முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

வழக்கத்திற்கும் மாறாகத் தாமதமாக செல்லவே பள்ளிக்குப் போகும் வழியில் ஒற்றைப்படுத்தப்பட்ட சிறுமி; சிறுமி ஸ்கூல் பேகை முதுகில் சுமந்து, சிவப்பு நிறக்குடையை விரித்துப் பிடித்து மழையில் ஓடியும் நடந்தும் குன்றை ஏறும்போது வழியோரத்தில் முள்படர்ப்பின் மறைவிலிருந்து பைத்தியம் போன்ற ஒருவன் அவளின் முன்னால் குதித்து, சத்தம் போட்டீனா கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். காய்ச்சல் வந்ததுபோல அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் கூர்மையான ஒரு பெரிய கல்.

சிறுமி பயந்து நின்றாள். அவன் தனது வலதுகையில் உள்ள கல்லை அவளுக்கு நேராக உயர்த்தினான். கல்லின் கூர்மையான முனையால் அவளுடைய கண்களை குத்த முயற்சித்தான்.

அவர்களுக்கிடையில் மழை சோ என்று பெய்தது.

உன்னோட சோத்துடப்பா எங்கே? அவன் முரட்டுத்தனமாக கேட்டான். சிறுமி வாய் திறக்க ஓசை எழும்பாமல் தேம்பிக்கொண்டே தன்முதுகில் உள்ள பேகை சுட்டிக்காண்பித்தாள்.

“உம்… எடு. அவளை பயமுறுத்த எண்ணி வலதுகையை அசைத்தான்.

கனல்கள் எரிகின்ற அவனின் முகத்திலிருந்து கண்ணெடுக்கத் துணிச்சலில்லாமல் அவள் பேகைக் கையில் எடுத்தாள். அதற்குள் ஒரு மஞ்சள் நிற பாலித்தீன் கவரில் டிஃப்பன் போக்ஸ் சுற்றப்பட்டிருந்தது. அதை அவள் வெளியில் எடுத்ததும், அவன் கண்களில் ஜொலிப்புடன் இடது கை நீட்டினான். அவள் உற்றுப்பார்த்துவிட்டுப் பாத்திரத்தை அவனுக்குக் கைமாறினாள்.

“உ…ம் போ ஆனா ஒரு விஷயம். வழில யாரிட்டயும் எதுவும் சொல்லக்கூடாது”. அவன் மிரட்டினான்.

சிறுமி இல்ல என்று தலையசைத்தாள். மெதுவாக நடக்கத் தொடங்கினாள். அவன் முள்பரப்புகள் வழியாக அவசரமாக ஓடினான். மழை தொடர்ந்தது.

கருவாட்டுக் கொழம்பு  ஊற்றின சோறு தின்று முடியப்போகும்போது யாரோ தன்னை கவனிக்கிறார்கள் என திடீரென உணர்ந்தான். வலிமை வாய்ந்த ஒரு பெரிய மிருகத்தைப் பார்த்தது போல மரத்துக்குப் பின்னால் பதுங்கினான்.

‘நான்…………..  தா’ … சிறுமி  முட்படர்ப்புக்கருகில் நின்று சொன்னாள். வாயில் போட்ட சோற்றை மெல்ல முடியாமல் சலனமற்று அவளைப் பார்த்தான்.

“சோத்து டப்பாவுக்காகத்தா பாக்கறே அதத் திரும்பக்கொண்டு போகலேனா எனக்கு அடி கெடைக்கும்!! என்றாள் சிறுமி.

அவன் என்ன செய்வதென்றறியாது சலனமற்று நின்றான். கடைசியில் அவன் பாத்திரத்தை நீட்டினான்.

அதை கையில் வாங்கிக்கொண்டு அழகிய சிரிப்புடன் கேட்டாள்.

“இவ்வளவு கொஞ்சமா சோறு சாப்பிட்டா வயிறு நெறயுமா?”.

அவன் அப்படி ஒரு கேள்வியை  எதிர்பார்க்கவில்லை  என்ற உணர்வில் அவளைப் பார்த்தான். திடீரென அவனுக்குள் இருந்து பயங்கர காயம்பட்ட ஒரு விலங்கின் அலறல் சத்தம் உயர்ந்தது. அதொரு பேரொலியாக எங்கும் பரவியது. சிறுமி சலனமற்று நின்றாள். அவன் இருகைகளையும் தலையில் வைத்துத் திரும்பி ஓடினான். ஓயாத சத்தத்துடன் ஓயாத மழையில் எங்கோ மறைந்தான்.


மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *