அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

கோபி ஷங்கர் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 240

  1. பழக்குங்கள் பண்பை…

    வெண்ணெய் திருடும் கண்ணனாக
    வேடம திட்டுப் பிள்ளைக்கு,
    கண்ணன் வந்தான் வீட்டுக்கென
    களிப்பு மிகவே வாழ்த்துகிறோம்,
    உண்மையில் திருட வந்தாலோ
    உதவாக் கரையென ஒதுக்குகிறோம்,
    பண்பை அன்பைப் பழக்கிடுங்கள்
    பால வயதிலே பெரியோரே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. வா கண்ணா வா

    உன் வாசல் வந்து வேண்டி நின்றேன்
    வறுமை என்று…. வசதி தந்தாய்
    என் தனிமை தீர்ந்திட வேண்டி நின்றேன்
    துணையோடு வாழ்க்கை தந்தாய்
    வீட்டு விளக்கேற்ற வந்தவள்
    வாரிசை இன்னும் சுமக்கவில்லை என்று வையும் அத்தை என்றும்
    ஏளனமாய் பேசி எள்ளி நகையாடும்
    குழந்தைப்பேறு இல்லை என்று
    சுற்றமும் நட்பும்
    வீட்டில் மழலையாய்
    தவழ்ந்து வந்த மருமகனை
    கண்ணன் வேடமிட்டு அழகு பார்த்தேன்
    பானை நிறைய பஞ்சை
    பொய்யாய் வெண்ணை என
    கண்ணா உனக்கு படையல் வைத்தேன்
    என் பிராத்தனைகள் பொய்யில்லை
    வெண்ணை திருடிய வாயில்
    யசோதைக்கு சுற்றும் உலகை காட்டிய
    களிப்பூட்டும் கதைகள் சொல்லி மகிழ்ந்திருந்தேன்
    வயிற்றில் கரு ஒன்று உருவாகி
    மழலை செல்வமாய் அது பிறந்து
    மலடியேனும் பட்டம் நீக்கி
    அன்பை பொழிந்திடும்
    அன்னையாய் என்னை மாற்றிட
    வா கண்ணா வா

  3. மழலையின் வருகை

    கருமை நிற கண்ணா
    கோகுலத்தின் மைந்தா
    லீலைகளின் மன்னா
    உன் பொற்பாதம்
    குடியானோரின் குடிகளில்
    குழந்தையாய் குதித்தோடி
    நீ விரும்பும் வெண்ணெய்யை
    எங்கள் அனுமதியில்லாது
    உன் குறும்புத்தனத்தில்
    நீ உண்டு மகிழ
    எங்களின் மாயோனே
    உன் கருனை கடலில்
    சிறு துளியளித்து
    பிள்ளை வரத்தை இந்நாளில்
    அருள்வாயா கண்ணா…
    கலியுக பெண்களில்
    பல பேர் கண்ணீரில் கலங்குவதேனோ
    விண்ணைமுட்டும் விஞ்ஞானமிருந்தும்
    தாய்மை தரித்துப்போனதேனோ
    இரசாயன மருந்துகளின் ஊடுருவல்
    கருவுருதலை குறைத்ததோ
    குறைதீர்க்கும் கண்ணா
    எங்கள் எல்லோர் குலங்களையும்
    தழைக்க வழிச்செய்வாயாக…..

    ராவணா சுந்தர்

  4. எதிர்காலப் பொங்கல்

    விளை நிலங்கள் தனையெல்லாம்
    விலைக் கொடுத்து வாங்கி,
    வீடுகட்டிப் பார்க்க எண்ணும் ஒரு
    வித்தகரின் கூட்டம்…

    சோறு போடும் நிலங்களையே
    கூறுபோட்டுப் பார்த்து – எரி
    வேதிபொருள் தேட தினம்
    விழைந்திடுமோர் அரசு…

    பாடுபட்டு உழைத்து செங்கதிர்
    பயிர்வளர்த்து வந்த மண்ணில் – வேறு
    நாட்டதனின் கூட்டம் தினம்
    செய்யும் பல ஆய்வு…

    நிலைதிருத்தி விதிமாற்ற
    வழியேதும் எண்ணிடாமல்
    வெள்ளித்திரை வழியே தலைவனைத்
    தேடும் மக்கள் கூட்டம்…

    மகிழ்ச்சி கொண்டு குடும்பத்துடன் கொண்டாட
    கதிர், கரும்பு எழிற்கோலம் ஏதுமின்றி
    நெகிழிப் பானையில் பஞ்சு பொங்கல் வைத்து
    கொண்டாடும் நம் எதிர்காலச் சமுதாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *