(Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுறை

1

-மு.கயல்விழி
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்-632501.

*****

திட்டச் சுருக்கம்:-

     உலகில் அடிமைமுறை என்பது மிகவும் பழமையானது. தமிழகத்திலும் இடைக்காலத்தில் அது பேரளவில் காணப்பட்டது. தமிழ்நாட்டில் மன்னர்கள் மட்டுமன்றிக் கோயில்களும், மடங்களும், செல்வர்களும், அரசு அலுவலர்களும் அடிமைமுறையைக் கையாண்டனர். அடிமைகள் மிருகங்கள் போன்று நடத்தப்பட்டனர். போர்கள், பஞ்சங்கள், பக்தி போன்ற பல காரணங்களால் இவ்வடிமை முறை இடைக்காலத்தில் நிலைபெற்றது.

முன்னுரை:

     மனிதன் ஆறாம் அறிவுடையவன். எனவே அவன் உலக உயிர்கள் அனைத்திலும் மேம்பட்டவனாகத் திகழ்ந்தான். அத்தகைய மனிதன் உலக உயிர்கள் அனைத்தையும் அடக்கியாண்டான். அதே சமயம் பறவைகள், விலங்குகள் போன்றே மனிதன் மனிதனையும் அடிமைப்படுத்தினான். இது அடிமைமுறை (Slave System) எனப்பட்டது. அடிமைமுறை எல்லா நாடுகளிலும் இருந்துள்ளது. இப்புன்மையை ஒழிக்கப் பெரியோர்கள் எவ்வளவோ முயன்றாலும் மது, திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்று இதுவும் அழிக்க முடியாத ஒன்றாகவே திகழ்ந்தது. உயர் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியுமிக்க இக்காலத்திலும் ஆப்பிரிக்காவிலுள்ள சூடான் (Sudan), எத்தியோப்பியா (Ethopia) போன்ற நாடுகளில் அடிமைமுறை இருப்பது இதை உணர்த்தும். தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்புக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிமைமுறை அதன் பெருமையைக் குலைக்கும் களங்கமாகவும், கரும்புள்ளியாகவும் இன்றளவும் திகழ்ந்து வருகின்றது.

அடிமைமுறையின் பழமை:

     அடிமைமுறை என்பது மனிதன் தோன்றிய காலம் முதலே தோன்றிய ஒன்று. தமிழ்நாட்டில் இம்முறை முதன்முதலாக எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் காலத்துக்கு முன்னே இம்முறை இருந்துள்ளது. இதைத் தொல்காப்பியர் உறுதிசெய்கின்றார்.

”அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்
” (தொல்.பொரு. அகத்.25)

இதன்பின் வந்த திருவள்ளுவரும் அடிமைமுறையை உறுதிசெய்து,

”மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்”
(குறள்: 608)

என்று கூறிச்செல்கின்றார். பின்பு வந்த பல்லவர் காலத்திலும் இம்முறை இருந்ததைச் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனால் அடிமைப்படுத்தப்பட்டதைக் கொண்டு அறியலாம். ஆனால் இவையெல்லாம் சிறிய அளவிலே இருந்தன. உரோம், கிரேக்க நாடுகளைப் போன்று பெரிய அளவில் பரவலாக அடிமைமுறை காணப்படவில்லை. பின்பு வந்த சோழர், பாண்டியர் காலத்தில் இது பல்கிப் பெருகிச் சமுதாயத்தையே சீர்கேடாக்கும் வகையில் வளர்ந்து நின்றது.

தமிழ்நாட்டில் அடிமைமுறைக்கான காரணங்கள்:

     பழந்தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான அடிமைகள் இருந்துள்ளனர். அவர்கள் பல காரணங்களுக்காக அடிமைப்பட்டனர் அல்லது அடிமைப்படுத்தப்பட்டனர். அவை வருமாறு:-

  1. அயல்நாடுகளுடனான போரின்பொழுது தோற்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அடிமைகளாகப் பிடித்து வரப்பட்டனர்.
  2. சிலர் இறைப்பணியாற்ற விருப்பத்துடன் தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக்கொண்டனர்.
  3. பணத்துக்காக அப்பாவிகள் பிடிக்கப்பட்டு அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டனர்.
  4. இயற்கைச் சீற்றங்கள் மிகுந்த காலத்தில் வரிசெலுத்தவியலாத பொதுமக்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதுடன் அவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர்.
  5. கொடிய பஞ்சத்தின்போது தம்மைக் காத்துக்கொள்ளப் பலர் தம்மை கோயில்களுக்கும், மடங்களுக்கும் அடிமைகளாக விற்றுக் கொண்டனர்.
  6. குடும்பப் பெண்கள் சிலர் கணவன்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
  7. அடிமைகளை அவர்களின் பரம்பரையினருடன் சேர்த்தும் விற்பனை செய்தனர்.
  8. பிராமணர்கள் ஒருபோதும் அடிமைகளாக்கப்படவில்லை.

தமிழகத்தில் அடிமைமுறையின் இயல்புகள்:

   உலகில் அடிமைமுறையை அறிமுகம் செய்தவர்கள் உரோமானியர்களே. தம்மிடம் தோற்ற நாடுகளிலிருந்து அவர்கள் பல்லாயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்துவந்தனர். உரோமாபுரி முழுவதும் ஏராளமான அடிமைச் சந்தைகள் காணப்பட்டன. அங்கு அரசர்களே அடிமைமுறையை ஆதரித்தனர். தமிழகத்தில் கோயில்களும், மடங்களும், செல்வர்களும் இம்முறையை ஆதரித்தனர். இடைவிடாத போர்களும், இயற்கைச் சீற்றங்களும் இதற்குக் காரணிகளாய் அமைந்தன. இடைக்காலப் பொதுமக்கள் சமய உந்துததலால் இறைப்பணி புரியக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். பலர் தம்மையும், தம் சந்ததியினரையும் அடிமைகளாக விற்றுக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையை இதற்குச் சான்றாய்க் கொள்ளலாம்.

     அரசர்களே அடிமைமுறையை ஆதரித்ததால் அடிமைகளை விற்பதும், வாங்குவதும் பழங்காலத் தமிழகத்தில் சர்வ சாதாரண நிகழ்வாய்த் திகழ்ந்தது. தமிழ்நாட்டில் அடிமைகள் மிருகங்கள் போன்று நடத்தப்பட்டனர். அவர்கள் உடம்பில் எஜமானர்களின் இலச்சினைகள் பொறிக்கப்பட்டன. சிவன் கோயிலுக்கு விற்கப்பட்ட அடிமைகளுக்குச் சூல அடையாளமும், வைணவக் கோயில்களுக்கு விற்கப்பட்டவர்களுக்குச் சக்கர இலச்சினையும், அரசு அடிமைகளுக்கு அரசு முத்திரையும் பொறிக்கப்பட்டன. சில சமயம் அடிமைகள் சீதனப் பொருள்களுள் ஒன்றாய்க் கருதப்பட்டு வழங்கப்பட்டனர். சான்றாகக் கிழவன் வயிதராயன் என்பவனுக்குத் தன் மனைவியின் சீதனமாக 36 அடிமைகள் கிடைத்தனர்.

     பஞ்ச காலங்களில் எளியவர்கள் தம் வயிற்றுக் கொடுமையிலிருந்து தப்பிக்க அக்காலத்தில் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த கோயில்களுக்கும், மடங்களுக்கும் தம்மை விற்றுக் கொண்டனர். சான்றாகத் திருப்பாபுரம் கோயிலுக்கு வேளாளன் ஒருவன் வறுமையின் கொடுமையால் தன் மனைவியையும், இரு மகள்களையும் விற்றுக்கொண்டதைச் சான்றாகக் கொள்ளலாம் (ARE.No:86/1911). கடமை தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவனது அடிமைகளும் ஏலம் விடப்பட்டனர். சான்றாக ஊட்டத்தூரைச் சார்ந்த பிராமணன் ஒருவன் அவ்வூர் கோயில் நகைகளைத் திருடிவிட்டதால் அவன் சொத்துக்களுடன் அவனது அடிமைகளும் ஏலம் விடப்பட்டனர். கொத்தடிமைமுறை தாங்காத அடிமைகள் தப்பியோடும்பொழுது பிடித்துவரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். சான்றாக, திருச்செங்காட்டான்குடிக் கோயில் அடிமைகள் அதன் உரிமையாளன் ஸ்தானப் பட்டன் என்பவன் செய்த கொடுமைகள் தங்காது தப்பியோடிய பொழுது மூன்றாம் குலோத்துங்க சோழனால் பிடித்துவரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர் (ARE.No:94/1926).

     கோயிலுக்கு விடப்பட்ட அடிமைகள் கோயில் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் கோயிலின் உரிமைப் பொருளாய்க் கருதப்பட்டனர். அவர்கள்மீது மன்னர்கள்கூட உரிமை பாராட்ட இயலவில்லை. சான்றாக முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1088-இல்) காளஹஸ்தி கோயில் தேவரடியார்கள் தவறுதலாக அரசுப்பணிக்குக் கொண்டு வரப்பட்டு அரண்மனையில் பணியாற்றினர். அவர்கள் முதுகில் அரசு இலச்சினை பொறிக்கப்பட்டது. பின்பு உண்மை தெரிந்தபின் அவர்கள் கோயிலுக்கே திரும்ப வழங்கப்பட்டனர். அவர்களின் முதுகிலிருந்த அரசு இலச்சினை அழிக்கப்பட்டு சூல இலச்சினை பொறிக்கப்பட்டது (ARE.No:141/1922).  இது தவிர வேறு விதமான அடிமைமுறையும் அக்காலத்தில் காணப்பட்டது.

கி.பி.1002-இல் திருவிடந்தைக் கோயிலுக்கு 12 மீனவக் குடும்பங்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். இவ்வடிமைகள் கோயில் பணி செய்யாமல் மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். ஆனால் இவர்கள் ஈட்டிய வருவாயில் 3/4 கழஞ்சு பொன்னைக் கோயிலுக்கு வழங்கினர். மேலும் இக்கோயிலில் சிறப்புடன் நடக்கும் இராஜராஜன் பிறந்தநாள் திருவிழாவான சதயத் திருவிழாக் கொண்டாட்டத்தில் 7 நாட்களும் கோயில் பணியாற்றினர். அவர்களுக்கு ஊதியமாக கோயில் படையல் (உணவு) மட்டுமே வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அடிமை முறையின் பதிவுகள்:

     சங்க காலத்தில் குறைவாகக் காணப்பட்ட அடிமைமுறை  இடைக்காலத்தில் பல்கிப்பெருகியது. இதைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்கின்றன. தஞ்சை மாவட்டம் பெரும்பள்ளம் கோயிலுக்கு நாங்கூர் அந்தணன் 13 காசுகளுக்குத் தன் அடிமைகள் 6 பேரை விற்றான் (ARE.No:216/1925).  நந்திவர்ம மங்கலத்து அதிகாரியான சந்திரசேகரன் என்பவன் வயலூர் கோயிலுக்குப் பணிபுரியப் பல அடிமைகளை விற்றான். பாண்டிய நாட்டுக் கருங்குளத்து இராஜசிம்மேஸ்வரக் கோயிலுக்கு அரசு அதிகாரி ஒருவன் பறை கொட்டும் உவச்ச அடிமையை விற்றான் (ARE.No:230/1927-28).  திருவலம் கோயிலுக்கு அழகிய பாண்டிய பல்லவராயன் என்பவன் தன் குடும்பப் பெண்களையே சூல இலச்சினை பொறித்து அடிமைகளாக விற்றான் (ARE.No:149/1936-37).  திருவாலங்காட்டுக் கோயிலுக்கு 4 தேவரடியார்கள் 700 காசுக்கு விற்கப்பட்டனர் (ARE.No:80/1913).  வயித ராயன் என்ற அதிகாரி தன் மனைவியைத் திருச்செங்கட்டான்குடிக் கோயிலுக்குத் தேவரடியராக விற்றான்.

     திருவாலங்காட்டுக் கோயில் பணிக்கு கோயில் நிர்வாகம் 36 அடிமைகளை கி.பி.1208-இல் விலைக்கு வாங்கியது (ARE.No:90/1926). கி.பி.1209-இல் நிகழ்ந்த பஞ்சத்தில் வேளாளன் ஒருவன் தன்னையும் தன் மனைவி மற்றும் இரு மகன்களையும் 110 காசுக்குத் திருப்பாபுரம் கோயிலுக்கு விற்றுக் கொண்டான் (ARE.No:86/1911).  கி.பி.1208-இல் சூலமங்கலம் கோயிலுக்குப் பணிபுரியச் சில அடிமைகள் விற்கப்பட்டனர் (ARE.No:296/1911).  இதற்காகத் தயாரிக்கப்பட்ட பிரமாணச் சீட்டில் “கிராமகதமாய் வரும் அடியார்” என்று அவர்களின் அடிமைத்தனம் பொறிக்கப்பட்டது. எதிரிலிச் சோழ கங்க நாடாள்வான் என்பவன் கி.பி.1219இல் திருமறைக்காட்டுக் கோயிலுக்கு 5 ஆண்களையும், 5 பெண்களையும் 1000 கழஞ்சு பொன்னுக்கு விற்றான் (ARE.No:499/1904).  தஞ்சை அச்சுதமங்கலம் கோயிலில் உள்ள மடத்தில் கல்தச்சன் ஒருவனும் அவன் குடும்பமும் கி.பி.1219இல் அடிமைகளாகப் பணியாற்றினர் (ARE.No:409/1925).  நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை கோயிலில் 100க்கும் மேற்பட்ட அடிமைகள் அக்காலத்தில் பணியாற்றினர் (ARE.No:110/1892).  மேலப்பெரும்பள்ளம் கோயிலுக்கு நம்பிக்காட்டு நங்கை என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் 15 காசுகளுக்கு விற்றுக் கொண்டாள் (ARE.No:218/1925).  திருவொற்றியூர் கோயிலுக்கு வயலூர் கிழவன் என்பவன் நெல்லைக் குத்தி அரிசியாக்கும் பணிக்கு 5 அடிமைப் பெண்களைத் தானமாக வழங்கினான். கிழவன் வயிதராயன் என்பவனுக்கு மனைவியின் சீதனமாய் 36 அடிமைகள் கிடைத்தனர் (ARE.No:75/1925).

     திருவாலங்காட்டுக் கோயிலில் பல அடிமைகள் கோயில் பணியாற்றினர். திருவிடந்தைக் கோயிலுக்கு 12 மீனவக் குடும்பங்கள் அடிமைகளாகப் பணியாற்றினர் (ARE.No:274/1910). மூன்று வேளாளர்களும், இரண்டு பெண்களும் திருவக்கரைக் கோயிலுக்கு அடிமைகளாக கி.பி.1099ல் விற்கப்பட்டனர் (ARE.No:183/1904).  அடிமைகள் உடலில் தாம் அடிமைகள் என்ற அடையாளம் பொறிக்கப்பட்டது. இதைக் கல்வெட்டுகள் ‘இலாஞ்சினை இட்டு” ‘இலாஞ்சினை சாத்தி” என்றழைக்கின்றன. அக்காலத்தில் அடிமைகள் “அடியார்கள்” என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். “எங்களுக்குக் கிரமாந்தமாய் வரும் அடியார்” என்ற கல்வெட்டு வாசகம் இதை உணர்த்தும் (ARE.No:296/1911).  அடிமைகளை விற்கும் பொழுது ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச் சீட்டு” எழுதப்பட்டது. இவ்வாறு பழந்தமிழ்ச் சமுதாயத்தில் அடிமைமுறை நன்கு வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து நின்றது.

தமிழகத்தில் அடிமைமுறையின் வீழ்ச்சி:

     இடைக்காலத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்த அடிமைமுறை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியைச் சந்தித்தது. தமிழகத்தில் முடியுடை வேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட ஓயாத படையெடுப்பால் இம்முறை வீழ்ச்சியடைந்தது. தமிழ்ச் சமுதாயம் வறுமையில் பீடிக்கப்பட்டது. அடிமைமுறையை வளர்த்த கோயில்களும், மடங்களும் தம் சிறப்பை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தன. செல்வர்கள் வறியவர்களானார்கள். படையெடுப்பாளர்கள் கோயில்களிலும், மடங்களிலும் இருந்த செல்வங்களையெல்லம் சுரண்டிச் சென்றனர். தமிழ்மக்கள் அனைவரும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். படையெடுப்பாளர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிமைகளாகப்  பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் தனியாக அடிமைமுறை என்ற ஓர் அமைப்பு முற்றிலுமாய்த் தமிழகத்திலிருந்து மறைந்தது. இவ்வாறு மன்னர்களாலும், மடங்களாலும், திருக்கோயில்களாலும், செல்வர்களாலும் பலநூற்றாண்டுகளாய் வளர்க்கப்பட்ட இவ்வடிமை முறை கால நிர்பந்தத்தாலும், அரசியல் சூழலாலும் முற்றிலுமாகச் சுவடு தெரியாமல் மறைந்துபோனது.

முடிவுரை:

      ஒரு சமுதாயத்தைப் பாராட்ட பல காரணங்களைச் சொல்லலாம். சிறந்த ஆட்சியாளர்கள், அறிவார்ந்த பொதுமக்கள், ஏற்றத்தாழ்வற்ற சமூகம், மேம்பாடான கல்வி நிலை, வளமான பொருளாதார நிலை, சிறப்பான கலாசாரம், உன்னதப் பண்பாடு போன்றவற்றுடன் அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிகரற்ற வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இடைக்காலத் தமிழகம் இத்தகு சிறப்புகளைக் கொண்டிருந்தது. எனவே இச்சமூகத்தில் பிறந்ததற்குப் பல அறிஞர்கள் பெருமை கொண்டு அகமகிழ்ந்து தம்மைத் தாமே பாராட்டிக்கொண்டனர். ஆனால் இச்சமூகத்தில்தான் அடிமைமுறை போன்ற புன்மைகளும் இருந்தன என்பதை அவர்கள் மறந்தனர். இப்புன்மையை ஒழிக்கவேண்டிய தமிழ் மன்னர்கள் அவற்றை முனைப்புடன் ஆதரித்தது வியப்புக்குரியது. இச்சமூக அவலத்தை ஆதரிக்கும் கேந்திரியங்களாகக் கோயில்களும், மடங்களும் திகழ்ந்தன. இந்நிறுவனங்கள் சமூகத்தில் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாய் மன்னர்களும் அவ்வழியே சென்று இம்முறையை ஆதரித்து வளர்த்தனர். இடைக்கால ஐரோப்பாவில் திருச்சபை (Papacy) பெற்றிருந்த செல்வாக்கை இவை தமிழகத்தில் பெற்றிருந்தன. திருச்சபையின் அதிகாரத்தை ஒழிக்க அங்குள்ள மன்னர்கள் அரிதின் முயன்றனர். ஆனால் தமிழ் மன்னர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் இப்புன்மை ஒழியாமல் பல்கிப் பெருகியது.

     இடைக்காலத் தமிழ்ச் சமூகம் வலியோர்களை உயர்த்துவதிலும், மெலியோர்களை நசுக்குவதிலும் முனைப்புக் காட்டியது. மேலும் மேல்நாட்டின் தலைசிறந்த மேதாவிகளான மார்டின் லூதர் (Martin Luther), வால்டேர் (Voltaire), ரூஸோ (Jean-Jacques Rousseau), ஜான் விக்ளிப் (John Wycliffe), விக்டர் யூகோ (Victor Hugo), அலேக்சாண்டர் டூமா (Alexandre Dumas), சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) போன்றோர் தம் எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் சமூக அவலங்களையும், சீர்கேடுகளையும் படம்பிடித்துக்காட்டிப் பதிவு செய்துவிட்டுச் சென்றனர். இதனால் அம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றிச் சமூகப் புன்மைகள் மறைய அவை உதவின. இது போன்ற எழுத்தாளர்களும், சீர்திருத்தவாதிகளும் ஒருவர் கூடத் தமிழகத்தில் தோன்றாதது மாபெரும் இழப்பாகும். இதனால் பழந்தமிழ்ச் சமுதாயத்தின் புன்மைகளைப் பொதுமக்கள் அறிய முடியாமலும், அவற்றை ஒழிக்க முடியாமலும் போயிற்று. அடிமைமுறை என்பது பழந்தமிழ்ச் சமுதாயத்தின் சீர்கேடு என்பதுடன், அறிவார்ந்த நம் முன்னோர்கள் எளியோர் மீது இழைத்த மாபெரும் சமூக அநீதி (Social Injustice) என்பதை மறுக்கவியலாது.

சுருக்கம் (Abbrevations):

1.ARE-Annual Report on Indian Epigraphy

பார்வை நூற்பட்டியல் (Bibliography):

1.Neelakanta Sastri.K.A,(1975), The Cholas, Chennai: University of Madras.

2.Neelakanta Sastri.K.A,(1939), Studies in Chola History and Administration, Chennai:

 The University of Madras.

3.Appadorai.A.(1990). Economic Conditions in South India (1000-15000), Chennai: University of  Madras.

4.Pillai.K.K.(1969) A Social History of The Tamils, Chennai: University of Madras.

5.Swaminathan.A, (1991), Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.

6.பிள்ளை.கே.கே. (1977), தமிழ்நாட்டு வரலாறு- மக்களும்

 பண்பாடும், சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

*****

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

இடைக்காலத் தமிழகத்தில் நிலவிய அடிமைமுறை பற்றி விரிவாக ஆய்ந்து பல கருத்துக்களை இக்கட்டுரையில் வெளியிட்டிருக்கின்ற ஆய்வாளர்,  திறமிகு ஆட்சியாளர்கள், அறிவார்ந்த பொதுமக்கள், மேம்பட்ட கல்விநிலை, உயரிய பண்பாடு எனும் பல சிறப்புக்கள் அன்றைய தமிழகத்துக்கு இருந்தாலும் மனிதர்களுக்குள் வேற்றுமையை வளர்த்துச் சமத்துவத்துக்குச் சமாதி கட்டும் அடிமைமுறையை ஆட்சியாளர்களும், சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருந்தோரும் ஆதரித்ததையும், அதனை அழியாமல் காத்துவந்ததையும் பாராட்டவியலாது என்பதை அழுத்தமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார்; அதற்கு அவருக்குப் பாராட்டுக்கள்!

எனினும், சொற்பிழைகள், ஒரேசெய்தி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் இடம்பெற்றுள்ளமை போன்றவற்றையும் ஆய்வாளர் கவனத்தோடு களைந்திருந்தால் கட்டுரை மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுறை

  1. இந்தக் ;கட்டுரைப் பொருளில் காட்டப்படட தரவுகள், அதற்கு முன்பாகக் ;கடடமைக்கபட்ட கருதுகோள்,, ஆய்வாளரின் உட்:கோள், கட்டுரை இறுதியில் பழந்தமிழ்ச் சமுதாயத்தின் மீது குத்தியிீருக்கும் பழிமுத்திரை ஆகிய அனைத்துக்குமான நம்பகத்தன்மை ‘ பிராமணர்கள் ஒருபோதும் அடிமைகளாக்கப்படவில்லை’ என்னும் ஒருவரி கருதுகோளை ஆற்றல் மிக்க தரவுகளுடன் விளக்கினால் மட்டுமே உறுதிபொறும். நிலைபெறும். இல்லையாயின் கட்டுரையாசிரியரின் உட்கிடக்கைக்காகவே கிடைத்த தரவுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே முடிந்துவிடும்! என்னுடைய இந்தப் பார்வைக்குக் காரணமே கட்டுரையாளரின் அந்த ஒரு தொடரே!. அஞ்சுவதுமில்லை!அஞ்ச வருவதும் ஒன்றில்லை’ என்பர் ஆன்றோர். ஒரு ஆற்றல் மிக்க சிந்தனையாளரிடம்தான் நான் எதிர்பார்க்க முடியும்!. வாழ்த்துக்கள்! நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *