(Peer Reviewed) ஆன்ம விசார, உணர்வியல் நெருக்கமும் மௌன மொழியும்

0

செ. . கார்த்திக் குமரன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி
மதுரை – 625 009.
மின்னஞ்சல்:srkarthick21@gmail.com


தொடக்கமாக

நவீன தமிழிலக்கிய புனைகதைப் படைப்பிலக்கிய வெளியில், பல காத்திரமான படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுள்ளன. இப்படைப்பாளர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த வகையில், மணிக்கொடி இதழின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி தொடங்கி பல முக்கிய எழுத்தாளர்களின் மனவெளியை, சமூகச் சிந்தனைச் சார்ந்த கருத்தியல்களை (உருவாக்கக் காரணியாக) பதிவு செய்யும் காரணியாக இவ்விதழ் விளங்கியது. நவீன சிந்தனையுடன் (மாற்றுச் சிந்தனையுடன்) கூடிய படைப்புகள் இவர்களால் சாத்தியமாக்கப்பட்டுள்ளன. மரபார்ந்த இலக்கியத் தளத்திலிருந்து இது பல்வேறு நிலைகளில்/வடிவங்களில் வேறுபட்டதினால் இதனை அன்றைய காலகட்டத்தில் குறைசொல்லியும் சமூகத்தில் கேடு விளைவிக்கக் கூடியது என்றும் மரபார்ந்த இலக்கியவாதிகளிடையே ஒரு கருத்து நிலவியது. இருப்பினும் அவற்றையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாது இப்புத்திலக்கியத்தை வரவேற்று, புதிய பொருண்மையில் வளரச்செய்தனர் இவ்விதழாசிரியர்கள். இதன் காரணமாகவே பலதரப்பட்ட படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இத்துடன், ஒவ்வொரு படைப்பாளரும் அவர்அவர்க்கென்று தனித்த மொழிநடையுடன் கூடிய உருவ, உள்ளடக்கத்துடன் படைப்புகளைப் படைத்தனர். இவர்களில் சிலரின் எழுத்துக்கள் குறித்து, தற்காலத்தில் அதிகம் பேசப்படாதபோதிலும் படைப்புகளில் தனக்கென தனித்த இடத்தை வகித்துள்ளனர். மேலும், ஆன்மவிசாரத்தைத் தொடும் கருத்தாக்கங்களை வெளிக்கொணர்ந்து, தத்துவார்த்தச் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையில், மௌனமான எழுத்துக்களின் வழி  மொழியைப் பிரயோகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் என்ற நவீன படைப்பாளியின் மௌடீக மற்றும் புதிருடன் கூடிய எழுத்துருவாக்கப் படைப்புகளைக் காணுவதாகவே இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

லா..ரா.

லா.ச. ராமாமிருதம் 1916, அக்டோபர் 30, பெங்களூரில் பிறந்தார். ஆங்கிலத்தில் இவருடைய கதை 18வது வயதில் வெளியானது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதி வந்த இவரைத் தன் 50வது வயதில் சென்னை வாசகர் வட்டம் ‘புத்ர’ நாவலை எழுத வைத்தது. 1989இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்த ‘சிந்தா நதி’ என்னும் சுயசரிதை நூல் ‘சாகித்ய அகாதெமி’ விருது வென்றது. சிறுகதை, நாவல், கட்டுரை உள்பட பல நூல்களை எழுதியுள்ளார். அக்டோபர் 30, 2007இல் தமது 92வது பிறந்த தினத்தில் சென்னையில் காலமானார்.

“நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்” என்று எழுதினார் லா.ச.ரா. அந்த அளவிற்கு தன் எழுத்துக்களின் வழி மொழிக்கு மிக நெருங்கிச் சென்றவர். எழுத்தையே தன் உணர்வாகவும் உயிராகவும் கொண்டவர். மனித மனங்களின் உணர்வுகளின் ஊடாக ஆன்மாவைத் தொடும் நேர்த்தியை மொழியினூடாகக் கையாண்டவர். லா.ச.ரா.வை வாசிக்கும் வாசகனுக்குப் புதிர் விளையாட்டுடன் கூடிய சூழ்ச்சியைப் பெறவைத்து, திடுக்கிடச் செய்பவர். ஆழ்ந்த தரிசனங்களையும் அனுபவங்களையும் ஏற்படுத்தும் வகையில் இவருடைய எழுத்துக்கள் அமைந்திருப்பதோடு, பெண்ணின் மனநெகிழ்வுகளை, மனவெளிகளை உள்ளும் புறமும் அசாத்தியமான சொற்களோடு வெளிப்படுத்தி, வாசகனைக் கட்டிப்போட்டு, உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்பவர். சுயநிரூபணங்களையும் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களையும் தன் படைப்பினூடாக வெளிப்படுத்தியுள்ளார். நவீன  தமிழுலகில் இவரின் எழுத்துக்கள் தவிர்க்கவியலாத என்றென்றும் வாசிக்கப்பட வேண்டியவையாகவே உள்ளன.

புத்ர

தன் முன்னோர்களின் (ஐந்து தலைமுறை) வாழ்வியலை, அவர்களின் உணர்வுநிலைகளை, அன்பார்ந்த குணாதிசயங்களை, உறவு நிலைகளை, தான் கொண்டுள்ள நம்பிக்கைகளைத் தத்ரூபமாகப் புலப்படுத்தியுள்ளார். ஜகதா என்ற கதாபாத்திரத்தின் வழி தாய்மையின் (மாமியாரின்) இடையறாச் செயல்களை/எண்ணங்களைச் சொல்வதோடு, காலத்தினால்  ஏற்பட்ட வடுக்களையும் இரணங்களையும் இன்பதுன்பங்களையும் ஒரு சரடாகக்கொண்டு, அதனை எழுத்துருவாக்கியுள்ளார். பிராமணச் சமூகத்தில் பல மரபுகள்(Heritage) வழிவழியாகப் பின்பற்றி வந்தாலும் சில கணங்களில் பிற மனித உயிர்படும் வேதனைகளை, இன்னல்களைத் தாங்காது, சம்பிரதாயங்களை மீறி மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும் நிலையை, தனக்கே உரிய மொழிநடையில் மொழிந்துள்ளார். தாய் – மகள் – மாமியார் ஆகிய மூன்று பெண்களின் தனித்துவங்களை, தங்களுக்குள் ஏற்படும் உணர்வுநிலைகளை, உடல்மொழியினைத் திறம்பட எடுத்துரைத்துள்ளார். உறவுகளினால் (ஜகதா(மருமகள்) – மாமியார்) இரண்டறக் கலந்திருக்கும்போது, மரணத்தால் (மாமியார்) மனித மனங்களுக்குள் நிகழும் நெருக்கடிகளை, வாழ்க்கையின் அபத்தத்தை/அர்த்தத்தை, தன் மௌன மொழியின் வாயிலாக வரையறுக்கவியலாத உணர்ச்சிகளால் நம்மை ததும்பவைத்து, வாசிப்பை நிறுத்திடச் செய்கிறார். நிலையிலா வாழ்வியல் பயணத்தை நமக்கு உணர்த்தி, ஒரு வித தியான நிலையை அடையச் செய்கிறார்.

தர்க்கம், நியாயம் எல்லாம் பிரமாதமாய்த்தானிருக்கு. ஆனால் சம்பிரதாயம், வழக்கம், முறைன்னு நமக்கு முன்னால பெரியவாள் எல்லாம் தொன்றுதொட்ட ஏற்பாடா பண்ணிட்டுப் போயிருக்காளே. அதெல்லாம் பிசகுன்னு ஒரு நிமிஷத்தில் தூக்கியெறிஞ்சுட இந்த விஷயத்தில் என்ன அவசரம் வந்துடுத்து? நீ ஏன் கேக்கறேன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கு மத்தியானம் நடந்த விஷயத்தில்அவள் குருவிக்காரியாயிருந்தால் என்ன, குபேர சம்பத்தாயிருந்தால் என்ன? நம் ஸ்திரீவர்க்கத்தின் மானம் மீட்கவேண்டிய அவசியம் நேர்ந்து போச்சு. அது மாதிரி உனக்கு நேரணுமா? அவளுக்கும் உனக்கும் ஈடா? அங்கு நீ பெற்றால் என்ன? நான் வந்து பார்க்க மாட்டேனா?

என் பிடரியில் அத்தை கை எவ்வளவு சுகமாயிருக்கு! எனக்கு தூக்கம் வரது.

என்னையறியாமல் என் தலை ஆடி, அத்தை கைமேல் சாயறது; அப்புறம் நினைவில்லை.”1

மனிதனால் உருவாக்கப்பட்ட தர்க்க, நியாயத்திற்குக் கட்டுப்படாமல், குருவிக்காரியாகயிருந்தாலும் தன் (பிராமணன்) வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து, ஒரு வாரம் தாய்-சேயை நலமுடன் தங்க வைத்து, போகும்போது கையில் சில பொருட்களையும் கொடுத்து அனுப்பிய தாயின் (அத்தையின்) இயற்கை குணமானது, சம்பிரதாயம் போன்றவற்றையெல்லாம் மிகச்சாதாரணமாகத் தூக்கியெறியும் (பெண்ணின்) நிலையை இதன் வழி உணர்த்தியுள்ளார். இப்பெண்ணின் (அத்தை) செயலானது மானத்தின் பொருட்டு மட்டும் செய்த செயலன்று. தன் வருங்காலக் (ஜகதா) குழந்தையின்  வரவை நோக்கி காத்திருக்கும் நன்வுணர்வுச் செயலாகும். இவ்வாறாகப் பெண்ணின் இயல்புநிலையும் பரிவும் தொன்றுதொட்டு வந்த வழக்கம் மற்றும் முறைமைகளைக் கடந்து செல்லும் தன்மையுடையதைத் தன் எழுத்துக்களினூடாக் காட்சிப்படுத்தியுள்ளார்.

மாமியாருக்கு மத்தியானம் மூன்று மணிக்கே நினைவு தப்பிவிட்டது. இரவெல்லாம் ஜுரம் நெருப்பாய்க் காய்ந்தது. மூவரும் கண்ணிமைக்காமல் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வைத்தியன் வந்து நாடியைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி போனான்.

பொலபொலவென விடியும் சமயம். கணீரெனும் குரலில் கிழவி மருமகளைக் கூப்பிட்டாள்.

குளுகுளுன்னு எனக்கு ஒரு டம்ளர் ஜலம் கொடேன்என்று கேட்டு வாங்கிக் குடித்தாள்.

அப்பாடா! என் வயிறு குளிர்ந்தது. நான் இனிமேல் போயிடுவேன். ஆனால், ஒருத்தரும் அழுது ரகளைப் பண்ணிக் குழந்தைகளைப் பயமுறுத்திடாதேங்கோ. குழந்தைகள் தூங்கறதா? பரவாயில்லே. இப்போ ஒண்ணும் அதுகளை எழுப்ப வேண்டாம். இங்கே வா, பக்கத்திலே வா. நீ ரொம்ப நல்ல பெண். எனக்கு உன்னிடத்தில் பரம திருப்தி. அதனாலே உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒண்ணுமில்லே. அவர் எங்கே?”

இதோ இருக்கேனேஎன்று கிழவர் பக்கத்திலே வந்தார். அவருள் நடக்கும் பயங்கரமான யுத்தத்தில், முகம் செவேலெனக் கொதித்துக்கொண்டிருந்தது.

அத்தை லேசாய்ப் புன்னகை புரிந்தார்.

இதென்ன இவ்வளவு வருத்தப்படறேளே! நான் கொடுத்து வெச்சவன்னா! விளக்கை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, மடியில் மஞ்சளும் தேங்காயுமா, ராஜாத்தி மாதிரி போகப்போகிறேன். குழந்தை!”

அவள் கணவரிடம் அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஆசையாய் ஒருமுறை உச்சந்தலையிலிருந்து முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டார். அவ்வளவுதான்2

வாழ்க்கையின் இறுதியில் ஏற்படும் மரணத்தைகூட மிக எளிதாகக் கடக்க நினைக்கிற அளவிற்கு, தான் வாழ்ந்த நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளும் அனுபவங்களும் அவளுக்கு (மாமியாருக்கு) திருப்தியளிப்பதாக இருப்பதை இது காட்டுகிறது. இதனால் இம்மரணத்தைகூட எளிதில் வெல்லமுடிகிறது. எந்தவித அனுதாபங்களும் வருத்தங்களும் இனி வரப்போகிற நாட்களில் (தான் இறந்த பிற்பாடு) இருக்கக் கூடாது என்ற கண்டிப்பும் நிறைவான வாழ்வை வாழ்ந்துவிட்டதால் ஏற்படும் உணர்வுநிலையைத்தான் லா.ச.ரா. மேற்கண்ட வரிகள் மூலம் உணர்த்துகிறார். இப்படிப்பட்ட அமைதியான (புத்ர) நிலையில் மரணத்தை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி ஞானிகளுக்கு மட்டும் சாத்தியமன்று. பரிபூரண வாழ்க்கை வாழும் சாமான்ய மக்களுக்கும் நிகழக்கூடியது என்பதைத் தன் ஆன்ம எழுத்துருவாக்கத்தால் வெளிப்படுத்தியுள்ளார்.

அபிதா

1969இல் வெளிவந்த ‘அபிதா’, அகமரபின் உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக எழுதப்பட்ட பிரதியாகும். கரடிமலையைக் களமாகக் கொண்டு காலத்தின் முன்பின்னாக நினைவுகளுடன் ஒரு ஆண்மகன் அகத்திற்குள் நிகழும் காதல், காமம், பரிவு, கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகளினூடாக ஏற்படும் அனுபவங்களை லா.ச.ரா. வெளிப்படுத்தியுள்ளார். அபிதா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது வாசகர்களுக்குத் திகைப்பும் பிரமிப்பும் ஈர்ப்பும் ஏற்படும்படி ஒருவித இலயத்துடன் சித்திரித்துள்ளார். இவளுடன் சகுந்தலை, சாவித்ரி ஆகிய பெண்களின் இயல்பை இயற்கையோடு தொடர்புபடுத்தி, அவர்களுடான மனதின் மொழியினைப் புலப்படுத்தியுள்ளார்.

அவள் புருவங்கள் வினாவில் உயர்கின்றன. ஆவேசம் வந்தாற்போல் என் வாயினின்று ஏதோ வார்த்தைகள் புறப்படுகின்றன.

சக்கு நீ சாகவில்லை.”

அவள் பின்னடைந்தாள். அவள் விழிகள் வட்டமாயின. பயம், வியப்பு. நான் அவளை நெருங்கினேன்.

கிணற்றில் குடத்தை விட்டு, ஜலத்தைக் கலக்குமன் ஜலத்தின் பளிங்கில் தெரிவது யார் என்று கிணற்றில் எட்டிப் பார்?”

அவள் கண்களில் கலக்கம் சட்டென விட்டது, புன்கையில் கன்னங்களில் வெளிச்சம் படர்ந்தது.

என்னவோன்னு பயந்தே போனேன். அம்மாவையே உரிச்சு வெச்சிருக்குன்னு அப்பா கூட ஒரொரு சமயம் சொல்வார். அதையே தாத்தா என் முகத்தைத் தடவித் தெரிஞ்சுண்டு சொல்வார். நானும் அப்பப்போ கண்ணாடியில் பார்த்ததுண்டு. பத்துத்தேய்க்கறப்போ, பித்தளைப் பாத்திரத்தில் பளிச்சுனு அழுக்குவிட்ட சுருக்கில் அது என் முகத்துக்குக் காட்டற பொம்மையில் என்னைப் பார்த்து என் அம்மாவை நினைப்பேன்.”

திடீரென என்ன ஒரு பெரும் ஆவல் ஆட்கொண்டது.

உன்பேர் என்ன?”

அபிதா

நான் திரும்பச் சொல்லி பெயரை நாக்கில் சுவைக்கிறேன்.

அபிதா

சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்,

பிஉதடுகளின் சந்திப்பில்,

தாநாக்கின் தெரிப்பில்

இத்தனைநாள் பிரிந்து போயும், மீண்டதுமே நினைவு கண்டுகொண்ட மனம், விட்ட இடத்திலிருந்து தொட்டுக்கொண்டு மொக்கு விரித்தாற்போல் கம்மென்று எழுதுகின்றது.

நேரமாச்சு போவோமா?”

நீ சொல்கிறாய். செல்கிறாய், நான் உடன் வருகிறேன்.

ஆண்டவன் வேண்டுவதும் இதுதான்.

என்னிடம் உன்னை ஒப்படை.”

உன்னிடம் என்னைக் கொடுத்துவிட்டபின் இந்தச் சமயத்துக்கு என் மனம் எவ்வளவு லேசாயிருக்கிறது.”3

சக்கு என்ற சகுந்தலையின் மகளான அபிதாவைக் கண்டதும் அவனுக்குள் எழும் உணர்வுகளை, உணர்வின் தெறிப்புகளை, ஆன்ம விழிப்புகளைத் தன் மொழியினூடே எடுத்தியம்புகிறார். தன் பழைய (காதல்) நினைவுகளிலிருந்து (சக்கு) மீண்டு அவளைக் (அபிதாவைக்) கண்டதும் நினைவுகள் நனவாகி, மனம் (ஆன்ம) நிம்மதி அடைவதையும் மேற்கண்ட வரிகள் தத்ரூபமாக உணர்த்துகின்றன. சமூக நியதிக்கு ஆட்படாத சூழலையும் மனம்/ஆன்மாவானது விதியின் வசத்தால் ஒருவித உறவுக்கு ஏங்கி ஆட்படுவதையும் மிக இயல்பாக வெளிக்காட்டுவதில் திறன் பெற்றுள்ளார் லா.ச.ரா. “தொடல் என்பது உறவின் ஆரம்பம்” என்ற ஃபிராய்டிய கூற்றுக்கிணங்க, அவன் செயல்பட்டிருந்தால் அபிதாவை அடையும் வாய்ப்பினைப் பெற்றிருப்பான். ஆனால் தொடாத காரணத்தினாலேயே அவளுடனான உறவை வளர்த்துக்கொள்ள முடியாமல் போயிற்று. மனம் சொல்வதை உடல் ஏற்க மறுக்கின்ற நிலையும் இதன்வழி அறியமுடிகிறது. மனிதன் தான் வாழ்கின்ற காலத்தில் ஏற்படுகின்ற (காதல், நட்பு) அனுபவங்களில் சில ஆன்மவிசாரத்தை அல்லது ஆன்மநெருக்கத்தை உண்டாக்கவல்லன. ஆனால், இவற்றையெல்லாம் கடந்துதான் வாழ்க்கையை வாழவேண்டியுள்ளது என்பதை லா.ச.ரா., தன் தத்துவார்த்த எழுத்தின் வழி ஆன்மாவைத் தொடுகிறார்.

சிந்தா நதி

தன் வாழ்வியல் அனுபவங்களை நினைவலைகளாகக் கொண்டு உருவாக்கிய சுயசரிதை பிரதிதான் சிந்தா நதி. இது தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. 1989 ஆம் ஆண்டு இப்பிரதி சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. சிறுவயதிலிருந்து கிட்டதட்ட 70 ஆண்டுகள் வரையிலான தன் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை முன்பின்னாகத் தொகுத்து 48 தலைப்புகளில் எழுத்தாக்கியுள்ளார் லா.ச.ரா. ஒரு மனிதன் தான் வாழ்ந்த/வாழும் காலகட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வதென்பது பெரும்பாலும் சாத்தியமன்று. ஆனால், எழுத்தாளானுக்குச் சாத்தியம் என்று இப்பிரதியின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். அதனால்தான் இத்தகையதொரு படைப்பினை இலக்கிய உலகிற்கு அளிக்க முடிந்திருக்கின்றது. இதில் லா.ச.ரா. அடிக்கடி பயன்படுத்தி வரும் சொல்லான  “வேளை” வந்துவிட்டால் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இப்படைப்பின் வழி உணர்த்தியுள்ளார். தன் காலகட்டத்தில் நிகழ்ந்த தூய இலக்கிய (மணிக்கொடி சதஸ்) சம்பாஷனைகளில் பங்குகொண்டதால், இலக்கியம் (நவீனம்) மற்றும் தீர்க்கமான எழுத்து குறித்த புரிதலும் உந்துதலும் ஏற்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறார்.

நவீன சமூகத்தில் இயங்கும் மனிதர்களின்  ஆசை, பாசம், காமம், காதல், வேட்கை, பிரமை, பிரியம், கோபம், கலை, தாபம், கற்பனை, யோகம் போன்ற பலவற்றின் உணர்வுகளனூடான உள்தெறிப்புக்களை விவரணையாகச் சொல்லியிருக்கிறார். லா.ச.ரா. பத்து வயதாக இருந்தபோது அவருடைய அண்ணன் தனக்கு ஆங்கிலமும் கணிதப்பாடங்களையும் கற்றுத்தந்ததைப் பற்றியும் ஒழுக்கச் சீடனாகத் தான் வளர்ந்ததைப் பற்றியும் விவரித்துள்ளார். சமூகப்போக்கினை அறிந்து செயல்பட்டவர் என்ற ரீதியில் தமையனைத் தன் குருவாக மதித்தார். தன் தாயின் உள்உணர்வுகளின் வழி தரிசனத்தைக் கிடைக்கப் பெற்றார்.

சில சமயங்களில் அண்ணாவின் பாடங்களினின்று அபூர்வமாகக் கிடைத்த ஒழிவு நேரங்களில், ஊர் தாண்டி, வயல் நடுவே பிள்ளையார் கோயிலுக்கு அசருடன் போவேன்.

போவோமே ஒழிய, பிள்ளையாரை வணங்கமாட்டார், சேவிக்கமாட்டார். சன்னிதானத்துக்கெதிரே, மார் மேல் கை கட்டியபடி, தரையில் வட்டம் போட்டாற் போல் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டேயிருப்பார். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்கூட. நேரமாச்சு என்று சொல்லப் பயமாயிருக்கும். பிறகு கவனம் வெடுக்கெனக் கலைந்தாற் போல் தலையை உதறிக்கொண்டு சுற்று முற்றும் பார்ப்பார். அன்னியனைப் பார்ப்பது போல், கண்ணில் லேசான கருப்புக்கூட.

உருவேற திருவேறும்என்பர். முன்பின் தாக்கல் மோக்கல் இல்லாமல்.

அப்படீன்னா?” நான் சின்னப் பையன் தானே!

புரியவில்லையா?” புன்னகை புரிவார் (அரிசிப்பல்) “புரிந்துகொள்ளும்போது புரிந்து கொள். புரியும் வேளை வரும்போதுதானே புரியும். அப்போதும் எல்லாமே புரிந்த மட்டில்தான்.” (இந்தச் சிலம்ப விளையாட்டு எனக்கென்ன புரிகிறது?) இப்போது அனுபவத்தில் அறிகிறேன்.

பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்துகொண்டிருக்கிறது. பரிபாஷை தான் உண்மை பாஷை. ஒரு புருவ உயர்த்தல், ஒரு விரல் சொடுக்கு, ஒரு புன்னகை, அதரத்தின் வில் வளைவு மோனமாகக் கன்னத்தில் புரளும் இரு கண்ணீர்த் துளிகள், நாணத்தில் தலை குனிவு இவை பேசும் ஒரு அகிலம், மூச்சுவிடாமல் மணிக்கணக்கில் கொட்டும் வார்த்தைகளால் இயலா.”4

மொழியின் அழகே மறைந்திருக்கின்ற அர்த்தங்களை வெளிப்படுத்துவதுதான். இதனையே லெவிஸ்ட்ராஸ் (Levis strauss) தொன்மம் பற்றி விளக்கும்போது “மொழிக்குள் புதைந்திருக்கின்ற (பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்துகொண்டிருக்கிறது)  அர்த்தமானது விரிவடைந்துகொண்டே இருக்கும் என்றும் அதனை வெளிப்படுத்தும்போது தான் அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியும்” என்கிறார்.  இதனைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் உடல்மொழிகள், பரிபாஷைகள், அனுபவத்தின் வழி புரியாதவற்றையும் புரிந்துகொள்ள முடியும் என்று விளக்குகிறார் லா.ச.ரா. நம் வாழ்வியல் (இயங்கியல்) ரீதியாகவே உண்மையை உணரமுடியும் என்கிறார்.

நான் எழுத்தின் உபாசகன். ஐம்பது வருட ஈடுபாட்டுக்குப் பின் தைரியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

எழுத்தின் பலிபீடத்தில், தவங்கிடந்து பெற்ற பிள்ளைக்கு இட்ட தங்கத்தொட்டிலிருந்து அவன் வளர்ந்து மனிதனாகி ழுழுவயது வாழ்ந்து முடிந்த பின் அவன் சிதைக்கு அடுக்கும் வரட்டி வரைஏன், பின்னர் அவன் அஸ்தி கூட எடையாகிறது. ஆஷாட பூதித்தனம், நன்னம்பிக்கைகள், நாணயம் யாவுமே எம்மாத்திரம்? இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும்போது இதுபோன்ற சாடல்களுக்கும் தயாராய் இருத்தல் வேண்டுமல்லவா?

எழுத்து ஒரு பெரிய சவால். ருசி கண்டவன் அறிவான். ஒரு பெரிய உந்தல் வெறி / சொந்த நாணயத்துக்கு, அந்தந்த நாகரிகத்துக்கு எழுத்து ஒரு உரைகல் / எங்கோ ஆரம்பித்து, சிந்தா நதியின் கதி தள்ளி, எங்கோ வந்துவிட்டேன் -”5 எழுத்தின் தீவிரத்தையும் எழுத்தாளனுக்கு ஏற்படும் உந்துதலையும் ‘மோனம்’ என்ற தலைப்பின் கீழ் வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தைத் தவமாகக் கொண்டு இயங்கிய லா.ச.ரா. அத்தவத்திலிருந்து வாழ்க்கையில் யாரும் காணமுடியாத/அடையமுடியாத ஞானதரிசனத்தைக் கண்டடைந்தார். சிந்தா நதியில் இறங்கும் வாசகர்களுக்கு (வாசித்து முடித்தவுடன்) உடல் மற்றும் மனம் தூய்மை அடைவதோடு, நம் வாழ்க்கையில் நிகழ்ந்த உன்னதங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டுமளவிற்கு அவருடைய எழுத்து இட்டுச்செல்லும். நதியின் போக்குக் கரடு முரடாக இருப்பதைப்போலவே தன் வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளதை லா.ச.ரா. இதன் வழி தெளிவுபடுத்துகிறார்.

பாற்கடல்

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருக்கும் அன்பு, பாசம், இரக்கம், கோபம், பெருமிதம் என்ற சகல உணர்வுகளை அழுத்தமாகவே வெளிப்படுத்தியுள்ளார். தன் முன்னோர்களின் வாழ்வியலிலும், அவர்களின் குணங்களிலும் லயித்து இருக்கிறார். தன் எண்ணங்களிலிருந்து அகலா வண்ணம், அம்முன்னோர்களின் செயல்கள், நம்பிக்கைகள், இலட்சியங்கள், ஆசாபாசங்கள், மனவலிமைகள், வாழ்க்கை முறைகள் (பழக்க வழக்கங்கள்), பாஷைகள் ஆகியன ஒருவித ஈர்ப்பை வழங்கியிருக்கின்றன. தற்காலத்தில் இவையெல்லாம் நீர்த்துபோயிருப்பதைத் தன் கவித்துவ எழுத்துகளினூடாக உணர்த்தும் விதமாக உள்ளது. வாழ்க்கையில் தான் தேடும் தரிசனங்களை, அமைதியை, தெளிவுகளை, மனநெகிழ்வுகளை எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், தனக்காகவும்/கலைக்காகவும் ஆன்மவிசாரத்திற்காகவும் படைப்புகளை உருவாக்கியவர். எனக்கு நேர்ந்த சம்பவங்கள் என் நோக்கை, எந்த அளவுக்குப் பாதித்தன என்பதைச் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை வாசகனுக்குச் சொந்தமாக்குவதேபாற்கடல்எழுதும் நோக்கம். இதில் பிறர் காணும் வெற்றி, தோல்வி, குறைகள், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி. என் விளக்குத் தூண்டுகோல் பற்றித்தான் நான் சொல்லிக்கொள்ள முடியும்.

நடுநிசியின் முழுநிலவில் வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டே தெருவழியே செல்கிறேன். ஏன்? அது என் ஆனந்தம். நான் பிச்சைக்குப் பாடவில்லை. என் இச்சைக்கே பாடிக்கொண்டே போகிறேன்.

சில கதவுகள் திறக்கின்றன.

திறந்திருந்த கதவுகள் மூடிக்கொள்கின்றன.

சிலர் வெளியே வந்து கவனிக்கவும் கவனிக்கின்றனர். இதுதான் இலக்கிய அனுபவம்6 என தன் நோக்கம், வாழ்வியல் இயக்கம், அனுபவம், எழுத்து போன்றவைகளைக் குறித்து தத்துவார்த்த எழுத்துருவில் தனக்கே உரிய பாணியில் புலப்படுத்துகிறார். தன்னைப் பாதித்த விஷயங்கள் பலவற்றையும் இலக்கியமாக்குகிறார். இதனால்தானோ என்னவோ லா.ச.ரா.வின் எழுத்துக்கள் தனித்துவமாகத் திகழ்கின்றன.

நிறைவாக

நவீன இலக்கியத் தளத்தில் பல எழுத்தாளர்களுக்கு மத்தியில் லா.ச.ரா. தனித்து இயங்கக் கூடியவர். தன் கதையம்சத்திலும் வடிவமைப்பிலும் மொழிநடையிலும் மற்ற எந்த எழுத்தாளரையும் சாராதவர். உணர்ச்சி பூர்வமான மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை, அவை நிகழும் கணங்களை, நிறுத்திப் பிடிக்கும் வகையில் சொல்லையும் சொல்லின் பொருளையும் இணைக்கும் ரசவாதத்தைத் திறமையுடன் கையாளும் பண்பு ராமாமிருதத்திடம் உண்டு. “நித்தியத்துவம் என்மேல் படும்போது அதைச் சொல்லில் பிடித்து, அந்த நிமிஷத்தை நித்தியமாக்கிவிடலே என் தேடல், என் கனவுஎன்று அவரே தன் கொள்கையை விளக்குகிறார்.”7

இவருடைய படைப்புகளை வாசிக்க நேரும் வாசகர்கள் ஆழ்ந்த உணர்வுக்கு ஆட்பட்டு, ஆன்மநெருக்கத்தினை அடைவர். இசை லயத்துடன் கூடிய மௌனமொழியின் வழி மனதின் பிரக்ஞையை தூண்டக்கூடியவர். எழுத்தையே தன் வாழ்க்கையாக, ஆன்மவெளிப்பாடாகக்  கொண்டு இயங்கியதால்தான் லா.ச.ரா. தனித்த ஆளுமையுடன் திகழ்ந்துகொண்டிருக்கிறார். வாழ்க்கையின் தாத்பரியங்களைக் காட்டும் அவருடைய எழுத்துக்களானது காலத்தையும் கடந்து நிற்கும் ஆற்றல் உடையது.

மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

  1. லா.சா. ராமாமிருதம், ‘புத்ர’, ப. 118.
  2. மேலது., பக். 144-145.
  3. லா.சா. ராமாமிருதம், ‘அபிதா’, பக். 57-58.
  4. லா.சா. ராமாமிருதம், ‘சிந்தா நதி’, ப. 200.
  5. மேலது., பக். 203-204.
  6. லா.சா. ராமாமிருதம், ‘பாற்கடல்’, ப. 200.
  7. பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், ப. 158.

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

ஆய்வாளர் தனது கட்டுரையில் லா.ச.ராவின் படைப்புணர்வை எடுத்துக் கூறியுள்ளது சிறப்பு. நாவல்கள் வாயிலாகப் பிராமணப் பெண்களின் மனவெளியைப் பூடக மொழியில் கூறியுள்ள பாங்கை விவாதப்படுத்தியிருப்பது அருமை. லா.ச.ரா என்றாலே சற்று மனதில் தயக்கம் ஏற்படும். ஆனால் ஆய்வாளர் துணிவோடு இக்கட்டுரையை உருவாக்கி லா.ச.ராவின் படைப்புலகில் நம்மை யும் அழைத்துச் செல்கிறார். தனது எழுத்து தனக்காக மட்டுமே எழுத ப்படுகிறது என்ற லா.ச.ராவின் எழுத்துத்தவத்தை அவரது படைப்பின் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது இக்கட்டுரை .


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *