நாங்குநேரி வாசஸ்ரீ

102. நாணுடைமை

குறள் 1011

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற

வேண்டாத கெட்ட காரியத்த செய்யுதவன் வெக்கப்படுததுக்கும், அழகான பொம்பளப்பிள்ளைங்க வெக்கப்படுததுக்கும் வித்தியாசம் உண்டு.

குறள் 1012

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு

சாப்பாடும், உடுப்பும் மத்ததும் எல்லா உசிருக்கும் பொதுவான தேவ. சிறப்பானது மத்தவங்க சொல்லுத பொல்லாப்புக்கு பயந்து கெட்ட காரியத்த செய்யாம வாழுத நாணுடைமைதான்.

குறள் 1013

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு

எல்லா உசிரும் இருக்கதுக்கு எடமா ஒடம்ப வச்சிருக்குதுக. அது கணக்கா சான்றாண்மை நாணம் ங்குத நல்ல கொணத்த எடமா கொண்டிருக்குது.

குறள் 1014

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை

நாணம் இருக்குதது படிச்ச பெருமக்களுக்கு நகநட்டுகணக்கா.  அதுமட்டும் இல்லையினா அவுக என்னதான் பெருமிதமா நடந்தாலும் பாக்கதுக்கு அது நோய் கணக்காதான் தெரியும்.

குறள் 1015

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு

தனக்கு வருத பொல்லாப்புக்காவ மட்டுமில்லாம பொறத்தியாரோட பொல்லாப்புக்காகவும் வெசனப்படுதவங்கிட்ட நாணம் ங்குத கொணம் வாழுததா ஒலகத்தவரு சொல்லுதாங்க.

குறள் 1016

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்

பெரியமனுசங்க இந்த ஒலகத்துல தன் பாதுகாப்புக்காவ நாணத்த வேலி கணக்கா வச்சிக்கிட்டு வாழுவாகளே தவித்து மத்தத இல்ல.

குறள் 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

நாணம்ங்குத கொணத்த கொண்டவுக மானத்துக்காவ உசிர உடுவாகளே தவித்து  மானங்கெட்டு உசிரு வாழ மாட்டாக.

குறள் 1018

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து

வெக்கப்படுத அளவுக்கு பழிபாவத்துக்கு ஆளானவுக அதுக்காவ வெக்கப்படாம இருந்தாங்கன்னா அவுகள விட்டு அறம் வெக்கப்பட்டு வெலகி போயிடுச்சின்னு நெனச்சிக்கிடணும்.

குறள் 1019

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை

கொள்கை தப்பி நடந்தாம்னா அவன் பொறந்த குடும்பத்துக்கு கேடு வரும். மானங்கெட்டு திரிஞ்சாம்னா அவனுக்கு வருத நல்லதெல்லாம் அழிஞ்சுபோவும்.

குறள் 1020

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று

மனசுல வெக்கங்கெட்டு திரியுதவுக நடமாட்டம் மரத்தால செஞ்சி கயறு கட்டி உசிரு இருக்கது போல ஆட்டங்காட்டுத பொம்மை கணக்காத்தான்,

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *