அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

0

நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்கா என்ற நாடு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 350 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்கு இப்போது ஒரு அக்கினிப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தேறுமா அல்லது இதுவரை அதற்கு இருந்துவந்த உலகிலேயே ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயரை இழந்துவிடுமா என்ற கேள்வி அமெரிக்கர்கள் பலர் மனதில் இப்போது இருக்கிறது.

2016-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அந்த முடிவு அமெரிக்க மக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று பலர் குரல் எழுப்பினர். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அமெரிக்கத் தேர்தல் விதிகளின்படி இரண்டு கட்சி வேட்பாளர்களில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான் இருக்கின்றன; எப்போதாவது தனிப்பட்ட ஒருவர் கட்சி ஒன்றை ஆரம்பித்து அந்தக் கட்சிச் சார்பில் போட்டியிடுவதுண்டு;  அவர்களில் யாரும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டுக்களைப் பிரிப்பதற்குத்தான் அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் உதவியிருக்கின்றன) யாருக்கு electoral college-இல் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர்தான் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.  இந்த electoral college என்ன என்று பார்ப்போம்.

ஒவ்வொரு மாநிலத்தின் ஜனத்தொகையைப் பொறுத்து அந்த மாநிலத்திற்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஓட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஜனத்தொகை அதிகம் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 55 தேர்தல் ஓட்டுக்கள்; அளவிலும் ஜனத்தொகையிலும் சிறியதான நியூஹேம்ஷையர் மாநிலத்திற்கு 4 தேர்தல் ஓட்டுக்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கட்சிக்கு மக்களின் பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைக்கின்றதோ அந்தக் கட்சி வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் அத்தனை தேர்தல் ஓட்டுக்களும்  கிடைக்கும். அடுத்த கட்சிக்கு எதுவும் இல்லை. ஒரு சில மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் போட்டி தீவிரமாக இருக்கும்.  அங்கு ஒரு கட்சிக்கு மிகச் சிறிய வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் அந்த மாநிலத்தின் எல்லா தேர்தல் ஓட்டுக்களும் அந்தக் கட்சிக்குக் கிடைத்துவிடும். 2016-இல் இப்படித்தான் நடந்தது.  ட்ரம்ப்புக்கு electoral college தேர்தல் ஓட்டுக்களில் ஹிலரியைவிட அதிக ஓட்டுகள் கிடைத்தன; ஹிலரிக்கோ பொதுமக்கள் வாக்குகளில் ட்ரம்ப்பைவிட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. இருந்தாலும் ட்ரம்ப்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி ஆனார். இதனால்தான் இந்தத் தேர்தல் விதியை மாற்றி நாடு முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் ஓட்டுக்களில் பெரும்பான்மை யாருக்குக் கிடைக்கிறதோ அவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் எழும்பும்.  ஆனாலும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.

இப்படி மொத்த ஜனங்களின் ஓட்டுக்களில் பாதிக்குமேல் பெறாமல் பதவிக்கு வந்த ட்ரம்ப்பின் மேல் பலருக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 40% சதவிகிதத்திலிருந்து குறையவில்லை என்கிறார்கள். ஒபாமா ஏழைகளுக்காகவும் அமெரிக்காவின் பிம்பத்தை நல்லபடியாக உயர்த்துவதற்காகவும் என்னென்ன செய்தாரோ அவை எல்லாவற்றையும் ஒபாமா செய்தார் என்பதற்காகவே மாற்றிவருகிறார் ட்ரம்ப். அமெரிக்க நாடு வெள்ளை இனத்தவருக்கே என்ற வாதத்தை மறைமுகமாகக் கூறி வருகிறார். வெள்ளை இன அமெரிக்கர்களுக்கு இந்த வாதம் மிகவும் பிடிக்கிறது. அமெரிக்கா இப்போது பொருளாதாரத்தில் உலகிலேயே முதன்மை நிலையில் இருப்பதற்கு முதலில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக இங்கு கொண்டுவரப்பட்ட அடிமைகளின் உழைப்பும் அதன் பிறகு உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பங்களிப்பும் காரணம் என்பதை இந்த வெள்ளை இனவாதிகள் மறந்துவிடுகிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அமெரிக்காவை விட்டுப் போய்விட்டால் அமெரிக்காவின் வளம் அனைத்தும் தங்களுக்கே என்று இவர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவின் பன்மைத்தனம்தான் அமெரிக்காவின் சிறப்பம்சம், அதன் வலிமை என்று இவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் வெள்ளை இன மக்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவருவார் என்று ட்ரம்ப்பின் பின்னால் இவர்கள் கானல் நீரை நோக்கி ஓடுபவர்கள்போல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு தலைமுறையில் வெள்ளை இனத்தவர் சிறுபான்மையினராக ஆகிவிடுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது.

இவர்கள் கொடுக்கும் தைரியத்தில் ட்ரம்ப்பும் தான்தோன்றித்தனமாக, தான் அமெரிக்காவுக்கே அரசன்போல் நடந்துவருகிறார். ரஷ்யாவின் புதின் போல், சீனாவின் ஷி போல், துருக்கியின் எர்டோவன் போல், இந்தியாவின் மோதிக்கு இருக்கும் வாய்ப்பு போல், சவூதி அரேபியாவின் சல்மான்கான் போல், வட கொரியாவின் கிம் ஜாங்-அன் போல் தான் வாழ்நாளுக்கும் அமெரிக்காவின் அதிபராக இருந்துவிட முடியாதா என்று ஏங்குகிறார். உலக அரங்கிலும் அமெரிக்காவின் பல நட்பு நாடுகளுடன் எதையும் சிந்திக்காமல் மனதில் தோன்றுவதைப் பேசி வருகிறார், நடந்து வருகிறார். அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு,  ராணுவ பலம் வாய்ந்த நாடு என்பதால் பல நாட்டுத் தலைவர்களும் ட்ரம்ப்பைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் நடந்துகொள்கிறார்கள். உள்நாட்டிலும் 40 சதவிகித மக்களின் ஆதரவு இருப்பதாலும் வெளிநாடுகளிலும் அமெரிக்காவின் பலத்திற்குப் பயந்து பல தலைவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பதாலும் ட்ரம்ப்பின் அட்டகாசங்களுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் 2020 தேர்தலில் தன்னை எதிர்க்கக்கூடிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஜோ பைடன் முதலிடம் வகிக்கலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மேல் எப்படியாவது சேற்றைப் பூசிவிட வேண்டும் என்று நினைத்தார். துணை ஜனாதிபதியாக இருந்த பைடனின் மகன் உக்ரைன் நாட்டின் ஒரு ஊழல் மலிந்த, எரிசக்தி கம்பெனியின் உயர்பதவியில் இருந்தார்; அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தாலும் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை.  பைடனையும் அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும், அப்படி விசாரித்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக அமெரிக்கப் பாராளுமன்றம் தீர்மானித்த 391 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அளிப்பதாகவும் 2019 ஜூலை மாதம் 25-ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஸெலின்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டுக் கூறியிருக்கிறார்.  அமெரிக்கப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு அந்நிய நாடுகளுக்கு ராணுவ உதவியை பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே நிறுத்திவைப்பது அமெரிக்கச் சட்டப்படி குற்றம்.  நிறுத்திவைத்தது எப்படியோ உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே வந்துவிட்டது.

ஏற்கனவே ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்கப் பல முறை முயன்ற ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் இப்போது ட்ரம்ப்பின் இந்த அடாவடிச் செய்கையை முன்வைத்து அவரைப் பதவி இறக்க விசாரணை (impeachment) செய்து எப்படியாவது பதவியிலிருந்து இறக்கிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள்.  இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றால் அமெரிக்கா சட்டப்படி நடக்கும் நாடு, ஜனாதிபதியானாலும் சட்டத்திற்கு மேற்பட்டவர் அல்ல என்பது நிரூபணமாகும். இதுதான் அமெரிக்காவுக்கான இப்போதைய அக்கினிப் பரீட்சை.

முதலில் ட்ரம்ப் உக்ரைன் அதிபரோடு தான் பேசவேயில்லை என்றார். பிறகு பேசியதாகவும் பைடனைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் விசாரிக்கச் சொல்லவில்லை என்றும் விசாரித்தால்தான் ராணுவ உதவி என்று நிபந்தனை போடவில்லை என்றும் கூறிவந்தார்.

இப்போது எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்ட பிறகு இந்தச் செய்திகள் எல்லாம் பொய்ச் செய்திகள் (fake news) என்று சொல்லிவருகிறார். (இவரிடமிருந்துதான் இந்திய அரசியல் தலைவர்களும் fake news என்ற வார்த்தையைக் கற்றிருக்கிறார்கள்.)  தான் மட்டுமே உண்மை பேசுவதாகவும் மற்றவர்கள் எது கூறினாலும் அது பொய் என்றும் ட்விட்டரில் கூறுவது ட்ரம்ப்பின் பொதுவான வழக்கம்.  இப்போதும் அதைத்தான் செய்துவருகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையால் இதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. சில தினங்களுக்கு ஒரு முறை ‘உண்மை எப்போதும் வெல்லும்’ என்று விளம்பரம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

எப்படியாவது ட்ரம்ப்பின் இந்தக் குற்றத்தை நிரூபித்துவிட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முயன்றுகொண்டிருக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழவையில் ஏற்கனவே ட்ரம்ப் பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இருந்தாலும் மேலவை அங்கத்தினர்கள் 100 பேரில் 67 பேர் ஓட்டுப் போட்டால்தான் ஜனாதிபதியைப் பதவி இறக்கம் செய்ய முடியும்.

செனட்டில் 47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்களும் 53 குடியரசுக் கட்சி அங்கத்தினர்களும் இருக்கிறார்கள்.  47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுப் போடத் தயாராக இருக்கிறார்கள்; குடியரசுக் கட்சியில் இப்போதைக்கு யாரும் பதவி இறக்க ஓட்டைப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது.  இத்தனைக்கும் இன்று (ஜனவர் 27, 2020) ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போல்ட்டன் என்பவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி (இது இன்னும் வெளியாகவில்லை; மார்ச் 17 அன்று வெளியாகிறது.) ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்து ட்ரம்ப்பிற்குப் பாதகமான செய்திகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படியும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் யாரும் பதவி இறக்கத்திற்கு ஓட்டுப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் ட்ரம்ப்பை எப்படியாவது இறக்கிவிட வேண்டும் என்று தங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றன. கீழவையின் பதவி இறக்கத் தலைவர் தன் வாதங்களை முடிக்கும்போது, ‘இப்போது உலகம் முழுவதும் அமெரிக்காவைத்தான் ஜனநாயகத்திற்கு உதாரணமாகப் பார்க்கிறது. அதனால் இப்போது ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்காவே விசாரணைக்குள்ளாகி இருக்கிறது’ என்று முடித்தார். பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர், ‘உலகிற்கே ஜனநாயக வழிகாட்டியாக இருந்த, உண்மை அதிகாரம் மக்களிடம் இருந்த,  அமெரிக்கக் குடியரசு இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும் அபாயம் இருப்பதுபோல் இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு இது சோதனைக் காலம். ட்ரம்ப்பை குடியரசுக் கட்சி செனட்டர்கள் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்த பிறகும் பதவியிலிருந்து இறக்கவில்லையென்றால், இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தோற்றுவிட்டால் உலகிற்கே இது நல்ல சகுனமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *