Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

பழங்காலத் திருமண முறை 

 த. அமுதஜோதி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
பான்செக்கர்ஸ்
மகளிர் கல்லூரி,
தஞ்சாவூர்.

*****

ஒத்த அன்புடைய தலைவனும், தலைவியும் தம்முள் நுகரும் இன்ப உணர்வு, இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்கு கூறப்படாததால் அது அகம் எனப்பட்டது. இந்த அகவாழ்வு நிலை தொல்காப்பியர் காலம் முதல் இக்காலம் வரை தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வருகின்றது.  களவு, கற்பு என இருநிலைகளில் மனிதனின் அகவாழ்வு அமைகின்றது. களவு நிலையில் தொடங்கும் காதலைக் கற்பு நிலைக்குக் கொண்டு செல்வது இல்வாழ்வாகும். மணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள  நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். மனிதனால் சமுதாய நலன் கருதிப் படைத்துக் கொள்ளப் பட்டதோர் ஒழுக்கமுறையாகும்.

ஆரம்ப காலத்தில் திருமணம் செய்யாமலே தலைவனும் தலைவியும் கூடி வாழ்ந்துள்ளனர். செய்யும் செயலை மறைத்த பின்னும், செய்த செயலை முடிக்காமல் தப்பியொழுகும் போதும் திருமணம் என்ற நிலையை முன்னோர்கள் வகுத்துள்ளனர். இதனை
   பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப .  (தொல்.கற்பியல் நூ-143)

எனும் தொல்காப்பிய நூற்பா மூலம் அறியமுடிகிறது. கரணம், மன்றல், வரைவு, கடிமணம் போன்றவை திருமணம் என்பதையே குறித்துள்ளன. கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில்  பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.

மன்றல்

மன்றம் என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன்மேல் மணமக்களை அமரச் செய்து மணவினை செய்வித்தல் என்ற  பொருளில்  மன்றல்  என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டது. இதனை

              “இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென” (குறிஞ்சிப்பாட்டு – அடி: 21)

என்பதால்  அறியலாம். மன்றல் என்ற சொல் தொன்று  தொட்டு வழக்கில் இருந்து வருகின்றது.

வரைவு

வரைவு  என்பதற்கு  மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர்  பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குபடுத்துதல்)  என்ற நிலையில்  வரைவு என்பது மணத்தைக் குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என இருவகைப்படுத்தியுள்ளது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாகப்  பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் வரைவு என்பது பின்னர் வழக்கொழிந்துள்ளது.

கடிமணம்

கடிமணம் என்பது பல பொருள் தரும்  உரிச்சொல்லாகும்.  ’கடி’ என்ற சொல்லுக்கு  நீக்குதல், காப்பு  என்று  பொருள் கூறுவர். மணமகளின்  கன்னித் தன்மை நீங்கி கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் தொடங்குதல் என்ற வகையிலும்  கடி என்ற சொல்  திருமணத்தைக் குறித்தது.

இவ்வாறு பல வகையாகக் கூறப்படும்  திருமணத்தை மணப்பருவம் வந்த பின்பு பல வகையாலும் ஒத்த ஓர் இளைஞனும் இளைஞியும் தாமாகக் கூடியோ அல்லது பெற்றோரால் கூட்டப்பட்டோ கணவனும் மனைவியுமாகி வாழ்வது ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழ்மரபு என்பதை

              கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
              கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
              கொடைக்குரி மரபினோர்  கொடுப்பக் கொள்வதுவே. (தொல் கற்பியல் நூ-140)

எனும் தொல்காப்பிய நூற்பா வழி அறிய முடிகிறது. கணவனும் மனைவியும் எங்ஙனம் கூடியிருப்பினும் காதல் அவர்க்கு இன்றியமையாததாகும். காதல் என்பது  இறக்கும் வரையிலும் இருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.இக்காதல் காமம் என்னும் சிறப்பு பெயர் பெறும். அச்சொல் இன்று பெண்ணாசை என்னும் தீய பொருளில் வழங்கி வருகின்றது.

இல்வாழ்வு

ஒரு கற்புடைப் பெண்ணை மணந்து இல்லத்திலிருந்து அறஞ்செய்து வாழும் வாழ்க்கை  இல்லறமாகும். இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாக படைத்திருப்பதே அவர் கூடி வாழுதற் பொருட்டே ஆகும். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழக்கூடிய வாழ்க்கையே இல்லற வாழ்க்கையாக  கருதப்படுகிறது. பாரமேற்றிய ஒரு வண்டியை இரண்டு மாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இழுத்துச் செல்வதைப் போன்று கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இல்லறம் சிறக்கும். இல்லறத்தாலும் ஒருவர் வீடுபேற்றை அடையமுடியும் என்பதை திருவள்ளுவர்,

              அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
              போஓய்ப் பெறுவ தெவன்                               (குறள்-46)

 

              அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
              பிறன்பழிப்ப தில்லாயின் நன்று                         (குறள்-49)

எனும் குறட்பாக்களில் எடுத்துரைக்கின்றார்.

தமிழ்ப் பண்பாட்டில் குடும்பம் என்பது அச்சாணியாகும்.சமூக அமைப்பில் குடும்பம் என்பது அடிப்படை அலகாகும். இவ்வமைப்பு இல்லையேல் சமுதாய  கட்டுக்கோப்பே நொறுங்கிப் போகும்.ஆக மானுட வாழ்வுக்கு அடிப்படை குடும்பமாகும். இக்குடும்ப வாழ்க்கை சீராக அமைய முன்னோர்கள் வகுத்துள்ள நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால் நன்மை பயக்கும்.

இல்லறமல்லது நல்லறமன்று” என ஒளவையாரும் இல்லறத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். உலக வாழ்க்கைக்கு இன்றியாமையாத் துணையாக  இருப்பதால் மனைவிக்கு வாழ்க்கைத்துணைவி என்று பெயர். இத்தகைய வாழ்க்கைத்துணைவி அமையும் நிலையை  குறுந்தொகைப் பாடல் மிக அழகாக எடுத்தியம்புவதனை,

                             யாயும் ஞாயும் யாரா கியரோ
                             எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
                             யானும் நீயும் எவ்வழி அறிதும்
                             செம்புலப் பெயல்நீர் போல
                             அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.  (குறுந்- 40) 

எனும் பாடலில் காணலாம். இல்லறம் எனும் பந்தத்தில் செம்மண்ணும்  நீரும் கலந்தால்போலத் தலைவனும் தலைவியும் அன்பால் கலந்த நிலையை  அறியமுடிகின்றது.

அறத்தொடு நிற்றல்

தலைவியின் கற்பு நெறிப்பட்ட காதலைத் தோழி தன் தாயான செவிலியிடமும், செவிலி நற்றாயிடமும், நற்றாய் தமரிடமும்  எடுத்துரைக்கும் நிலையே அறத்தொடு நிற்றலாகும்.

தலைவி தன்னுடையச் சுற்றத்தினரைப் பிரிந்து தலைவனுடன் உடன்போக்கு  மேற்கொள்ளும் நிலையிலும் திருமணம்  நடைபெறும் என்பதைத்  தொல்காப்பியர்,

கொடுப்போர் இன்றியுங்  கரண முண்டே
புணர்ந்துடன் போகிற காலை யான”       (தொல் கற்பியல் நூ-141)

மேலும்,
”வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர்
முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
கரணமொடு
புணரக் கடிஅயர்ந்து கொளலே”

  (நம்பி-வரைவியல்-171)

எனும் நூற்பாக்கள் மூலம்  அறியமுடிகிறது.

பழங்காலத்தில்  உடன்போக்கு  தவறாகப் பேசப்படவில்லை. கண்டிக்கப்படவும் இல்லை. உடன்போக்கு  போகிய தலைவியைத் தேடிச் செவிலியிடம் கண்டோர் நும் மகள் தெரிவு செய்த தலைவன் அவளுக்கும் அவள் குடும்பத்தார்க்கும்  மிக நல்லவனாகக்  காட்சியளிக்கிறான். நீவிர் கவலைப்படாமல் நும் இல்லம்  செல்க  என்ற கூறுவதனை,

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி
மேலன சிலம்பே நல்லோர்
யார்கொல்?  (குறுந்-7)

எனும் சங்கப் பாடல் மூலம் அறியமுடிகிறது.

பறையும், சங்கும் மங்கல நாளில் முழங்குவன. பலர் கூடுதற்கு  ஏற்ப நிழலும் இடமும் உடைமையால் ஆலமரத்தின் அடியில் பொதுமக்கள் கூடும் மன்றங்கள் இருந்தன. மணநாளில் பலரும் விருந்துண்டு செல்வதற்கு ஏற்ற வளமனையுடையவன் தலைவன் என்பதைச் செவிலித் தாய் நற்றாயிடம்  எடுத்துரைத்து அறத்தொடு நின்ற நிலையை,

பறைப்படப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயாகின்றே தோழி யாய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தைநட்பே       (குறுந்-15) 

எனும்  சங்கப் பாடல் மூலம்  காணமுடிகின்றது. பழங்காலத்தில் உடன்போக்கு மேற்கொண்ட தலைவனையும் தலைவியையும் பார்த்த செவிலித் தாய் தலைவன் நல்ல வளமுடையவன், வீரமிக்கவன் எனவே கவலைப் பட தேவையில்லை  என நற்றாயிடம் எடுத்துரைக்கின்றாள்.  இதன் மூலம்  குழந்தைகளின் நலம் ஒன்றையே பெரிதாக  பெற்றோர்கள் கருதியதைக் காணமுடிகிறது.

சடங்கு முறை

சங்க கால திருமணச் சடங்கு முறையில் பார்ப்பனர்கள் வேதம் ஓதுதல், தீ ஓம்புதல், தீ வலம் வருதல் ஆகிய ஆரியக் கலப்பு  முறைகள் எதுவும் காணப்படவில்லை.  ஆனால் நாள், கோள் பார்க்கும் வழக்கம் இருந்தது. வீட்டில் பந்தல் போடுதல், முரசு முழங்குதல்,  மணம் காண வந்தவர்களுக்கு உழுந்த சோறு அல்லது கொழுத்த இறைச்சி படைத்தல், முருகக் கடவுளை வழிபடுதல், சுமங்கலிப் பெண்கள் மணமக்களை வாழ்த்துதல் போன்றன வழக்கில் இருந்தன  என்பதை,

உழுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர் தருமணல் ஞெமிரி
மனைவிளக்கு உறுத்து மாலைதொடரிக்
கனை இருள் அகன்ற கவின்பெறு காலை
கோள் கால் நீங்கிய  கொடு வெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென   (அகநானூறு-86) 

எனும் பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது. திங்களும் உரோகிணியும் சேரும் நாள் திருமணத்திற்குச்  சிறந்த நாள் என்பதை இப்பாடல் வரிகள் தெளிவுப் படுத்துகின்றன.

அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகட மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய       (அகநானூறு-136-4-9)

இடமகன்ற அழகிய பெரிய வானம்  விளக்கமுறத் திங்களை உரோகிணி கூடிய நன்னாளில் மணமனையினை  அழகுபடுத்தித்  திருமணம் நடைபெற்றமையைக் காணமுடிகின்றது. நெடுநல்வாடையில் பாண்டிமாதேவியின் கட்டிலின் மேற்கூரையில் திங்கள்  உரோகிணியை  சேர்வது  போன்ற காட்சி  ஓவியமாகத் தீட்டப் பெற்றிருந்தமையைக்  காணலாம். சிலப்பதிகார காலத்திலும் இதே முறை காணப்பட்டது. ஆனால் பார்ப்பனர்கள் வேதம் ஓதுதல், தீவலம் வருதல் ஆகியவற்றைக் காணமுடிகின்றது.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம்
செய்வது  காண்பார்கண் நோன்பு என்னை.  (சிலம்பு. மங்கல வாழ்த்து) 

கோவலன் கண்ணகியின் திருமணம் திங்கள் உரோகிணியைச் சாரும் நேரத்தில் பார்ப்பனர்கள்  வேதங்கள் ஓத தீவலம் வந்து நடைபெற்றது என்பதைக் காணமுடிகின்றது. இவ்வாறு நம்முன்னோர்கள் அடியைப் பின்பற்றியே காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதனைத் தக்க சான்றாகக் கொள்ளலாம்.

பண்டைக் காலத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லை. காலப்போக்கில்தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமண மரபுகள் காலத்திற்கேற்பச் சில மாற்றங்களைப்  பெற்றுள்ளன. உணவு, உடை, அலங்காரம், பரிசமளித்தல், போன்றவற்றை  அவரவர் வசதிக்கேற்ப  மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர்.

*****

மேற்கோள் நூல்கள்

1. தொல்காப்பியம் (இளம்பூரணர் உரை)
2. அகநானூறு (பின்னத்தூர் நாராயணசாமி உரை)
3. சிலப்பதிகாரம் ( புலியூர்க்கேசிகன் உரை)
4. திருக்குறள் ( பரிமேலழகர் உரை)

 

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (1)

  1. Avatar

    திருமதி அமுதஜோதி அவர்கள் எழுதிய கட்டுரை வலிமையற்ற தரவுகளால் ஆனது. பழந்தமிழ் திருமண முறையில் சிலப்பதிகாரத்தை இணைப்பது ஆய்வு நெறிக்கு முரணானது. தொல்காப்பியம் தமிழர்களின் வாழ்வியல் கூறும் நூல் ;என்பது நுனிப்புல் மேய்வார் பார்வை.அது அரிஸ்டாட்டி;லின் கவிதையியல் ஒத்ததொரு நூல். இனி ஆய்வுக்கட்டுரைப் பொருள் எதுவாயினும் தொடரியலில் மிகுந்த கவனம் செலுத்திருக்க வேண்டும்.!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க