வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16

0

தி. இரா. மீனா

கோரக்கர்

இவர் ’நாத’ பரம்பரையைச் சேர்ந்தவர். இயற்பெயர் கோரக்க நாதர். பசுக்களை மேய்ப்பது இவரது காயகம். அல்லமாபிரபுவிடம் “இஷ்டலிங்க தீட்சை“ பெற்றவர். சூன்ய சம்பாதனை வழி இவருடையது. ‘கோரஷபாலக மகாபிரபு சித்த சோமநாத இலிங்கம்’ இவரது முத்திரையாகும்.

“மாவு பொம்மைக்கு  உறுப்புகள் கொடுத்து
நெய்யினிப்புச் சேர்த்து நெருப்பில் சுட்டு சாப்பிட்ட பிறகு
உறுப்புகளைத் தேடமுடியுமா? இது  பொருளினியல்பு
காட்சியும் கண்ணோட்டமும் உடையவன்
ஏகலிங்கத்தில் உள்ளவனுக்குக் கட்டுப்பட்டவன்
ஆத்மாவில் கவனிப்பும் கவனிப்பாரற்றும் ஆனவன்
கோரஷபாலக மகாபிரபு  சித்தசோமநாத இலிங்கம்.”

 கட்டிவாளய்யா

சந்தனம் அரைப்பது இவரது காயகம். இவருடைய மனிதாபிமானம் குறித்து பல சரணர்கள் போற்றியுள்ளனர். ”சிக்கய பிரிய சித்தலிங்க இல்ல இல்ல நில்லு மாணு“ என்பது இவரது முத்திரையாகும்.  தத்துவ விளக்கம் ,சில வரலாற்று நிகழ்வுகள், சரணர்களைப் போற்றுதல் ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன.

1. “நான் நீயழித்து பரமலிங்கத்துள் இணைந்தவனுக்கு
பரமென்பதில்லை இகமென்பதில்லை
மறதியில்லை அறிவில்லை
சிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”

2. “பூமி உயர்வென்பேனா அது பாதத்திற்குள் அடக்கம்
ஆகாயம் உயர்வென்பேனா அது கண்களுள் அடக்கம்
பரதத்துவம் உயர்வென்பேனாஅது பேச்சில் அடக்கம்
உயர்வு உயர்வு என்பது எங்கேயுள்ளது?
அறிவிற்கு ஒழுக்கமில்லை,அடையாளத்திற்கு நிலையில்லை
சிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”

3. “அலைந்தால் உடலில்லை,நிற்கும் போது நிழலில்லை
நடக்கும் போது கவனமில்லை,பேசும் போது மொழியில்லை
உண்டால் துன்பமில்லை,உண்ணாவிட்டால் ஆசையில்லை
கிடைத்ததில் நிறைவு ,புகழ்,உறவு,பகை,நிந்தனையில்லை
அறிவில்லை,மறதியில்லை ,தானெனும் சிந்தனையற்றதால்.
சிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”

கனலிங்கிதேவா

சுத்தூர் மடத்தலைவர் இவர். நாயகன்—நாயகி பாவனையில் அமைந்தவை இவரது வசனங்கள். ”கனலிங்கியமோகத மல்லிகார்ச்சுனா“ இவரது முத்திரையாகும்.

1. “நெருப்பும் நெருப்பும் சேர்ந்தால் ஒளி
நெருப்பும் புல்லும் சேர்வதாலான புகை உண்மை வெளிச்சமா?
பரமாத்மன் சிந்தனையிலிருக்கும் ஞானியுடன் இணைபவன்
தூய்மை பெறாமல் எப்படிக் களங்கமடைய முடியும்?
ஞானியும் அஞ்ஞானியும் இணைவது பாலில் புளி சேர்ந்ததாம்
கனலிங்கிய மோகத மல்லிகார்ச்சுனனே“

2. “பொன்னின் நிறம் அறிபவன் பொற்கொல்லனன்றி
உழுதுண்ணும் விவசாயிக்கு அது எப்படித் தெரியும்?
இலிங்கமோடு சேரும் மொழியை
இலிங்க வம்சாவளியினரன்றி, வேடதாரிகள் எப்படியறிவர்?
கனலிங்கிய மோகத மல்லிகார்ச்சுனனே “

3. “கூலிக்குச் செல்பவர் பொற்குடம் கண்டாற் போல
மண்ணுலகில் மனிதப்பிறவி கண்டேன்
மூடனிடம் என்றேனும் தெரியும் அரிய செயல் போல
எனக்கு இலிங்கம் தெரிந்தது, அது சாமான்யமானதா?
சொல்வதைச் செய்யவும்,செய்வதைச் சொல்லவும் அருள்வாய்
முரண்பட்டால் சரணர் ஏற்கமாட்டார்
அவர் ஏற்கவில்லையெனில் நீங்களும் ஏற்கமாட்டீர்
ஐயனே! சொல் செயல் இரண்டாகாதபடி காப்பாய்
கனலிங்கிய மோகத மல்லிகார்ச்சுனனே “

சந்திமரசா

அந்தணரான இவர் ஊர் சிம்மலிகேயாகும். நிஜகுண யோகியிடம் தீட்சை பெற்றவர். ”சிம்மலிகேய சென்னராமா“ இவரது முத்திரையாகும். ஆத்ம அறிவு, சரணர்களைப் போற்றுவது ஆகியவை இவரது வசனங்களில் இடம் பெற்றுள்ளன.

1.“கண்ணாடி தன்னுடையாதானால் என்ன?
மற்றவருடையதானால் என்ன?
தனதுருவம் தெரிவது போதுமே.
குரு யாராக இருந்தாலென்ன
தன்னைப் புரிய வைப்பது போதுமே.
சிம்மலிகேய சென்னராமன் வல்லவன் “

2.“உண்மைப் பொருள் ஒன்றே
இரண்டாவதும் அது ஒன்றே
மாற்றாகத் தெரிவதும் அதுவே
தன்னை மறக்க வைப்பதும் அதுவேயாம்
மறப்பை அறிவதும் அதுவே
தானன்றி வேறில்லை என்னுமறிவும் தானே
சிம்மலிகேய சென்னராமனே “

3.“கயிற்றைப் பாம்பென நினைத்தவன் போல
இந்தவுடல் தனதென நினைத்து
இல்லற வாழ்வின் வேதனையனைத்தையும்
அறியாமல் ஏற்றனர்
அறியாமையை பொய்யென்றுணர்ந்த அறிவு நீ
சிம்மலிகே சென்னராமனே “

4. “இறப்பு தாமதமன்று ,நரகம் தொலைவிலில்லை
வீணாய்க் கெட வேண்டாம்
புலனாசைகளை விட்டொழிப்பாய்
குருபக்தியை நம்பி மகிழ்வாய்
சிம்மலிகே சென்னராமனே “

5. “பன்றி பசுவாவதில்லை  சம்சாரி ஜங்கமனாக மாட்டான்
அறிவான சம்சாரியும்,அறிவீனமான சன்யாசியும்
தமக்குள் பொருந்துவார்களோ?
சிம்மலிகே சென்னராமனே “

6. “சோளக்காட்டு பொம்மையைக் கண்டு பயமடையும்
மான் போல இல்லாததை உண்டென நம்புவார்
பேடிகளை துன்புறுத்தியது
சிம்மலிகே சென்னராமனின் எண்ணம்”

                                                                                                      [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *