வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-11

0

தி. இரா. மீனா

உரிலிங்க பெத்தி

களவுத் தொழில் செய்து கொண்டிருந்த இவர் உரிலிங்க தேவனின் மாணவனாகி கல்வியும் அனுபவமும் பெற்று பல வசனங்களை இயற்றியவர். உரிலிங்கதேவனுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பையேற்றுச் செயல்பட்டவர். தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் தலைமைப் பொறுப்பில் செயல்பட்டது பசவரின் அனுபவ மண்டபம் அனைவரையும் சமமாகப் போற்றும் தன்மையை வெளிப்படுத்துகிறது. ”உரிலிங்க பெத்திப்பிரியா விஸ்வேஸ்வரா“ என்பது இவர் முத்திரையாகும். குருவின் உயர்வு, இலிங்க—ஜங்கமக் கோட்பாடுகள் ,குலம்—சாதி வேறுபாட்டு ஐயங்களை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன. பலவிடங்களில் வசனங்கள் சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டுள்ளன. அது இவரது புலமையைக் காட்டுவதாக அமைகிறது.

 1. “அமுதென்பது எல்லோருக்கும் அமுதே
அது சிலருக்கு அமுதும் சிலருக்கு விடமுமாகாது
நல்ல குரு அனைவருக்கும் குருவாவார்
உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

2. “ஐயனே! உன் சரணர் பாதபக்தி எனக்குச் சிவமுக்தி
உன் சரணரை வணங்குவது எனக்குச் சிவமுக்தி
உன் கணங்களின் தியானம் எனக்குச் சிவமுக்தி
உன் மூதாதையரின் ஞான அனுபவம் எனக்குச் சிவமுக்தி
நான்குவகை முக்தியன்றி வேறொன்றறியேன்
உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

3. “காமம் பேராசை சினம் மோகம் செருக்கு பொறாமை
நட்பு பகை என உடலிருக்கிறது
நட்பும் பகையும் வந்து வந்து போகிறது.
இதில் நானே பிரம்மமெனும் வீண் பேச்செதற்கு?
இன்பம் அறிக,நம்புக
உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

4. “தீயில் புடமிட்டுச் சோதித்த
சாம்பல் போலானேன் உம்மை வணங்கி
ஞானாக்னிஸ்சர்வகர்மாணி பஸ்ம சாத்கருத்தே” என
காய்ச்சிய இரும்பின் மீது நீர் தெளித்தது போலானேன்
உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

5. “இலிங்கத்தில் உள்ளமிணைந்து
ஜங்கமத்துள் பணமிணைந்து
சத்குருவில் அங்கமிணைந்தால்
பக்தன் இலிங்கத்துக்குள் ; இலிங்கம் பக்தனுக்குள்.
கபடமற்ற தாஸோகம் பரமாத்ம மோட்சம்
சத்தியமிது, நித்தமும் அறிவான் சிவன்
உரிலிங்கப் பெத்திப் பிரிய விஸ்வேஸ்வரனே”

உரிலிங்கப் பெத்தியின் புண்ணியஸ்திரி காளவ்வே

உரிலிங்கப் பெத்தியின் மனைவி காளவ்வே. ”உரிலிங்கப் பெத்திகள் அரசா” என்பது இவரது முத்திரையாகும். விரத உயர்வு, காயக இன்றியமையாமை, சாதி—குலம் பற்றிய தீவிரமான எதிர்ப்பு ஆகியவை இவரது வசனங்களின் சிறப்பாகும்.

“கடமை காயகமற்றவர் பக்தரில்லை
காயகமென்பது உண்மையற்றதும் தூய்மையற்றதுமல்ல
ஆசையென்பது இவ்வுலகின் விதை
ஆசையற்றிருப்பது முக்தி தருவதெனினும் சுலபமானதல்ல
உரிலிங்கப்பெத்திகள் அரசா”

எலேகார ராமண்ணா

இலை விற்கும் தொழில் இவருடையது. ”ஆதுரேஸ்வரலிங்கா” இவரது முத்திரையாகும். விரத மேன்மை பற்றியதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

“வெற்றிலை முற்றுவதற்கு ஆறு திங்கள்
கணமொன்றில் நோன்பு கெட்டால் நீசனென்று சேரமாட்டார்
வெற்றிலை முற்றினால் சிவனுக்கு அர்ப்பணம்
நோன்பு  கெட்டால் அக்கணமே மரணம்
ஆதுரேஸ்வரலிங்கமே”

ஏகாந்த ராமிதந்தே

கல்புர்கி மாவட்டம் ஆளந்தா என்னும் பகுதியைச் சேர்ந்தவர். புலிகெரே சோமேஸ்வரன் இவர் கனவில் தோன்றி வேற்று சமயத்தைச் சேர்ந்தவர்களை வெற்றி கொள்ள வேண்டுமென்று கட்டளையிடுகிறார். அதையேற்று அந்த நோக்கத்தோடு அப்பலூர் வருகிறார். சமணர்களோடு வாதம் செய்து பிரமேஸ்வரர் கோயிலில் தலையெடுக்கும் போட்டியில் வெற்றி பெற்று பசதி சோமேஸ்வரர் ஆலயத்தை அமைக்கிறார். இந்த நிகழ்ச்சி அப்பலூர்க் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இது சோமேஸ்வர ஆலயத்தின் சுவர்களிலும் செதுக்கப்பட்டுள்ளது. ”என்னய்யா சென்னராமா” என்பது இவரது முத்திரையாகும். ஆத்மா-உடல் வேறுபாடு, ஆசையற்ற தன்மை, ஆடம்பரத்தை வெறுக்கும் தன்மை ஆகியவை வசனங்களில் வெளிப்படுகின்றன.

“உணவு உடை பிற தேவைகளுக்குப் பொய் சொல்லி
கருமித்தன இயல்பால் துன்பமடைந்து
சேவை செய்ய வைப்பது குருவின் இயல்புக்குப் பொருளற்றது.
எண்ணெய் –நீருக்குமான வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டும்
மாலைக்குள் மறைந்திருக்கும் நூல் போல
தன்தோலைக் களையும் பாம்பு போன்றது குருஸ்தலம்
சென்னராமேஸ்வரலிங்கா அறிந்தவர் இப்பண்பானவர்”

ஏலேஸ்வர கேதய்யா

கல்புரிகி மாவட்டம் ஏலேஸ்வரத்தைச் சேர்ந்தவர். விவசாயம் இவரது தொழிலாகும். ”உடலுக்குப் பாதுகாப்பு ஒழுக்கம்; உள்ளத்துக்குப் பாதுகாப்பு அறிவு ”என்பது இவரது கொள்கையாகும். ”ஏலேஸ்வரலிங்கா” என்பது இவரது முத்திரையாகும். நோன்பு—விதிமுறிகள்—இயல்பு, ஒழுக்கம் பற்றிப் பேசுகின்றன இவரது வசனங்கள்.

1. “ஒழுங்கு விரதம் என எதைப் பின்பற்றினாலும்
அது தூய்மையானதாக இருக்கவேண்டும்
சண்டை, வேளாண்மை, இரத்தல், தொழில் என்று எதுவாக
இருப்பினும் தூய்மை வேண்டும். அந்த பக்தனின் உடல்
ஏலேஸ்வரலிங்கத்தின் உடலாம்”

2. “தகப்பன் மகனை அழைப்பது;மகன் தந்தையை அழைப்பது
மாமன் மைத்துனனை அழைப்பது மைத்துனன் மாமனை
அழைப்பது—இப்படித் தங்களுக்குள்ளே உணவிட்டுக் கொண்டு
தங்களை ஜங்கமர்களென்று அழைத்துக் கொள்பவர்கள்
ஏலேஸ்வரலிங்கத்தோடு ஐக்கியமானவர்களில்லை”

3. “நோன்பு உள்ளத்திற்குரியது செயல்கள் உடலிற்குரியது
புலன்களடக்கி ஐயம் நீங்கிச் செயல்பட வேண்டும்
மனம் போனபடி திரிந்து வாயில் வந்தது பேசுபவரை
ஏலேஸ்வரலிங்கன் இலகுவில் விடுவானோ?”

4. “சம்சாரியுடன் கூடி விவசாயம் வாணிகம் படைத்தொழில்
செய்யாத நியமம் பின்பற்றுவேன்
காயகத்தில் கிடைத்த பொருளைப் படைத்து
உடனிருந்து உண்பவனின்  பிரசாதத்தை
ஏகேஸ்வரலிங்கத்திற்குப் படைப்பேன்”

ஒக்கலிக முத்தண்ணா

இவரது தொழில் உழவு. ஜங்கமருக்கு உணவு படைப்பது இவரது நோன்பு. மன்னன் கூடுதலாக வரி விதித்தபோது அதைக் கொடுக்காமல் அந்தப் பணத்தை தாசோகத்திற்குத் தந்தவர்.” காமபீட ஜீவதன ஓடேயன்” என்பது இவரது முத்திரையாகும்.

1.  “உடல் பூமியாகி இலிங்கம் செடியாகி
நம்பிக்கை வளர்ந்த பயிராக
உண்டு இன்பமடைய வேண்டுமென்றான்
காமபீட ஜீவதன ஓடேயன்”

2. “வேதம் மந்திரம் சொல்வதால் அந்தணனில்லை
போரிடுவதால் சத்திரியனில்லை
வாணிகம் செய்வதால் வைசியனில்லை
விவசாயியின் மகன் நான்
என் பிழை பாராமல் ஏற்பாய்
காமபீட ஜீவதன ஓடேயனே”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *