பேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு

0

உரையாளர் குறித்து

தமிழ்த் தேசிக அரங்கர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்கள் இலங்கை நெல்லியடியில் (1938) பிறந்தவர். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர். தமிழ் அரங்கச் செயல்பாட்டில் மூத்த முன்னோடி வழிகாட்டியாகச் செயல்பட்டு வருபவர். இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்று வருகிற இனவாதச் சிக்கலில் அரங்கச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ்த் தேசிகத்தைக் கட்டமைக்க முயன்றவர். இதனைப் பண்டைய தமிழ் மரபிலிருந்தும் சமகால கூத்து மரபிலிருந்தும் மீள் உருவாக்கம் செய்தவர். சிலப்பதிகாரத்தில் உள்ள அரங்க மரபுகளை ஆய்வு செய்யும் அதே வேளையில் சிலப்பதிகாரமே ஒரு அரங்கப்பனுவல்தான் என்பதையும் நிறுவுகிறார். இவரது முதன்மையான ஆய்வு நூல் சிலப்பதிகாரம் அரங்கத் திறம். நாடகக்கலை குறித்து உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முறையாகப் பயிற்சி பெற்று பத்துக்கும் மேற்பட்ட நாடகப்பனுவல்களை உருவாக்கியுள்ளார். இலங்கை, தமிழகம், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் தனியாகவும் கூட்டாகவும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். எண்பது வயதினைக் கடந்து இன்றும் தமிழ் தேசிக அரங்கம் குறித்து சிந்தித்தும் செயல்பட்டும் வருபவர். இவரது கலைப்பயண வரலாறு என்பது கடந்த அறுபது ஆண்டுகால தமிழ் அரங்கக்கலைவரலாற்றின் கலைப்பயணமும் ஆகும்.

முகமாடல் – Curtain Raiser

‘எனது அரங்கப் பயணம்’ எனது அரசியல் பயணமும் ஆகும். நான் அரசியலுக்கு ஊடாக நாடக அரங்கிற்கு வந்தவன். எனது நாடகங்கள் அரசியல் பேசும். எனது நாடகங்கள் நிரந்தர முரண்பாடுகளைப் பற்றிப் பேசும். ஏனைய முரண்பாடுகள் முனைப்புப் பெறும்போது அவற்றையும் பேசும். முரண்பாடுகளில் நடுநிலைமை இல்லை. எப்பக்கம் என்பதுதான் கேள்வி. வர்க்கமாக இருக்கலாம் இனமாக இருக்கலாம் சாதியாக இருக்கலாம் பால்வேறுபாடாகவும் இருக்கலாம். எதுவானாலும் அடக்கி ஒடுக்கப்பட்டவர் பக்க நியாயத்தையே எனது நாடகங்கள் பேசும்.

உள்ளடக்கத்தில் மட்டுமல்ல உருவத்திலும் அரசியல் உண்டு. உருவம் அடையாளம் காட்டும். இது அடையாள அரசியல். அரங்கின் அடையாளத் தேடலே எனது அரங்கப்பயணமாகும். என் அரங்கப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். உணராமலும் உணர்ந்தும் அடையாளத்தைத் தேடியே அரங்கில் பயணித்திருக்கிறேன். பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிடமும் ஒவ்வொரு அரங்கக் கோட்பாடாக வழிகாட்டியது. தேசிக அரங்கு என்ற அரங்கக் கோட்பாட்டை அடைந்திருக்கிறேன். அடையாளத் தேடலின் அதிமுக்கிய இடத்திற்கு வந்திருக்கிறேன். நான் இந்த இடத்திற்கு வந்தவற்றை உரையாடவுள்ளேன். எனது ஒவ்வொரு நாடக அரங்காக்கமும் அரங்கியல் அடையாளத்தை நோக்கிய பாய்ச்சலாக உள்ளது. ஆகவே ஒவ்வொரு நாடகத்தையும் சுட்டிப் பேசலாம்.

பேராசிரியர் வீ. அரசு பற்றிய சிறு குறிப்பு

பேராசிரியர் வீ. அரசு அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியக் கல்வியை, ஆய்வை விரிவான தளத்தில் முன்னெடுத்தவர். தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல் முதலான துறைகளோடு இணைத்து தமிழ்க்கல்வியை சமூகவியல் கல்வியாக வளர்த்தெடுத்ததுடன் அதே தன்மையோடு ஏராளமான ஆய்வு மாணவர்களையும் உருவாக்கியவர். தமிழ்ச்சமூகம் குறித்த மறைக்கப்பட்ட உண்மைகளை  அரிதான ஆவணங்களிலிருந்து தொகுத்தும் பதிப்பித்தும் ஆராய்ந்தும் வெளிப்படுத்தி வருபவர்.

பேராசிரியர் வீ. அரசு அவர்களின் மணிவிழாவின் போது அவரது மாணவர்களால் உருவாக்கப்பட்டது இவ்வறக்கட்டளை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *