பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர் நகரில் இலக்கியத் தேடலின் சந்திப்பு

0

– ஆல்ப‌ர்ட், அமெரிக்கா.

படங்கள், வருணனை: புதுவை எழில்

ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg); ஐரோப்பியப் பாராளுமன்றம் அமைந்திருக்கும் அழகிய நகரம். கடந்த முறை, 2009இல், இலக்கியத் தேடலின் இரண்டாம் கூட்டத்தை அங்கு நடத்த அழைப்பு விடுத்தார் எழுத்தாள நண்பரும் இலக்கியத் தேடலின் உறுப்பினருமான நாக‌ரத்தினம் கிருஷ்ணா. விளைவாக, அதுபோல இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கி விழா நடத்த வேண்டும் என்ற ஆவல் அப்போது அங்கே கலந்துகொண்ட பலருக்கும் எழுந்திருக்கிறது. அந்த ஆவலை வளர்த்து ஆவன செய்தவர்  நாக‌ரத்தினம் கிருஷ்ணா.

Strasbourg_meet
19.09.2010 ஞாயிறு அன்று ‘சொல்  புதிது’ என்ற இலக்கிய அமைப்பின் தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்தார் அவர். அதற்கு முன் நாள் சனிக்கிழமை 18.09.2010 அன்று மாலை இலக்கியத் தேடலின் ஆறாம் கூட்டத்தை நண்பரின் இல்லத்திலேயே நடத்தவும் திட்டமிடப்பட்டது.

குறுந்தொகை

சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருமதி பூங்குழலி பெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, இலக்கியத் தேடலின் கூட்டம் சிறப்பாகத் தொடங்கியது. திரளாக வந்திருந்த பெருமக்களை முறையாக வரவேற்றார் நாகரத்தினம் கிருஷ்ணா. தொடர்ந்து, இலக்கியத் தேடலை உருவாக்கி நடத்தி வரும் பேரா.பெஞ்சமின் லெபோ, இதுவரை இலக்கியத் தேடலின் கூட்டங்களில் அலசப்பட்ட தலைப்புகளையும் அவற்றைப் பற்றிப் பேசியவர்களைப் பற்றியும் சுருக்கமாக விளக்கிப் பின் அன்றைய கூட்டத்தின் தலைப்பான ‘குறுந்தொகை’ பற்றிப் பேசத் திருமதி பூங்குழலி பெருமாள் அவர்களை அழைத்தார்.

திருமதி பூங்குழலி பெருமாள், M.A, M.Phil பட்டங்கள் பெற்றவர். புதுச்சேரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இனிய குரல் வளம், கவிதைக் கனிவுடன் (மரபு, புதுக்) கவிதைகள் எழுதும் திறம் படைத்தவர். கனியமுதத் தமிழில் இனிமையாக உரையாற்றும் திறன் உடையவர். புதுச்சேரியின் புகழ் பெற்ற புலவர்களுள் ஒருவரான இயலிசைப் புலவர் கலைமாமணி இரா.வெங்கடேசன் அவர்களின் அருமைப் புதல்வி.. தமிழிலக்கிய வரலாற்றில், சங்க இலக்கியங்களில் குறுந்தொகை பெறும் இடம் பற்றி விளக்கிய அவர், குறுந்தொகையில் காணப்படும் தமிழ்க் காதலை, அக்காலக் காதலின் மாண்புகளை, இயல்புகளை மிகச் சிறப்பாக விளக்கினார். தம் கருத்துகளுக்கு ஆதரவாகப் பற்பல குறுந்தொகைப் பாடல்களை எடுத்துக் காட்டி விளக்கிச் சொன்னார்.

செடிகொடிகளும் விலங்குகளும் எப்படி அக்கால மக்களின் பண்புகளை, மண நிலைகளை எதிரொலித்தன என்பதையும் அவர் விளக்கியது சிறப்பாக இருந்தது. 45 நிமிடங்கள் நீடித்த அவர் உரை முடிந்தபின், அறுசுவை உணவை உண்ட நிறைவு எழுந்ததில் வியப்பில்லை. ஒரு சிலர் எழுப்பிய வினாக்களுக்குத் தக்க விடை தந்து, ஐயங்களைக் களைந்ததும் அருமையாக இருந்தது.

கவிஞர் இந்திரன்

அதன்பின் சிறப்பு விருந்தினர் இருவரை நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா அறிமுகம் செய்து வைத்தார். ஒருவர், இந்திரன் அவர்கள். இவர் தமிழகத்தின் தலை சிறந்த, மிக முக்கியக் கலை விமர்சகர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். ஓவியர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதி வருபவர்.  வங்கித் துறையில் முன்னாள் அதிகாரி. 2000ஆம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர். தமிழகத்துக்கு வெளியே, வெகு தொலைவில் இப்படி ஒரு தமிழிலக்கியத் தேடல் நடைபெற்றுக்கொண்டு இருப்பதைக் கண்டு பெரு மகிழ்வு கொள்வதாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

பின், தமிழ் அழகியல் என்பது பற்றிச் சுருக்கமாக விளக்கினார். இவர், புதுவையைச் சேர்ந்தவர். பல நாட்டவரும் தன்னை அழைத்துப்  பெருமைப்படுத்தி இருந்தாலும் தமிழர் அமைப்பொன்று தன்னை அழைத்திருப்பது இதுதான் முதல் தடவை என்று நெகிழ்ந்து கூறினார் அவர்.  இப்பெருமைக்கு உரியவர் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா.

Strasbourg_meet
பேரா.ஏ.வி. இளங்கோ

இன்னொரு சிறப்பு விருந்தினர், ஏ.வி இளங்கோ. இவரின் ஊர் கோபிசெட்டிப்பாளையம். பல்லாண்டுகள் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றிய பின், கலைத் துறையில் நுழைந்த இவர் சென்னையில் ஓவியக் கூடம் நடத்தி வருகிறார். இவரின் ஓவியக் கூடம் ஒன்று மலேசியாவிலும் இயங்கி வருகிறது. உலகப் புகழ் பெற்ற இவரின் ஓவியங்கள், பல நாட்டுக் கலைக் கூடங்களில் இடம் பெற்றுள்ளன. இவர் ஓவியங்களில் நம் நாட்டுப் பழங்  கலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. கலைகளுக்குப் பெயர் பெற்ற பிரான்சு நாட்டில் இவர் பெரிதும் மதிக்கப்பட்டுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். சில மாதங்களுக்கு முன்புதான், இவருடைய சிற்பம் (காவலர் நினைவுச் சின்னம்) ஒன்றைக் கலைஞர் திறந்துவைத்து இவரைப் பாராட்டினார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் மெருகு ஊட்டி இருக்கின்றன.

பொதுவாக ஓவியம் பற்றியும் குறிப்பாகத் தம் ஓவியங்களைக் குறித்தும் இவர் பல சுவையான தகவல்களைச் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. “the space between two points is the painting; the silent between two words is the poetry” என்று இவர் சொல்லி விளக்கியபோது மெய்ம்மறந்து கேட்டோம். இருவருமே தமிழ் இலக்கியம் தொட்டுச் சென்றார்கள். விவாதத்தின் பொது அடிக்கடி சுட்டப்பட்ட உள்ளுறை உவமம், இறைச்சி பற்றிப் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சுருக்கமாகச் சொல்லி, இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கும் பேச்சாளருக்கும் இலக்கியத் தேடலின் சார்பாகப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தவர் முதுபெருங் கவிஞர் கண.கபிலனார் அவர்கள். தள்ளாத வயதிலும் பாரிஸ் நகரில் இருந்து வந்திருந்து இவ்விழாவில் கலந்துகொண்டவர் இவர்.

உலகப் புகழ் பெற்ற இவ்விருவரும் நம் இலக்கியத் தேடல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியது அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எங்களைச் சந்திததில் அவர்களுக்கும் பெரு நிறைவே. அங்கே இருந்த இரு நாள்களும் அவர்கள் இருவருடன் உரையாடிப் பல செய்திகளைத் தெரிந்துகொண்டோம். உலகப் புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் பழகுவதற்கு இனிமையானவர்களாகவே இருவரும் இருந்தனர்.

இறுதியாக இலக்கியத் தேடலின் முக்கிய உறுப்பினரும் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் நன்றி கூறினார். இலக்கியத் தேடலின் முதுகெலும்பு இவர். சிரமம் பாராமல், இலக்கியத் தேடலுக்கான இடம் தேடி, ஆவன செய்து கூட்டம் நல்லபடி நடைபெறப் பெரிதும் உழைத்து வருபவர். இரவுச் சிற்றுண்டி வழங்கப்படக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. இக்கூட்டத்த்தில் கலந்துகொள்ளப் பாரிஸ் நகரிலிருந்து மிகப் பலர் வந்திருந்தனர். ஸ்ட்ராஸ்பூர் நகரத் தமிழர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *