செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்… (289)

ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
        –திருக்குறள் –477 (வலியறிதல்)

 புதுக் கவிதையில்…

கைப்பொருள் இருப்பின்
அளவறிந்து அதற்கேற்ப
அடுத்தவர்க்கு
அள்ளி வழங்கு,
அவ்விதம் ஈதல்
பொருளைப் போற்றிப்
பேணிக் காத்து
வழங்கிவாழும் நந்நெறியாகும்…!

குறும்பாவில்…

ஈந்திடு கைப்பொருள் அளவறிந்து,    
ஈதலிது பொருளைப் போற்றிக் காத்து
வழங்கி வாழ்ந்திடும் நந்நெறியே…!

மரபுக் கவிதையில்…

கொடுக்கும் வகையில் தம்மிடத்தில்
     கைவச முள்ள பொருளிருப்பை
எடுத்தே யறிந்ததன் அளவறிந்தே
     எவர்க்கு மீதல் செய்திடுக,
கொடுத்திடு மிவ்வகை யீதலது
     கைப்பொருள் போற்றிக் காத்தேதான்
அடுத்தவர் தமக்கும் வழங்கிவாழும்
     அருமை மிக்க நந்நெறியே…!

லிமரைக்கூ..

அளவறிந்தே அடுத்தவர்க்குக் கொடுத்திடு
ஈதலிதே பொருளைப் போற்றி வழங்கிடும்
நந்நெறி எனும்பேர் எடுத்திடு…!

கிராமிய பாணியில்…

செயல்படணும் செயல்படணும்
வலிமயறிஞ்சி செயல்படணும்..

அடுத்தவருக்குத் தருமம்செய்யியிற
அளவுக்கு கையில இருக்குதாண்ணு
அளவு தெரிஞ்சிக்கிட்டு
அப்புறமா குடுக்கணும்..

அப்புடிக் குடுக்கிறதுதான்
இருக்கிற செல்வத்தக் காப்பாத்திக்
குடுத்து வாழுறதுக்கும்
வழியாவும்..

அதால
செயல்படணும் செயல்படணும்
வலிமயறிஞ்சி செயல்படணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *