இலக்கியம்கட்டுரைகள்

அறவாழ்வைப் போற்றிய அறிஞர் – மு. வரதராசனார்

-மேகலா இராமமூர்த்தி

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணியாற்றிச் சென்றிருப்போர் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரையும் மாணவர்கள் நினைவில் வைத்துப் போற்றுகின்றார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களில் மிகச் சிலரையே மாணவருலகம் என்றும் நன்றியோடு போற்றுகின்றது; நினைந்து மகிழ்கின்றது; அத்தகையோரில் ஒருவர்தாம் மு.வ. என்றழைக்கப்படும் மு.வரதராசனார்.

1912-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25-ஆம் நாள்  வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் முனிசாமி, அம்மாக்கண்ணு இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் மு.வ. திருவேங்கடம் என்று ஏழுமலையானின் பெயரும், வரதராசன் என்று அவருடைய பாட்டனாரின் பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டன. வீட்டிலே திருவேங்கடமாகவும் வெளியுலகுக்கு வரதராசனாகவும் திகழ்ந்தார் அவர்.  

திருப்பத்தூர் நகராட்சிப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும் முறையே தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் பெற்றார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் உரைநடையால் ஈர்க்கப்பட்ட மு.வரதராசனார், அவருடைய நூல்களை இடையறாது கற்றார்; அவருடைய சொற்பொழிவுகளிலும் உளம்தோய்ந்து, திரு.வி.க. எங்கு பேசினாலும் அங்குச் சென்று அவர் பொழிவுகளைத் தவறாது கேட்டார். திரு.வி.க.வோடு நெருங்கிப் பழகும் நற்பேறும் மு.வ.வுக்கு வாய்த்தது. மு.வ.வுடனான தம் நட்பைப் பற்றித் திரு.வி.க.வும் மிகவும் உயர்வாகத் தம்முடைய வாழ்க்கைக் குறிப்புக்களில் பதிவுசெய்துள்ளார் என்பது எண்ணத்தக்கது.

1928-ஆம் ஆண்டு, தம் பதினாறாம் அகவையில், பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மு.வ., அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராய்ச் சிலகாலம் பணியாற்றினார். அங்கே கடுமையாக உழைத்ததனால் அவருடைய உடல்நலம் குன்றியது. எனவே பணியிலிருந்து விடுபட்டு வேலம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் தங்கியிருந்த மூன்று ஆண்டுகளையும் தமிழுக்கே அர்ப்பணித்து எண்ணற்ற தமிழ் நூல்களைத் தாமே முயன்று கற்றார்.

1934-ஆம் ஆண்டு வித்துவான் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றார். 1935-ஆம் ஆண்டு தம்முடைய உறவினர் மகளாகிய இராதா அம்மையாரை மணமுடித்தார். திருமணத்தன்றுகூட ஆடம்பர உடை உடுத்தவில்லை மு.வ.
மாமனார் உடை தைக்கவென்று அவருக்குக் கொடுத்த ஐம்பது உரூபாயில் முப்பது உரூபாய்க்குக் கதராடை வாங்கிக்கொண்டு, மீதமிருந்த இருபது உரூபாயை மாமனாரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

உடுக்கவும் உண்ணவும் வழியின்றி எத்தனையோ ஏழை மக்கள் இம்மண்ணில் வாடி இருக்கையில் பட்டாடை முதலிய பகட்டை நாடுவதை அந்த நற்பண்பாளாரின் மனம் விரும்பாததே அதற்குக் காரணம். மாமனார் வீட்டில் எதைச் சுரண்டலாம், எவ்வளவு வரதட்சணை வாங்கலாம் என்பதிலேயே குறியாயிருக்கும் இன்றைய மணமகன்கள், எளிமைக்கும், மாமனார் செல்வத்தை நயவாத பெருந்தன்மைக்கும் மு.வ.விடம் பாடம் பயிலவேண்டும்.

இல்லறத்தில் நுழைந்ததனால் கல்வியைக் கைவிடவில்லை வரதராசனார். மணமுடித்த கையோடு வித்துவான் இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சிபெற்றுத் திருப்பனந்தாள் காசிமடம் வழங்கிய தமிழ் முதன்மைக்கான 1000 உரூபாய்ப் பரிசைப் பெற்றார். 1934 முதல் 39 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்; அதே ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை விரிவுரையாளராக (tutor) பணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு அவருக்கு “கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளர்” (Lecturer in Oriental Languages) எனும் பொறுப்பு அக்கல்லூரியில் வழங்கப்பட்டது.

1944-இல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” (Origin and development of verbs in Tamil) என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1945-ஆம் ஆண்டு  பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார்.

1948-ஆம் ஆண்டு  ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை (The treatment of Nature in Sangam Literature) என்பதை ஆய்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றார் மு.வரதராசன். இதில் குறிப்பிடத்தக்க செய்தி யாதெனில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதன்முதலில் தமிழ்த்துறையில் முனைவர்ப் பட்டம்பெற்ற பெருமைக்குரியவர் மு. வரதராசனாரே என்பதுதான்.

பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பி.ஓ.எல். வகுப்பு மாணவர்களுக்கு மொழியியல் பாடமாக வைக்கப்பட்டது. ஆனால் அதனைக் கற்பிப்பதற்குரிய நூல்கள்அப்போது தமிழில் இல்லை. எனவே மொழியியல் கற்பிக்க வேண்டியிருந்த அவரே மொழியியல் நூலை எழுதும் கடமையையும் மேற்கொண்டார்.  கற்பிக்கும் பாடத்தை நூலாக்குவதும், நூலாக்கும் பாடத்தைக் கற்பிப்பதும் இரட்டை நன்மைகள் ஆயின. அவ்வகையில் வரதராசனாருடைய ’மொழியியல்’ என்ற நூல் 1947ஆம் ஆண்டிலும், மொழியியற் கட்டுரைகள், மற்றும் மொழி வரலாறு எனும் இரு நூல்களும் 1954ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. இவ்வாறு மொழியியல் கலையை முதலில் நாடெங்கும் பரப்பிய நல்லறிஞர் மு.வ. ஆவார்.

1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய மு.வ., 1971-இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய்ப் பொறுப்பேற்று 1974 வரை அங்கே சிறப்புறப் பணியாற்றினார்.

1972-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி (The college of Wooster) அவருக்கு டி.லிட். என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட்.  பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வரதராசனாரே என்பது நாம் எண்ணி மகிழத்தக்கது.

மு.வ.வின் தமிழுள்ளத்திலிருந்து முதன்முதலில் வெளிப்பட்ட இலக்கிய ஆய்வுநூல், ’தமிழ் நெஞ்சம்’ என்பதாகும். பண்டைத் தமிழ்ப் புலவோரின் வாழ்வினை அவர்கள் பாடிய புறப்பாடல்களின் துணையோடு பல்வேறு கோணங்களில் ஆய்ந்திருக்கும் இந்நூல், சென்னைப் பல்கலைக்கழத்தில் இரண்டுமுறை பாடமாக வைக்கப்பட்டது. இரண்டாம் முறை பாடமாக வைக்கப்பட்டபோது கிட்டிய வருவாய் அனைத்தையும், சென்னை, ஷெனாய் நகரிலுள்ள திரு.வி.க. உயர்நிலைப்பள்ளிக்கு அள்ளிக் கொடுத்தது மு.வ.வின் தமிழ் நெஞ்சம்.

வரதராசனாரின் பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள் பல்வேறு நூல்களாகத் தொடர்ந்து வெளிப்பட்டன. இவற்றுள் ‘அளிநிலை பொறாஅது’ எனத் தொடங்கும் 28 அடி நீளமுள்ள அகநானூற்றுப் பாடலை விளக்க எழுந்ததே 179 பக்கங்கள் கொண்ட ’ஓவச்செய்தி’ என்ற அவருடைய நூல்.

’கொங்குதேர்’ என்று தொடங்கும் குறுந்தொகை இரண்டாம் பாடலை விளக்க எழுந்ததே ’கொங்குதேர் வாழ்க்கை’ எனும் நூல். ஒரே ஒரு பாடலை விளக்க எழுந்த இவ்விரு நூல்களைப் போலவே, ஒரே துறையால் அமைந்தது ’புலவர் கண்ணீர்’ என்ற நூல்; ஒரே திணையை விளக்க வந்தது ‘முல்லைத் திணை’ என்ற நூல். ஒரே பொருளால் அமைந்தது ’மணல் வீடு’ எனும் மற்றொரு நூல். இவ்வாறே நற்றிணை விருந்து, குறுந்தொகை விருந்து, மாதவி, கண்ணகி, இளங்கோவடிகள், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், குறள்காட்டும் காதலர் என்று எண்ணிறந்த இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுதிக் குவித்திருக்கின்றார் வரதராசனார்.

இவையத்தனையையும் விஞ்சி இன்றும் மு.வ.வுக்குத் தனித்ததோர் அடையாளமாய்த் திகழ்வது திருக்குறளுக்கு அவர் வரைந்த தெளிவுரையே ஆகும். விற்பனையில் மிகப் பெரிய சாதனைபடைத்த இந்நூல், பல போட்டிகளுக்கும் கையடக்கப் பரிசாக இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.

மனித வாழ்வில் மடல்கள் எனப்படும் கடிதங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொலைபேசிகளும் திறன்பேசிகளும் இல்லாத அக்காலத்தில், ஒருவரோடு ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக் கடிதங்களே தூதுவர்களாய்ச் செயற்பட்டன. ஆனால் பெரும்பாலோர் கடிதங்களை வெறும் குடும்பச் செய்திகளின் கொள்கலமாக ஆக்கிவிடுவதே வழக்கம். அவ்வாறின்றி அவற்றை உலகச் செய்திகளையும் உயர் விழுமியங்களையும் தாங்கியவையாக மாற்றிய பெருமைக்குரியோர் மிகச்சிலரே.

பண்டித நேரு தம் மகளார் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலக வரலாற்றைச் சுமந்திருக்கும் கருத்துப் பேழைகள் ஆயின; மறைமலையடிகள் எழுதிய கோகிலாம்பாள் கடிதங்கள் சிறந்த இலக்கியமாயின. அவைபோலவே பேராசிரியர் மு.வ. அவர்கள் அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்ற தலைப்புகளில் எழுதிய கடிதங்கள், அறவிழுமியங்களை அறிவுறுத்தும் அறிவுப் புதையல்களாகவும், சிறந்த வாழ்க்கை வழிகாட்டிகளாகவும் விளங்குகின்றன.

நாவல், நாடகம், சிறுகதை போன்ற துறைகளிலும் முத்திரை பதித்தவர் மு.வ. அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் பதின்மூன்று. அவற்றில், காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்தது ’செந்தாமரை’; தாய்மையின் மகத்துவத்தைப் புலப்படுத்தியது ’பெற்ற மனம்’; பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை எடுத்துக்காட்டியது ’கள்ளோ காவியமோ?’; கலைமனத்தின் உணர்வுகளைப் படம்பிடித்தது ’கரித்துண்டு’; உணர்ச்சிக்கும் அறிவுக்குமிடையே கிடந்து அல்லலுறும் இளைஞர்களின் அவலப்போக்கை வெளிச்சமிட்டது ’அகல்விளக்கு’; அரசு அலுவலங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டியது ‘கயமை’. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒரு முள் போன்றவை குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரித்தன.

இவற்றில் கள்ளோ காவியமோ எனும் நாவல் புனைகதை உலகில் மு.வ.வுக்கு நல்ல புகழை ஈட்டித் தந்தது. அகல்விளக்கு நாவல் 1962-இல் சாகித்ய அகாதமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினை வென்றது. மு.வ.வின் நாவல்களைப் படிக்கவிரும்புவோர் முதலில் படிக்க வேண்டியது அகல்விளக்கு என்பார்கள்.

இவையல்லாமல் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், விடுதலையா, மொழிநூல் ஆகிய மூன்று நூல்களும் தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் பரிசைப் பெற்றன. பெற்ற மனம் என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும் 1960-இல் வெளிவந்தது.

வரதராசனாரின் நாவல்கள், நாவலுக்கான இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை; அவை கருத்துரை நாவல்களாக உள்ளன என்ற விமரிசனமும் சிலரால் வைக்கப்படுவதுண்டு.

”நாவலை நான் வெறும் பொழுதுபோக்குக்காகப் படைக்கவில்லை; இடையிடையே ஓரிரு நிகழ்வுகளை வாசகர்களைக் கவரும்நோக்கில் நாவலில் வைத்தாலும், வாழ்வியல் முன்னேற்றக் கருத்துக்களையும் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் எடுத்துச்சொல்வதாகவும், அதே சமயத்தில் வெறும் நீதி போதனை நூலாக இல்லாதவகையிலும் நாவலை உருவாக்குவதே என்னுடைய நோக்கம்” என்று அவரே ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பது மேற்கண்ட  விமரிசனத்துக்கான விடையாகவும் அமையக்கூடியது.

படைப்பிலக்கியங்களைப் பொதுவாகக் கலைப்படைப்புகள் என்றும் ஆய்வுப்படைப்புகள் என்றும் இரண்டாகப் பிரிப்பர். கலைப்படைப்புகளில் உணர்ச்சிகள் முக்கியத்துவம் பெறும்; ஆய்வுப் படைப்புகளில் நுண்ணிய அறிவு இன்றியமையா இடம்பெறும். படைப்பாளர்கள் ஆய்வாளர்களாக வெற்றிபெறுவது கடினம்; ஆய்வாளர்கள் படைப்பாளர்களாவதும் அரிது. ஆனால் வரதராசனாரோ கலைப்படைப்பாளராக மட்டுமன்றி ஆய்வுப்படைப்பாளராகவும் திகழ்ந்த சாதனையாளர்.

1967-ஆம் ஆண்டு நடுவண் அரசு மு.வ.வுக்கு பத்மஸ்ரீ பட்டம் நல்கியது. ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய இந்தியை எதிர்த்தோரைக் கொடுமைக்கு ஆளாக்கிய அவ் அரசிடமிருந்து, அவ்வுயரிய பட்டம்பெற மு.வ. விரும்பாததால் பத்மஸ்ரீயை வேண்டாமெனத் துறந்தார். இச்செயல் அவருடைய மொழிப்பற்றுக்குச் சிறந்த சான்றாகும்.

1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மதுரைப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தரான மு.வ.வுக்கு அன்று எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கடுமையான வலியேற்பட்டதால் பட்டமளிப்புவிழா உரையைக்கூட நின்றுபேச இயலாமல் அமர்ந்தவாறே படித்தார். பின்னர் சென்னைக்கு வந்தவர், அங்கே தம் வீட்டில் நடக்கவும் இயலாமல் ஓய்ந்து படுத்துவிட்டார். மருத்துவர்களாகப் பணிபுரிந்த அவருடைய புதல்வர்களும், அவர்பால் பேரன்பு கொண்டிருந்த மாணாக்கர்களும் ஆங்கில மருத்துவடச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடல் நலம் பெறலாம் என்று அவரை வற்புறுத்தியும், இளமை முதலே இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்த மு.வ, அதனை ஏற்க மறுத்துவிட்டார். ஓரிரு நாள்களில் அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே, அனைவரின் வற்புறுத்தலையும் ஏற்று மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே அவருக்குப் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. எனினும் அவர் உடல் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை அக்டோபர் 10, 1974-இல் அவர் நல்லுயிர் அமைதியுற்றது.

அகல்விளக்காய்த் தம் எளிய வாழ்வைத் தொடங்கிய மு.வ., சீரிய உழைப்பாலும், கூரிய அறிவாலும் கலங்கரை விளக்காய் ஒளிர்ந்து, தமிழறிஞர்கள் பலரையும் தமிழுலக்குக்கு உருவாக்கித் தந்த தகைமையாளர். அறவாழ்வையும் நற்பண்பையும் தம் இருகண்களாய்க் கொண்டு, அளப்பரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிச்சென்றிருக்கும் அத்தமிழ்ச் சான்றோரைப் போற்றுவோம்; அவர்தம் படைப்புக்களைக் கற்றுப் பயன்கொள்ளுவோம்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

 1. https://ta.wikipedia.org/wiki/மு._வரதராசன்
 2. பெருந்தகை மு.வ.  – டாக்டர். சி. பாலசுப்பிரமணியன், எம்.ஏ, எம்.லிட், பிஎச் டி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
 3. https://www.hindutamil.in/news/blogs/216584-10-2.html

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

 1. Avatar

  வணக்கம்! உயர்நிலப்பள்ளி, அதனைத் தொடர்ந்து கல்லூரி இளங்கலை என்ற அளவிலேயே அறிஞர் மு.வ. அவர்களின் நாவல்கள உட்பட பல நூல்களை என்னால் கற்க முடிந்தது. பின்னாளில் திரு.நா.பாரத்தசாரதி அவர்கள் எழுதிய பொன்விலங்கு என்னும் நாவலின் நாயகனான சத்தியமூர்த்தியை நான் காணும் போது எனக்கு மு.வ. அவர்களின் கட்டுரைகளே நினைவுக்கு வந்தன. ஒரு தனிமனிதன் அவனால் உருவாகும் சமுதாயம் இவற்றின் ஶ்ரீதொடர்பு பற்றித் தமிழில் மு.வ. அவர்களைப் போலச் சிநதித்தவரோ எழுதியவரோ இருப்பதாகத் தெரியவில்லை. தனிமனிதக் கவலையும் சமுதாய ஆதங்கமும் அவருக்கு நிரம்ப உண்டு, அவர் எப்போதும் சிந்தனைவயப்படடவராகவே வாழ்ந்துவந்தார்.

  கட்டுரையாளர் குறிக்கும் ‘அளிநிலை பொறாஅது’ எனத் தொடங்கும் 28 அடி நீளமுள்ள அகநானூற்றுப் பாடலை விளக்க எழுந்ததே 179 பக்கங்கள் கொண்ட ’ஓவச்செய்தி’ என்ற அவருடைய நூல். ’கொங்குதேர்’ என்று தொடங்கும் குறுந்தொகை இரண்டாம் பாடலை விளக்க எழுந்ததே ’கொங்குதேர் வாழ்க்கை’ எனும் நூல்” என்னும் செய்திகளை நான் பல்கலலக்கழகப் புகுமுகப் படிப்பிலேயே (1963) அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அந்த இரண்டு நூல்களும் ‘நோக்கு’ என்பதனினும் ஆழமுடையது என்பது என் கருத்து.

  எத்தனைத் தமிழ்ப் பேராசிரியர்கள் இந்த நூல்களைப் பார்த்திருப்பார்கள் என என்னால் சொல்ல முடியாது. கருத்துக்களை வெளிப்படுத்துவதில் மறுக்க முடியாத தரவுகளை முன்வைப்பதிலும் யாருடைய மனமும் நோகாத அளவில் பண்பாட்டை க் கடைப்பிடிப்பதிலும் அவருக்கு இணை அவரே!.

  மாணவர்கள், இளைஞர்கள் அவர்கள் எந்தத் துறையைச சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் முதலில் முழுமையாகக் கற்க வேண்டியன சான்றோர்கள், அறிஞர்கள், சாதனையாளர்கள், விடுதலைப்போராட்ட வீரர்கள், அறிவியல் விஞ்ஞானிகள் முதலியோரின் வாழ்க்கை வரலாறுகளாகவே இருத்தல் வேண்டும். அது பெரிய பயனைத் தரும்.

  சுருங்கிய ஆழமான தொடர்களை வடிவமைப்பதில் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களை விட மு.வ. அவர்களே என்னுள் ஆதிக்கம் செலுத்துகிறார்.

  பயனுள்ள கட்டுரை. அனைவரும் குறிப்பாகத் தமிழ் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் படித்துணர வேண்டி;ய வாழ்வியல் உண்மைகள்.! நன்றி!

 2. Avatar

  தங்கள் பாராட்டுக்கும் பயன்மிகு கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

  -மேகலா இராமமூர்த்தி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க