நாகேஸ்வரி அண்ணாமலை

கொரொனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருந்து கொரொனா ஏற்படுத்தும் அபாயங்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில் நாங்கள் இப்போது இருக்கிறோம். இப்போது மற்ற எல்லா நாடுகளையும்விட அமெரிக்காவில்தான் அதிகப் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; அதிகப் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இதற்கு ட்ரம்ப் சரியாக முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்பதுதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள். முதலில் அமெரிக்காவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, பதட்டப்படாமல் இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது தான் முதலிலேயே ஆபத்து வருகிறது என்று சொன்னதாகக் கதையையே மாற்றுகிறார். இவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். இப்போதும் அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம்; சொல்லப் போனால் கூடிக்கொண்டு போகிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.  யாரைக் குறைகூறுவது என்று தெரியவில்லை. ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம்வரை இறப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் செய்திகளால் ஏற்படும் அச்சம் ஒரு புறம் இருக்க எல்லா நாடுகளிலும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் வேதனை நிறைகிறது.  நான் வளர்ந்து வரும்போது மாறியிருந்த என் தந்தையின் பொருளாதார நிலை நான் பிறக்கும்போது இல்லையென்றாலும் எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் உணவுப் பற்றாக்குறை ஒருபோதும் இருந்ததில்லை. நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதே வீட்டில் எப்போதும் வேண்டிய அளவு அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் என்று எப்போது எதை வேண்டுமானாலும் சமைப்பதற்கு வசதிகள் இருந்தன.  எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். யாருக்கு எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சமைத்துக்கொள்ள வசதி இருந்தது.

எங்கள் வீட்டின் முகப்பில் இருந்த கடையில் ஒருவர் பலசரக்குக் கடை வைத்திருந்தார்.  பலசரக்குக் கடை என்றால் மிகவும் சிறிய கடை. மாதம் முழுவதும் நூறு ரூபாய்க்குச் சாமான்கள் விற்றால் அதிகம் என்று சொல்லலாம்.  அப்போது விலைவாசியும் இப்படி இல்லை.  பல ஏழைக் குடும்பங்கள் பத்து ரூபாய் சம்பளத்தில் மாதம் முழுவதையும் ஓட்டிவிடுவார்கள் என்று சொல்லலாம்.  அப்போது எங்கள் வீட்டில் ஒவ்வொரு முறையும் ஒரு படி எண்ணெய் வாங்குவோம்.  (அப்போது திரவங்களை கால்படி, அரைப்படி என்றும் திடப்பொருள்களை வீசைக் கணக்கிலும் அளப்போம்.  கிலோ, லிட்டர் எல்லாம் பின்னால் வந்தவை.) ஏழை மக்களோ தினமும் அன்றைய சமையலுக்கு வேண்டிய அளவுதான் எண்ணெய் வாங்குவார்கள். சிறு பாட்டில்களில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் வாங்கிச் செல்வார்கள். தாளிக்க உபயோகிக்கும் கடுகு உளுந்தம்பருப்பைக்கூட அன்றன்றுதான் வாங்குவார்கள்.  இவர்கள் எல்லாம் அன்றாடம் சம்பளம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.  சம்பாத்தியம் பண்ணுபவருக்கு உடல்நலமில்லையென்றால் அன்று வீட்டில் சமைப்பது மிகவும் கஷ்டம்.  கையில் பணமே இருக்காது.  சேமிப்பு என்ற ஒன்றும் இருக்காது.

இப்போது கொரொனா வைரஸால் எங்களால் எங்கும் போக முடியவில்லை. நினைத்த நேரம் நினைத்த சாமான்களை வாங்க முடியவில்லை. இல்லினாய் மாநிலமும் சிகாகோ நகரமும் ‘எங்கும் வெளியில் போகாதீர்கள்’ என்று அறிவுரை கூறியிருந்தாலும் நாங்கள் போனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். இந்தியாவில்போல் காவலர்கள் வீதி முழுவதும் நின்றுகொண்டு மக்களைக் கண்காணிப்பதில்லை. இப்படி நாங்களாகப் போட்டுக்கொண்ட வரைமுறைகள் என்றாலும் எங்களுக்கு நிறையச் சிரமங்கள் ஏற்படுகின்றன. எப்போதாவது கடைக்குப் போய் இரண்டு, மூன்று வாரங்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வந்துவிடுகிறோம். அப்படியும் ஏதாவது ஒரு சாமான் இல்லையென்றால் ஏதோ கை ஒடிந்ததுபோல் இருக்கிறது. தக்காளிப் பழங்கள் இவ்வளவுதானே இருக்கின்றன, இன்னும் பத்து நாட்களுக்கு வருமா என்ற கவலை வந்துவிடுகிறது. காலிபிளவர் சாப்பிட வேண்டும்போல் இருக்கிறதே, இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் வீட்டில் உள்ள சாமான்களை வைத்துக்கொண்டே எவ்வளவோ சமைக்கலாம்; அந்தத் தருணத்தில் மனம் விரும்புவதை சமைக்க முடியவில்லை என்பதைத் தவிர நாங்கள் இப்போது பட்டினியால் வாடவில்லை.  நினைத்த இடங்களுக்குப் போக முடியவில்லையென்றாலும் பொழுதைக் கழிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. வேண்டிய அளவு படிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன; புத்தகங்களை ரசித்துப் படிப்பதற்கு ஆர்வமும் இருக்கிறது; அதற்குமேல் தொலைக்காட்சி இருக்கவே இருக்கிறது.  எத்தனை நிகழ்ச்சிகள் வேண்டுமானாலும் பார்க்கலாம்.  இந்தியாவில் ஏழை மக்களுக்கு இந்த மாதிரி எந்த வசதிகளும் இல்லை. இப்போது பெரும்பாலானவர்கள் வீடுகளில் – குடிசை வாழ் மக்கள் வீடுகளில் கூட – தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்றாலும் பல புத்தகங்களைப் படித்துப் பயன்பெறும் பக்குவம் அவர்களுக்கு இல்லை.

அமெரிக்காவில் வியட்நாம் போரில் பணிபுரிந்த ஒருவனை அவனுடைய பெற்றோர் விமானநிலையத்திலிருந்து கூட்டிவருகிறார்கள். அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும் தாய், ‘வீட்டில் சாப்பிடுவதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை’ என்கிறார்.  உடனே பையனுக்கு அப்படி ஒரு கோபம் வருகிறது. சமையலறையிலுள்ள அத்தனை அலமாரிகளையும் திறந்து அதிலுள்ள எல்லாப் பொருள்களையும் வெளியில் வீசி எறிந்து, ‘இத்தனை சாமான்கள் இருக்கும்போது சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறீர்களே’ என்று கோபத்தோடு கூறுகிறான். அமெரிக்கா வியட்நாமில் சண்டை புரிந்தபோது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.  நெல் விளையும் நிலங்களையெல்லாம் அமெரிக்கா ‘ஆரஞ்ச் ஏஜென்ட்’ என்னும் ரசாயன நஞ்சை வைத்து அழித்துவிட்டது.  மேலும் தினம் தினம் சண்டை நடந்துவந்ததால் வேறு எதிலும் மக்களால் கவனம் செலுத்த முடியவில்லை. வியட்நாம் மக்களின் வாழ்க்கையைப் பார்த்ததால்தான் அந்த அமெரிக்கனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. வேண்டும்போது வேண்டியதை சாப்பிட முடியவில்லையே என்று நான் குறைப்பட்டுக்கொண்டால் என் மகன் இப்படித்தான் என் மீது கோபப்படுவானா?  இந்த மாதிரி, சாப்பிட இல்லாத ஏழைகளைப் பார்த்து நம் மேலேயே நமக்குக் கோபம் வருகிறதா?

தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் இந்த இடைஞ்சல்களைக்கூட நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே.  அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கும் இந்த ஏழை மக்கள் வாழ்க்கை முழுவதும் இப்படிக் கஷ்டப்படுகிறார்களே.  இவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? எல்லோருக்கும் வயிறார உணவு கிடைக்கும்படிச் செய் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே.

பார்வைக்கு: For India’s Laborers, Coronavirus Lockdown Is an Order to Starve

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *