அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (08.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 248

  1. படக்கவிதை 248

    செந்தழலாய்ப் பகலவன்
    தங்கநிற சந்திரன்
    பாய்ந்தோடும் பரிகளாய்
    வானத்து மேகங்கள்

    நெடுந்தூரக் கருங்கரை
    அதைத் தாங்கும் மணல்தரை
    ஒய்வெடுக்கும் தோணிகள்
    இரவை தொடும் வானிலை

    இவையெல்லாம் சாட்சி
    என்னுடனே வா
    என்கின்றானோ காதலன்?

    உயிரே உனக்குத்தான்
    உன்னுடனே வருகின்றேன்
    உலகாளும் உன்னதக் காவியம்
    ஒருங்கிணைந்துப் படைத்திட
    புகைப்படமே நீயும் சொல்
    காட்சிப் புனைந்தது நீதானே?

    சுதா மாதவன்

  2. தொடரும் பயணங்கள்…

    இன்றைய கடமை முடிந்ததென
    இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
    சென்று கொண்டே வான்வீதியில்
    செம்மை காட்டினான் வனப்பாக,
    என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
    ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
    என்றும் தொடரும் பயணமிவை
    என்பதை மனதில் கொள்வாயே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. புது உதயம்

    காடுவெட்டிக் கழனியாக்கி
    கதிர்நெல்லை விளைவித்தார்!
    பட்டினியே உணவென்று வாழ்கின்றார்…

    பள்ளம் மேடு சீராக்கி
    வீடுகட்டி வாழவைத்தார்!
    நாடோடியாக நாளும் திரிந்தலைந்து நிற்கின்றார்…

    பாடுபட்டு,
    நாளுமிங்கே கரஞ்சிவந்து வேலை செய்தும்
    வறுமையதே சீதனமாய் வாழுகின்றார்…

    நிலையான வாழ்வு
    நிரந்தரமாய் ஊதியம் என்றவரின்
    வாழ்வினிலே காரிருளை நீக்கிக்
    கரம் பற்றி மேலுயர்த்தி வாழவைக்கும்
    புது உதயம் கண்டிடுவோம்!
    புதியதோர் உலகம் செய்வோம்…

  4. அலை கடல்
    ஓடி திரிந்த களைப்பில்
    கரை ஒதுங்கிய கட்டுமரம்
    கிழக்கில் இருந்து பகலெங்கும்
    பயணம் செய்த அலுப்பில்
    அந்தி சாய்ந்ததோ மேற்கில்
    நிலவு உதிக்க நிழலும் மறைய
    பகலை மெல்ல இரவு விழுங்கிட
    நிறம் மாறியதே நீல வானம்
    மாலை சுடும் முன்னே
    மனதை புரிந்துகொள்ள
    மாலை வரை பேசி நின்ற காதலர்கள்
    கடற்கரையில்

    கூடு தேடி திரும்பும் பறவைகளாய்
    பிறந்த வீடு சென்று சேர்ந்திட
    துவங்கியதே இவர்கள் பயணம்
    அவன் பாதையை பின்தொடர்ந்த
    அவள் கால்கள் இடரிட
    உன்னை தாங்கி வழிநடத்திட
    உதவிக்கரம் நீட்டினானோ
    துணையாய் நீ வருவாயா என
    விழியாலே வினா எழுப்பி
    உதவிக்கரம் நீட்டினானோ

    மழை பொழிந்து வழிந்தோடும் நதி
    கடல் தன்னை தேடியே
    காதல் பொங்கி வழிந்தோட
    கடல் தேடி ஓடும் நதியாய்
    அவன் மனம் தேடி வந்த வஞ்சி இவள்
    இரவு பகல் பாராமல்
    வாழ்க்கை எனும் பாதையில்
    என்றும் தொடர்ந்திட
    உதவிக்கரம் நீட்டிய
    கரங்களை பற்றிட முனைந்தாலோ

  5. வல்லமை எங்களைப் போன்றவர்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கிறது.உங்கள் பாதையில் நாங்கள்…….நன்றி உங்கள் பணிக்கு

    சுதா மாதவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *