திற்கு  முன்பாக பெல்ஜியத்தில் இருந்து வந்த குடும்பம் இறங்கியதும் வேறு பயணிகளை எதிர்பார்க்காமல் அன்றைய வேலையை முடித்து விட்டு இஸ்மாயில் தன்னுடைய குதிரை வண்டியில் மிக வேகமாக வீட்டிற்கு திரும்பினார். அவருடைய மனதில் ஏதோ குழப்பம் நிலவியது வெள்ளைக் குதிரைகள் இரண்டும் அவனுடைய மனதை புரிந்த வண்ணம் எப்போதும் விட அதிக வேகமாக ஓடியது.

சையத் ஹக்கீம் அன்சாரி கண்களை திறந்தார் அவர் தனது மக்களைப் பார்த்தார். இருவரும் ஒரே நேரத்தில் குனித்து நின்றனர்.

அப்பாஜி இப்போ நல்லா இருக்கா? ஹௌசான் கேட்டான்.

”இது வெறும் தலைச்சுற்றல் தான். இஸ்மாயில் கூறினான்.

ஹௌசானின் மனைவி நூர்ஜஹானும், இஸ்மாயிலின் மனைவி மும்தாஜும் மக்களை சேர்த்து பிடித்துக்கொண்டு பின்னால் நின்றனர். அப்பாஜி கண்கள் திறப்பதைப் பார்த்து கொஞ்சம் முன்னால் வந்தனர். அவர் எல்லோரையும் பார்த்தார். திறந்து வைத்த ஜன்னல் வழியாக ஒரு சிறிய வானம் தெரிந்தது மரணத்தைக் குறித்த ஒரு ஞாபகப்படுத்தலாக அவர் அதை உள்வாங்கினார். ஏதோ சொல்வதற்காக அவருடைய  நா அசைந்தது. அறைக்குள் அமைதி அதிகரித்தது. ஹௌசானும் இஸ்மாயிலும் காதுகளை கூர்மையாக்கி மிக்க கவனத்துடன் நின்றனர்.

”நான் செத்துப் போனா என்னை சவப்பெட்டியில் அடைத்து வைக்கக் கூடாது”……. என்று சையத் ஹக்கீம் அன்சாரி கூறினார்.

ஹௌசானும் இஸ்மாயிலும் திடீரென உருவான பிரமிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். மசூதியில் சித்திர வேலைப்பாடுகள் செய்த அழகான ஒரு சவப்பெட்டி இருக்கிறது. அதில் தான் பிணங்களை புதைக்க கொண்டு செல்வர்.

”ஒரு மஞ்சணை  உருவாக்கணும் மூங்கில் தண்டுகளால், அதில் என்னை எடுத்து படுக்கவெச்சு சிவப்புத் துணியில மூடணும். அதுக்கு மேல வெள்ளப் பூக்களை தூவி விடுங்க. நிறைய வேண்டாம்.”

ஹௌசானும் இஸ்மாயிலும் சிறிது நேர படபடப்பை கடந்து அப்பாஜியின் ஆசையை நிறைவேற்றுவோம் என்று முடிவுக்கு தலையசைத்தனர். சையத் ஹக்கீம் அன்சாரி திருப்தி அடைந்தார்

”நீங்க நல்லவங்க. என்னோட எந்தவொரு ஆசையையும் நீங்க நிறைவேற்றுவீங்கனு  எனக்குத் தெரியும்.”  நிறுத்தினார்.  மீண்டும் பேசத் தொடங்கினார். ”முடியல இனிமே தா முக்கியமான ஒரு விஷயம்.”

மக்கள் அது என்ன என அறியும் எதிர்பார்ப்போடு நின்றனர்.

”என்னுடைய உடலை மண்ணில் புதைக்க கூடாது, சிதை மூட்டி எரிக்க வேண்டும்.”

பக்கத்து வீட்டுக்காரர்களான சியாம் சரணும், கஜானன் கீர்த்திகரும் நோய்வாய்ப்பட்டதை அறிந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தனர்.  இருவரும் திகைத்தனர் ஒரு முஸ்லிமின் உடல் எரிப்பதா? சையத் ஹக்கீம் அன்சாரிக்கு என்ன ஆச்சு!..  சிந்தனை சக்தி நஷ்டப்பட்டுருச்சா?..

”இதோ என்னோட ரெண்டு நண்பர்கள் இவர்களை நான் சாட்சி வைக்கிறேன். என்ன தீ மூட்டி எரிப்பீங்கன்னு நீங்க எனக்கு உறுதித் தரணும். அப்படீனாதா எனக்கு சமாதானமா சாக முடியும்” சையத் ஹக்கீம் அன்சாரி இரண்டு மகன்களையும் மாறி மாறிப் பார்த்தார்.

தெருவின் மேற்குப் பக்கம் உள்ள மசூதியில் ஒரு வேனல் காற்று வீசி அடித்தது. அங்கே தங்கி இருப்பவர்கள் பலரும் தூசியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மூக்கைப் பொத்தினர். காற்று மங்கிய சுவர்களுக்கு இடையில் சுழன்றது, சிலர் கபத்துடன் இருமினர். மேல்நிலையில் வசிக்கின்ற புறாக்கள் ஒரு விபத்தின் அறிகுறியாக முனகின. மசூதியின் கதவை அடைத்துவிட்டு மியான் அப்துல் அக்தரும், ஃபாரூக்மௌலவியும் மற்றவர்களும் தெருவில் இறங்கினர். சையத் ஹக்கீம் அன்சாரியின் வீட்டை இலக்காக வைத்து அதி வேகமாக நடந்தனர்

”அன்சாரி நாங்க கேள்விப்பட்டது நெஜமா? அவருடைய உடம்புக்கு நேராகக்குனிந்து நின்று ஃபாரூக்மௌலி கோபத்தோடு கேட்டார்.

நேரம் கடந்தது.

”நீங்க ஏன் ஒன்னும் பேசாம இருக்கீங்க” மியான் அப்துல் அத்தர் சத்தமிட்டார்.

”என்னுடைய உடல் அக்னியினுடையது” சையத் ஹக்கீம் அன்சாரி கூறினார்.

அவர் ஆச்சாரங்களுக்கு எதிரான ஒரு சடங்கை விரும்புகிறார் என்பது தெருவில் வசிக்கும் அனைவருக்கும் தெரிந்தது. அதன் உண்மையை அறிய பலரும் அவர் வீட்டிற்கு வந்தனர் எதற்காக அவர் தனது உடலை அக்னிக்குச் சமர்ப்பிக்கிறார் என சிந்தித்த போது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. யதார்த்தமாக சில கருத்துக்கள் உயர்ந்தன. ஒரு வேலைக்கார பிராமணனை அவர் கொன்று புதைத்து விட்டார் எனவும் அந்த பாவ விமோசனத்திற்காக தனது ஆசாரங்களை எதிர்க்க பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார் என்றும் ஒரு சிலர் கூறினர். வேறு சிலர் அவர் மீது ஒரு கொலை குற்றத்தை சுமத்த விரும்பவில்லை. தக்க சூழ்நிலைக்கொப்ப அவர்கள் வேறொரு கதை உருவாக்கினர். அது இப்படி இருந்தது: சையத் ஹக்கீம் அன்சாரி தனது சிறுவயதையும், இளமைப் பருவத்தையும் காஷ்மீரில் தான் கழித்தார். அவருக்கு அன்று காஷ்மீரில் ஒரு பண்டிட் மகளுடன் மனவிருப்பம் ஏற்பட்டது. அவள் துர்மரணத்தை நேரிட்டு சிதையில் எரிந்ததன் துக்கம் தாங்காமல் காஷ்மீரை விட்டு வந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் காஷ்மீருக்கு போகவே இல்லை. இப்போது மரண நேரத்தில் அவர் அவருடைய காதலை தீவிரமாக நினைத்துப் பார்க்கிறார்.

அது என்னமோ இருக்கட்டும் ஒரு முஸ்லிமுக்கு சேர்ந்ததல்ல சிதை.

தெருவில் தர்பூசணி வியாபாரி நஜிமுதீன் பக்கத்து வியாபாரி குருதாசிடம்  கூறினான். மத சம்பந்தப்பட்ட காரியங்களில் நஜிமுதீன் பெரிய பண்டிட் ஒன்றுமில்லை என்றாலும் அவனுக்கு சையத் ஹக்கீம் அன்சாரியின் பிணத்தை எப்படி அடக்கம் செய்வது என்பதில் ஒரு தெளிவான கருத்து இருந்தது.

“ஆனா அன்சாரி சாப் விரும்பறது ஒரு இந்து முறைப்படியான அடக்கத்தை”…… குருதாஸ் கூறினார்.

”எங்க ஆளுங்க என்ன வெறும் காசு வாங்கறவங்கனா உங்களோட நினைப்பு. நாங்க ஒரு போதும் இதுக்கு சம்மதிக்க மாட்டோம்” நஜிமுதீன் கூர்மையான குரலில் கூறினான்.

”சால வாயை மூடுங்க நீங்க எல்லாம் கைகட்டி பார்த்துட்டுதா இருப்பீங்க அன்சாரி சாவுக்கு நாங்க சிதை தயாரிப்போம்”. குருதாஸ் வீரத்தோடு  கூறினான்.

“எனக்கொரு தர்பூசணி…” சின்ன இஸ்மாயில் நஜிமூதினிடம் கேட்டான்.

அவன் அதைக் கேட்காமல் தர்பூசணி வெட்டும் கத்தியுடன் குருதாஸிற்கு நேராக குதித்தான். குருதாஸின் கையிலும் கத்தி இருந்தது. கொய்யாப்பழம் அறுப்பதற்காக பயன்படுத்தப்படும் கத்தி அவ்வளவு  பெரிதல்ல இருந்தாலும் நல்ல கூர்மையுடையதாக  இருந்தது.

மூன்றாவது குத்து வரை இருவரின் கால்களும் உறுதியாக நின்றது. நான்காவது குத்திற்கு இருவரும் மண்ணில் சரிந்தனர். அதற்கிடையில் நஜிமுதீனின் கால்பட்டு குருதாசின் கொய்யாப் பழ வண்டி கீழே விழுந்தது. கொய்யாப்பழம் முழுவதும் நிலத்தில் சிதறியது. குருதாஸ் அவற்றுக்கு இடையில் மண்டியிட்டு அமர்ந்தான். ஒரு நிமிடத்திற்கு கொய்யாவின் மனத்தை உணர்ந்தான். அதற்குள் நஜிமுதீன் பின்னிலிருந்து அவனது கழுத்தை வெட்டினான். சின்ன இஸ்மாயில் கத்தினான். தெருவில் பலரும் சத்தமிட்டனர். சையத் ஹக்கீம் அன்சாரிக்கு  ஒன்றும் கேட்கவில்லை. அவருடைய உயிர் உடலைவிட்டு பிரிந்திருந்தது.  இனி என்ன செய்வது என்ற கேள்வியுடன் ஹௌசானும் இஸ்மாயிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, சாத்திய கதவுக்கு வெளியில் ஆரவாரம் உயர்ந்தது.

திறங்க…………….…கதவத்  திறங்க……………….

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *