-மேகலா இராமமூர்த்தி

கிறித்தவ மதத்தைப் பரப்பவும், வாணிகம் செய்யவும் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த மேனாட்டார் மெல்ல மெல்ல இந்தியாவையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும், அதனால் அடிமைத்தளையில் சிக்கிய இந்தியா பல்லாண்டுகாலப் போராட்டத்துக்குப் பின்பே விடுதலைக் காற்றைச் சுவாசித்ததும் நாமறிந்தவையே. அந்நியரிடம் நாம் அடிமைப்பட்டதில் நமக்குப் பெருமை ஏதுமில்லை என்றபோதும், அவர்கள் ஆட்சியில்தான் சில நல்ல சமூக மாற்றங்களை இந்தியா சந்தித்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒழுங்குபடுத்தப்பட்ட கல்விமுறை, அனைவருக்கும் பொதுவான மருத்துவ வசதிகள் போன்றவை வெள்ளையர் ஆட்சியின் கொடைகள். அச்சு எந்திரத்தின் வருகையும்கூட அவர்களால் நமக்கு ஏற்பட்ட நன்மையே. அதன்பயனாய்க் கிறித்தவ மதபோதனை நூல்கள் மட்டுமல்லாது,  ஓலைச்சுவடிகளிலே கவனிப்பாரற்று உறங்கிக் கிடந்த பல பழந்தமிழ் நூல்களும் புத்துயிர்பெற்று அச்சுவாகனமேறி தமிழ்கூறு நல்லுலகுக்குப் புத்தொளி ஊட்டின எனில் மிகையில்லை.

மதபோதகர்களேயன்றி ஆங்கிலேய அரசில் அதிகாரிகளாகப் பணியாற்றிய வெள்ளையர்களும் நம் தமிழை ஆர்வத்தோடு கற்று  தமிழ்த்தொண்டாற்றிய வியத்தகு செயல்களும் தமிழ்மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் ஆங்கிலேய அதிகாரி. அவரது தமிழ்ப்பணிகள் குறித்துச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

1777-இல் இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ், எப்பொருளையும் ஆய்ந்து மெய்ப்பொருள் காண்பதில் ஆர்வமுடையவர்.  ஆங்கில நாட்டு அரசியலாளர்கள் அவரைச் சென்னை நிலவரி மன்றத்தின் செயலாளராக (secretary of revenue board) முதலில் நியமித்தனர். எட்டு ஆண்டுகள் அப்பணியில் இருந்தார் எல்லிஸ். அப்போது நிலவுரிமை குறித்த விவரங்களையெல்லாம் தெளிவுறக் கற்ற அவர், நிலவுடைமையாளருக்குரிய உரிமைகள், கடமைகள் முதலியவற்றைச் சென்னை அரசியலாளர்களுக்குத் தெளிவுற உணர்த்தினார். ’மிராசு முறை’ குறித்து அவரெழுதிய நூல் இன்றும் ஆதார நூலாகக் கொள்ளப்படுகின்றது.

படிப்படியாகத் தம் பதவிகளில் உயர்ந்த எல்லிஸ், பத்தாண்டுகள் சென்னையின் கலெக்டராகப் பணியாற்றியிருக்கிறார். இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆவல் அப்போது அவருக்கு ஏற்படவே, நல்லாசிரியர்களின் துணையோடு வடமொழியும் தென்மொழியும் பயின்றார். தென்னக மொழிகளில் தமிழின் செம்மையும் தொன்மையும் அவரைப் பெரிதும் கவரவே சென்னையின் சிறந்த தமிழ்ப்புலவர்களாக அப்போது திகழ்ந்துவந்த சாமிநாதப் பிள்ளை, இராமச்சந்திரக் கவிராயர் ஆகியோரின் உதவியோடு ஏட்டுச்சுவடிகளில் இருந்த தமிழ்நூல்களையெல்லாம் ஆர்வத்தோடு கற்றார்.

தமிழ்பால் கொண்ட ஈடுபாட்டால் எல்லிஸ் என்ற தம் பெயரை ’எல்லீசன்’ என்று மாற்றிக்கொண்டார் என்பதை அறியும்போது நமக்கு வியப்பு ஏற்படுகின்றது.

வள்ளுவப் பேராசானின் திருக்குறளை அச்சேற்றிய முன்னோடிகளில் ஒருவராகவும் எல்லீசர் திகழ்கின்றார். ஆம், ஜார்ஜ் ஹேரிங்டன் (George Harrington) என்ற வெள்ளைக்கார அதிகாரியிடம் சமையற்காரராகப் பணியாற்றிய அயோத்திதாச பண்டிதரின் பாட்டனாரான கந்தப்பன் என்பவர் தம்மிடம் ஓலைச்சுவடிகளாக இருந்த திருக்குறளையும், நாலடியாரையும், அருந்தமிழ்ச் சுவடிகளைச் சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் ஆர்வமுடைய, எல்லீசரிடம் தந்திருக்கின்றார்.

ஓலைச்சுவடியில் இருந்த வள்ளுவத்தைக் கற்று அதில் உள்ளம் பறிகொடுத்த எல்லீசர், பழந்தமிழின் பண்புகளைப் பளிங்குபோல் காட்டும் திருக்குறளை மேனாட்டாரும் அறிந்து பயனுறவேண்டும் என்று விரும்பி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமான விரிவுரை ஒன்று எழுதத் தொடங்கினார். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. அறத்துப்பாலின் சில அதிகாரங்களுக்கு மட்டுமே அவர் வரைந்திருந்த அவ்வுரையில் புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான பல தமிழ் நூல்களின் பாடல்களை அவர் எடுத்தாண்டிருப்பது அவரின் ஆழங்காற்பட்ட தமிழ்புலமைக்குச் சான்றாகின்றது.

எல்லீசர் வெளியிட்ட குறள் பதிப்பிலும் சில குறைகள் இல்லாமல் இல்லை. அவற்றை அயோத்திதாச பண்டிதரே வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறள், நாலடியார் ஓலைப் பிரதிகள் அச்சில் வந்தபொழுது அறத்துப்பாலிலுள்ள சில குறட்பாக்களைப் பொருட்பாலில் சேர்த்தும், சில குறட்பாக்களின் சொற்களை தம் விருப்பத்திற்கிணங்க எல்லீசர் மாற்றியும் வெளியிட்டிருந்ததைக் கண்ட அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார், இவ்வாறு மாற்றங்கள் செய்தது ஏன் என்று எல்லீசருக்குக் கடிதம் எழுதிக் கேட்டதற்கு மறுமொழி ஏதும் அவரிடமிருந்து வரவில்லை என்கிறார் பண்டிதர்.

”தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்”
என்ற குறட்பாவின் இரண்டாவது அடியை எதுகை நோக்கி ’மக்களால் காணப்படும்’ என்று எல்லீசர் மாற்றியதாகவும் அதற்கு அப்போதே தமிழறிஞர்களிடமிருந்து கண்டனம் எழுந்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி உண்டு.

அயோத்திதாச பண்டிதர் கூறும் கருத்தை இச்செய்தியோடு ஒப்பவைத்துப் பார்க்கும்போது, எல்லீசர் தம் விருப்பப்படி இவ்வாறு சில திருத்தங்கள் செய்திருப்பது உண்மையாகவே இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. இவற்றை ஆதாரபூர்வமாக  உறுதிப்படுத்த எல்லீசரின் திருக்குறள் உரை நமக்குத் தேவை.

விமரிசனத்துக்குரிய இவைபோன்ற சில செயல்களை எல்லீசர் செய்திருந்தாலும், குறள்மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது என்பதை விளக்கும் வகையில் இரு அரிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சென்னை நகரில் 1818-இல் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டவேளையில் அப்போதைய  சென்னைக் கலெக்டராகப் பணியில் இருந்த  எல்லீசர், பெருமுயற்சி செய்து நகரின் 27 இடங்களில் குடிநீர்க் கிணறுகளைத் தோண்ட ஏற்பாடுகள் செய்திருக்கின்றார். அக்கிணறுகளில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. அக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கல்லில், 1818-ஆம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டை வெட்டியிருக்கின்றார் எல்லீசர். அக்கல்வெட்டு இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது.

”….சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
குணகடல் முதலாகக் குடகடலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமை திருவள்ளுவனார்
திருக்குறள்தன்னில் திருவுளம் பற்றிய
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு”
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து…”
என்று செல்கின்றது அக்கல்வெட்டு.

அதே காலகட்டத்தில் எல்லீசர் சென்னப்பட்டணத்துப் பண்டார காரியங்களைப் பார்க்கும் பாரத்தையும் தாங்கியிருந்தமையை இதன்மூலம் அறியமுடிகின்றது.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ள எல்லீசரின் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. அதில்,

 “எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்”
‘….திருவள்ளுவப் பெயர்த் தெய்வம் செப்பி
அருள்குறள் நூலுள் அறப்பாலினுக்குத்
தங்குபல நூலுதாரணக் கடலைப் பெய்து
இங்கி லீசுதனில் இணங்க மொழிபெயர்த்தோன்….

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்வாயிலாய் திருக்குறளின் அறத்துப்பாலுக்கு எல்லீசர் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த செயல் உறுதிப்படுகின்றது.

அத்தோடு, தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்க சாலையில் திருவள்ளுவரின் உருவத்தை வெள்ளை அரசாங்கத்தின் பெரிய தங்க நாணயமான இரட்டை வராகனில் பொறித்த பெருமைக்குரியவராகவும் எல்லீசர் திகழ்ந்திருக்கின்றார் என்ற செய்தியை கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கண்டு சொல்லியிருக்கின்றார்.

அந்த நாணயத்தில் ஒரு சமண முனிவராகத் தலையில் குடையுடன் காட்சிதருகின்றார் வள்ளுவர்.

தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு எல்லீசருக்குப் பயிற்சி இருந்தது என்பதற்கு மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகளே தக்க சான்றுகளாகத் திகழ்கின்றன. இவையல்லாமல் ’நமசிவாயம்’ என்ற ஐந்தெழுத்து மந்திரம் பற்றி எல்லீசர் ஐந்து பாடல்கள் இயற்றியிருப்பதாகக் குறிப்பிடுகின்ற சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள், எல்லீசர் இயற்றிய பாடலையும் அதன் பொருளையும் நமக்கு அறியத் தருகின்றார்.

”சிற்றிறைவர் இவ்வுலகுள் சிறியோரின் சிறுபொருளில்
வற்றிறையை வாங்குவரே வல்லமையும் மகிழ்ச்சியுள்ள
பற்றிறைவன் நீ திறையை வாங்காயே ஆனதினால்
சொற்றிறையை விட்டு உட்டிறையைச் சொரிவேனே நமசிவாய”

என்பது அப்பாடல்.

இதன் பொருள்: சர்வ வல்லமையுள்ள தெய்வமே! பேரானந்த வடிவாயப் பெருமானே! பரந்த உலமெல்லாம் பற்றியாளும் பரமனே! இம்மண்ணுலகத்தை ஆளும் சிற்றரசர்கள் தம் குடிகளைக் கண்டித்தும் தண்டித்தும் வரிப்பணம் (திறை) வாங்குவர். ஆனால் அரசர்க்கெல்லாம் அரசனாக விளங்கும் நீயோ ஒன்றையும் திறையாகப் பெறுதல் இல்லை. ஆதலால் வாக்காலே திறையளக்கும் வழக்கத்தைவிட்டு, என் உள்ளத்தில் ஊறி எழுகின்ற அன்பினையே உன் திருவடியில் காணிக்கையாய்ச் சொரிகின்றேன்.”

தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக 1812-இல் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை (the College of Fort St. George) நிறுவினார் எல்லீசர். ‘சென்னைக் கல்விச் சங்கம்’ என்று தமிழில் அறியப்பட்ட அக்கல்லூரியே எல்லீசரின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கிற்று.

1814-ஆம் ஆண்டிலேயே தெலுங்கு மொழியானது தமிழின் ‘உடன்பிறப்பு’ (sister language) என்று குறிப்பிட்டிருக்கிறார் எல்லீசர். 1816-இல் காம்பெல் (Alexandar Duncan Campbell) எழுதிய தெலுங்கு இலக்கண நூலுக்கு முன்னுரையாக எல்லீசர் எழுதிய விரிவான ஆய்வுரையில், தெலுங்குக்கும் சமஸ்கிருதத்திற்கும் குடி உறவில்லை என்பதையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலானவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வெறும் சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் அவற்றுக்கு உண்டு என்பதையும் நிறுவிக் காட்டியிருக்கின்றார்.

1856-இல் கால்டுவெல் (Robert Caldwell) எழுதி வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) என்ற ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816-இல், திராவிட மொழிகளின் தொன்மையை, வடமொழிச் சார்பில்லா அவற்றின் தனித்தன்மையை முதன்முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் எல்லீசரே என்பது தமிழறிஞர் உலகம் அறிய வேண்டிய அரிய செய்தியாகும். எல்லீசரின் இந்தக் கருத்தாக்கமே கால்டுவெல்லின் நூலில் முழு மலர்ச்சியும் விரிவும் கொள்கின்றது.

தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் எல்லீசர். எனினும் அவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும் நூல் வடிவத்தில் எழுதுமுன் முத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரைக் கண்ணாரக் கண்டுவர விரும்பி அலுவலகத்தில் விடுப்புப்பெற்று மதுரைக்குச் சென்றார். அங்குக் கலெக்டராயிருந்த ‘பெற்றி’ (Rous Petrie) என்பவருடைய மாளிகையில் விருந்தினராய்த் தங்கி மதுரை மாநகரைச் சுற்றிப் பார்த்தார்.

”புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி”
(சிலம்பு -புறஞ்சேரி இறுத்த காதை: 169-170)

என்று இளங்கோவடிகள் பாராட்டிய வையை ஆற்றின் கரையில் அமைந்த அழகிய நகரம் இதுவன்றோ என்று விம்மிதமுற்றார்.  இங்ஙனம் மதுரையம்பதியைக் கண்டு புதியதோர் ஊக்கமுற்ற எல்லீசர் ஒருநாள் இராமநாதபுரத்தைக் காணச் சென்றார். அங்குத் தாயுமானவர் சமாதி அடைந்த இடத்தைக் கண்டு நெஞ்சுருகி நின்றார். பின்பு அவ்வூரில் காணத்தக்க இடங்களையெல்லாம் கண்டு நண்பகலில் தம் இருப்பிடம் திரும்பி உணவருந்தினார். அவ்வுணவில் கலந்திருந்த நஞ்சால் துயருற்று உயிர் துறந்தார் என்ற செய்தி நம் இதயத்தைப் பிளப்பதாய் இருக்கின்றது.

சென்னையிலும் மதுரையிலும் இருந்த அவர் உடைமைகளை அரசாங்கத்தார் நியமித்த அதிகாரி ஒருவர் ஏலமிட்டார். மதுரைக் கலெக்டர் பெற்றியின் பங்களாவில் எல்லீசரின் ஆராய்ச்சிக் குறிப்பமைந்த பொதிகள் ஓர் அறையில் குவிந்திருந்தன. அத்தமிழ்ப் பொதிகளை அரசாங்க அதிகாரி ஏலம் கூறினார். இதில் வேதனை யாதெனில்… பாண்டியர் தமிழ்வளர்த்த அப்பழம்பதியில் அத்தமிழ்ப் பொதிகளைத் தீண்டுவார் யாருமில்லை. பெற்றியின் பங்களாவில் எடுப்பாரும் படிப்பாருமின்றி அவலமாய்க் கிடந்த எல்லீசரின் ஆராய்ச்சித் தாள்களை பெற்றியின் பணியாட்கள் பலநாள் அடுப்பெரித்துக் காலி செய்தனாராம்.

”யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என்
அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர்
நீரறியும் நெருப்பறியும்…”
என்ற பரஞ்சோதி முனிவரின் வாக்கு எல்லீசர் விஷயத்தில் மெய்யானது வருந்தத்தக்கதே!

ஓர் ஆங்கிலேயர் நம் தாய்த்தமிழைப் பெரிதும் நேசித்து அருந்தொண்டுகள் பல புரிந்திருக்கின்றார். மேலும் பல தொண்டுகள் புரிய வேண்டும் எனும் ஆவல் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக அகால மரணமடைந்தார் என்பதை அறியும்போது அவரது தமிழார்வம் குறித்து மகிழ்ச்சியும், அவல மரணம் குறித்து வருத்தமும் ஒருங்கே ஏற்படுகின்றன. அந்த நல்லறிஞரை, சென்னை மக்களுக்குத் தொண்டாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியரை என்றும் நெஞ்சில்நிறுத்திப் போற்றுவோம்!

**********

கட்டுரைக்குத் துணைநின்றவை:

1. https://en.wikipedia.org/wiki/Francis_Whyte_Ellis

2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

3. கிருஸ்துவத் தமிழ்த் தொண்டர் – ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல்., எஸ்.ஆர். சுப்பிரமணியப் பிள்ளை பப்ளிஷர்ஸ் – திருநெல்வேலி.

4. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *