அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது

0

நாகேஸ்வரி அண்ணாமலை

மனிதன் முடியாட்சியிலிருந்து முன்னேறி குடியாட்சிக்கு வந்துவிட்டான் என்று மகிழ்ந்திருந்த சமயம் உலகின் நாடுகளுள் முன்னணியில் இருக்கும், ஜனநாயகத்திற்கு ஒரு உதாரணமாக விளங்கிய அமெரிக்கா இப்போது ஜனநாயக்தை இப்படிச் சாகடித்துவிட்டதே என்பதை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.  சென்ற சில மாதங்களாக அமெரிக்காவில் நடந்துவந்த நிகழ்ச்சிகள் மனதில் கவலையைத் தோற்றுவித்தாலும் ‘என்ன இருந்தாலும் இது அமெரிக்கா, ஜனநாயகம் எளிதில் இங்கு தோற்றுவிடாது என்று நம்பிக்கொண்டிருந்தேன்.  அந்த நம்பிக்கை பொய்த்துவிட்ட பிறகு இது கனவா, நனவா என்ற எண்ணத்தில் மனது உழல்கிறது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருக்கும் எனக்கு, இந்தியாவில் அரசியல்வாதிகள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள், பணம் படைத்தவர்கள் ஆகியோர் செய்யும் ஊழல்கள், திருட்டுத்தனங்கள் ஆகியவை பற்றி அறிந்திருந்த எனக்கு, அமெரிக்காவில் தினசரி வாழ்க்கையில் ஊழல்கள் இல்லாதது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும்.  இந்தியாவில் என் தந்தை இறந்த பிறகு என் பெற்றோர்களின் வீட்டை நான் சுவிகரித்துக்கொண்டபோது எங்கள் ஊர் நகராட்சியிடமிருந்து தண்ணீர் வசதி கொடுப்பதற்கான ரசீதை என் பெயருக்கு மாற்றுவதற்கு நகராட்சி அலுவலகத்திற்கு அத்தனை முறை நடந்தேன்.  அந்த அலுவலகம் எங்கள் வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளி இருந்ததால் 50 முறை சளைக்காமல் நடந்தேன். லஞ்சம் கொடுப்பதில்லை என்று கடைசிவரை உறுதியாக இருந்தேன். மேலும் நகராட்சி கமிஷனர் நேர்மையானவராக இருந்ததால் என்னால் லஞ்சம் கொடுக்காமல் ரசீதை என் பெயருக்கு மாற்ற முடிந்தது. ஆனால் சமீபத்தில் எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டை எங்கள் பகுதி மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு மிகக் குறைந்த வாடகைக்குக் கொடுத்தேன். ஆனால் அவர்களோ அவர்களின் கீழ் வேலைபார்த்த நிறுவனத்தோடு பகைமை கொண்டு அவர்களையும் எங்களையும் தண்டிக்க வேண்டி எங்கள் வீட்டையே பூட்டி சாவியை வருமான மாவட்ட அதிகாரியின் (RDO) அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.  நாங்கள் அமெரிக்காவில் இருந்ததால் வீட்டைத் திருமபப் பெற முடியவில்லை என்று நான் நினைத்தேன்.  ஆனால் அது சரியல்ல.  நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பிப் போன பிறகும் வீடு எங்களுக்குக் கிடைக்கும் சாத்தியம் இல்லாமல் இருந்தது.  பல மாதங்களாகப் பூட்டியிருந்த வீட்டின் நிலை பற்றி நான் வெகுவாக வருந்தி, கடைசியாக லஞ்சம் கொடுத்தால்தான் வீட்டைத் திரும்பப் பெற முடியும் என்பதை உணர்ந்து, ஒரு கணிசமான தொகையை லஞ்சமாகக் கொடுத்து  வீட்டைத் திரும்பப் பெற்றேன்.  இன்னும் எத்தனையோ சம்பவங்கள்.  சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற இடத்திலிருந்து வந்து அமெரிக்காவில் வாழ ஆரம்பித்தபோது தினசரி வாழ்க்கையில் ஊழலே இல்லாமல் இருந்தபோது மிகவும் நன்றாக இருந்தது. வீடு வாங்கினால், விற்றால் எல்லாம் வெளிப்படை. எல்லாவற்றுக்கும் கணினி உபயோகிப்பதால் எதையும் மறைக்க முடியாது. எல்லா அரசு அலுவலகங்களிலும் இதமாக நடந்துகொள்வார்கள். எந்த இடத்திலும் எவ்வளவு கூட்டம் என்றாலும் வரிசை இருக்கும்; நாம் முன்னாலும் போக முடியாது; நம் இடத்தையும் யாரும் பிடித்துக்கொள்ள மாட்டார்கள்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தகுதிக்கேற்பத்தான் சேர்க்கை இருக்கும். அப்பா பணக்காரர் என்பதாலோ அல்லது பெரிய பதவி வகிப்பவர் என்பதாலோ ஒரு மாணவனுக்கு சலுகை கிடையாது. அதேபோல் துணைவேந்தர் நியமனம், ஆசிரியர்கள் நியமனம், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகிய எல்லாவற்றிலும் தகுதி இருந்தால்தான் முடியும்.

அமெரிக்காவில் இம்மாதிரி விஷயங்களில் ஊழல் இல்லையென்றாலும் அரசியலில் வேறு மாதிரி ஊழல் இருப்பதாகச் சொல்வார்கள். பெரிய கம்பெனிகள் தங்களுக்கு ஏதுவாகச் சட்டம் இயற்றிக்கொள்வதற்கு அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் சமயத்தில் பணம் கொடுப்பார்கள். ஆனாலும் அந்தப் பணம் அவர்களுடைய பாக்கெட்டுகளுக்குப் போவதில்லை. தேர்தல் செலவுக்குத்தான் அதை உபயோகிக்க முடியும். பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் ஜெயித்து பின் பணம் கொடுத்தவர்களுக்குச் சாதகமாகச் சட்டம் இயற்றினால் அதுவும் ஊழல்தான் என்று சொல்வோரும் உண்டு.

அமெரிக்காவில் முன்பெல்லாம் விவாகரத்து செய்துகொண்டு இன்னொரு முறை திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்பு இல்லையென்பார்கள். ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை ரீகனைத் தவிர வேறு எந்த ஜனாதிபதியும் ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்துகொண்டதில்லை.  ஆனால் ட்ரம்ப் மூன்று முறை திருமணம் செய்துகொண்டும், பணம் இருப்பதால் எந்தப் பெண்ணையும் தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று பெருமை பேசிக்கொண்டும், பல பெண்களோடு தகாத உறவு வைத்துக்கொண்டும் இருந்தாலும் அமெரிக்க மக்கள் அவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஜனாதிபதி ஆன பிறகும் அவர் செய்கைகளும் பேச்சுக்களும் ஒரு ஜனாதிபதி பேசுவதுபோல் இல்லை. தான் ஒரு சர்வாதிகாரிபோல் பேசிக்கொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறார். அப்படியும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம்.  இன்னும் 40% பேர் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்களாம். அந்தத் தைரியத்தில்தான் ட்விட்டரில் தினமும் ஏதாவது எழுதிக்கொண்டிருக்கிறார்.

2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய அரசு தலையிட்டு ட்ரம்ப் வெற்றிபெற உதவியது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அது பற்றிய விசாரணை ஆரம்பிக்கும் முன்னால் எஃப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கோமி என்பவரைத் தனக்குச் சாதகமாக சாட்சி சொல்லச் சொன்னார். அவர் மறுத்ததால் அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். அமைச்சரவையில் உள்ளவர்களை இஷ்டத்திற்கு நீக்குவது என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்.

2020 தேர்தலில் தனக்கு எதிராக, ஒபாமாவுக்கு துணைஜனாதிபதியாக இருந்த பைடன் போட்டியிடலாம் என்றும் தன்னை வென்றும்விடலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மீது எப்படியாவது ஏதாவது குற்றத்தைச் சுமத்திவிடலாம் என்று நினைத்து உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி செலென்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டு உக்ரைன் நாட்டின் ஒரு கம்பெனியில் உயர் பதவியில் இருக்கும் பைடனின் மகனைப் பற்றி விசாரிக்கச் சொன்னார். அப்படி விசாரித்துத் தகவல் கொடுத்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த 391 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியைக் கொடுப்பதாகக் கூறினார். ஏற்கனவே அமெரிக்கப் பாராளுமன்றம் இந்த ராணுவ உதவியை உக்ரைனுக்குக் கொடுக்க அனுமதி கொடுத்துள்ளது. இப்படிப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு ஜனாதிபதி அதை நிறுத்திவைப்பது சட்டப்படி குற்றம். ட்ரம்ப் செலென்ஸ்கியைக் கூப்பிட்டது உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே தெரிந்துவிட்டது. உடனேயே ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ட்ரம்ப்பின் மேல் விசாரணையை ஆரம்பித்தனர். முதலில் தான் உக்ரை ஜனாதிபதியோடு தொலைபேசியில் பேசவேயில்லை என்று பொய் சொன்னவர் பின்னால் பேசியதாக ஒப்புக்கொண்டாலும் அது தவறே இல்லை என்று வாதாடியதோடு இந்த விசாரணையே தேவையில்லாதது என்று ட்விட்டரில் எழுதிக்கொண்டிருந்தார்.

கீழவை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பதவி இறக்க விசாரனையை ஆரம்பித்து ட்ரம்ப் செலென்ஸ்கியோடு தொலைபேசியில் பேசியதை ஆதாரபூர்வமாக நிரூபித்து மேலவை உறுப்பினர்களின் சம்மதித்திற்காக செனட்டிற்கு அனுப்பினர். ஆனால் குடியரசுக் கட்சி செனட்டர்கள் ஒருவர்கூட ட்ரம்ப்பிற்கு எதிராக ஓட்டுப் போட விரும்பவில்லை. ட்ரம்ப்பின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்ச்சில் தான் வெளியிடவிருக்கும் புத்தகத்தில் ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதியோடு பேசியதை ஆதாரத்தோடு விளக்கியிருந்தார். புத்தகம் வெளிவருமுன்பே இந்தத் தகவல் ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்துவிட்டது.  இவ்வளவு தூரம் வந்த பிறகு குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் ட்ரம்ப் செலென்ஸ்கியோடு பேசியதை மறுக்க முடியவில்லை. ஆனாலும் ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க யாரும் முன்வரவில்லை. ட்ரம்ப் செய்தது குற்றம்தான் என்றாலும் பதவியை விட்டு இறக்கும் அளவுக்குப் பெரிய குற்றம் இல்லை என்று வாதாடுகிறார்கள். 1999-இல் கிளிண்டனைப் பதவியிலிருந்து இறக்கியே தீருவது என்று அவருக்கு எதிராக வாதாடிய கென்னத் ஸ்டார் என்னும் வழக்கறிஞர் இப்போது ட்ரம்ப் சார்பில் வாதாடினார். ட்ரம்ப் செய்தது தவறான செய்கைதானாம், ஆனாலும் பதவியிலிருந்து இறக்கப்படுவதற்குரிய குற்றம் இல்லை என்கிறார்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்கு ட்ரம்ப் இன்னொரு நாட்டின் அதிபரின் உதவியைக் கோரியிருக்கிறார். அப்படி உதவி செய்தால்தான் ராணுவ உதவி செய்வதாகவும் அச்சுறுத்தியிருக்கிறார். இவையெல்லாம் குற்றங்கள் இல்லையென்றால் வேறு எவை குற்றம் என்று கருதப்படும்?

அமெரிக்காவில் கட்சித் தலைவருக்கோ ஜனாதிபதிக்கோ பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படுவதில்லை. எதிர்க் கட்சி எடுக்கும் முடிவுகள் சரியென்று தோன்றினால் தங்கள் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போடவும் செய்வார்கள்.  இப்போது அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேரும் ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க ஓட்டுப் போடப் போவதில்லை. ட்ரம்ப்புக்கு எதிராக ஓட்டுப் போட்டால் வரும் நவம்பர் மாதத் தேர்தலில் மக்கள் ஆதரவு இவர்களுக்குக் கிடைக்காதாம், தேர்தலில் வெற்றிபெற மாட்டார்களாம்.

இதுவரை உலகில் ஜனநாயகத்திற்கே ஒரு மாடலாகத் திகழ்ந்த அமெரிக்காவிலேயே ட்ரம்ப் செய்யும் அநியாயங்களை மக்களின் பிரதிநிதிகள் தட்டிக் கேட்கவில்லையென்றால் அமெரிக்காவில் ஜனநாயகம் செத்துவிட்டதாகத்தான் கூற வேண்டும்.  சாதாரணமாக அமெரிக்கா வெளிநாட்டு விஷயங்களில் தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் அநியாயமாக நடந்துகொண்டாலும் உள்நாட்டு விவகாரங்களில் ஜனநாயக முறைப்படி நடந்துகொள்ளும் என்று பெயர்பெற்றிருந்தது.  ட்ரம்ப் விஷயத்தில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்டதைப் பார்த்தால் அமெரிக்க ஒரு ஜனநாயக நாடு என்று இனி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *