(Peer Reviewed) பரிமேலழகரின் பருந்துப் பார்வை

0

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்

முன்னுரை

திருக்குறளுக்கு உரைகாண்பதில் இருவகை நெறிகள் பின்பற்றப்படுவதாகத் தெரிகிறது. ஒன்று நூல் முழுமையையும் ஓரலகாகக் கொண்டு உரை காண்பது. ஆயிரத்து முந்நூற்றுப் முப்பது குறட்பாக்களையும் தனித்தனிக் குறட்பாக்களாகக் கொண்டு (உதிரிப்பூக்கள்போல) உரை காண்பது மற்றொன்று. மரபுசார்ந்த உரையாசிரியர் எவரும் பிந்தைய நெறியைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. திருக்குறள் தனிப்பாடல்களின் தொகுப்பன்று என்பதால் திருக்குறளை ஓரலகாகக் கொண்டே உரை காணவேண்டும் என்னும் கொள்கையை உடையவர் அழகர். அதாவது ஏதாவது ஒரு குறட்பாவை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு தம் அறிவுக்கும் கருத்திற்கும் கொள்கைக்கும் மொழிப்புலமைக்கும் ஏற்ப உரைசொல்லித் தமக்குத் தாமே மகிழ்ந்து பாராட்டிக் கொள்ளும் உரைக் கொள்கை அழகருக்கு உடன்பாடன்று. ‘திருக்குறள்’ என்னும் தொடரியில் (சங்கிலியில்) 1330 கண்ணிகள் இருக்கின்றன என்பதே அழகர் நோக்கு. இதனை உறுதி செய்வதற்குப் பல சான்றுகளைக் காட்ட இயலும். அளவு கருதியும் படிப்பார் காலம் கருதியும் சுருக்கமாக ஒன்றினைக் காணலாம்.

ஆய்வுத் தலைப்பு

‘பரிமேலழகரின் பருந்துப் பார்வை’ என்னுந் தலைப்பில் இவ்வாய்வு நிகழ்த்தப் பெறுகிறது.

ஆய்வுக்களமும் எல்லையும்

“படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” 1

என்னும் குறட்பாவும் அதற்கான பரிமேலழகர் உரைப்பகுதி மட்டுமே  இவ்வாய்வுக்கான களமும் எல்லையுமாகக் கொள்ளப்படுகிறது.

ஆய்வு நோக்கம்

மூலநூலில் ஒரு குறிப்பிட்ட குறட்பாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்புக்களின் நிரலுக்கான காரணத்தைக் கண்டறிவதில் உரையாசிரியர் ஒருவருக்குள்ள பொறுப்புணர்வைப் பரிமேலழகர் உரைவழி அறிவதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

ஆய்வுப் பயன்

ஆழம், வலிமை கொண்ட அடிப்படைத் தரவுகள் ஏதுமின்றி தமிழிலக்கிய ஆய்வுலகத்தால் பெரிதும் புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கும் அழகரின் உரைத்திறனை இனிவரும் தமிழ்த் தலைமுறையாவது அவருடைய திருக்குறள் உரைவழி உணர்ந்து மகிழ வேண்டும் என்பதையே இக்கட்டுரை தனது பயனாகக் கருதுகிறது.

கட்டுரை அமைப்பு

1. குறட்பாக்கள் தனிப்பாக்களா?
2. திருக்குறள் ஓரலகா?
3. காமத்துப்பாலின் கதி
4. பரிமேலழகரின் பருந்துப் பார்வை

என்னும் குறுந்தலைப்புக்களில் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

1. குறட்பாக்கள் தனிப்பாக்களா?

யாப்பியல் அடிப்படையில் பாக்களில் மிகக் குறுகிய வடிவம் கொண்டது குறள் வெண்பா. ‘திருக்குறள்’ என்பது அடையடுத்த ஆகுபெயராய்த் திருக்குறள் என்னும் நூலுக்குப் பெயராகி நிற்கிறது. நூல் என்ற அளவில் பால், இயல், அதிகாரம் என்னும் பகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் இந்தப் பகுப்பே அதன் உள்ளடக்க உணர்நெறியையும் உரைகாண் நெறியையும் தீர்மானிக்கிறது. அதாவது இந்தப் பகுப்புக்குள் வரும் குறட்பாக்கள் தங்களுடைய பகுப்புக்கான அடிப்படைப் பொருளையே தங்களது மையக்கருத்துக்களாகக் கொண்டிருக்கின்றன  என்பது பெறப்படும். சான்றாக

“உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று” 2

என்பது ‘அவையறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்று. இவ்வதிகாரப் பொருண்மையை அழகர்,

1. அவையறிந்து சொல்லுதல்

2. அவையறியாக்கால் வரும் குற்றம்

3. அவையளவு அறிந்தார் செய்யும் திறம்

4. மிக்கார் அவைக்கண் செய்யும் திறம்

5. அவையிழுக்கால் வரும் குற்றம்

6. ஒத்தார் அவையில் மட்டும் பேசுதல்

7. தாழ்ந்தார் அவைக்கண் எதுவும் பேசாமை

என ஏழு உட்பிரிவுக்குள் கொண்டு வருகிறார். இந்தப் பகுப்பில் மற்றவை ஒரு பக்கம் இருப்பினும் இறுதி நான்கு குறட்பாக்களை இரண்டு பொருண்மைகளை விளக்குவதாக அழகர் கருதுகிறார். ஒன்று ஒத்தார் அவையில் மட்டுமே பேசுதல் வேண்டும். தாழ்ந்தார் அவையில் வாயே திறக்கக்கூடாது. இவற்றுள் 717, 718 ஆகிய இரண்டு குறட்பாக்களையும் ஒத்தார் அவையில் மட்டுமே பேசவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது எனக் கருதி அவற்றுள் மேலே காட்டிய குறட்பாவிற்குப்,

“பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினையுடையவர் அவைக்கண், கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும்” 3

என்று பொழிப்பெழுதிக் காட்டுகிறவர், பத்து குறட்பாக்களையம் எழு கருத்துக்களுக்கானவை எனக் கொள்கிறார். இந்த ஏழு கருத்துக்களும் ஒன்றையொன்று நோக்கியவை. தழுவியவை. ஒரே நிகழ்வின்கண் கடைப்பிடிக்க வேண்டியவை. இத்தகைய பன்முகப் பொருண்மையோடு தொடர்புடைய இக்குறட்பாவைத் தனியாகக் கொண்டு உரைகண்டால் ஏதோ வழியிற் கண்ட ஒருவனோடு உரையாடுவதைப் பற்றி வள்ளுவர் சொல்லுவதாகக் கருதுவதற்கு வாய்ப்புண்டு.  அங்ஙனம்  உரைகண்டால் குறட்பாவின் பொருளாழம் புலப்படாது, முன்னும் பின்னுமான கருத்துக்கள் அதனை அணிசெய்யாது. அதிகாரத்தின் மற்ற குறட்பாக்கள் உணர்த்தும் பொருட்களைப் பிரித்தறிய இயலாது. ‘அவையறிதல்’ என்பது அவை கூடும் கட்டடத்தை அறிவதன்றி, அவையில் அமர்ந்துள்ள சான்றோர்களின் பெருமையையும் நிலையையும் தன்மையையும் அறிந்து நடந்துகொள்ள வேண்டிய முறைமையையும் பற்றியது என்னும் பொருண்மை வெளிப்படுதற்கு வாய்ப்பின்றிப் போய்விடும் என்பது அறிதல் வேண்டும்.

1.1 திருக்குறள் சிக்கலுக்குக் காரணம்

இந்நாள் வரை திருக்குறளில் உரைச் சிக்கல் எழுந்தமைக்கான  காரணங்களுள் தலையாயது அதனை உதிர்ப்பூக்களாகக் கொண்டு உரை சொன்னதுதான். திருக்குறள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நூல் என்பதையும் சங்க இலக்கியம் போலத் தொகுப்பு நூல் அல்ல என்பதையும் புரிந்து கொண்டாலொழிய இந்நிலை தொடரவே செய்யும். சொல்லுக்குள் எழுத்துப் போலத் திருக்குறளில் குறுட்பாக்கள். தனியலகாகக் கொண்டு உரை சொல்லக்கூடாது என்பதன்று. அவ்வாறு சொல்கிறபோது சொல்வார் கருத்தினும் அதிகாரம், இயல், பால் ஆகியவை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பது கருத்து. திருக்குறள் பொருட்பால் கருத்துக்களைத் தனிமனிதனுக்கு வள்ளுவர் சொன்னதாகக் கொண்டு உரைசொல்லப்புகின் தோன்றும் உரைமயக்கம் களையமுடியாத மயக்கமாகிவிடும்.

2. ஓரலகாகக் கொள்வதால் உண்டாகும் பயன்கள்

திருக்குறளை ஒரே அலகாகக் கொண்டு உரை காண்பதால் பல சிறப்புக்களை அறிந்து கொள்ள முடிவதோடு எந்தப் புள்ளியிலும் முரணில்லாத நூலின் ஆற்றொழுக்கு அமைப்பு புலப்படும். கூறியது கூறலுக்கான காரணம் புலப்பட்டு அது அனுவாதமாக அமைந்துவிடும். இயலுக்கு இயலும் பாலுக்குப் பாலும் அதிகாரத்திற்கு அதிகாரமும் குறட்பாவிற்குக் குறட்பாவும் தம்முள் இயைந்து நிற்கும் கட்டுமானச் சிறப்பு புலனாகும். இவற்றுள் சிலவற்றை அழகர் உரையடிப்படையில் நிறுவவும் முடியும்.

1. ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ 4 என்னும் குறட்பாவைப் பின்வரும் அதிகாரத்தோடு ஒப்பு நோக்கிய அழகர் முன்னதிகார இறுதிப்பாவிற்கும் பின்னதிகாரப் பொருண்மைக்கும் இயைபு கூறுவான் “வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிநலம் கூறி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் கூறப்பட்டது” 5 என்று கூறமுடிகிறது.

2. ‘பணிவுடையன் இன்சொலன்’6 என்னும் குறட்பாவுரையில் ‘இம்மைப்பயனையும்’7அல்லவை தேய அறம் பெருகும்”8 என்னும் குறட்பாவுரையில் ‘மறுமைப் பயனையும்’9 கூறுவதற்கு ஓரலகு உரை நெறியே உதவுகிறது.

3. ‘உண்மை அறிவே மிகும்’10 என்பதற்கும் ‘கற்றனைத்தூறும் அறிவு’ 11 என்பதற்குமான முரணை “இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின் மேல் ‘உண்மையறிவே மிகும்’ (குறள்.373) என்றதனோடு மலையாமை அறிக” 12 என்னும் அழகர் விளக்கம் களைகிறது.

4. ‘அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ 13 என முன்னர்க் கூறிப் பின்னர் ‘அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை” 14 என்பது கூறியது கூறல் ஆகாது அநுமதித்தலானது என்பதை ‘அதனால் (மறத்தலால்) கேடு வருதற் கூறுதல் பயன் நோக்கி’ 15 என்னும் உரையால் அறியலாம். காட்டுக்கள் விரிக்கின் பெருகும்.

 3. காமத்துப்பாலின் கட்டமைப்பு

திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வதால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது காமத்துப்பாலே. நேரடியாகத் தமது கருத்துக்களைச் சொல்வதைக் ‘கயமை’ என்னும் அதிகாரத்தோடு நிறைவு செய்து கொள்ளும் திருவள்ளுவர் காமத்துப்பாலின் கட்டமைப்பை அகப்பொருள் மரபிற்கிணங்க நாடகப் பாங்கில் அமைத்துக் கொள்கிறார். அதனுள் அமைந்த இருநூற்று ஐம்பது குறட்பாக்களில் ஒன்றுகூட ஆசிரியர் கூற்றாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டால் திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வதால் உண்டாகும் பொருளிடர் புரியக்கூடும். அகப்பொருள் மாந்தருள் தலைமகன், தலைமகள், தோழி என்னும் மூவர் கூற்றாகவே காமத்துப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே தொட்டதற்கெல்லாம் திருவள்ளுவர் கூறினார் என்னும் முனைப்புடையார் காமத்துப்பாலை அங்ஙனம் அவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள இயலாது.

3.1 கற்பனைக்கும் எட்டாத குழப்பம்

காமத்துப்பால் பதிவுகளைத் திருவள்ளுவர் கூறியதாகக் கொண்டு பொருள் காண முற்படின் உண்டாகும் ஏதம் பலவாம். எள்ளலும் பலவாம். என்னை?,

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு!” 16

என்று திருவள்ளுவரைத் தலைமகனாக்க வேண்டி வரும்.

“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” 17

வள்ளுவர் ஆணா பெண்ணா என்னும் ஐயம் ஏற்படாதா?

“துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று” 18

என்று திருவள்ளுவர் சொன்னால் சுவைக்குமா? தலைமகன் சொல்லக் கேட்டால் இனிக்குமா?

“வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று” 19

என்பது வள்ளுவருக்கும் வாசுகிக்கும் பொருந்தினாலும் சுவைக்காதல்லவா? திருக்குறளை ஓரலகாகக் கொண்டு அதன் உள்ளடக்கத்தை அதிகாரம், இயல் மற்றும் பால் பகுப்புப் பொருண்மைக்கேற்ப உரை கண்டால் இத்தகைய சிக்கல்களோ குழப்பங்களோ வர வாய்ப்பில்லை. திருக்குறளின் பெருமையும் திருவள்ளுவரின் பெருமையும் ஒருசேரக் காக்கப்படும். அகத்திணை உணர்வு பிறர்க்குப் புலப்படுமாறு வெளிப்படுவதில்லை. அதனாலேயே அது அகம் எனப்படும் என்னும் நுண்ணியம் திருவள்ளுவர் அறிந்ததால்தான் முதலிரண்டு பால்களை ஆசிரியர் கூற்றாகவும் காமத்துப்பாலை தலைமக்கள் கூற்றாகவும் வடிவைமைத்தார் என்பதாம்.

“ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து  இன்பமுறுவது ஒரு பொருள் ஆதலின் அதனை அகம் என்றார். எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகம் என்பது ஒரு ஆகுபெயராம்” 20

என்னும் நச்சினார்க்கினியரின் விளக்கத்தை நோக்கினால் தலைமக்களுக்கே மீளக் கொணர முடியாததோர் உணர்வு படைப்பாளனாகிய திருவள்ளுவருக்கு எப்படிக் கொணரவியலும் என்பது புலனாகலாம். எனவேதான் காமத்துப்பாலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் காதலுணர்வு தலைமக்களுக்கு உரியதேயன்றித் திருவள்ளுவருக்கு உரியதன்று. அவ்வுணர்வு வெளிப்பாட்டில் ஏதேனும் ஐயம் தோன்றின் காமத்துப்பால் தலைமக்களை வினவ முடியாது என்பது நுண்ணியம். சங்க இலக்கிய அகப்பாடல்களைப் பாடிய சான்றோர் அனைவரும் தாமே நேரடியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது அகப்பொருள் மாந்தர் கூற்றுவழி வெளிப்படுத்தியிருப்பதும் இது பற்றியே. ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்’ என்னும் விதியை அவர்கள் புரிந்து கொண்ட பாங்கு இத்தகையது. பெயருக்கே உரிமையில்லை என்னும்போது உணர்வுக்கு உரிமை கோர இயலுமா?

4. பரிமேலழகரின் பருந்துப் பார்வை

அடிப்படைக் கட்டமைப்பில் கவனம் செலுத்தும் பெரிய நிறுவனமொன்றின் மேலாண் அலுவலரைப் போலத் திருக்குறளுக்கு உரைகண்டவர் அழகர். ஒருபக்கம் நிரலாகப் படித்துக் கொண்டே வர மறுபக்கம் உரையெழுதிக் கொண்டே போகும் பொழுதுபோக்கு அவர் அறியாதது. பொறுமை, கவனம், நிதானம், பரந்த புலமை, ஆழ்ந்த சிந்தனை, பொறுப்புணர்வு முதலிய உயரிய பண்புகளை அவர் இயல்பாகக் கொண்டிருந்ததால் அவர் உரையில் முரண்பாடு என்பது சிறிதும் கிடையாது என்பதை யாரும் மறுக்கவியலாது. திருக்குறளை ஓரலகாகக் கொண்டு நோக்கி உரையெழுதிய காரணத்தால் அழகரால் குறளும், குறட்பாக்களால் அழகரும் பெருமையுற்ற பாங்கு பின்வரும் ஆய்வுப்பகுதியால் ஓரளவு துலக்கமுறக்கூடும்.

4.1 அங்க நிரலும் அழகர் அறிந்த நிரலும்

இறைமாட்சி என்னும் அதிகாரத்தின் முதற்குறட்பா இப்படி அமைகிறது.

“படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு” 21

குறட்பாவில் சொல்லப்பட்ட ஆறு உறுப்புக்களையும் (ஒன்றிலும் குறைவில்லாமல்) உடையவன் அரசருள் அரிமாவாகத் திகழ்வான்” என்பது குறட்பாவின் உள்ளடக்கம். இந்த உள்ளடக்கத்தை எழுதிவிட்டுப் பேசாமல் அழகர் சென்றிருக்கலாம். குறட்பாவில் உள்ள உறுப்புக்களின் (அங்கங்களின்) நிரலை அவர் நோக்குகிறார். அந்த நிரல் அவர்க்கு உடன்பாடில்லை. ‘அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு’ என்ற நிரலில்தான் (ORDER) அமைந்திருக்க வேண்டும். ‘மாறி அமைந்திருக்கிறதே’ என்று சிந்திக்கிறார். அதனால்,

“அமைச்சு நாடு அரண் பொருள் படை நட்பு என்பதே முறையாயினும் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார்” 22

என்று குறட்பாவின் நிரல் மாறியிருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து பதிவிடுகிறார். செய்யுள் நோக்கிப் பிறழ்தல் என்றால் என்ன? ஒன்றுமில்லை. எதுகைச் சுவை. ‘உடையான் அரசருள் ஏறு’ எனப் பின்னடியில் அமைவதால் ‘உடை’ என்பதற்கேற்பப் ‘படை’ என முதலடியின் முதற்சீரை அடிஎதுகையாக அமைத்தார் என்பது அழகர் கருத்து.  மேலும்,

“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”

என்னும் கட்டுமானமே வெண்பா யாப்பு நெறி காத்து நிற்கிறது என்பதுமாம். செய்யுள் நோக்கி என்பது யாப்பினையும் உள்ளடக்கியதாதலின். இதனால் ‘உடையான்’ என்னும் ஈற்றடி முதற் சொல்லோடு இயையுமாறு இறையுறுப்புக்களில் படைதவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றினை முதலடியின் தொடக்கச் சீராக அமைத்துக் குறள் வெண்பாவின் கட்டுமானத்தைக் காக்க இயலாது என்னும் யாப்புண்மையையும் அழகர் அறிந்திருக்கிறார் எனவும் கருதமுடியும். இனி,

“அமைச்சு நாடு அரண் பொருள் படை நட்பு என்பதே முறை” 23

என்னும் அழகர் கூற்றுக்குச் சான்று எங்கே இருக்கிறது? குறளிலேயே இருக்கிறது. திருக்குறள் உரைக்களத்தில் ஏனைய உரையாசிரியர் அனைவரையும் புறமுதுகிட்டு ஓடச் செய்கின்ற இடங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

1. 64 ஆம் அதிகாரத்திலிருந்து 73 ஆம் அதிகாரம் முடிய பத்து அதிகாரங்கள் அமைச்சு பற்றியும், (அமைச்சு)

2. 74 ஆம் அதிகாரம் நாடு பற்றியும் (நாடு)

3. 75 ஆம் அதிகாரம் அரண் பற்றியும் (அரண்)

4. 76 ஆம் அதிகாரம் பொருள் பற்றியும் (பொருள்)

5. 77, 78 ஆகிய இரண்டு அதிகாரங்களும் படைமாட்சி பற்றியும் (படை)

6. 79 முதல் 95 வரையிலான பதினேழு அதிகாரங்கள் நட்பு பற்றியும் (நட்பு)

திருக்குறளில் ஆராயப்படுகின்றன. இந்த அமைப்பு திருவள்ளுவரால் அமைக்கப்பட்டது. அழகரால் அமைக்கப்பட்டதன்று. இந்த அதிகார நிரலை நோக்கிய பின்பே 381வது குறட்பாவிற்கு உரையெழுதுகிறார். எழுதவே குறட்பாவில் கண்ட வைப்புமுறை நிரலுக்குப் பொருத்தமான அமைதி கூற முடிகிறது. இத்தகைய நிரலமைதியை மற்ற உரைகளில் காண்பது அரிது.

இதனால் முப்பத்தொன்பதாம் அதிகாரத்தின் முதற்குறளின் முதலடியின் தொடை அமைப்பு ‘செய்யுளுக்காகத்தான் செய்யப்பட்டது’ என்னும் தனது கருத்தினை அதற்குப் பின்னாலே அமைந்திருக்கும் இருபத்து நான்கு அதிகாரங்களைத் தாண்டித் தொடர்ந்து அமைந்த முப்பத்திரண்டு அதிகாரங்களையும் உற்று நோக்கிக் கண்டறிந்து உறுதி செய்திருக்கிறார் அழகர் என்பதை அறியலாம்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் முப்பத்தொன்பதாவது அதிகாரத்தின் முதற் குறட்பாவின் தொடையமைப்புக் கட்டுமானத்திற்குத் தான் சொல்லும் காரணத்தை நிலைநாட்டுதற்குரிய தரவுகளை, இருபத்தைந்து அதிகாரங்கள் பின்னாலே சென்று அங்கிருந்து தொடர்ந்து தேடித் தந்திருக்கிறார் அழகர். பருந்து தன் ‘இரைக்காக’ மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும்! அழகர் தன் ‘உரைக்காக’ அப்படிப் பாய்ந்திருக்கிறார் (படித்திருக்கிறார்).

நிறைவுரை

நூற்பொருள் தெளிவு, சொற்பொருள் தெளிவு, இலக்கியச்சுவை, இலக்கண நுட்பம், உரைநடைத் திட்பம், வெளிப்பாட்டு உத்தி, சொற்சுருக்கம் என்னும் பன்முகச் சிறப்பு வாய்ந்த பரிமேலழகரின் திருக்குறள் உரை தமிழியல் உலகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகியிருப்பது தமிழ்ப் புலமையை நிறைவு செய்ய உதவாது என்பதும் (மறுதலையாக) அதனைத் திட்டமிட்டு நிரலாக ஓதுதல் மேற்சொன்ன திறன்களைப் பெற ஏதுவாகும் என்பதும் திருக்குறளை உதிரிப்பூக்களாகக் கொள்வது பல உரைச்சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதும் காமத்துப்பால் பொருண்மை பெருங்குழப்பத்துள் மூழ்கிவிடும் என்பதும் திருக்குறள் பனுவலை ஓரே அலகாகக் கொள்வதால் விளையும் நன்மைகள் பல என்பதும் அத்தகைய நெறியைப் பின்பற்றிய அழகர் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ‘படைகுடி’ என்னும் குறளுக்கு எழுதிக்காட்டிய உரைச்சிறப்பு வியப்புக்குரியது என்பதும் விளக்கப்பட்டுத், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் என்பவற்றின் அடிப்படையில் அமையும் த்மிழ்ப்புலமை, பரிமேலழகர் உரைப்புலமை இன்றிச் செறிவோ சீர்மையோ பெறாது என உறுதியுடன் முன்னெடுத்து இக்கட்டுரை தன்னை நிறைவுசெய்து கொள்கிறது.

சான்றெண் விளக்கம்

1. திருவள்ளுவர்           திருக்குறள்                                                            கு.எண். 381

2. மேலது                                                                                                                          கு.எண். 718

3. பரிமேலழகர்            மேலது உரை

4. திருவள்ளுவர்           திருக்குறள்                                                              கு.எண். 60

5. பரிமேலழகர்             மேலது உரை

6. மேலது                                                                                                                            கு.எண். 95

7. மேலது                                                                                                                             கு.எண். 96

8. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                    கு.எண். 96

9. பரிமேலழகர்        மேலது உரை

10. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                  கு.எண். 373

11. மேலது                                                                                                                             கு.எண். 396

12. பரிமேலழகர்        மேலது உரை

13. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                     கு.எண். 31

14. மேலது                                                                                                                               கு.எண். 32

15. பரிமேலழகர்        மேலது உரை                                                                   கு.எண். 32

16. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                       கு.எண். 1081

17. மேலது                                                                                                                                 கு.எண். 1128

18. மேலது                                                                                                                                  கு.எண். 1306

19. மேலது                                                                                                                                   கு.எண். 1317

20. நச்சினார்க்கினியர்     தொல்.பொருள்.அகம்.உரை                நூ.எண். 1

21. திருவள்ளுவர்        திருக்குறள்                                                                          கு.எண். 381

22. பரிமேலழகர்        மேலது உரை

23. மேலது

துணைநூற் பட்டியல்

1. நச்சினார்க்கினியர்
தொல்காப்பியம் பொருளதிகார உரை
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
மறுபதிப்பு – 1967

2. திருக்குறள் பரிமேலழகர் உரை
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
உமா பதிப்பகம், சென்னை – 600 001.
முதற்பதிப்பு – 2009

3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
தமிழ்ச்சுடர் மணிகள்
குமரி மலர்க் காரியாலயம்
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
முதற்பதிப்பு – 1949

4. புலவர் ச.சீனிவாசன்,
திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001.
முதற்பதிப்பு 2002

5. முனைவர் நா.பாலுசாமி
பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007.
முதற்பதிப்பு – 2005

6. மு.வை.அரவிந்தன்
உரையாசிரியர்கள்
8/7 சிங்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 600 108.
முதற்பதிப்பு – 1968


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

1. பரந்துபட்ட களத்தில் விரிந்த நிலையில் செய்யப்படும் ஆய்வுகளைவிட, குறிப்பிட்ட சிறிய களத்தில் நிகழ்த்தப்படும் நுண்ணாய்வுகள் சிறக்கும். மறைமலையடிகளாரின் ‘முல்லைப்பாட்டாராய்ச்சி’  அறிஞர் வே.வேங்கடராசுலு  செட்டியார் எழுதிய ‘புனையா ஓவியம்’ அறிஞர் மு.வ. அவர்களின் ‘ஓவச்செய்தி’ ‘கொங்கு தேர்வாழ்க்கை’ முதலியன இக்கூற்றை உறுதிசெய்யக் கூடும்.  இக்கட்டுரை அத்தகையது!.

2. ‘பொருளுக்கேற்ற மொழி நடை’ என்பது உரைநடைக்கானது.  ‘பொருளுக்கேற்ற யாப்பு’ என்பது கவிதைக்கானது.  இக்கட்டுரையின் மொழிநடை பொருண்மைக்கேற்ப அமைந்துள்ளது சிறப்பு.

3. குறட்பாக்களை ‘உதிரிப்பூக்களாகக்’ கொள்வதால் ஏற்படும் ‘பொருள்’ இழப்புகளைச் சில சான்றுகளுடன் கட்டுரையாளர் நிறுவியிருப்பது நேர்முகமாகவோ எதிர்முகமாகவோ மேலும் சில தொடராய்வுகளுக்கு வழிவகுக்கக் கூடும். வழிவகுக்க வேண்டும். ஆய்வு ஒரு தொடரோட்டம்’ என்பார் அறிஞர் தமிழண்ணல்.

4. காமத்துப்பாலின் நாடகப் பாங்கு குறித்து ஆய்வாளர் தரும் விளக்கம் நுட்பமானது. மரபு சான்றது. ஏனைய இரண்டு பால்களும் நூலாசிரியரின் கருத்துகளால் நிரம்ப, காமத்துப்பால் அகத்துறை மாந்தர்களின் உணர்வுகளால் நிரம்பி வழிகிறது. இதற்கு ஆசிரியர்  நச்சினார்க்கினியரின் அகத்திணையியல் உரைவிளக்கத்தைத் துணையாக்கிக் கொண்டிருப்பது இவர்தம் ஆய்வுத் திறனுக்குச் சான்று.

5. திருக்குறளை ஓரலகாகக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளை உறுதிப்படுத்த கட்டுரையாளர் அழகர் உரையிலிருந்து காட்டியிருக்கும் சான்றுகள் போற்றத்தகுந்தவை. குறிப்பாக  ‘அனுவாதம்’ பற்றிய பதிவு, கட்டுரையாளரின்  ‘நுண்ணியம் அளக்கும் கோலாக’ அமைந்திருக்கிறது.

6. பின்னால் நிற்கும் அதிகாரப் பொருண்மைகள் அத்தனையையும் நோக்கியபின் ‘செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார்’ என்னும் அழகரின்  ‘ஒரு தொடர் (தொடை) அமைதி’ அவருடைய உரைக்கோட்பாட்டையும் பொறுப்புணர்வையும் ஒருங்கே  சுட்டுகிறது. ‘திருக்குறள் ஓரலகு முறை உரை’ என்னும் கருதுகோளுக்குப் பொருத்தமான குறளுரையைத் தெரிவு செய்திருப்பது ஆய்வாளரின் உழைப்பைக் காட்டுகிறது.

7. எதையெதையோ இலக்கியம் எனக் கருதி மயங்கும் தமிழியல் உலகம் இலக்கியத்தின் எலலாக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அழகர் உரையைக் கற்றறியாமல் போனதால் ஏற்பட்டிருக்கும் புலமை இழப்பு இனியும் தொடர்தலாகாது எனக் கட்டுரையின் பயனாகக் கூறியிருப்பது கவனத்திற்குரியது.

8. ஆய்வுக்கான கருதுகோள், நோக்கம், களம், எல்லை, நெறி முதலியவற்றை ஆய்வேட்டுச் சுருக்கம் (SYNOPSIS) போலல்லாது   மேற்கண்ட அனைத்தும் அடங்க, சுருக்கமாக ஒரே பத்தியில் கூறுவது கட்டுரையின் புறக்கட்டுமானத்தை இன்னும் செறிவாக்கும்.

9. “ஒரு சாதாரண உரையாசிரியர் ‘படைகுடி’ (381) எனத் திருவள்ளுவரே நிரலாகச் சொல்லிவிட்டதால் ‘பின்னாலே உள்ள அதிகார வைப்புமுறையே  தவறு’ என்று இவரே அனைத்து அதிகாரங்களையும் மாற்றியமைத்து ‘இதுதான் வள்ளுவர் கருதியமைத்தது’ எனச் சாதித்திருக்கக்கூடும். என்று ஆய்வாளர் குறிப்பிடாமல் போனது பண்பாடு கருதி  போலும்!

இத்தகைய உள்ளடக்க ஆய்வுகள் மனத்திற்கு அமைதியளிக்கின்றன. எனக்குக் கிட்டிய அமைதியும் மகிழ்ச்சியும்  ஆய்வாளர், பதிப்பாளர், படிப்பாளர் என அனைவருக்கும் கிட்டும் என்பது எனது நம்பிக்கை! ஆய்வாளருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *