(Peer Reviewed) வைரமுத்து படைப்புகளில் உவமக் கோட்பாடுகள் (‘கருவாச்சி காவியம்’ – தொன்ம உவமங்கள்)

0

திருமதி. ஏ. சுஜிதா M.A., M.PHIL.,
முனைவர்ப்  பட்ட ஆய்வாளர் (ப.நே.)
உருமு தனலெட்சுமி கல்லூரி,
காட்டூர் – திருச்சிராப்பள்ளி – 19

முன்னுரை

கவிதை, நாவல் என்னும் இருவகை இலக்கியத் தளத்திலும் தன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டவர்களில் வைரமுத்துவும் ஒருவர். தான் பிறந்து வளர்ந்த சுற்றுப்புற மக்களின் வாழ்வியலை நாவல்களாக்கியமை அவருடைய தனிச்சிறப்பு. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘மூன்றாம் உலகப்போர்’ என்னும் மூன்று நாவல்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களைக் கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன. கதைமாந்தர்களும் அவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்தம் கருத்து வெளிப்பாட்டுக்கான மொழி முதலிய அனைத்தும் மண்மணம் வீசுமாறு படைக்கப்பட்டுள்ளன. கல்வியறிவு அற்ற அப்பாத்திரங்களின் சொல்லாடல்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இயற்கையாகவும் வாழ்வியல் பட்டறிவினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. முறையான தமிழ்க்கல்வி பெற்ற நாவலாசிரியர் வைரமுத்து தாமறிந்த பல தொன்மக் கூறுகளை மேற்கண்ட நாவல்களில் உவமங்களாகப் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது. ‘கருவாச்சி காவியம்’ என்னும் பெண்ணியக் காவியத்துள் பயன்படுத்தப்பட்டுள்ள தொன்மக்கூறுகளாகிய உவமங்கள் கருத்து விளக்கத்திற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை ஆராய்ந்து அப்பயன்பாட்டின் அடிப்படையில் சில கோட்பாடுகளை வரையறுப்பதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

கட்டுரை பற்றி

‘வைரமுத்து படைப்புகளில் உவமக் கோட்பாடுகள்’ என்னுந் தலைப்பில் அமையும் இக்கட்டுரை ‘கருவாச்சி காவியம்’ என்னும் நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள தொன்மம் சார்ந்த உவமங்களையே தனது ஆய்வுக் களமாகவும் ஆய்வெல்லையாகவும் கொள்கிறது. கவிதைகளை  உவமங்களால் சுவைத்து மகிழ்வதைப் போல நாவல்களில் பயன்படுத்தப்படும் உவமங்களையும் சுவைத்து மகிழ வேண்டும் என்பதைப் பொது நோக்கமாகவும் கருவாச்சி காவியத்துத் தொன்ம உவமங்களின் பயன்பாட்டு மேன்மையினைச் சிறப்பு நோக்கமாகவும் கொண்டு, பகுப்புமுறை திறனாய்வு நெறியின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது.

1.1. நாவலில் உவமம் – ஒரு பார்வை

‘கல்லுளி மங்கன் போனவழி காடு மலையெலாம் தவிடு பொடி’ என்பது போல அந்தச் சுழிக்காற்று”1 என்று உவமத்தால் தனது பொன்னியின் செல்வன் நாவலைத் தொடங்கியிருப்பார் கல்கி. அறிஞர் மு.வ. உள்ளிட்ட நாவல் படைப்பாளர் அனைவரும் தமது நாவல்களில் உவமங்களைப் பல நோக்கங்களுக்காகப் பொருத்தமான இடங்களில் கையாண்டுள்ளனர். வைரமுத்து தமது கவிதைகளைப் போலவே நாவல்களிலும் எண்ணற்ற உவமங்களைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். கதைச்சூழலைப் புரியவைக்கவும் கதை மாந்தர்களின் பண்புநலன்களை வெளிப்படுத்தவும் படைப்பாளராகிய வைரமுத்து தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தவும் எனப் பல நோக்கங்களில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவாச்சி காவியத்து உவமங்களைப் படித்தறிந்து சுவைத்து மகிழ வேண்டும் என்னும் நோக்கத்திற்கு உதவியாக அவளைப் பற்றிய சுருக்கம் அடுத்த பத்தியில் பதிவு செய்யப்படுகிறது.

1.2. காவியமான கருவாச்சி

தனியொருத்தியைக் காப்பிய நாயகியாகக் கொண்டு படைப்பிலக்கியம் செய்வது தமிழுக்குப் புதியதன்று. ஆனால் பெண்ணியம், பெண்விடுதலை ஆகியவற்றின் முழுப்பரிமாணத்தையும் நடப்பியல் சிக்கலோடு மானுடத்தின் மகுடமாகச் சித்திரிப்பதில் தனியிடம் வகிப்பது கருவாச்சி காவியமாகும். இது ஒரு நாவல் பற்றிய தர மதிப்பீடன்று. பெண்ணியம், பெண்விடுதலை ஆகிய தொடர்கள் பற்றிய திரிபுணர்ச்சியால் இன்றைக்கும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயம் எப்படிச் சீரழிந்து கொண்டு வருகிறது என்பதைக் கண்ணுறுவார்க்குக் கருவாச்சிப் பாத்திரத்தின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள இயலும். கட்டையனைப் போன்ற கணவனின் துன்புறுத்தலுக்கிடையே நடத்தப்படும் நகர்ப்புற நாகரிக வாழ்வு மணமுறிவுக்குத் தயாராகிவிடும்.  அத்தகு மணமுறிவின் இருபக்கப் பின்விளைவை யாரும் சிந்திப்பதில்லை. ஆனால் மானுடம் என்பது பல்வகைப் பலவீனங்களின் தொகுப்பு என்பதைப் புரிந்து கொண்டு நடத்தப்படும் குடும்ப வாழ்வை ‘இல்’ அறமாக மாற்றிக் காட்டியவள் கருவாச்சி. தன் அண்ணன் மாறுகண்ணுத் தேவர் மகள் சொர்ணக்கிளியின் கொடுமையான மரணத்திற்குப் பெரியமூக்கியின் உறவுக்காரன் செயில்ராசு காரணமானான். அதற்கும் பெரியமூக்கி மகள் கருவாச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும் பழிவாங்கும் நோக்கத்துடன் தனது மகன் கட்டையனுக்குக் கருவாச்சியைக் கட்டிச் சீரழித்தார் சடையத்தேவர். சீரழிந்த தன் வாழ்வையும் தன்னோடு ஒட்டிய தன் மகன் அழகுசிங்கத்தையும் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்தும் கருவாச்சி இறுதியாகத் தான் அனுபவித்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான கட்டையனுக்கும் கஞ்சி ஊற்றுகிறாள். இந்தக் கதைப் பயணத் தொடக்கத்தில் அப்பாவியாகத் தோன்றும் கருவாச்சி. நாவலின் இறுதியில் ஞானிக்கும் ஞானியாகிறாள். இதுதான் கருவாச்சி காவியமான கதை. இனி இந்தக் கதையில் வைரமுத்து கையாண்டிருக்கும் உவமங்கள் சிலவற்றின் சிறப்புக்களைக் காணலாம்.

1.2.1. கற்பூர வழிபாடும் கருவாட்டுக் குழம்புச் சட்டியும்

கற்பூரம் கொளுத்தி இறைவழிபாடு செய்வது தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. சிவவழிபாட்டு நெறியிலும் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியிலும் இவ்வழக்கம் உண்டு. சிறு தெய்வ வணக்கங்களிலும் மக்களின் அன்றாட இல்லற வழிபாட்டு நிகழ்வுகளிலும் இது இயல்பு. இந்தப் பழக்கத்தைச் “சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி” என வைரமுத்து பதிவு செய்திருக்கிறார். கொதிக்கிற குழம்பை இறக்கி வைப்பதற்கு முன்னே குழம்பைக் கருவாச்சி அளாவும் செயலுக்கு இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

“சுட வச்ச நல்லெண்ணெயக் கருவாட்டுச் சட்டிக்குள்ள இறக்கி, சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி ஒரு அளவு அளாவி மினுமினுன்னு எண்ணெ மெதக்க எறக்கி வப்பா பாருங்க” 2

என்னுந் தொடர்களால் கற்பூரத் தட்டை இறைமுன் வலக்கை கொண்டு மூன்றுமுறை ஆராதிப்பதுபோலக், கொதிக்கின்ற கருவாட்டுக் குழம்புச் சட்டியை அடுப்பிலிருந்து இறக்காமலேயே கருவாச்சி அளவினாள் என்பது விளக்கப்படுகிறது.

1.2.2. சாமியாடிக்கு வந்த அருளும் சாமியின் அருள்வாக்கும்

கோயிலில் சாமியாடிக்கு அருள் வரும். சாமியருள் வந்து ஆடுபவர்கள் அருள் வாக்குச் சொல்வர். இந்த இருவருக்குமே மெய்தடுமாறும் அளவில் ஆவேசம் வரும். அந்த ஆவேசத்தை உவமமாக்கியிருக்கிறார் வைரமுத்து. கருவாச்சியைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்த சடையத்தேவரின் ஆவேசத்தையும் கருவாச்சிமீது ஏறி சொர்ணக்கிளி அருள்வாக்கு சொல்லியபோது அவள் கொண்ட ஆவேசத்தையும் விளக்குதற்கு இந்த இரண்டு உவமங்களையும் பயன்படுத்துகிறார்.

“சாமியாடிக்கு அருள் வந்த மாதிரி” சடையத்தேவர் கொதித்தாராம்” 3

“சாமி அருள் வாக்கு சொல்ற மாதிரி கருவாச்சி சொன்னாளாம்” 4

முன்னது நூலாசிரியர் சொல்வது. பின்னது சாமியாடிய கருவாச்சியைக் கண்டோர் கூற்று. மேலெழுந்தவாரியாக ஒன்றுபோலத் தோன்றினாலும் சாமியாடி அருள் வருவதும் சாமிவந்தவன் அருள்வாக்குச் சொல்வதும் வேறுவேறு வினைகள். இவை வெகுநுட்பமாகக் கவனித்துக்  கையாளப்பட்டுள்ளன.

1.2.3. இராமரும் அணிலும்

சேதுபந்தண உதவிக்கு இராமர் அணிலைத் தன் விரல்களால் தடவிக் கொடுக்க, தடவிக்கொடுத்த அந்த மூன்று விரல் அடையாளமே அணில் முதுகின் மூன்றுகோடு என்பது தொன்ம சார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைரமுத்து பெரியமூக்கி தன் மகள் கருவாச்சியின் உடல் நோவு தீரச் செய்கின்ற பணிவிடையில் பதிவு செய்து காட்டுகிறார்.

“அணில் முதுகில் இராமர் மூன்று கோடு போட்ட மாதிரி” 5

கருவாச்சியின் அடிகளை வருடிவிடுகிறாள் பெரியமூக்கி. ‘போட்ட மூன்று கோடு மாதிரி’ எனச் சொல்லாமல் ‘கோடு போட்ட மாதிரி’ எனச் சொல்வதால் பெரிய மூக்கியின் விரல் வருடலாகிய வினைக்கு இது உவமமாகிறது. இராமன் அணிலைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு வருடிவிடுகிற காட்சியையும் பெரியமூக்கி தன் மகள் கருவாச்சியை அருகில் வைத்து வருடிவிடுகின்ற காட்சியையும் மனத்திரையில் கொண்டுவந்தால் உவமத்தின் நுட்பம் புரியக் கூடும். இராமனாகிய பரம்பொருள் அனைத்துயிர்களுக்கும் அருள்பாலிக்கும் நிலைக்கும் தாய்மைக்கும் அதிக வேறுபாடு இல்லை. எனவேதான் ‘அம்மையே! அப்பா!’ என இறைவன் விளிக்கப்படுகிறார். ‘தாயுமானவர்’ எனவும் அழைக்கப்படுகிறார். இந்தப் பின்புலத்தில் உவமப் பயன்பாட்டின் முழுப்பரிமாணத்தையும் புரிந்து கொள்வதோடு பெரியமூக்கி தன் மகள் கருவாச்சியின் மேல் வைத்திருந்த தாய்ப்பாசத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதே உவமத்தை மற்றொரு இடத்திலும் வைரமுத்து பயன்படுத்திக் கொள்கிறார். இங்கே பெரியமூக்கி தன் மகள் கருவாச்சிக்குப் பாதப்பணி செய்வது போலப் பின்னாலே கருவாச்சி தன் மகன் அழகுசிங்கத்திற்கு நெற்றிப் பணி செய்கிறாள். அந்த இடத்தில்தான் இந்த உவமத்தை அதே தாய்மை உணர்வின் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்.

“ராமர் அணிலுக்குக் கோடு போட்டார்ன்னு சொல்ற மாதிரி” 6

மகன் அழகுசிங்கத்திற்குப் பத்துப்போட்டாளாம் கருவாச்சி. “அடுப்புல வறட்டோட்ட வச்சு அளவாக் கேப்ப மாவ வச்சா. வேணுங்கிற தண்ணிவிட்டுக் கெட்டிபடாம கிண்டுனா. களிப்பதத்துக்கு அது கூடி வாரப்ப ஒரு சிட்டிகை குங்குமத்தப் போட்டுக் கொழகொழன்னு எறக்குனா. ராமர் அணிலுக்குக் கோடு போட்டாடர்ன்னு சொல்ற மாதிரி அதை எடுத்து பிள்ள உச்சந் தலையிலே மூணுவெரலு இறக்கிவிட்டா” 7 இந்த இடத்திலும் இந்த உவமத்தைத் தன்னுடைய பதிவாகவே வைரமுத்து செய்திருக்கிறார். முதல் உவமத்தில் ‘மூன்று விரல்களின் செயல்’ உவமமாக, இங்கே இந்த இரண்டாவது பதிவில் அழகுசிங்கத்தின் நெற்றியில் விழுந்த மூன்று கோடுகளுக்கு அணிலின் மூன்று கோடுகள் உவமமாக்கப்பட்டுள்ளன. முதற்பதிவில் மூன்றுகோடு என இருக்க இரண்டாவது பதிவில் ‘கோடு’ என்று மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. அழகுசிங்கத்தின் நெற்றியில் போட்ட கோடுகள் பொருள். அணிற்கோடுகள் உவமம். எனவே முன்னது வருடலுக்கும் பின்னது அழகுசிங்கத்து நெற்றியில் இடப்பட்ட பத்துக்கும் உவமங்களாய் அமைந்தன.

1.2.4. சீதையைத் தேடி அனுமார் போற மாதிரி

கம்பராமாயணத்தில் இன்றியமையாத் திருப்பங்களில் ஒன்று அனுமனின் இலங்கைப் பயணம். அவன் இராமனின் அரசியல் தூதுவனாக இலங்கை செல்லவில்லை. இராமனுக்குத் துணைவனாகச் செல்கிறான். இராமன் சேர்த்துக் கொண்ட தம்பிகளில் அனுமன் இலன் என்பதைப் புரிந்து கொண்டால் இராமனுக்கும் அனுமனுக்கும் நிலவிய நட்பினைப் புரிந்து கொள்ள முடியும். நீலன் உள்ளிட்ட எவரும் கடல்கடக்கும் துணிவில்லாத போது அத்துணிவைப் பெற்ற அனுமனைக் கேட்டுக் கொள்ள,

“ஓசனை ஒன்று நூறும் உள்அடி உள்ளது ஆக
ஈசன்மண் அளந்தது ஏய்ப்ப இருங்கடல் இனிது தாவி
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல்” 8

என்னும் வைராக்கியத்தோடு சீதையைத் தேடிய அனுமன் புறப்படுகிறான். இந்த நிகழ்வைத்தான் வைரமுத்து கருவாச்சி அம்புலிப்புதூர் சென்ற தன் மகன் அழகுசிங்கத்தைத் தேடிச் சென்றாள் என உவமமாக்கி,

“சீதையைத் தேடி அனுமார் போற மாதிரி” 9

என்று பதிவு செய்திருக்கிறார். வினை, பயன், மெய், உரு என்னும் வகைபாடுகளின் அடிப்படையில் உவமத்தை நோக்கினால் இது வினையுவமம். ஆனால் அங்கே சீதை. இங்கே அழகுசிங்கம். அங்கே இராணவன் சிறையில் சிக்கியிருக்கும் சீதை. இங்கே விலைமாதர் வீட்டுக்குள் சிக்கியிருக்கும் பெற்ற மகன். அங்கே மற்றவன் மனைவியைத் தேடி நண்பன். இங்கே பெற்ற மகனைத் தேடி தாய். அது கடல் பயணம். இது காட்டுப்பயணம். இவற்றையெல்லாம் சிந்தையிலிருத்தி உவமத்தை நோக்கினால் நம்பிக்கை, வினைமுடிக்கும் திறன், தன்னல மறுப்பு, விளைவஞ்சா வினைத்திட்பம் என அத்தனையையும் உவமத்தால் பெற முடியும். இரண்டு வினைகளும் நேர்முக விளைவுகளையே தந்திருக்கின்றன என்று கொள்வதும் பொருந்தும்.

1.2.5. அசையாமல் சயனிக்கும் அரங்கன்

பொறுப்பற்ற மகனாக வளர்கிறான் அழகுசிங்கம். கரகாட்டம் பார்க்க அவனுக்குக் காசு தேவைப்படுகிறது. கொண்ணவாயனிடம் கேட்டுப் பார்க்கிறான். கிட்டவில்லை. ஆத்தா கருவாச்சியிடம் கேட்டால் கேவலம். களவாடத் திட்டமிடுகிறான். எங்கே திருடுவது? கருவாச்சியின் முந்தானை முடிச்சில் எப்போதும் காசிருக்கும். ஆனால் அவளோ மூணுதலைமுறை கண்ட கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கிறாள். முந்தானையைச் சுற்றித் தலைமாடாக மாற்றி அவள் படுத்திருக்கிறாள். எப்போதும் இருபக்கமும் அசைந்து படுப்பவள் அன்றைக்கு ஒருபக்கமாகவே ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அவள் படுத்திருந்த அந்தக் காட்சியைத்தான் வைரமுத்து,

“சீரங்கத்துல ரெங்கநாதர் ஒருக்களிச்சுப் படுத்த மாதிரி” 10

என உவமமாக்கியிருக்கிறார். உவமம் தெய்வமாக இருந்தாலும் அசதியில் நகராமல் உறங்கும் கருவாச்சிக்குத் திருவரங்கத்து அரங்கனின் பள்ளி கொண்ட நிலையை உவமமாக்கியது பொருத்தமான உவமங்களைப் பொருத்தமான இடத்தில் பொருத்திக் காட்டும் அவருடைய இலக்கியத் தொழில் நுட்பம் வெளிப்படுவதாகக் கருதலாம். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுதல் வேண்டும்’ என்பது இலக்கணமாதலின் கருவாச்சிக்கு அரங்கனை உவமமாக்கினார் என்றலும் பொருந்தும்.

1.2.6. இலக்குவன் பர்ணசாலையும் கொண்ணவாயன் குடிசையும்

வைரமுத்து முறையாகத் தமிழ் கற்றவர். கம்பராமாயணம் படித்திருக்கலாம். சித்திரகூடப் படலத்தில் இராமனுக்கும் சீதைக்கும் தங்குவதற்காக இலக்குவன் பர்ணசாலை உருவாக்கிய பக்குவத்தை ‘நேர்முக’ வருணனை போலக் கம்பன் பாடியிருக்கிறான்.

“நெடுங்கழை  குறுந்துணி நிறுவி, மேல் நிரைத்து
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி ஊழுற
இடுஙகல்இல் கைவிசித்து  ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே

தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின்
பூக்கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்றுறப்
போக்கி மண எறிந்து அவை புனலின் தீற்றியே

வேறிடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும்
கூறின நெறிமுறை குயிற்றி, குங்குமச்
சேறு கொண்டு அழகுறத் திருத்தி திண் சுவர்
ஆறிடு மணியொடு தரளம் அப்பியே

மயிலுடைப் பீலியின் விதானம் மேல்வகுத்து
அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து
எயில் இளம் களைகளால் இயற்றி ஆறு இடு
செயலுடைப் புதுமலர் பொற்பச் சிந்தியே” 11

கவிதையாக்கத்தின் அத்தனை தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய கம்பன் பாடல்களுக்கு உரையெழுதியது போல் வைரமுத்து கண்ட கொண்ணவாயன் கருவாச்சிக்குக் குடிசை அமைக்கிறான்.

“கருவாச்சிக்குண்டான சாணிக்குழியில் குடிசை போடுறதுன்னு முடிவாகிப் போச்சு……..மம்பட்டி எடுத்தான் கொண்ணவாயன். செடி செத்தையெல்லாம் செதுக்கி எறிஞ்சுட்டான்………பதினாறு மொழ நீளத்துல பத்தடி அகலத்துல அரைச்சாண் பள்ளத்துக்கு அஸ்திவாரமும் தோண்டிபுட்டான்………கொழச்ச மண்ணுருண்டைய பவளமும் கனகமும் கொடுக்க……காவக்காரச் சக்கணன் கோளாறு சொல்ல….. அஸ்திவாரத்து மேல மண்ணுவைக்க மதில் ஏறுது சரசரன்னு……..”

மறுநாளே தரைக்கு மண்ணடிச்சான். செம்மண்ணு மூணுவண்டி. கெணத்துமண்ணு பத்துவண்டி……… உருமா பெருமாத் தேவருக்கிட்ட பூவரசங்கால் ரெண்டு வாங்கி முன்னுக்க ஒண்ணும் பின்னுக்க ஒண்ணுமா நட்டு மூங்கிக் கம்புக ரெண்டு மாட்டினான்……”

கத்தாழைய அறுத்தான். நார் நாரா உரிச்சான். காயவச்சான் வெயில்ல. ஊறவச்சான் தண்ணியிலே…. பலம் வந்துருச்சு கத்தாழங்கயித்துக்கு…..மூணு பூவரசங்கம்பு வச்சு வேப்பங் குச்சிகள ஊடு குச்சிகளா நெருக்கியடிச்சுப் படபடன்னு உக்காந்து படல் பண்ணிப்புட்டான்.

அவன் நெஞ்சுல பரவுன சந்தோசம் கூன் வரைக்கும் புகுந்து குறுகுறுக்குது….. பத்தடி பின்னுக்கு வந்து அழகுபாத்தான் கொண்ணவாயன்” 12

கொண்ணவாயன் குடிசையைப் பார்த்து நிற்கிற பாங்கினைச் சுட்டுகிற வைரமுத்து,

“பஞ்சவடியில ராமனுக்கும் சீதைக்கும் கட்டிக் குடுத்த குடிசையை இலட்சுமணன் நின்னு அழகு பாத்தானோ இல்லையோ கருவாச்சிக்குக் கட்டிக் குடுத்த குடிசையைக் கொண்ணவாயன் கண்ணால கண்டு குளுந்து போனான் குளுந்து” 13

என இராமயணத் தொன்ம நிகழ்ச்சியை உவமமாக்கியிருப்பதைக் காணலாம். ‘அண்ணன் தங்கவேண்டும்’ என்னும் இலக்குவன் விருப்பத்தை மட்டுமே கம்பர் பாடியிருக்கிறார். இலக்குவன் தான் கட்டிய பர்ணசாலையைப் பார்த்தான் எனப் பாடவில்லை. ஆனால் கருவாச்சியின் கொண்ணவாயன் கருவாச்சிக்காகத் தான்கட்டிய அந்தக் குடிசையைப் பார்த்து மகிழ்கிறான். அந்த மகிழ்ச்சியையும் வைரமுத்து பதிவு செய்திருக்கிறார்.

1.2.7. பிட்டுக்குப் பட்ட பிரம்படி

கற்றலினும் பட்டறிவே ஒருவனை ஞானியாக்கும் என்பது வைரமுத்து கொள்கையாக இருக்கக்கூடும். அந்த நிலைப்பாட்டில் அவர் படைத்திருக்கும் ‘கருவாச்சி’ என்னும் பாத்திரத்தை உற்றுநோக்குவார்க்கு இந்தச் சிந்தனை வராமல் போகாது. காவியத்தின் பிற்பகுதியில் கருவாச்சியைச் சந்திப்பதற்கு வரும் ஞானியாகிய சாமியாரின் வினாக்களுக்குக் கருவாச்சி சொல்லும் விடைகள் ஒவ்வொன்றும் பட்டறிவின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. இதற்கு மூலமாகப் பட்டினத்தடிகளைக் கொள்ளுவதில் தவறில்லை. மனிதனுடைய பலம் எது பலவீனம் எது என்னும் சாமியாரின் வினாவிற்கு விடையளிக்கிறாள். அவள் தரும் விடை,

“பேச்சுத்தான் சாமி. மனுசன் பண்ண நல்லதும் அதான். கெட்டதும் அதான். இன்னைக்கி வரைக்கும் நாயும் நரியும் சிங்கமும் புலியும் காட்டுக்குள்ள அடிச்சுக்கிட்டு அலையுதுக. ஏன்னா அதுகளுக்குள்ள பேச்சு வார்த்த இல்ல. மனுசன் பிச்சுப் புடுங்கலத் தீக்கத்தான் பேச்சு வார்த்தை கண்டுபிடிச்சசான். பெறகு பேச்சு வார்த்தையே பிச்சுப் புடுங்கலாகிப்  போச்சு. ஒரு சொல்லுல இருக்கு சாமி மனுசப்பொறப்பு மண்ணாகிறதும் பொன்னாகிறதும்” 14

கருவாச்சியின் இந்தப் பரிபக்குவமான விடையைச் சற்றும் எதிர்பார்க்காத சாமியார் அதிர்ந்து போனார். அவர் அந்தக்கரணங்கள் அனைத்தும் நிலைகுத்தி நின்றன. கருவாச்சியின் சொல் அவர் உடலிலும் மனத்திலும் ஏற்பட்ட அதிர்வலைகளையே,

“சிவபெருமான் வாங்குன பிரம்படி சீவராசி முதுகையெல்லாம் பதம்பாத்துச்சுண்ணு சொல்ற மாதிரி” 15

என்று உவமத்தால் விளக்கிக் காட்டுகிறார்.

“வானவர், மனிதர், நரகர், புள், விலங்கு, மாசுணம், சிதல், எறும்பு ஆதி
ஆனபல் சரமும் மலை, மரம், கொடி, புல் ஆதியா அசரமும் பட்ட
ஊனடை கருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிரில் ஓவியமும்
தானடி பட்ட சராசர சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு” 16

என்னும் திருவிளையாடற்புராணப் பகுதியைப் படித்துணர்ந்தார்க்கு உவமம் கொண்டு வைரமுத்து ஓவியமாக்கும் சாமியாரின் அதிர்வுகளைப் புரிந்து கொள்ள இயலும்.

1.2.8. மார்க்கண்டேயன் விடாத சிவலிங்கம்

ஆத்தா பெரியமூக்கியும் மகள் கருவாச்சியும் கூலிக்கு வேலைசெய்யக் கரட்டுக் காட்டுக்குப் போவார்கள். வேலைக்கு நடுவே கையில் கிடைத்த சுள்ளிகளைப் பொறுக்கிக் கட்டாகக் கட்டித் தலை சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டு திரும்புவார்கள். அப்படியொருநாள் திரும்பும்போது மழைபிடித்துக் கொள்ள, காட்டோடை வெள்ளத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆத்தா கரையேறிவிட்டாள். ஆனால் கருவாச்சி கரையேறவில்லை. தலையில் வைத்திருந்த விறகுகட்டைத் தூக்கி எறியவும் மனம் வரவில்லை.

“மார்க்கண்டேயன் பிடிச்ச சிவலிங்கம் மாதிரி” 17

அந்த விறகுக்கட்டை அவள் தலையில் வைத்துப் பிடித்திருந்தாளாம். மார்க்கண்டேயனுடைய பதினாறு வயது வரையறுக்கப்பட்ட ஆயுள் இவன் செய்த தவத்தாலும் வழிபாட்டாலும் சிவனால் நீட்டிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது என்பது தொன்மம். ஆனால் கருவாச்சியின் நிலை அத்தகையதன்று. வெள்ளத்தில் சிக்கியவள் வீட்டில் அடுப்பெரிக்கும் வறுமை நிலையை முன்வைத்து விறகுக்கட்டைக் கைவிட மறுக்கிறாள். வெள்ளத்தில் சிக்கிச் சாவோமா? தப்பிப்  பிழைப்போமா? என்னும் நடுக்கத்தல் கருவாச்சி. வரம் கொடுத்து சிவன் கைவிட மாட்டான் என்னும் நம்பிக்கை மார்க்கண்டேயனுக்கு. இந்த உவமம் பற்றுதலின் உறுதிப்பாட்டிற்குரியது. எனினும் இருவேறு மனநிலைகளைக் கற்பார் உணர்வதற்கு வழிவகுக்கிறது.

1.2.9. சந்திரமதி புலம்பல்

வினை, பயன், மெய், உரு என்னுமாறு அமைந்த உவமங்களைச் சுவைப்பதற்கும் வரலாற்று நிகழ்ச்சிகள், தொன்ம நிகழ்வுகள் ஆகிய உவமங்களைச் சுவைப்பதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. பால்போல் இனிய சொல் என்றால் யாரும் புரிந்து கொள்ள முடியும். ‘கடன்பட்டான் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்றால் இலங்கை வேந்தனுடைய மனத்துன்பத்தை ஏதோ ஒருவகையில் அறிந்து கொள்ளாமல் கடன்பட்டான் நெஞ்சம்போல என்னும் உவமத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  சந்திரமதியைப் போல் திம்சு புலம்பினாள் என்றால் சந்திரமதி புலம்பலை அறிந்து கொள்ள வேண்டும். அந்தப் புலம்பலை வல்லூர் தேவராச முதலியார் நெஞ்சம் நெக்குருக எழுதிக் காட்டுகிறார்.

“நிறையோசை பெற்ற பறையோசை அற்று நிரையாய் நிறைந்த கழுகின்
சிறையோசை அற்ற செடியூடு இறக்க விதி யார் இழைத்த செயலோ?
மறையோன் இரக்க வளநாடு அனைத்தும் வழுவாது அளித்த வடிவேல்
இறையோன் அளித்த மகனே! உனக்கு இதுவோ விதித்த விதியே” 18

இந்தப் புலம்பலைத்தான் திம்சிடம் கண்டிருக்கிறார் வைரமுத்து. செய்திருக்கிற மாற்றம் என்னவென்றால் சந்திரமதி லோகிதாசனின் தாய். அவளுக்கும் அவள் கணவன் அரிச்சிந்திரனுக்கும் மகன் லோகிதாசனுக்கும் நேரும் துன்பங்கள்  தெய்வம் சார்ந்த நிகழ்வுகள். தான் சுமந்து பெற்ற மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டான் என்பதைக் கேட்டுத் துடிதுடித்த சந்திரமதியின் புலம்பலை ஒரு நாடகக்காரியின் நடிப்புக்கு உவமமாக்குகிறாள் வைரமுத்து. கட்டையன் குடும்பத்தை வேரறுக்க திட்டமிட்டு முதலில் மாமனாரை வழிக்குக் கொண்டு வந்து தொடர்ந்து கட்டையனை வழிக்குக் கொண்டுவந்தாள். அழகு சிங்கத்துக்காகக் காத்திருந்தவளுக்குக் கட்டையன் வீட்டுக்கு ஆடு திருடச் சென்ற சூழல் பெரிதும் உதவியது. கூரையிலிருந்து கீழே விழுந்த அழகுசிங்கத்தைத் தன் மடியில் போட்டுக் கொண்டு,

“லோகிதாசனை மடியில் போட்டு சந்திரமதி மயான காண்டத்துல அழுகிற மாதிரி” 19

அழுதாளாம் திம்சு. போலிக்கண்ணீரை நீலிக்கண்ணீர் என்பர். அது வெள்ளையம்மா என்கிற திம்சுக்குப் பொருந்தும். நாவலைப் படிக்கிறவர்கள் திம்சின் இயல்புக்கும் அவள் புலம்பலுக்கும் தொடர்பே இல்லையென்பதை அறிந்து சந்திரமதியின் புலம்பல் பற்றி அறிந்து கொள்ள முனையக்கூடும்.  உவமம் பாசம் என்பதையும் பொருள் வேஷம் என்பதையும் புரிந்து கொள்வதால் பாத்திரப்படைப்பு இன்னும் தெளிவு பெறக்கூடும்.

1.2.10 வைரமுத்தின் உவமங்களில் அங்கதமும் அழகியலும்

மேற்கண்ட பத்திகளில் விரிவாக ஆராயப்பட்ட தொன்மங்களின் தொடர்ச்சியாக அழகியல் மற்றும் அங்கதச் சுவைகளை வெளிப்படுத்தும் உவமங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளமை அறியத்தக்கது.

  • அம்புலிப்புதூர் பாலியல் தொழில் செய்வார் வீட்டில் மனையில் உட்கார்ந்திருந்த அழகுசிங்கத்தை “ஒத்தப் பிள்ளையார் மாதிரி”20 எனச் சித்திரித்துக் காட்டியிருப்பதும்,
  • குடும்பம் இணைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் குழந்தையாகிய அழகுசிங்கத்தைக் கருவாச்சிக்குத் தெரியாமல் தூக்கிவந்து கட்டையன் தந்தையான சடையத் தேவருக்குக் காட்ட பகை பாராட்டிய சடையத்தேவர் அந்த நேரத்தில் குழந்தைக்குக் காட்டிய பாரா முகத்திற்கு “விசுவாமித்திரர் வச்சுருந்தாரு பாருங்க ஒரு மூஞ்சி”21 என உவமம் காட்டியிருப்பதும் அங்கதச் சுவைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
  • கருவாச்சியின் உடல் உறுப்புக்களின் வனப்புக்கு “மதுரை மீனாட்சிக்கு இருக்குற மாதிரி சின்ன வாயி செப்பு உதடு”22 என்னும் உவம வண்ணனையும்,
  • மழைக்கு முன்னால் அடிக்கும் காற்றொலியை “ஆகாயத்திலிருந்து ஆதிசேசன் எறங்கி வார மாதிரி” 23 என உவமத்தால் விளக்கியிருப்பதையும் அழகியலுக்கான  தொன்ம உவமங்ளாகக் கருதலாம்.

1.3. வைரமுத்தின் உவமக் கோட்பாடுகள்

வைரமுத்தின் உவமக் கோட்பாடுகள் என்னும் பொதுத் தலைப்புக்கு உட்பட்டு அவருடைய நாவல்களில் ஒன்றான கருவாச்சி காவியத்துள் பயன்படுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட தொன்மம் சார்ந்த உவமத் தரவுகளை மட்டும் ஆராய்ந்த வகையில் பெறப்படும் மெய்ம்மைகள் பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன.

  • பொருள் விளக்கம், அழகியல், அங்கதம் என்னும் உவமத்தின் பன்முகப் பயன்பாட்டிற்கு ஏனைய உவமங்களைப் போலவே தொன்மப் பதிவுகளையும் வைரமுத்து பயன்படுத்திக் கொள்கிறார்.
  • வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகை வரையறை, சிறப்பு, நலன், காதல், வலிமை என்னும் நிலைக்களம் என்பவற்றின் வளர்ச்சி நிலையாகவே அவர் உவமங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
  • பொருள் விளக்கம் என்ற நிலையோடு அமையாது, உவமத்தின் முழுப்பொருள் விளக்க ஆற்றலையும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.
  • தொல்காப்பியம் தொடங்கி இன்றைய புதுக்கவிதைக் காலம் வரை தொன்மம் சார்ந்த பதிவுகள் உவமங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
  • சைவம், வைணவம் ஆகிய சமயம் சார்ந்த இதிகாசப் பதிவுகளைக் காப்பியப் பாத்திரங்களின் உரையாடல்களில் பயன்படுத்திக் கொள்ளும் வைரமுத்து ஆசிரியர் என்ற நிலையில் அவரும் பயன்படுத்திக் கொள்கிறார்.
  • கருவாச்சி காவியம் வட்டாரம் சார்ந்த பதிவாதலின் தொன்மத்தில் மக்களால் பெரிதும் அறியப்பட்ட பதிவுகளையே உவமங்களாகக் கொள்கிறார்.
  • வைரமுத்தின் பதிவுகளில் பொதுவாக அங்கதமும் ஆதங்கமும் பிணைந்தே அமைந்திருக்கும். கருவாச்சி காவியத்தில் உள்ள தொன்மம் சார்ந்த பதிவுகளிலும் அது எதிரொலிப்பதைக் காணலாம்.
  • தொன்மம் சார்ந்த உவமங்களை எதிர்மறைக் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வது சந்திரமதி – திம்சு இவர்களின் புலம்பலில் வெளிப்படுவதைக் காணலாம்.

 நிறைவுரை

பொதுவான இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் வைரமுத்தின் படைப்புக்களை ஆராய்வதற்கு எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. அவருடைய படைப்புக்களிலிருந்தே அவற்றை அளந்தறியும் அளவுகோல்களாகிய திறனாய்வுக் கோட்பாடுகளை வடித்தெடுப்பது சரியாக இருக்கலாம். இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்தும். இத்தகைய நெறிகொண்டு அவருடைய அனைத்துப் படைப்புக்களின் உவமங்களை வகைமாதிரிகளாகத் தொகுத்தாராய்வது ஆய்வுலகத்தில் ஒரு புதிய தடமாகக் கருதப்படலாம். ஒரு குறிப்பிட்ட நாவலில் பகுத்து ஒதுக்கப்பட்ட தொன்மம் சார்ந்த உவமங்களைப் பற்றிய இந்த ஆய்வு அத்தகைய பெருநோக்கம் நிறைவேறுதற்கு உதவுமாயின் அதனையே தனது பயனாகக் கருதுகிறது.

சான்றெண் விளக்கம்

கல்கி                                   பொன்னியின் செல்வன் , 3ஆம் அத்தியாயம், கொலைவாள்,                                                                                    கோடியக்கரையில்

வைரமுத்து                  கருவாச்சி காவியம்                                              ப 271

மேலது                                                      ,,      ,,                                                                  ப 28

மேலது                                                      ,,      ,,                                                                  ப 48

மேலது                                                      ,,      ,,                                                                  ப 101

மேலது                                                      ,,      ,,                                                                  க 141

மேலது                                                      ,,      ,,                                                                  க 141

கம்பர்                                கம்பராமாயணம். சி.கூ.படலம்                 பா.எண். 4732

வைரமுத்து                  கருவாச்சி காவியம்                                                ப 250

மேலது                                                       ,,      ,,                                                                         27

கம்பர்                                கம்பராமாயணம் சி.கூ.படலம்                    பா.எண. 2089-2092

வைரமுத்து                  கருவாச்சி காவியம்                                                 ப 295

மேலது                                                      ,,      ,,                                                                     ப 296

மேலது                                                      ,,      ,,                                                                      ப 322

மேலது                                                      ,,      ,,                                                                       ப 322

பரஞ்சோதி முனிவர் திரு.வி. புராணம் ம.சு.படலம்                     பா.எண்.55

வைரமுத்து                  கருவாச்சி காவியம்                                                   ப 103

வல்லூர் தேவராசர்   அரிச்சந்திர புராணம்                                          ப 998

வைரமுத்து                  கருவாச்சி காவியம்                                                    ப 239

மேலது                                                       ,,      ,,                                                                       ப 260

மேலது                                                      ,,      ,,                                                                        ப 144

மேலது                                                     ,,      ,,                                                                         ப 19

மேலது                                                     ,,      ,,                                                                         ப 131

துணைநூற்பட்டியல்

1. வைரமுத்து கருவாச்சி காவியம்
சூர்யா வெளியீடு
22, நான்காம் குறுக்குத் தெரு
டிரஸ்ட்புரம், சென்னை – 600 028
முதற்பதிப்பு – 2006

2. தொல்காப்பியர் தொல்காப்பியம்
தென்னிந்திய சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்
154 டிடிகே சாலை
சென்னை – 600 018
மறுபதிப்பு – மார்ச் 1967

3. வல்லூர் தேவராச முதலியார் அரிச்சந்திரபுராணம்
(இணைய தளம்)


ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

‘வைரமுத்தின் உவமக் கோட்பாடுகள்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

1. கவிஞர் நாவலாசிரியர் என்னும் இருமுகச் சிறப்பு வாய்ந்த வைரமுத்தின் நாவல்களின் உவமங்களைப் பற்றிய பெருங்களத்து  ஆய்வில் குறிப்பிட்ட ஒரு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள தொன்ம  உவமங்களை மட்டும்; கட்டுரைப் பொருளாக்கியிருப்பது ஆய்வுநெறி பற்றிய தெளிவான  புரிதலைக்  காடடுகிறது.

2. கட்டுரையாளர் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் எனத் தெரிய  வருவதால், தொடக்கவுரை, கட்டுரையமைப்பு, பத்திப் பிரிப்பு, உத்தி, தரவுகள் தொகுப்பு, வரையறை முதலியவை நெறியாளர் –  ஆய்வாளர் இருவருக்கும் பெருமை சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.

3. கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தொடக்க உவமத்துடன்  செய்திருக்கும் கட்டுரைத் தொடக்கம், கட்டுரைப் பொருளின் கருவறை வாயிலுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது.

4. ஏறத்தாழ 450 உவமங்கள் பயின்று வரும் ஒரு நாவலில் பத்துக்கும் குறைவான தொன்மம் சார்ந்த உவமங்களைப் பொருள் விளக்கத்தோடு சுட்டியிருப்பது பாராடடுக்குரியது.

5. மகனை மடியில் வைத்துச் சந்திரமதியின் உண்மைப் புலம்பலைக் கட்டையன்’ குடும்பத்தை முழுமையும் மடக்கி இறுதியாக அழகுசிங்கத்தையும் மயக்க முயலும் ‘வெள்ளையம்மா’ என்னும் திம்சின்  போலிப் புலம்பலோடு எதிர்மறையாக்கி வைரமுத்து உவமித்திருப்பதை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

6. இலக்குவன் சித்திரகூடத்தில் குடில் அமைந்த பாங்கினையும் கொண்ணவாயன் கருவாச்சிக்குக் குடிசை அமைத்த பாங்கினையும் மூலப் பதிவுகளோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது ஆய்வில் தரவுகளுக்கான உழைப்பின்  அருமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

7. “வைரமுத்தின் பதிவுகளில் பொதுவாக அங்கதமும் ஆதங்கமும் பிணைந்தே அமைந்திருக்கும்.’ என்பதே ஒரு  கருதுகோளாக அமைகிறது.

8. கருவாச்சி காவியத்தில் ‘சாமியார் வருகை ‘கதையோடு எள்ளின் முனையளவும் ஒட்டாத’  ஒரு பின்னிணைப்பாக அமைந்துவிட்டது என்பதும் ஒரு திறனாய்வுப் பார்வை. என்னதான் கருவாச்சியின் பட்டறிவு ஞானத்தை நோக்கியதாக  இருப்பினும் அந்தப் பகுதியில் சாமியார் வினாக்களுக்கு அவள் தரும் விடைகள் இயல்பான பாத்திரப் படைப்புக்கு ஒப்பனை செய்வது போல அமைந்துவிடுகிறது. அவள் தந்த விடையால் உணர்ந்த சாமியாரின் அதிர்வுக்குச் சிவபெருமான் வாங்கிய அடி ஏற்படுத்திய அதிர்வுகளை உவமமாக்கியிருக்கும் பொருத்தமின்மையை உணர்த்தியிருந்தால் சிறப்பாயிருந்திருக்கும்.

9. சான்றெண் விளக்கத்தில் பயன்படுத்தப்பட்;டிருக்கும் நூல்கள் பற்றிய விவரமும் துணைநூற்பட்டிய்லில் தரப்பட்டிருக்கும் விவரமும் பொருத்தமாக இல்லை என்பதை ஆய்வாளர் கவனித்திருக்க வேண்டும்.

10. திரைப்படப் பாடலாசிரியராகவே அடையாளம் காணப்பட்டிருக்கும் வைரமுத்தின் படைப்பிலக்கியப் பரிமாணம், இதுபோன்ற ஆய்வுகளால் உயரக்கூடும்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *