-மேகலா இராமமூர்த்தி

திரு. முகம்மது ரபியின் இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

”கள்ளமில்லா மழலையின் பார்வைநம்
உள்ளம் கொள்ளை கொண்டாலும்
இன்மைத் துன்பம் இல்லா நிலையை
என்று அடைந்திடும் இவர் வாழ்க்கை?” என்றொரு வினா முள்ளாய்த் தைக்கின்றது நம் மனத்தை!

நெஞ்சைத் தொடும் இப்படத்திற்குப் பொருத்தமாய் வரைந்த கவிதைகளோடு காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்போம் வாழ்த்துக்களோடு!  

”பெற்ற தாயினும் உற்ற துணை பிள்ளைக்கு வேறில்லை” என்று தாயின் பெருமையைப் புகல்(ழ்)கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உயர் துணை…

பிள்ளை யதற்குப் பாதுகாப்புப்
பெற்ற தாய்போல் வேறில்லை,
அள்ளிக் கொடுக்க இலாதபோதும்
அன்பது உண்டே அளவிலாதே,
கள்ளம் கபடம் தாய்மையிலிலை
காட்டு வழியிலும் பயமில்லை,
உள்ளம் நிறைந்த அன்போடே
உயர்ந்த துணையே தாய்தானே…!

*****

”பிற்காலத்தை எண்ணிக் கலங்காதே குழவியே! பொற்காலம் உனதென்று பொங்கி நகை!” என்று மழலைக்கு நம்பிக்கையூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

முழங்கையில் தளிர் மழலை
முன்னேற்றப் பாதைக் காணும்
வண்ண முக்காடிட்ட முகத்தழகி

பின்னோக்கிக் காணும் அவள் குழவி
எவரேனும் தொடர்கிறாரோ
என்றொரு பார்வையா?
பிற்காலம் எப்படியோ
என்கின்ற பிரமிப்பா?

பொற்காலம் உனதுதான்
பொங்கிநகைப் புதுப் பொலிவே!
கிஞ்சித்தும் தளராதே
எழும்பி நில் கடலலையே!!

*****

”நோய் வந்தபோதும் சேயைத் தீண்டத் தயங்காது அன்புபாராட்டி உயிர்காக்கும் உறவுக்குப் பெயர்தான் தாய்” என்று தாய்மையின் தன்னலமற்ற சிறப்பைக் கவிதையில் உணர்த்துகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

கொஞ்சிப் பேசி
அள்ளி அணைத்த
கரங்கள் யாவும்
தீயாய்ப் பரவி வரும்
தொற்று நோய் வந்ததென்று
என்னைத் தீண்ட மறுத்ததே!
வயிற்றில் சுமந்து
உயிர் தந்தவள்
அல்லும் பகலும் போராடி
நோய்கொண்டு போக முயன்ற
எனதுயிரை மீட்டுத் தந்தவள்
தாய் என்னும் வரம் தந்த
தெய்வக் குழந்தை நான்என்று
என்னைச் சுமக்கத் தயங்கவில்லையே!
வேண்டிப் பெற்ற உறவு இது
இல்லை என்றாலும்
உயிர் உள்ளவரை என்றும் நம்மை
தொடர்ந்து வரும் உறவு இது!
முகத்தை மூடியே நீ வந்து நின்றாலும்
கண்களை மூடி ஊரே சொல்லும்
முத்தாய் மூன்றெழுத்தில்
நீ “அம்மா” என்று!

*****

தாயின் தகைமையைப் பொருள்பொதிந்த கவிதை வரிகளில் உணர்த்தியிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!  

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

நேர்கொண்ட பார்வை!

அன்னையர்குலப் பெண் தெய்வமென
ஆலயந்தனிலே வைப்பதாய்ச் சொல்லிப்
புழக்கடைத் தனிலே பூட்டிடுவார் – பெண்ணைக்
கிணற்றுத் தவளை ஆக்கிடுவார்!

முரட்டு உலகி(னி)ன்று காப்பதாய்ச் சொல்லி
இருட்டு வாழ்க்கை தந்திடுவார் – மூடர்
குருட்டுத்தனம் பல செய்திடுவார் – அவற்றைப்
புனிதம் என்றே காட்டிடுவார்!

கைவளை அழகென்று சொல்லிப் – பெண்ணுக்குக்
கைவிலங் கிட்டே முடக்கிடுவார்!
கொடியவர் பார்வைப் பழுதென்று கூறி
முக்காட்டிட்டு அவர்திறம் மூடிடுவார்!

தாயினத்தைத் துரத்தும் கயமைகளை – உன்
பார்வைத் தீயால் பொசுக்கிவிட
முண்டாசுக் கவிஞனின் வாரிசென
நேர்கொண்ட பார்வைக் காட்டிடுவாய்!

”முரட்டு உலகினின்று பெண்ணைக் காப்பதாய்ச் சொல்லி, இருட்டு வாழ்க்கையில் அவளைத் தள்ளிடும் குருட்டு உலகினின்று அவளை மீட்டிட, முண்டாசுக் கவிஞனின் வாரிசாய் நேர்கொண்ட பார்வை காட்டிடு!” என்று கனிமழலைக்கு நன்மொழி நவின்றிடும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *