சக்தி சக்திதாசன்
லண்டன்

தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பினாலும் சரி, வானோலியைத் திருகினாலும் சரி கொரோனா எனும் வார்த்தையைத் தாண்டிச் செல்வது என்பது இப்போ எண்ணிப்பார்க்கவே முடியாத ஒரு சூழலில் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் வாழும் ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா வைரஸின் கட்டுப்படுத்துதலுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இன்றுவரை தெரியவில்லை. இந்நிலையில் கொரோவைத் தாண்டி என்று எதைப்பற்றிச் சிந்திக்க முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது நியாயமே!

ஆயினும் ஒரு நாளிலோ அன்றி ஒரு வருடத்திலோ நாம் இந்தக் கொரோனா எனும் நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டிய அதாவது இதையும் கடந்து செல்ல வேண்டிய நிலையிலிருக்கிறோம். கொரோனா எனும் இந்த வைரஸ் இன்று எம்மீது தொடுத்திருக்கும் தாக்குதல் எமது உடல்ரீதியிலான தாக்குதலே. ஆனால் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான உலகின் பலநாடுகளிலும் எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் இக்கொரோனா வைரஸினால் அதிக அளவு பாதிப்பு பொருளாதாரப் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகிறது.

பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேசங்களின் உடமையான மக்களின் உயிர்களைக் காவு கொடுக்க முடியாது என்பது அனைத்து நாடுகளைப் பொறுத்தவரையிலும் மறுக்கப்பட முடியாத உண்மையாகிறது. ஆனால் இதனால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பின் தாக்கம் எத்தகைய வகையில் இருக்கப் போகிறது என்பதை நிர்ணயிக்கப் போவது மக்களின் மீது விதிக்கப்பட்ட இக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் எத்தனை காலம் நீடிக்கப் போகிறது என்பதுவே.

இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் நாட்டின் பிரதமரே வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார் என்பதுவே உண்மை. வைத்தியசாலையில் இருந்து இல்லத்துக்குத் திரும்பி இருவார ஓய்வுக்குப் பின்னால் மீண்டும் பிரதமராக 27.04.2020 இலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். அவரது வரவை கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் வரவேற்றிருப்பது ஐனநாயகத்தின் முடிக்கு அழகு சேர்க்கும் மற்றொரு மணியாகிறது.

மீண்டும் தமது உத்தியோக வாசஸ்தலமாகிய 10, டவிணிங் சாலைக்குத் திரும்பியதும் 27ம் திகதி காலை 9 மணிக்கு தனது வாசஸ்தலத்திற்கு முன்னால் நாட்டு மக்களுக்கு திரு. பொரிஸ் ஜான்சன் அவர்கள் உரையாற்றினார். அவ்வுரையில் தான் ஒரு சிக்கலான கட்டத்திலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும், நாடு எதிர்நோக்கியிருக்கும் இந்த முன்னொருபோதுமில்லாத ஒரு சிக்கல் நிறைந்த கட்டத்தில் உயிர்களைக் காப்பாற்றப் போராடும் வைத்தியத்துறை ஊழியர்களுக்கும், கெடுபிடியான விதிமுறைகளை அனுசரித்து நடக்கும் நாட்டு மக்களுக்கும் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். கொரோனா வைரஸின் பிடியினால் தாக்கமுறும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில், இதுவரை நோய் பீடிக்கப்பட்டு வைத்தியசாலை தீவிர சிகீச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை இதுவரை அடைந்த முன்னேற்றத்தைப் பின்னடைவு செய்யக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்களுல் இரண்டாம் உ;லகப்போரின் பின்னால் எதிர்கொள்ளும் மிகச் சிக்கலான ஒரு நிலவரத்தை இன்றைய எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்கள் எதிர்கொள்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த அரசியல் அவதானிகளின் கருத்துக்களின் படி மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரச் சூழல் என்பனவற்றின் இடையில் ஒரு கயிற்றில் நடப்பதைப் போல் மிக அவதனமாகச் செயற்படவேண்டிய நிலையில் பிரதமர் பொரிஸ் ஜான்சன் இருக்கிறார்.

வைத்தியசாலையில் இத்தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை. தினசரி குறைந்து கொண்டு வருகிறது, தினசரி கொரோனா தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது, சுமார் 20,000 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலைமாறி சுமார் 15,000 பேராக இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவையெல்லாம் கொஞ்சம் நம்பிக்கை எனும் வெளிச்சத்தைத் தருகிறது எனினும் கட்டுப்பாடு தளர்த்தப்படக்கூடிய வகையில் இன்னும் நிலையத் தோற்றுவிக்கவில்லை.

ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஜந்து நிபந்தனைகள் விதித்திருக்கிறார்கள். இந்த ஜந்து நிபந்தனைகளும் எட்டும் பட்சத்தில் மட்டுமே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றிச் சிந்திப்பதற்கு முனைவோம் என்பதே அவர்களது நிலைப்பாடு. இந்த ஜந்து நிபந்தனைகள் பின்வருமாறு,

1. தேசிய சுகாதார சேவை நிலைமையச் சாமாளிக்கும் நிலையில் உள்ளது

2. தினசரி இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்து கொண்டு வரவேண்டும்

3. தரமான தரவுகளின்படி வைரஸ் தொற்றுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் சமாளிக்கக் கூடிய எண்ணிக்கைக்கு குறைவாகும் நிலை வர வேண்டும்.

4. முன்னனி சேவையாளர்களுக்கான பாதுகாப்பு அணிகள் போதுமான அளவில் கையிருப்பில் கொண்டு தொடர் விநியோகத்திற்கான பொறிமுறைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.

5. எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் இத்தொற்று நோய் பீடிக்கப்படும் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்காது எனும் ஒரு நிலை வரவேண்டும்.

மே மாதம் 7ம் திகதி அரசு இந்த ஜந்து நிபந்தனைகளையும் கருத்தில் கொண்டு அப்போதைய நிலையில் எந்தவிதமான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று ஆராய்ந்து, மே 10ம் திகதி பிரதமர் இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவித்துள்ளார்கள்.

சரி இதுவரை அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்தோம். இனிச் சற்று பொருளாதாரச் சிக்கல்களை பார்ப்போம். கொரோனவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகளின் ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகளைச் சரி செய்வதற்காக இதுவரை காணாத வகையில் பல பொருளாதஅர நிதுயுதவிகளை அரசு பலதரப்பட்ட மக்களுக்கும் அறிவித்துச் செயற்படுத்தி வருகிறது.

விமானநிலையங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள் போலக் காட்சியளிக்கின்றன. அரசைப் பொறுத்தளவில் இக்கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட்டதும் மீண்டும் வியாபாரங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் இயங்க ஆரம்பிக்க வேண்டும் எனும் கருத்தோடு பணியாளர்களை வேலையிலிருந்து நீக்காமலிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஊதியப்பணத்தின் 80 வீதத்தை தாம் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆனால் இவை சமூக விலத்தியிருத்தல் விதிகளைக் கடைப்பிடித்து இயங்க முடியாத ஸ்தாபனங்களுக்கு மட்டுமே.

ஆனால் இப்போதிருக்கும் நிலையையிலிருந்து திரும்பும் போது தாம் வங்குரோத்து நிலையை அடைந்து விடுவோம் எனும் வகையிலான சரிவைக்காணும் நிறுவனங்கள் வேறுவழியின்றிப் பலரை வேலையிலிருந்து நீக்குகிறார்கள், பணியிழந்தவர்கள் தமது வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தின் உதவித்தொகையையே நம்பியுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமான உதவிகளை அரசாங்கம் வழங்கினாலும் இதற்கான நிதிநிலைமைகள் மக்களின் வரிப்பணத்திலேதான் பெறப்படப் போகின்றன.

உலகமயமாக்கல் எனும் அமைப்பின் கீழ் ஐக்கிய இராச்சியம் தனது உற்பத்தி வன்மையை வெகுவாகக் குறைத்துக் கொண்டது. முதாலாளித்துவ கொள்கையின் வழி தமது இலாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக உற்பத்தி ஆலைகளை குறைந்தளவு ஊதியத்துடன் பணிக்கமர்த்தக்கூடிய ஊழியர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் நிறுவிக் கொண்டார்கள். இன்று கொரோனா எனும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கிருமியினால் அதற்கான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகள் இந்தக் கொரோனாவினால் கண்டு கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு 1920களில் உலகம் கண்ட மிகப்பெரிய பொருளாதாரச் சரிவினை விட அதிக அளவிலான சரிவினைக் காணவேண்டி வரும் எனும் அச்சம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டம் ஐக்கிய இராச்சியத்தினை ஆட்டம் காண வைக்கக்கூடும் எனும் வகையிலான கருத்துக்கள் ஆங்காங்கே நிலவுகின்றன.

இது ஒரு யதார்த்தமான உண்மை. இந்நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு மக்களின் மனதில் ஒருவகையிலான வைராக்கியம் தேவைப்படுகிறது. அத்தகைய மனநிலையை உருவாக்கும் வகையில் செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஒருசில பணியாளர்களுடன் இயங்கும் சிறிய வியாபார, வர்த்தக அமைப்புக்கள் பல இந்த இழப்பினை ஈடு செய்து மீண்டு வருவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். வியாபார நிறுவனங்களுக்கு உடனடித் தேவைகளுக்காக இடைத்தர நிறுவனங்களுக்கு 50000 பவுண்ட்ஸ் வரையும், பெரிய நிறுவனங்களுக்கு 250000 பவுண்ட்ஸ் வரையிலுமான நிதி உதவியைக் கடனாக கொடுத்துதவ வங்கிகளை அரசாங்கம் பணித்துள்ளது. அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் அவற்றிற்கு அரசாங்கமே பொறுப்பு எனும் உத்தரவாதத்தையும் அரசாங்கம் வங்கிகளுக்கு கொடுத்துள்ளது.

லண்டன் நகர மேயரின் அதிகாரத்தின் கீழியங்கும் லண்டன் பஸ், நிலக்கீழ் ரயில்சேவை என்பனவற்றின் சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையாலும், நாட்டில் நிலவும், கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய மக்கள் தேவையற்ற பிரயாணங்களை மேற்கொள்ளக் கூடாதென்பதாலும் இச்சேவைகள் பாரிய நஸ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

ஐக்கிய இராச்சியத்தின் அடையாளமான பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் என்றழைக்கப்படும் விமானசேவை இக்கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய தாம் தமது நிறுவனத்தின் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியிருப்பதனால் ஏறக்குறைய 12000 பணியாளர்களை உலக அளவில் தாம் வேலைநீக்கம் செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளது. அதேபோல மிகவும் பிரபலமான மற்றொரு விமான சேவையான ரயன் எயர் எனும் விமான சேவை தாம் 3000 பேரை வேலைநீக்கம் செய்ய வேண்டி வரும் என எச்சரித்துள்ளது.இவ்வேலை நீக்கங்கள் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது முக்கிய விமான நிலையமான கட்விக் (Gatwick) எனும் விமான நிலையத்தில் இவ்விரு விமானசேவைகளின் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு விடும் எனும் ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. இதன் விளைவாக கட்விக் விமானநிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது.

இது மட்டுமல்ல ஒரு விமானநிலையத்தின் நடவடிக்கைகள் அதைச்சுற்றி இருக்கும் பல வர்த்தக நிறுவனங்களின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இந்நடவடிக்கைகளின் மட்டுப்படுத்தல் என்பது அவ்விமான நிலையத்தை மட்டுமல்லாமல் அதன் இயக்கத்தில் தங்கியிருக்கும் வர்த்தக நிறுவனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நான் மேலே குறிப்பிட்டது ஒரிரு முன்னனி நிறுவனங்களின் பாதிப்பையே இதே போன்று பல வித்தியாசமான வர்த்தக நிறுவனங்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதுவே உண்மை. இப்பாதிப்புகளின் முதல்பலி அங்கு பணிபுரியும் பணியாளர்களே! விளைவாக நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும் அதைனைச் சமாளிக்க அரசு எடுக்க வேண்டிய நெருக்கடியான பொருளாதார முடிவுகளும் ஐக்கிய இராச்சியத்தை ஒரு உலுக்கு உலுக்கத்தான் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் கொரோனாவாவினால் முடுக்கி விடப்பட்டுள்ள பொருளாதார முடக்கம் ஐக்கிய இராச்சியத்தை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையுமே ஆட்டிப்படைக்கப் போகிறது. இன்றைய உலகப் பொருளாதாரம் “உலகமயமாக்கப்படுதல் அன்றி குளோபலைசேஷன்” எனப்படும் கோட்பாட்டினால் கட்டியாளாப்படும் நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரச் சிக்கல் மற்றொரு நாட்டினை தாக்குவது என்பது யதார்த்தமான உண்மை. குறிப்பாக கிடைக்கின்ற செய்திகளின் படி அமேரிக்க நாட்டின் வேலையற்றோர் தொகை 30 மில்லியனாக உயர்ந்துள்ளது எனத் தெரிகின்றது. ஏற்கனவே உள்மயமாக்கப்படுதல் எனும் கொள்கையை முன்னிறுத்திய அதிபர் ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள்ஐந்தச் சூழலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதும் மிகவும் கிலேசத்தையே வரவழைக்கிறது.

ஐக்கிய இராச்சிய பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் கொரோனாவின் பாதிப்பால் சுமார் 14% சுருக்கமடையும். இது சமூக, சமுதாய நடவடிக்கைகளில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியே. சுமார் ஆறு வாரங்களுக்கு மேலான தடைக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து 10.05.2020 ஐக்கிய இராச்சிய பிரதமர் பொரிஸ் ஜான்சன் கொரோனாவைத் தாண்டி எப்படி மக்களும், சமூகமும் வெளிவரப் போகிறது என்பதற்கான ஒரு பாதையை விளக்குவார் என எதிர்பார்க்கப் படுகிற௹௹௹து. கட்டுப்பாட்டு விதிகளைச் சிறிதளவு தளர்த்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது. சில, சில பிரதேச வாரியான வர்த்தக நிறுவனங்கள் அங்கு சமூக விலத்தலைக் கடைப்பிடிக்கும் வகையில் தமது வியாபாரங்களை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை கொரோனா பதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று அதாவது 09.05.2020 வரை சுமார் 32000 பேர். ஆனால் தொடர் நிகழ்வாக புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தினசரி இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவது இத்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆயினும் சமூகக் கட்டுப்பாட்டு விதிகளை முற்றாகத் தளர்த்தினால் மற்றொரு முறை கொரோனா தொற்று அதிகரிக்கலாம் எனும் விஞ்ஞானிகளின் கருத்துக்களை ஐக்கிய இராச்சிய அரசு கவனத்தில் கொண்டு அவதானமாகவே செயற்படப் போகிறது என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகூடிய மரண எண்ணிக்கையை. கொண்ட நாடாக ஐக்கிய இராச்சியம் முடிசூட்டிக் கொண்டது மிகவும் துன்பியல் நிறைந்த செய்தியே.

ஒவ்வொரு மரணத்தின் பின்னும் ஒரு மாபெரும் சோகம் பிணைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கொரோனா வைரஸ் எனும் இந்தக் கிருமியின் தொற்றினை இங்கிலாந்து அரசு எவ்வகையில் கையாண்டிருக்கிறது என்றும் இக்கையாளுதல் மரணமடைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதா? என்றும் கேள்விகள் ஆங்காங்கே எழுகின்றன. அரசோ தம்மீது எந்தத் தவறுமில்லை என்று வரையறுப்பதற்காக தாம் அரச விஞ்ஞானிகளின் ஆலோசனையின் படியே செயற்பட்டதாகக் கூறிவருக்கிறார்கள். தற்போதைய சூழலில் எந்த ஒரு அரசியல்வாதியும் இந்தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயலவில்லை என்பது ஐனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம். ஆயினும் இந்நடவடிக்கைகள் என்றுமே ஆராயப்படாமல் இருக்குமா? என்பது சந்தேகமே !

கொரோனாவின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் தேர்தல் வந்தது தெரியாமல் நிறைவேறி முடிந்து விட்டது. ஆமாம் கடந்த பொதுத் தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சியின் சர்ச்சைக்குரிய தலைவரான ஜெர்மி கோர்பன் பதவி விலகி அனைத்துத் தரப்பினராலும் ஒரு நடுநிலைவாதி எனக் கணிக்கப்படும் சேர் கியர் ஸ்டாமார் (Sir Keir Starmer) தெரிவு செய்யப்பட்டது மிகவும் சலனமில்லாமலே நடந்தேறிவிட்டது. பொதுவாகவே ஒரு கட்சிக்குத் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் ஊடகங்களினால் சல்லடை போடப்படும் வழமை இம்முறை கொரோனாவினால் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. புதிய லேபர் கட்சித் தலைவரும் கட்சியை ஒரு புது மிதவாதமான போக்கினூடு நடத்திச் செல்லப் போகிறார் போன்றே அவரது ஆரம்ப நடவடிக்கைகள் தோற்றுவிக்கின்றன.

இக்கொரொனாவின் வரவினால் உலகிற்கு கிடைத்துள்ள ஒரேயொரு அனுகூலம் சுற்றுச்சூழலின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டமையே. லண்டனில் சுற்றுச்சூழல் பாதிப்பு 50% குறைவடைந்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தமது பணிகளுக்கு திரும்பச் செல்கையில் சைக்கிள், மற்றும் நடப்பது என்பதை கடைப்பிடிக்கக்கூடிய வரையில் கடைப்பிடிக்கும்படி வேண்டப்படுகிறார்கள். இதற்காக சாலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு 2.5 பில்லியன் பவுண்ட்ஸ்களை ஒதுக்குவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இம்மாற்றங்கள் கொரோனாவைத் தாண்டியும் நிலைத்திருக்குமா?

வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை பல நிறுவனக்களினால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதும், வியாபார சந்திப்புகள் காணொளிகள் மூலம் நடத்தப்படுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலைமையின் அனுகூலத்தை நிரந்தரமாகுவது பற்றிய அரசின் கணிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவைத் தாண்டி . . . . . .

பல கேள்விகளுக்கான விடைகள் தங்கியிருக்கின்றன

  • பொருளாதாரப் பாதிப்பின் விளைவுகள் எத்தகையது?
  • ப்ரெக்ஸிட்டினால் பிளவு பட்ட நாடு இன்று கொரோனாவினால் கண்ட ஒருங்கிணைப்பு கொரோனாவைத் தாண்டியும் நிலைக்குமா?
  • சுற்றுச்சூழல் பாதிப்பினைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் நாட்டின் போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை மக்கள் நிரந்தரமாக உள்வாங்கி காலநிலைச் சீர்கேட்டைத் தடுக்க முனைவார்களா?
  • மக்களின் சமுதாய, சமூகத்தை நோக்கிய பார்வையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன?
  • மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காய் உழைப்போரின் மீதான மக்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம் கொரோனாவைத் தாண்டியும் நிலைக்குமா?
  • உலகம் எனும் பரந்த நோக்கம் மாறி எம் நாடு, எம் மக்கள் எனும் தனிமைப்படுத்துவோரின் செல்வாக்கு ஓங்குமா?
  • வெளிநாடுகளுக்கான மக்கள் பயணங்கௐள் சகஜமான நிலைக்குத் திரும்ப வருடங்களாகுமா?

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னால் உலகம் கண்டிருக்கும் ஒரு மாபெரும் சோதனையான காலம் இது என்பதே அனைத்து மக்களின் அனுமானமும் ஆகும்.

கொரோனாவைத் தாண்டிய வாழ்க்கையின் மாற்றங்களுக்கு இனிவரும் காலமே பதிலிறுக்க வேண்டும். ஏனெனில் இன்று நாம் எதிர்கொள்வது முன்னொரு பொழுதும் கண்டிராத ஒரு நிகழ்வு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *