இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு

2

நாகேஸ்வரி அண்ணாமலை

எங்கள் நண்பர் ஒருவர் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர்.  ஒரு முஸ்லீம்.  அங்கேயே படிப்பை முடித்துக்கொண்டு 1958-இல் வேலைபார்க்க அமெரிக்காவுக்கு வந்தார்.  குடும்பம், குழந்தைகள் என்று அமெரிக்காவிலேயே தங்கிவிட்டாலும் இந்தியாவுக்கு சில வருடங்களுக்கு ஒரு முறையாவது போவார். பத்து வருடங்களுக்குச் செல்லுபடியாகும் இந்திய விசாவை மூன்று முறை பெற்று பல முறை தாய்நாட்டுக்குச் சென்றிருக்கிறார். முப்பது ஆண்டுகள் இந்தியாவுக்குப் போய்வந்து கொண்டிருந்தவர் சென்ற மாதம் இந்தியாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தபோது இந்திய அரசு அவருக்கு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. புதிய பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தபின் அவர் விசாவுக்கு விண்ணப்பிப்பது இது முதல் தடவை. தூதர் அலுவலகம் கேட்ட ஒரே கேள்வி எந்த ஆண்டு பிறந்தீர்கள் என்பதே. அவர் சுதந்திரம் வருவதற்கு முன்னரே – நாடு பிளவுபடுவதற்கு முன்னரே- லக்னோவில் பிறந்து இந்தியாவில் இருக்க முடிவு செய்தவர். என்ன கொடுமை! அவர் இந்தியக் குடிமகனாக இருந்தவர், இப்போது அமெரிக்கக் குடிமகன். பிறந்த நாட்டின் பந்தத்தை விட விரும்பவில்லை. அவ்வப்போது இந்தியாவுக்கு வர விரும்புகிறார். அங்கிருக்கும் உறவினர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார்.  1947-இல் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியத் தாய்நாட்டில் இருக்க முடிவுசெய்த காரணத்தால் இப்போது இந்தியாவுக்குப் போக முடியவில்லை. என்ன அநியாயம்.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இன்னும் சில மதத்தவர்களும் வாழ்ந்துவந்தனர்.  பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு முஸ்லிம்கள் சிறுபான்மையராகிவிடலாம் என்றும் அவர்களுக்கு பெரும்பான்மையராக இருந்த இந்துக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகலாம் என்றும் கருதிய ஜின்னா முஸ்லீம் லீக் கட்சியை ஆரம்பித்து முஸ்லீம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று பிரிட்டிஷாரிடம் வேண்டுகோள் வைத்தார்.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்களுக்கென்று தனி நாடு எப்படி அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது எந்தப் பகுதியில் அவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதி அவர்களுக்கான நாடாக பிரகடனப்படுத்தப்படும் என்று முடிவாகியது. இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் பங்களாதேஷ் பகுதியிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதிகள் தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தாலும் அவை இரண்டும் முஸ்லீம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடாக ஆனது.  மற்றப் பகுதிகள் இந்தியா ஆனது.  பாகிஸ்தான் பகுதியிலுள்ள இந்துக்களுக்கு விரும்பினால் இந்தியாவுக்கு வந்து குடியேறவும், இந்தியப் பகுதியிலுள்ள முஸ்லீம்களுக்கு விரும்பினால் பாகிஸ்தானுக்குச் சென்று குடியேறவும் அனுமதி வழங்கப்பட்டது.

முஸ்லீம் லீக் தலைவர்கள் பாகிஸ்தானை முஸ்லீம் நாடு என்று பிரகடனப்படுத்திக்கொண்டனர்.  ஆனால் இந்தியத் தலைவர்களோ இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக விளங்கும் என்றும் அங்கு எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இந்தியாவைத் தங்கள் தாய்நாடாக வரித்துக்கொண்ட முஸ்லீம்கள் இந்தியாவிலேயே தங்க முடிவுசெய்தனர்.  இந்தியாவில் அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் எந்தவிதப் பங்கமும் வராது என்று இந்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி இந்தியாவிலேயே வாழ்ந்துவந்தனர்.  அவர்கள் இந்தியப் பிரஜைகளாக, இந்தியாவுக்கு விசுவாசமாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள் என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வாசகங்களே சாட்சி.

ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை 1941-இல் உருவாக்கியவர் ஆபித் ஹஸன் சப்ராணி;

இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை உருவாக்கியவர் ஹஸ்ரத் மொஹானி;

பாரத் மாதா கி ஜெய் என்னும் முழக்கத்தை உருவாக்கியவர் அஸி முல்லாகான்;

சாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற பாட்டைத் தந்தவர் முக்கம்மது இக்பால்.

இவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள்.  இந்த வரலாற்றை நமக்கு நினைவுபடுத்துபவர் மும்மது ரஃபி, ‘காகிதம்’ என்னும் இதழில்.

உண்மை அப்படியிருக்க இப்போது பி.ஜே.பி. அரசு இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள் என்று கூறி அவர்களை இந்தியாவை விட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்கிறது. அவர்கள் இந்தியத் துணைக்கண்டம் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று இரண்டு நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோதே பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்திருக்க வேண்டும் என்று பூடகமாகக் கூறுகிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது ஒன்றாகயிருந்த வங்காளத்திலிருந்து பலரை அரசு அஸ்ஸாமில் குடியேற்றியது. அஸ்ஸாமில் இருந்த நிலங்களில் விவசாயம் செய்து உணவுப் பொருள்களைக் கல்கத்தாவிற்கு அனுப்புவதற்காக இந்த ஏற்பாடு.  இப்படிக் குடியேறியவர்களில் முஸ்லீம்களும் உண்டு. இவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டதற்குப் பத்திரங்கள் எதுவும் இல்லை. அதனால் இவர்கள் கள்ளத்தனமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்று சொல்லி அவர்களுடைய குடியுரிமையைப் பறித்துச் சிறையில் அடைப்பதற்காக பி.ஜே.பி. அரசு கௌஹாத்திக்கு அருகில் சிறைச்சாலை கட்டிக்கொண்டிருக்கிறது.

தேசிய மக்கள் பதிவேட்டில் புதிதாகத் தந்தையின் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றைக் கேட்கிறார்கள். இபோது உள்ளவர்களின் பெற்றோர்கள் சுதந்திரத்திற்கு முன் எங்கு பிறந்தார்கள் என்று பார்ப்பதற்குத்தானே இந்தக் கேள்வி?  இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து பிரிவினையின்போது இந்தியாவிலேயே தங்க முடிவுசெய்து அதன் பிறகு இந்தியக் குடிமக்களாக வாழ்ந்துவருபவர்களை இந்தியாவை விட்டுப் போகச் சொல்வது எந்த நியாயத்தில் சேர்த்தி?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு

  1. இதற்கு ஆதாரம் தர இயலுமா?? இணைய வசதியும் இணையத்தில் எழுதும் திறனும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா ??

    வல்லமை மேலாண்மை குழுவிற்கு , கட்டற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. இவர் கூறி இருக்கும் தகவலுக்கு ஆதாரம் அவரால் தர இயலாத பட்சத்தில் இந்த செய்தி நீக்கப்பட வேண்டும். இல்லையேல் கண்டிப்பாய் வழக்குத் தொடரப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *