இலக்கியம்கவிதைகள்

தனித்திருப்போம் விழித்திருப்போம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
மெல்பேண், ஸ்திரேலியா

நிலைபெறுமா றெண்ணிநிற்க
நீள்புவியில் விரும்பிடுவோம்
அலைபாயும் மனமதனை
அடக்குதற்குத் துணிந்திடுவோம்
நிலையில்லாப் பொருளையெலாம்
நினைப்பினின்று அகற்றிடுவோம்
நெஞ்சமதில் இறைநினைப்பை
நிரந்தரமாய் இருத்திடுவோம்!

ஏகாந்தம் இனிதென்று 
எப்போதோ இயம்பியதை
வாழ்நாளில் கடைப்பிடிக்க 
வாய்க்கும்நிலை வந்திருக்கு
தனித்திருப்போம் விழித்திருப்போம்
தலையிடிகள் ஓடிவிடும்
நாமெடுக்கும் எச்சரிக்கை
நாட்டையுமே காத்திடுமே!

சுத்தமே சோறிடும்
என்பதனை மனமிருத்தி
நித்தமுமே சுத்தமதை
நிரந்தரமாய் ஆக்கிடுவோம்
பயங்கொள்ளல் ஆகாது
எனச்சொன்ன பாரதியை
உளங்கொண்டு செயற்பட்டால்
கலங்கல்நிலை தெளிவாகும் !

மஞ்சளது முக்கியத்தை
மனமமிப்போ உணர்கிறது
வேப்பிலையின் மகத்துவமும்
விரிவடைந்து போகிறது
துளசியிலை நீர்பருகல்
தூய்மையெனத் தெரிகிறது
பழமையினை ஒதுக்கியது
பிழையெனவே புரிகிறது!

கைகழுவல் எனும்வார்த்தை
கருத்திருத்தல் அவசியமே
மெய்தொட்டுத் தீண்டுதலை
விலக்கிவிடல் அவசியமே
வீட்டைவிட்டு வெளியேறாது
இருப்பதுவும் அவசியமே
நாட்டுநிலை தனையெண்ணி
நடப்பதுநம் அவசியமே!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க