செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(285)

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு.
-திருக்குறள் -604(மடியின்மை)

புதுக் கவிதையில்…

சாக வைத்திடும்
சோம்பலில் சிக்குண்டு
சிறப்புறு முயற்சியேதும்
மேற்கொள்ளாதவர்தம்
குடியழிந்து
குற்றம்தான் பெருகும்…!

குறும்பாவில்…

அழிவுதரும் சோம்பலில் சிக்கி
ஆற்றல்மிகு முயற்சி மேற்கொள்ளாதவரின்
குடியழிந்து குற்றம்தான் மிகும்…!

மரபுக் கவிதையில்…

 அல்லல் தந்தே அழியவைக்கும்
ஆழியாம் சோம்பலில் சிக்குண்டு
வெல்ல வைத்திடும் முயற்சியேதும்
வேண்டியே ஏற்று கொள்ளாத
புல்லர் தங்கள் குடியதுவும்,
பூண்டு மின்றி அழிவதுடன்
சொல்ல வியலாக் குற்றமெலாம்
சேர்ந்து மிகுமிவ் வுலகினிலே…!

லிமரைக்கூ..

சோம்பல் தந்திடும் அழிவு,
அத்துடன் சிறப்புறு முயற்சி மேற்கொள்ளாதார்
குடியழிந்து வருமே இழிவு…!

கிராமிய பாணியில்…

கொள்ளாத கொள்ளாத
சோம்பல் கொள்ளாத,
குடியக் கெடுக்கும்
சோம்பல் கொள்ளாத..

சாகவைக்கிற சோம்பலுல
சிக்கிக் கெடந்து,
செறப்பு தருற
மொயற்சி எதுவும் செய்யாம
மொடங்கிக் கெடக்கிறவன்
குடியழிஞ்சி போவும்
பெரிய
குத்தமாகிப் போவும்..

அதால
கொள்ளாத கொள்ளாத
சோம்பல் கொள்ளாத,
குடியக் கெடுக்கும்
சோம்பல் கொள்ளாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *