(Peer Reviewed)அருந்தமிழ் வளர்க்கும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்

3

முனைவர் சொ. அருணன்,
முனைவர் பட்ட மேலாய்வாளர்,
தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3.

[காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ரூசா 2.0 நிதி ஆய்வுத் திட்டத்தின்கீழ் எழுதப்பட்ட கட்டுரை]

*****

அறிமுகமாக…

காலங்காலமாகத் தமிழ்மொழி போற்றி வளர்க்கப்பட்ட பெருமைக்குரியது. இயல்பில் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் சிறப்பு தமிழுக்கு இருந்தபோதும் சில திருவிடங்களில் தன்னை இருத்தி வளர்த்ததாகத் தமிழே வரலாறு மொழிகிறது. மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் தங்களுடைய உயிர்க்கு இணையாகக் கருதி வளர்த்தபோதினும்கூடத் தமிழ், பாண்டிய மன்னர்களின் சங்கத்தில் இருந்து வளர்ந்ததாகவே பெருமைப்பட்டுக் கொள்கிறது. அதுபோலவே தமிழை உலகில் உள்ள அத்தனை சமயங்களும் கொண்டாடிய போதினும்கூட அது தன்னைச் சைவத்திற்கு உரியதாகவே நிலைநிறுத்திக் கொள்கிறது. அதனாலேயே சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்குக என்னும் நிறைமொழி தோன்றியது. அவ்வாறு தமிழைப் போற்றி வளர்த்த திருவிடங்களின் வரிசையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குத் தனிச்சிறப்பு எக்காலத்தும் உண்டு. இக்கட்டுரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தமிழ்ப் பணிகளைக் குறித்து விளக்குவதாக எழுகிறது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தோற்றம்

குருபரம்பரை

திருக்கயிலாயப் பரம்பரையின் வழியாகத் தோன்றிய பதினெட்டுச் சுத்த சைவ ஆதீனங்களுள் மிகவும் தொன்மையானது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனமாகும். திருக்கயிலாய மலையில் சிவபெருமான் சிவஞானபோதத்தை, திருநந்தி தேவருக்கு உணர்த்தியருளினார்.  அந்தச் சிவஞானச் செல்வத்தைத் தம் அருமை மாணாக்கராகிய சனற்குமார முனிவருக்கு அருளிச் செய்தார் திருநந்தி தேவர். சனற்குமார முனிவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த சத்தியஞானதரிசினிக்கு அருளினார்.  அவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த பரஞ்சோதி முனிவருக்கு அருளிச் செய்தார்.  இது திருக்கயிலாயத்தில் நிகழ்ந்தது.  ஆதலின் திருநந்திதேவர் முதலிய நால்வரும் இந்தப் பரம்பரையிலே “தேவசந்தானத்தார்” எனவும் “அகச் சந்தானத்தார்” எனவும் வழங்கப் பெறுவர்.

இந்த வரிசையில் பூலோகத்தில் அவதரித்திருந்த சுவேதவனப் பெருமாள் என்னும் குழந்தைக்கு அந்தச் சிவஞானபோதம் கிட்டிற்று. பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண்பதற்காகப் பொதிய மலைக்குச் செல்லும் வழியில் இந்தக் குழந்தைத் திருவீதியில் விளையாடிக் கொண்டிருந்தவேளையில் அதன் பக்குவநிலையுணர்ந்து சிவஞானபோதத்தை உபதேசித்தார். மேலும் அவருக்கு மெய்கண்டார் என்னும் திருப்பெயரையும் சூட்டினார். மெய்கண்டார் தாம் பெற்ற சிவஞானபோதத்தை அருள்நந்திக்கு உபதேசம் செய்தார். அத்தகு அருள்பெற்ற அருள்நந்தி தேவரின் அருமைச் சீடர்களுள் ஒருவராகத் தோன்றியவர்தான் திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வராகிய திருவருள்திரு தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். இளம் வயதிலேயே தம் பக்தியின் ஆற்றலால் அந்தண வடிவில் இறைக்காட்சிப் பேறு பெற்றதோடு ‘அருள்நந்தியிடம் சென்று சேர்க’ என்னும் அருளாணையும் பெற்றார்.

திருவண்ணாமலை ஆதீனத் தோற்றம்

பின்னர் திருவருள் வழிகாட்டத் திருவண்ணாமலையிலிருந்து ஆட்சி புரிந்த வீரவல்லாளன் என்னும் ஆட்சியாளனிடத்துச் செய்த ஓர் அற்புதத்தால் சீடர்களும் திருமடமும் தோன்றி வரலாறாக நிலைத்தது. ஆதீனத்தின் குருமுதல்வரின் 60-வது அகவையில் கி.பி.1310இல் திருவண்ணாமலை ஆதீனம் தோற்றம் பெற்றது.

பிரான்மலையில் ஆதீனத் தோற்றம்

இந்தக் குருமரபில் 17ஆம் பட்டமாக வந்துதித்தவர் திருவருள்திரு நாகலிங்க தேசிகர் ஆவார். இவர் தலயாத்திரையாகத் திருச்சுழியலுக்கு வந்திருந்த வேளையில் தரிசனம் வேண்டி வந்த இராமநாதபுர மன்னர் இரகுநாதசேதுபதி இராமேசுவரத்துக்கு வரவேற்றதோடு இந்த மண்ணிலே சுவாமிகள் இருந்து அருளாட்சி புரிய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர்தம் வேண்டுகோளை ஏற்று 1690-இல் இராமநாதபுர எல்லையாக இருந்த பிரான்மலை என்று தற்காலத்து அழைக்கப்படும் வேள்பாரியின் பறம்புமலையில் (திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பெற்ற திருக்கொடுங்குன்றமும் இதுவேயாகும்) இருந்து அருளாட்சி புரிந்து வந்தார்கள்.

குன்றக்குடி ஆதீனத் தோற்றம்

இவ்வாறு 17ஆம் பட்டத்திலிருந்து 30ஆம் பட்டம் குருமூர்த்திகள் வரையிலும் பிரான்மலையிலிருந்து அருளாட்சிபுரிந்து வந்தனர். இந்நிலையில் 28ஆம் பட்டம் ஞானப்பிரகாச தேசிகர் குன்றக்குடி சண்முகநாதப் பெருமான்மீது பெரும்பக்தி பூண்டவரானார். குன்றக்குடியையே அவர்மனம் நாடிற்று. அவருடைய திருவெண்ணம் கி.பி.1778-இல் திருவருள்திரு மருதநாயக தேசிகர் ஆட்சிக் காலத்தில் பலிதமுற்றுப் பிரான்மலையிலிருந்த திருமடம் குன்றக்குடிக்கு வந்து நிலைபெற்றது.

அன்றிலிருந்து இன்றுவரை வாழையடி வாழையாக வளர்ந்தும் சிவத்தொண்டும் தமிழ்த்தொண்டுமாகச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் தனது பணிகளைத் தொடர்ந்து நிகழ்த்தி மண்ணுலக உயிர்களுக்கெல்லாம் இன்னல் தீர்க்கும் அருமருந்தினைப் போல விளங்கி வருவது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஆகும்.

அருந்தமிழ் போற்றிய ஆதீன குருமூர்த்திகள்

      குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வர்கள் அனைவரும் பண்பாடு நிறைந்த அருளாளர்களாக விளங்கியவர்கள். திருவருளையே குருவருளாகக் கொண்டு தம்வாழ்வைத் தவவாழ்வாகப் பூண்டொழுகியவர்கள். சிவஞானமாகிய தெள்ளமுதை மக்களுக்குக் குறைவிலாது வழங்கியவர்கள். அவர்களுள் தமிழ்த்தொண்டு புரிந்த குருமூர்த்திகளும் உளர். 17ஆம் பட்டமாக விளங்கிய திருவருள்திரு நாகலிங்கதேசிகர் சைவத்தையும் தமிழையும் இருகண்களெனக் கொண்டு இயங்கியவர். சிவநெறி பேணிய சீலர். மக்களிடம் அன்பையும் தமிழையும் ஒருசேர வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார். இவர், தான் மேற்கொண்ட தலயாத்திரையின் மூலம் தன்னை நாடி வந்த அன்பர்களுக்கெல்லாம் பக்திநெறியை மனத்தில் ஆழ விதைத்தவர். இவருடைய காலத்திலேயே ஆதீனம் பிரான்மலையில் தோற்றம் பெற்றது.

      பிரான்மலையிலிருந்து அருளாட்சி புரிந்தவர்கள் ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபட்டுச் சிறந்தனர். பிரான்மலை, (பிரான்மலை உட்கிடைக்கோயில் சதுர்வேதி மங்கலம்) திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி, தேனாச்சியம்மன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி புரிந்தனர்.  அன்றுமுதல் இன்றுவரை ஆதீனத்தின் குருமூர்த்திகள் தொடர்ந்து பிரான்மலை வகை ஐந்து கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி செய்து வருகின்றனர்.  பிரான்மலையில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் அனைவரும் அருளும் தவமும் அறமும் அருந்தமிழ்ப் பெருக்கும் நிறைந்தவர்களாக விளங்கினர்.

      38ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக சுவாமிகள் காலத்தில் ஆதீனம் மிகச் சிறந்து விளங்கியது. இவர்கள் காலத்தில் கி.பி.1864-இல் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் குன்றக்குடி ஆதீனத் திருமடத்துக்கு வந்தார்; சிறந்த சொற்பொழிவு நிகழ்த்தினார்.  குருமகா சந்நிதானம் அவர்கள் நாவலரை நன்கு பாராட்டி, எந்த ஆதீனமும் செய்யாத வகையில் புதிதாகச் சிவிகை (பல்லக்கு) செய்வித்து அதில் அமரச்செய்து ஊர்வலச் சிறப்பும் செய்வித்தருளினார்.

      அதுபோலவே மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திருப்பெருந்துறையில் திருப்பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்றிய பின்னர் குன்றக்குடிக்கு வருகை தந்தார்.  குருமகாசந்நிதானம் அவர்கள் வித்துவானைச் சில நாள்கள் குன்றக்குடியில் தங்க வைத்து அவர்களுக்குத் தக்க சன்மானமும் வழங்கியபின், பல்லக்கு வைத்துக் காரைக்குடி வரை அனுப்பி வைத்தார்கள்.

      மேலும், தமிழ்ப் புலமை மிக்க ‘சிலேடைப் புலி’ எனப் பெயர் பெற்ற வேம்பத்தூர் பிச்சு ஐயரைக் கொண்டு குன்றக்குடி சண்முகநாதப் பெருமானுக்கு உலா இயற்றச் செய்தருளினார்கள். இந்நூலில் ஆதீனத்திற்குட்பட்ட ஐந்து கோயில்களிலும் நடைபெறும் சிறப்புகளைப் பற்றி அழகாகப் பாடப்பெற்றுள்ளது.

“நந்தி பரம்பரையில் நல்(கு) அருணைஆதீனத்(து)
இந்(து) அணிவோன் வாயால் இனி(து) இயம்ப-வந்திலகு
சைவாகமம் விளங்கத் தாரணியில் ஆலயங்கள்
மைவார் பைங்கூழ்போல மன்னி நிற்ப—மெய் வாய்ந்த
சீராரும் தெய்வ சிகாமணியென்றே உதித்துப்
பாராள் குருமரபில் பார்க்கரன்போல்—ஏராரும்
தன்மகர்த்தாவாகி இந்தத் தாரணியெல்லாம் புகழும்
சின்மயனாம் ஆறுமுக தேசிகன்.”  

என்று ஆதீனத்தைப் பற்றியும் குருமகாசந்நிதானம் அவர்களைப் பற்றியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

      39-ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் மகாவித்துவானாகத் திகழ்ந்தவர்கள்; தணிகைப் புராணம், பெரிய புராணம், மெய்கண்ட நூல்கள், பண்டார சாத்திரம் முதலியவற்றை நன்கு போதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். பெரிய ஆறுமுக தேசிக சுவாமிகள் காலத்தில் யாழ்ப்பாணம் தில்லைநாத பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்ற ஞானவந்தாதி, தெய்வசிகாமணி நான்மணிமாலைப் பதிப்புக்கு இவர்களருளிய சிறப்புப் பாயிரம் (அப்போது திருவாவடுதுறைத் தம்பிரானாக இருந்தார்கள்) இவர்களது பெரும்புலமைக்குச் சான்றாக விளங்குவது ஆகும்.  இவர்கள் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தார்கள்;  தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களுக்குச் சிலப்பதிகாரத்தின் சிறந்த ஏட்டுப் பிரதியை உதவியருளினார்கள்.

தமிழ்த்தாத்தாவின் பெருமிதம்

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் பணியாற்றி வந்த அப்பாப்பிள்ளை என வழங்கும் சுவாமிநாத பிள்ளை பெரும்புலவராகத் திகழ்ந்தவர்.  உ.வே.சா. அவர்களை மிதிலைப்பட்டி முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்று மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய பழைய ஏட்டுப் பிரதிகள் கிடைக்கும்படிச் செய்தவர்;  ஐயர் அவர்கள் இவரால் இந்தப் பக்கத்தில் வழங்கிய பல வரலாறுகளை அறிந்து கொண்டார்.  இதனால் இவரைப் பலபடப் பாராட்டித் தமது ‘என் சரித்திரம்’ நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

      “திருப்பெருந்துறையிலிருந்து குன்றக்குடி சென்று ஆதீன கர்த்தரையும் அங்கே சின்னப்பட்டத்தில் இருந்த என் நண்பர் ஆறுமுக தேசிகரையும் (இவர் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங்கேட்டவர்) கண்டு பேசினேன். மடத்தின் தலைமைக் குமாஸ்தாவாக இருந்த அப்பாப் பிள்ளையைக் கண்டு தமிழ் ஏட்டுச் சுவடிகள் இருக்குமிடத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்ததை ஞாபகப்படுத்தினேன். அவர் ‘இருங்கள்’ என்று சொல்லி உள்ளே சென்று ஒரு சுவடியைக் கொணர்ந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன். சிலப்பதிகாரம் மூலமும் மணிமேகலை மூலமும் அதில் இருந்தன. சிலப்பதிகாரத்தைப் புரட்டிப் பார்த்தேன். மூலம் முற்றும் இருந்தது. பிரதி மிகவும் திருத்தமாகக் காணப்பட்டது. ‘இந்தச் சுவடி எங்கே கிடைத்தது?’ என்று கேட்டேன். ‘முதலைப்பட்டியில் ஒரு கவிராயர் வீடு இருக்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான ஏடுகள் உள்ளன. அங்கிருந்து எடுத்து வந்தேன்’ என்றார். அன்று பிற்பகலே ஆதீனகர்த்தர் உத்தரவு பெற்று அப்பாப் பிள்ளையுடன் மிதிலைப்பட்டி சென்று அந்தக் கவிராயர் வீட்டை அடைந்தேன். அப்போது அங்கே இருந்த கவிராயரது பெயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பது. அவரைக்கண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டிலுள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தேன். அவர் வீடு தமிழ்மகள் ஆலயமாகத் தோன்றியது. குருடனுக்குக் கண் கிடைத்தது போல எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டாயிற்று.”

வடமொழி வளர்த்த ஆதீனம்

   தமிழகத்து உள்ள ஏனைய ஆதீனங்களை விடவும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வடமொழிநூல்கள் பல இயற்றப் பெற்றுள்ளன. சிவஞான போதத்திற்குச் சிறந்த வியாக்கியானமும், பெளஷ்கர ஆகமத்திற்குச் சிறந்த விருத்தியும் ஞானப் பிரகாச முனிவர் செய்துள்ளார்.  மேலும் ஞானப்பிரகாச முனிவரால் இயற்றப் பெற்ற வடமொழி நூல்கள் வருமாறு:

  1. சித்தாந்த சிகாமணி
  2. பிரமாண தீபிகை
  3. பிரசாத தீபிகை
  4. அஞ்ஞான விவேசனம்
  5. சிவயோக சாரம்
  6. சிவயோக ரத்னம்
  7. சிவாகமாதி மகான்மிய சங்கிரகம்

ஆகியனவாகும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பணிகள்

      இந்த ஆதீனத்தின் 45ஆவது குருமகாசந்நிதானமாகத் திகழ்ந்த திருவருள்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் தம் அருட்பணியால் மக்கள் உள்ளமெல்லாம் நிறைந்து ‘குன்றக்குடி அடிகளார்’ என்னும் சிறப்புப் பெயரால் போற்றப் பெற்றவராவார். காலப்போக்கில் ‘அடிகளார்’ என்ற உயர்தனிச் சொல்லே அவர் பெருமை விளக்குவதாயிற்று.

அடிகளார் பெருமான் சித்தாந்தச் செந்நெறிக்கும் செந்தமிழ் மொழிக்கும், தமிழகத்து மக்களுக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றியுள்ள தொண்டுகள் நாடறிந்தவை.

      சைவ சமய சாத்திர தோத்திர நூல்களைப் பயின்று தெளிந்தவர்கள்; தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் துறைபோகியவர்கள்;  ஆங்கில மொழிப் புலமை உடையவர்கள். உலகின் பல்வேறு சமய நூல்களையும் தத்துவ நூல்களையும் ஆழ்ந்து பயின்று சிந்தித்தவர்கள். உலகிலுள்ள பல்வேறு அரசியல், ஞான நூல்களையும் கற்றவர்கள்; அறிவியல் நூல்களைப் பயின்றவர்கள்; சமுதாய வரலாற்றை ஊன்றிக் கற்றவர்கள்; சமுதாய நிகழ்வுகளைப் பாடமாகக் கொண்டு படித்தவர்கள்; படித்து வருபவர்கள்; உழைப்பையே தவமாகக் கொண்டவர்கள்.  தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள்.  இவர்கள் செய்துள்ள தொண்டு அளப்பரியது என அடிகளார்தம் அரும்பணிகளைப் பட்டியலிடுகிறார் குன்றக்குடி ஆதீனப்புலவர் மரு. பரமகுரு.

      இனிய எளிய முழக்கம் போலான தம் உரையால் சொற்பெருக்காற்றிச் செவி மடுத்தோர் உள்ளமெல்லாம் சைவத்தையும் தமிழையும் தழைக்கச் செய்த பெருமகனார் இவர். தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பலபகுதிகளுக்கும் உலகில் பல நாடுகளுக்கும் இவரது செஞ்சொற்பெருக்கு சென்று சேர்ந்தது. ஆதீனப் பணிகளிலும் நிர்வாகப் பணிகளிலும் பலவித மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு வருங்காலத்திற்கான பன்னோக்குத் திட்டங்களையும் புகுத்திய பெருமைக்குரியவர். தமிழையும் சைவத்தையும் மானுடநேயத்தையும் பரப்பவும் நிலைநிறுத்தவும் இவர் தோற்றுவித்த அமைப்புகள் பலவாகும். அவற்றுள் தமிழ்நாடு தெய்விகப் பேரவை, திருக்குறள் பேரவை, திருவருள் பேரவை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நாத்திகம் கையோங்கியிருந்த காலத்து அதற்கு மாற்றாகக் ‘கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயில்களும்’ என்னும் உயர்கோட்பாட்டை நிறுவிச் சமயப்பெருமையையும் ஆலயச் சிறப்பையும் நிலைநாட்டியவர்கள். சமயப் பணிகளுக்கு இணையாகச் சமுதாயப் பணிகளையும் பெரும்பணிகளையும் மக்களைப் பரத்திற்கு ஈடேற்றும் ஆன்மீகப் பணிகளோடு புறத்திற்கு வழிகாட்டும் அறிவியல் பணிகளிலும் ஆழ்ந்தும் அயராதும் உழைத்த குருமகா சன்னிதானத்தை மக்கள் உள்ளன்போடு ‘தமிழ்மாமுனிவர்’ என்று போற்றியழைத்தனர். சமூகக் களத்தில் வீறுகொண்ட போராளியாகவே திகழ்ந்தவர். இவரைப் போற்றித் துதித்த சான்றோர்கள் பலராவர். அவர்களுள், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாராட்டுப் பா ஒன்று சான்றாகப் பின்வருமாறு அமைகிறது.

செய்ய தமிழும் சிவநெறியும் சிறக்கத் தொண்டு புரிந்திடுவோன்
ஐயன் குன்றக்குடி அடிகள் அருணா சலதே சிகநாதன்
தையல் பாகன் தண்ணருளால் சமயச் செங்கோல் இனிதோச்சி
வையம் புகழப் பல்லாண்டு வாழ்க! வாழ்க!  வாழ்கவே!  

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தமிழ்ப் பணிகள்

      குன்றக்குடி அடிகளார் பெருமானைத் தொடர்ந்து 46-ஆவது பட்டமேற்று அருளாட்சி புரிந்து வருபவர் திருவருள்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள். அடிகளார் என்னும் பெயர் இவருக்கும் பொருந்துவதாயிற்று. அமுதனைய தமிழ்மொழியால் ஈர்ப்புடை முழக்கக் குரலால் தமிழகம் மற்றும் அயலகங்களில் அருந்தமிழ் வளர்ப்பதோடு மிகுசைவத் துறைவிளங்கவும் மானுடம் தழைத்தோங்கவும் அருட்பெருக்காற்றி வரும் பெருமைக்குரியவர். ஆலயத் திருப்பணிகள், அறங்காவல் நிர்வாகம் முதலியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிச் சிறக்கச் செய்பவர்.

      ஆதீனப் பணிகளோடு முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றும் தகையராய்ச் சமயப்பணிகளுடனும் சமுதாயப் பணிகளுடன் அயராது தவப்பணி புரிந்து வருபவர். எழுத்தாலும் இன்னுரையாலும் புரட்சிக் கருத்துகளை மக்களிடம் விதைத்து ஞானப்பயிர் வளர்த்து வரும் போற்றுதற்குரியவர்.

நிறைமுகமாக…

 ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்னும் மந்திரமொழிக்கேற்பக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரையாகத் தொடங்கி இன்றளவும் இப்புவி உள்ளளவும் அருந்தமிழ்ப் பணிகளையும் சைவப் பெரும்பணிகளையும் சமுதாயப் பணிகளையும் உலக மேன்மைக்கும் மானுட குலத்துக்கும் என்றும் ஈடேற்றம் தரும் வண்ணம் இயங்கும் என்பதனை இக்கட்டுரை சற்றே எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

*****

கருவி நூல்கள்”

  1. குன்றக்குடி, திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலைஆதீன வரலாறு, வித்துவான் சு.சுவர்ண காளீச்சுரன், சார்வரி ஆவணி–பூரட்டாதி, ஆதீனச் சீடர்கள் வெளியீடு.
  2. ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம், வே. கனரத்தின உபாத்தியாயர், யாழ்ப்பாணம் நாவலர் நூற்றாண்டு விழாச் சபையினரால், மறுபிரசுரமாக வெளியிடப்பட்டது.
  3. என் சரித்திரம்–மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள், 1982. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதைய்யர் நூல் நிலையம்,  சென்னை—1941.
  4. மயூரகிரிக் கோவை, கோடகுடி சே.சர்க்கரை இராமசாமிப் புலவர் கீலக, ஆனி, (15 கி.பி. 1908)
  5. தமிழ் இலக்கிய வரலாறு–பதினாறாம் நூற்றாண்டு, மு.அருணாசலம், 1976. காந்தி வித்யாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், தஞ்சை ஜில்லா.
  6. சைவ சமய வளர்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், 1958 ஒளவை நூலகம்—சென்னை.
  7. திருவாவடுதுறைஆதீனத்து மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் I&II  மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர், 1940. டாக்டர். சுவாமிநாதையர் பப்ளிகேஷன்ஸ், சென்னை–5.
  8. மயூரகிரி என்னும்குன்றக்குடி ஷண்முகநாதருலா, பிரமஸ்ரீ சிலேடைப்புலி பிச்சுவையர்–1938.
  9. திருவண்ணாமலைத் தல விளக்கம், பதிப்பாசிரியர்: சீ.ஈ.எஸ்.பெருமாள், 1968. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேவஸ்தானம்
  10. திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ தேவசிகாமணி தாண்டவராஜ தேசிக பண்டார சந்நிதி அவர்கள் பேரில் இயற்றப்பட்ட சாஹித்தியங்கள்.

********************************************************************************

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தோற்றம், வளர்ச்சி, ஆதீனம் தமிழோடு வடமொழிக்கும் ஆற்றிய தொண்டுகள், இந்த ஆதீனத்தில் பணியாற்றி வந்த பெரும்புலவர் சுவாமிநாதப் பிள்ளை என்பவர் வாயிலாகத் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையருக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றின் ஓலைச்சுவடிகள் கிடைத்தமை, அதனை நன்றியோடு அவர் தம்முடைய ’என் சரித்திரத்தில்’ பதிவு செய்திருப்பது எனப் பல செய்திகளை இந்த ஆய்வுக்கட்டுரையில் அறியத்தந்திருக்கின்றார் ஆய்வாளர்.

குன்றக்குடி ஆதீனத்தின் புகழ்பெற்ற ஆதீனகர்த்தரான குன்றக்குடி அடிகளாரின் சமயப் பணிகள், சமூகப்பணிகள் போன்றவையும் அவரைத் தொடர்ந்து பொன்னம்பல அடிகளார் இப்போது ஆற்றிவருகின்ற அரும்பணிகளும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்ந்துகண்ட புதிய முடிபுகள் என்று குறிப்பிடத்தக்க வகையில் ஏதும் கட்டுரையில் இல்லாதபோதினும், குன்றக்குடி ஆதீனம் குறித்து நல்லதோர் அறிமுகத்தை இக் கட்டுரை தருகின்றது எனலாம்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “(Peer Reviewed)அருந்தமிழ் வளர்க்கும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்

  1. வணக்கம்! ‘”தமிழ்ப்புலமை என்பது இலக்கணமறியாக் கொடுமையாகவும் இலக்கியப் பாரம்பரியம் அறியா மடமையாகவும் மெல்ல மெல்ல மாற்றம் பெற்று உருக்குலைந்து போனது ஒரு சூழல்.

    நவீன இலக்கியச் சிந்தனைகளே கதிமோட்சம் என்று சொந்த மூலதனங்களை அறியாத தறிகெட்ட போக்கு மற்றொரு சூழல்.

    புலமையும் தெரியாது புதுமையும் புரியாது இருட்டு வீட்டக் கறுப்புப் பூனைகளாய் மனப்பால் குடிப்போர் மற்றொரு சூழல்.”

    இந்தச் சூழல் எல்லாம் இன்றைக்குத் தமிழைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டன என்றே சொல்லலாம்.

    இத்தகைய இருண்ட சூழலில் இது போன்ற கட்டுரைகள் ஒளிவிளக்காய்த் திகழ்கின்றன. குறிப்பிட்ட சமய அமைப்பைப் பற்றிய மூல அறிவின் இன்றியமையாமையைப் படம்பிடித்துக் காட்டும் இந்தக் கட்டுரையைப் பயன்படுத்திக் கொள்வது மதியுடையார் கடன். குறிப்பாகத் தமிழகக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் உடனடிக் கடன்.

    ஆதீனத்து ;அன்பரும் அடிகளாரின் மாணவரும் கல்லூரிப் பேராசிரியருமான முனைவர் பா. சுந்தர் அவர்கள் எழுதிய முனைவர்ப் பட்ட ஆய்வேட்டின் நூல்வடிவமான ‘குன்றக்குடி அடிகளார் பணிகள்’ என்னும் நூலைப் பய்ன்படுத்தியிருந்தால் கட்டுரையில் அடிகளாரைப் பற்றிய செய்திகள் கூடியிருக்கக் கூடும் என்பது என் கருத்து.

    1. “குழந்தைத் திருவீதியில் விளையாடிக் கொண்டிருந்தது’ என்பது எழுவாய்த் தொடர். இதில் வல்லினம் மிகுமா?

    2. சிறப்புக்களைப் பற்றி அழகாகப் பாடப்பெற்றுள்ளது என்னுந் தொடர் நெறி சரியா?

    கருப்பஞ்சாறு அருந்துங்கால் பல்லிடுக்கில் கோதுபோல இவை அமைந்துவிடுவதைத் தவிர்த்திருக்க்லாம். முன்மதிப்பீடு மிகவும் சிறப்பு. கட்டுரையாளர்க்கு தமிழ்முனிவரின் வாழ்த்துக்கள்! என்றைக்கும் உண்டு! நன்றி!

  2. பழம் பெரும் மடத்தின் தோற்றம், ஆதினங்களின் செயல்பாடுகள் நன்கு தெரிந்து கொள்ளுமாறு தரவுகள் காணப்பெற்றுள்ளன.

    பிரான்மலை, திருச்சுழி பேறு பெற்ற பூமி திருச்சுழியில்தான் ரமணமகரிஷி அவதரித்தார். அப்பூமியில் நிலை கொண்ட குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் தமிழையும், சைவத்தையும் பேணி காக்கும் செயல் அய்யன் சிவனின் அருளால் நிறைவேறட்டும்.

    ஓம் நமச்சிவாய

    – இரா. சரவணன்

  3. அருமை நண்பா…உங்கள் எழுத்துக்களில் தமிழே வந்து தன்வரலாறு கூறியது கண்டேன்…ஆகச் சிறந்த கருத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *