திருச்சி  புலவர் இராமமூர்த்தி

தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என

திருநீலகண்டராகிய குயவரிடம் இறைவன் ஒரு சிவயோகியாக வந்தார். அவரை அடியார் வரவேற்று இல்லத்தில் உபசரித்தார். அவரிடம் ‘’யாது காரியமாக வந்தீர்கள்! உங்களுக்கு யான் செய்யத்தக்கது யாது?’’ என்று கேட்டார். சிவயோகியார் தாம் கொண்டு வந்த பிச்சைப் பாத்திரமாகிய திருவோட்டைக்  கொடுத்து, ‘’நம்பியே,  நின்பால் தந்த இவ்வோட்டை உரியவாறு பாதுகாத்து யாம் வேண்டும்போது திருப்பித் தருக’’ என்றார்.

அப்போது தாம் தந்த திருவோட்டின் சிறப்பைச்  சிவயோகியார் கூறினார். இறைவன் தம் திருக்கரத்தில் ஏந்தியிருந்த ஓடு, பிரமனின் ஐந்தாம் தலையைக்  கிள்ளி எடுத்த போது, அவர் கரத்தில் ஒட்டிக் கொண்ட ஓடு என்று புராணம் கூறுகிறது. இறைவனைப் போலத் தாமும் ஐந்து தலையைக் கொண்டவன் ஆகவே சிவனுக்கு இணையானவன் என்று தற்பெருமை கொண்ட பிரமனின் ஐந்தாம் சிரத்தை, இறைவன் கொய்தார். அப்போது அவர் கரத்தில் அத்தலை திருவோடாக விளங்கியது. படைப்புக் கடவுளின் பெருமை மிக்க சிரம் தனிச் சிறப்புக் கொண்டது. அதனை ஏந்திய சிவபெருமானின் திருவுருவம் கண்டியூரிலும், ஈர ஓடு எனப் பெற்ற  ஈரோட்டிலும் கோயில் கொண்டது. கபாலத்தைக் கையில் ஏந்திய சிவபிரான் திருமயிலைக் கபாலீச்சுரத்திலும்  கோயில் கொண்டுள்ளார். அந்தத்  திருவோட்டையே   திருநீல கண்டரிடம்  இறைவன் கொடுத்தார். அப்போது அத்திருவோட்டின் சிறப்பை, ‘’தனக்கு ஒப்பாக வேறொன்றுமில்லாதது; தனதிடத்தினுள்ளே பொருந்திய பொருள்கள்எல்லாவற்றையும் சுத்தமாக்குவது; பொன்னையும் மணியையும்விட மிகக் காக்க வேண்டுவது; இத்தகைய தன்மையுடையது; இதனை வாங்குவாயாக!’’  என்று கூறினார்.

தனக்குவமை  இல்லாதானாகிய சிவபிரானைச் சேர்ந்த பொருள்கள் யாவும் இணையற்றவை! ஆதலால் அத்திருவோடும் இணையற்றது, இதனைச் சேக்கிழார், ‘’தன்னை  ஒப்பு அரியது!’’ என்று பாடுகிறார். இந்தத் திருவோட்டின் உட்பரப்பு இறைவனின்  அதிகார எல்லையாகி எங்கும் விரிந்தது. தலம் – இப்பாத்திரத்தில் பலியை இடும் இயைபு உள்ள பரப்பு. அதிகார எல்லை என்பர் இக்காலத்தார். அந்தப் பரப்பு இவ்வுலகமேயன்றி எல்லா வுலகமுஞ் சென்று விரிந்தது என்பது இதன் தத்துவமாம். ‘’இதன் தலத்துள் துன்னிய எதனையும் தூய்மை செய்வது‘’ என்று அதனைப் புகழ்ந்தார். துன்னிய பொருள்கள் தூய்மையற்றவையேயாயினும் அவற்றை யெல்லாம் சுத்தமாக்குவது. யாவையும் – எல்லாவற்றையும். உயிர்கள் தமது கன்மங்களை எல்லாம் தன்வசமாக ஒப்புவித்துத் தனக்கே அர்ப்பணம் செய்தபோது இறைவன் அவற்றைப் புனிதமாக்கி அவ்வுயிர்களை ஈடேற்றுவன் என்பது சாத்திரம். இதனையே திருக்கோயில் தோறும் உள்ள பலிபீடங்கள் உணர்த்துகின்றன. உயிர்கள் இறைவன் பரமாகச் செய்யும் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தன்மையே அவனது பலிப்பாத்திரம் எனப்படும். ஆகவே உயிர்களின் பாசமலங்களைப் போக்கி அவற்றைத் தூய்மை செய்வதே பலிபீடம்! அப்பலிகளை ஈர்க்கும் பாத்திரமே திருவோடு.

இதனைப் பொன்னையும் மணியையும் பார்க்கிலும் அதிகமாகப் பாராட்டிக் காக்க வேண்டும்.“ ஓடும் செம்பொனு மொக்கவே நோக்குவார்“களும், “புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு மணியோடுஞ் சொல்லோடும் வேறுபாடிலாநிலைமை துணிந்திருந்த நல்லோர்“களும் ஆகிய அடியார்கள் விரும்பிக் கையிற் கொள்வது இவ்வோடேயாம்.

“ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து”

என்ற திருவாசகமும்  காண்க. போற்றுதலை  வழிபடுதல் எனக் கொண்டு பொன்னும் மணியும் கொண்டு இதனைப் பூசிக்க வேண்டுவது என்றுரைப்பாருமுண்டு. இதனைக் கேட்ட நாயனார் இவ்வோட்டினைப் பெற்று “மனையில் ஓர் மருங்கு காப்புறும் எல்லையில் வைத்து“ வந்தனர் (376) என்றதால், போற்றல் என்பதற்குக் காப்பாற்றல் என்றுபொருள் கொள்ளுதலே சிறந்ததாம். துன்னிய  எதனையும் தூய்மை செய்வது; ஆதலின் ஒப்பரியது; ஆதலின் போற்ற வேண்டுவது எனக் காரண காரியமாகத் தொடர்ந்து பொருள் கொள்க. இவையனைத்தையும் தொகுத்து, ‘’இன்ன தன்மையது! இது வாங்குக‘’ என்று திருவோட்டை வழங்கினார். இங்கே வாங்கி வைத்துத் திருப்பித் தருக  என்று முன்பு சொன்னதைச் சுருக்கி.’’வாங்குக’’ என்று சொன்னதன் விரிவு, உன்னால் வாங்க மட்டுமே முடியும், மீண்டும் திருப்பித்தர இயலாது என்ற எதிர்கால நிகழ்ச்சியைப் புலப்படுத்துகிறது!

“பிச்சைய தேற்றான் பிரமன் றலைதன்னிற்
பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரமன்பர மாகவே“

என்ற திருமந்திரச் செய்யுள் திருவோட்டின் சிறப்பை உணர்த்துகிறது. திருவோடு என்ற சொல்லுக்கு  வேறு பொருளும் உண்டு. நம் உடம்பு ஒரு குடம் போன்றது என்று சித்தர்பாடல் கூறுகிறது.

‘’நந்தவ  னத்திலோர்  ஆண்டி – அவன்
 நாலாறு  மாதமாய்க்  குயவனை வேண்டி!
கொண்டுவந்   தானொரு  தோண்டி – அதைக்
கூத்தாடிக்  கூத்தாடிப்  போட்டுடைத்   தாண்டி!’’

என்ற இந்தப் பாடல் நாலாறு (அதாவது 4+6 = 10)  மாதத்தில் பிரமனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதாவது உடம்பைப் பெற்றான் மனிதன்! ஆனால் அதைப் பல்வேறு கூத்துக்கள் ஆடி இறுதியில் போட்டு உடைத்தான்! வீணான ஆட்டம் ஆடி. உயிருடன் உள்ள  உடம்பை இழந்தான். இதிலும் ‘ஓடு’ மதிப்பு மிக்கது என்பதைப் புரிந்து கொள்கிறோம்!

இறைவனே தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது; பொன்னினும்  பொருளினும் உயர்ந்தது; போற்றப் பட வேண்டியது. இவ்வாறு இறைவன் சிவயோகியாய் வந்து கூறிய பின்னரும் அதனைத் தொலைத்தார்   என்பது,  இப்பாடல் காட்டும் பொருள்.நம் வாழ்க்கையில் பொருள் மிகுந்து விட்டால், தேவையான நற்பொருளை அதாவது வாழ்க்கையைத் திருநீலகண்டர் போல்  தொலைத்து விடுவோம் என்று பாடிய சேக்கிழாரின் பாடல் நயம் போற்றுதற்குரியது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *