-மேகலா இராமமூர்த்தி

மர்க்கடங்கள் மார்புறத்தழுவி பாசம் பகிரும் அரிய காட்சியைத் தன் புகைப்படக் கருவியில் அள்ளிவந்திருக்கிறார் திரு. முபாரக் அலி மக்கீன். கவிதையெழுத இனிய படமிது என்று இதனைப் படக்கவிதைப் போட்டி 239க்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!

மனிதர்களிடம் காணப்படும் பல குணநலன்களை நாம் குரங்குகளிடத்தும் காணலாம். அதனால்தான் நம் சங்க இலக்கிய நூல்கள், மனித வாழ்வியலைக் குரங்குகளைக் கொண்டு பல பாடல்களில் விளக்கியிருக்கின்றன. அதில் ஒன்றுதான் கடுவன்(ஆண்குரங்கு) இறந்ததும் கைம்மைத் துயருற்ற மந்தியொன்று (பெண்குரங்கு) தன் பறழை (குட்டி) சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டு மலையிலிருந்து பாய்ந்து உயிர்விடுவதாகக் கற்பனை நயந்தோன்ற அமைந்துள்ள கடுந்தோட் கரவீரனாரின் குறுந்தொகைப் பாடல்!

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.  (குறுந்: 69)

இனி, போட்டிக்குத் தரப்பட்டுள்ள இவ்வுணர்வுபூர்வமான படத்துக்குப் பொருத்தமான கவிதையெழுதக் கவிஞர்களை அழைக்கின்றேன்.

*****

”தாயன்பு காட்டுவதில் தரணிவாழ் உயிர்கள் அனைத்தும் சிறந்திருக்க, தாய்க்குத் திருப்பிச்செலுத்தவேண்டிய அன்பில் மனிதன் மட்டும் சுருக்கமுடையவனாகின்றான்; அதன் விளைவன்றோ முதியோர் இல்லங்களின் பெருக்கம்!” என வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

மனிதன் மட்டும்…

சின்னஞ் சிறிய பறவைமுதல்
சிறப்பாய் விளங்கும் மனிதன்வரை,
அன்னையின் அன்பு மாறுவதில்லை
அதற்கிணை உலகில் எதுவுமில்லை,
சின்னக் குரங்கை மடிசுமக்கும்
சிறந்த பாசக் குரங்கினத்தின்
பின்னால் வந்த மனிதனவன்
பிழைதான் முதியோர் இல்லமதே…!

*****

தமக்கைக் குரங்கு தம்பியின் முரட்டுத்தனம் பற்றித் தாய்க்குரங்கிடம் முறையிட, தாயோ… ”மகளே! கடவுளை நம்பு; வேண்டாம் வீண் வம்பு” என்று சமாதானம் செய்ய, தமக்கைக் குரங்கோ, ”தம்பியைச் சமாளிக்க எனக்குக் கைகள் இருக்கின்றன; கடவுள் நம்பிக்கை தேவையில்லை!” என்று சொல்வதாகச் சுவையான நாடகத்தைத் தம் கவிதையில் அரங்கேற்றியிருக்கிறார் திரு. சித்தி கருணானந்தராஜா.

குட்டியின் குமுறல்-

அம்மா எனக்கு அடிக்கிறான் தம்பி
சும்மா நானிருந்தாலும் சுரண்டித் தனகுகிறான்
கிட்ட வந்து என் முதுகில் கிள்ளுகிறான் – நான் திரும்ப
எட்டி அறைகின்றான், எனக்கும் வரும் கோபம்.
சின்னக் குழந்தையென்று சினக்காதிருந்தாலும்
என்னையவன் சீண்டி எனைக் கோபம் மூட்டுகிறான்
அம்மா அவனுக்கு அறிவுரை சொல் அல்லவெனில்
நானும் அடிப்பேன் நகத்தாலே பேர்த்திடுவேன்.

தாய் பதில் –
வேண்டாம் மகளே வீணான சச்சரவு
கடவுள் இருக்கின்றார் காத்திடுவார் உன்னை.
எத்தனை கோடி உயிர்கள் இருந்தாலும்
எல்லாரையும் காப்போன் ஏக இறைவன்தான்
காக்கும் கடவுளுனைக் கண்ணெடுத்து ஓர் போதும்
நோக்காது விடமாட்டார் நொந்தவரைக் காக்கின்ற
ஆயிரம் கண்ணுடைய ஆண்டவனே எப்போதும்
தாயினும் மேலாய்த் தயை புரிவான் சகித்துக்கொள்.

குட்டி
அம்மா எனக்கிப்போ அவசரமாய் வேண்டுவது
இம்மா துயரில் இருந்து விடுதலையே
ஆண்டவன் வருவானா அப்பாவி எனைக்காக்க?
என் கையே எனக்குதவி இனிப் பொறுப்பதில்லையம்மா
மானிடர்களின் பொறுமை வானரர்க்கு வேண்டுவதோ?
நானினிமேல் என்றன் நகங்களையே நம்பிடுவேன்.
பாய்ந்தறைந்தாற்தான் தம்பி பணிவான் அதுவேதான்
ஆய்ந்தறிந்த என்றன் அறுதி முடிவம்மா.

(தனகு – சீண்டுதல்-ஈழவழக்கு).

*****

”சுற்றத்தைக் கூவியழைத்து உண்ணும் காக்கையாய்க் கூடி வாழ்! பொய், பொறாமையை விட்டொழி!” என்று மனித யாக்கை பயனுற வாழும் வாழ்க்கையை விளக்குகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

பரிணாமம்!

காக்கை கரவாக் கரைந்துண்ணும் என்னும்
வாக்கை நினைந்து நிற்பாய் மானிடனே!
யாக்கை எடுத்த பயன் பிறர்க்குழைக்க என்னும்
பாடம் கற்றுப் பரிணமிப்பாய் வா நரனே வா!

பொய் பொறாமைத் தீக்குணங்கள் தான்விடுத்து
செய்ந் நன்றி கொண்டார்க்கு உய்வில்லையெனும்
மெய்ப்பொருளைத் தானுணர்ந்து
உய்வு கொண்டு பரிணமிப்பாய் வா நரனே வா!

கவி காட்டும் மெய்யன்பைக் கண்டுணர்ந்து
புவியனைத்தும் களிக்கும் வகைசெய்து
பொதிகை வளர் திருநாட்டில் புது
ஆதிமந்தியெனப் பரிணமிப்பாய் வா நரனே வா!

*****

படத்தில் காணும் இரு குரங்குகளை வைத்துச் சுவையான கதைகளைத் தம் கவிதையில் வடித்துத் தந்திருக்கும் துடிப்பான கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

நட்பே துணை!

வானுயர்ந்த சோலையும்
வளர்ந்து நின்ற மரங்களும்
வளம் பொங்கும் வனமாகும்!

இரை தேடி இந்த வானரம்
இடம்பெயர்ந்து செல்ல
இந்த வனம் எங்கும்
காட்டுதீக்கு இரை ஆனதே!

வேகமாய்ப் பரவிய தீயில்
சிக்கித் தவித்த உயிர்களின்
வேதனை அறியும் முன்னே
சிதைந்து போன உடல்கள் இங்கே!

துள்ளிக் குதித்து திசை அறிந்து
வந்து நின்ற சிறு குரங்கு
தீயில் கருகிக் போகும்
வனம் கண்டு கலங்கி நின்றதே!

ஓடி ஆடித் திரிந்த காலம்
கண்முன்னே வந்து போக
மெல்ல நகர்ந்த அதன் விழியில்
கருகிப் போன தன் அன்னையைக் கண்டதே!

தான் குடி இருந்த கோயில்
தீயில் கருகித் தான் போக
இடி வந்து நெஞ்சைத் தாக்க
உடைந்து தான் போனதே!

உறவுகள் இன்றித் தனிமையில் தவித்திட
உதவிக்கரம் நீட்டி ஆறுதல் சொல்லி
என்னைத் தேற்றி நின்றது
தோழமை போற்றும் நட்பெனும் உறவே!

”இரைதேடி இடம்பெயர்ந்த வானரம் மீண்டும் வனம் வந்தபோது காட்டுத்தீக்கு இரையான வனத்தையும் இறந்துபட்ட தாயையும் கண்டு வெதும்பி நிற்க, உதவிக்கரம் நீட்டி அரவணைத்த நட்பால் மகிழ்ந்தது” என்று அழகான கதையொன்றால் நட்பின் பெட்பினை விளக்கியிருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *