திவாகர்

diwakar”என்ன இருந்தாலும் பெரியம்மா அன்னிக்கு அப்படி செய்திருக்கக் கூடாதுதான் அம்மா.. இப்பவும் அதே மாதிரி செய்ய மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.”

ரவிவர்மன் அப்படி கேட்டதும் சற்று குழம்பினேன். திருவனந்தபுரத்தில் பம்பாயிலிருந்து டாடா ஆகாய விமானத்தில் வந்து இறங்கி தாய்மண்ணில் முதல் முதலாக கால் வைத்த உடனே அவன் கேட்ட கேள்வி அதுதான். இன்னமும் சமஸ்தானத்துக்கே போக ஆரம்பிக்கவில்லை. இப்படி ஒரு எண்ணத்துடன் தானா இவன் தன் மண்ணில் கால் வைக்க வேண்டும்.. என் மனம் சற்று குழம்பியதுதான்.

”ஏனப்பா அப்படி நினைக்க வேண்டும்.. சரி, முதலில் யாரைப் பார்த்தாலும் நீ சிரித்துப் பேசப் பழகவேண்டும். உன் அப்பா வந்தால் நான் சொன்னபடி முதலில் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள். அவரை நீ தொடலாம்.. அவர் தொட்டுப் பழகியவன் தானே நீ..”

ஏர்போர்ட் நுழைவு வாயில் வந்ததும் அவன் அரும்பு மீசை முகத்தில் சந்தோஷக் களை சற்று குறைந்ததைக் கவனித்தேன். ஆமாம். அவன் அப்பாவை அங்கே எதிர்பார்த்திருக்கிறான். அவர் தென்படவில்லை. ஏர்போர்ட் முழுவதும் வெள்ளைக் குல்லாய் போட்டுக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் சிறு கூட்டமாய் நின்றிருந்தனர். யாராவது மந்திரி வருகிறாரோ அல்லது போகிறாரோ.. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இரண்டு வருடம் கூட ஆகவில்லை. காங்கிரஸ்காரர்கள் என்று இல்லை பொதுவாகவே அங்கு நின்றோர் முகத்தில் ஒரு பெருமை இருந்ததை உணர முடிந்தது. பின்னே சுதந்திரம் என்றால் சும்மாவா.. இருநூறு வருட ஆங்கிலேயரை ஒருவர் இல்லாமல் அத்தனை பேரையும் கூண்டோடு அனுப்பி வைத்தாயிற்றே.. ஆமாம்.. எங்கே சமஸ்தானத்துக்காரர்கள் ஒருவரையும் காணோம்..

நான் சுற்று முற்றும் பார்ப்பதற்குள் திவான் அந்தக் காங்கிரஸ் கூட்டத்திலிருந்து முண்டியடித்து முன்னே வந்து எங்களைக் கண்டுகொண்டு வரவேற்றார்.

”வாருங்கள் சின்னம்மா… வரவேண்டும் ரவிவர்மரே! மகாராஜாவுக்கு இங்கு வரவேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் மகாராணியார் உடல்நிலை சற்று கவலையாகத்தான் உள்ளது… நேற்று இரவு பூராவும் ராணியார் உறங்கவில்லை” என்று வருத்தமாகச் சொன்னவர், ரவியைப் பார்த்ததும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டார். ”இதோ உங்கள் மகனுக்குப் பிடித்த ஃபியட் கார் கொண்டு வந்திருக்கிறேன். அவரே ட்ரைவ் செய்து வரட்டும். நாம் முன்னால் செல்வோம்.. அவர் நம்மைப் பின் தொடரட்டும்.”

இந்த அய்யர், விவரம் தெரிந்த திவான். மகனுக்கு என்ன கொடுத்தால் சந்தோஷம் அதிகமாகும் என்று தெரிந்திருக்கிறது. சரிதான்.. ரவிக்குக் கார் ஓட்டுவது மிகவும் சந்தோஷமான விஷயம்தான். ஆனால் இந்தத் தேசத்தில் ஓட்டுவது அவனுக்கு கஷ்டம்.. ஆனால் திவான் சொன்னதும் இவன் முகம், பழைய சந்தோஷக் களையைப் பெற்றுவிட்டதே..

“அய்யர்! ஒன்று செய்யுங்கள்! அந்த பியட் இரண்டு சீட் கார்தானே.. நான் அவன் அருகில் அமர்ந்துகொள்கிறேன். நீங்கள் சாமான்களுடன் முன் செல்லுங்கள்.. நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம்..”

திவான் சிரித்தார். “புரிகிறது சின்னம்மா! இரண்டே மணி நேர டிரைவிங்தான்.. அப்படியே செய்வோம்.. நாங்கள் சற்று மெதுவாக முன்னே செல்கிறோம். ரவிவர்மரையும் மெதுவாக ஓட்டச் சொல்ல வேண்டும்!”

மலையாள நாட்டின் மண் வாசனை.. ஆஹா.. எத்தனை வருடங்கள்.. ரவிக்கே இருபது வயதாகிவிட்டதே.. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு விட்டுப் பிரிந்த மண். என்ன இருந்தாலும் தாய்நாட்டின் சிறப்புக்கு ஒப்பேது..? அந்த வாசனையை கண் மூடி அப்படியே சுவாசித்தேன்.

ரவி ஆலாபனை செய்தான்.. அவனுக்கும் இந்த மண் பிடித்துவிட்டது. பச்சை பசேலெனும் மரங்களும் பூக்களும் காற்றும் அவனையும் சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டன போலும். இருந்தும் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டே பேசினான்.

“அம்மா.. இப்போது சமஸ்தானத்தில் நேராக பெரியம்மாவைத்தானே பார்க்கப் போகிறோம்.. இப்போதே சொல்லி வைக்கிறேன்.. நானும் நீயும் சற்று தூரத்திலிருந்தே பார்ப்போம். நீ அன்போடு ஆவேசத்தில் அக்கா என்று அழுது அவர் காலைத் தொட்டுவிட்டாயானால், அவர் உடனே குளிக்க எப்படி எழுந்துகொள்ள முடியும்.. அதுவும் இந்த மோசமான உடல் நிலையில்..”

ரவியைக் கண்டித்தேன். “இதோ பார் ரவி! பெரியவர்களுக்கு உரிய மரியாதையை எப்போதும் நீ தரவேண்டும்.. உன் பேச்சில், நடவடிக்கையில் சிறு குற்றம் தெரிந்தாலும் உன்னை ஏதும் சொல்லமாட்டார்கள். என்னைத்தான் சரியாகப் பிள்ளையை வளர்க்கவில்லை எனச் சொல்வார்கள்..”

“என்னம்மா.. உன்னிடம்தான் உரிமையாகப் பேசமுடியும். அப்பாவிடம் சற்று உரிமையுடன் பேசலாம்.. அவ்வளவுதான்.. எனக்குத் தெரிந்த முகங்களே நீங்கள் இருவர்தான்.. உங்கள் மரியாதைக்கு என்னால் எந்தக் களங்கமும் நேராது. இருந்தாலும் உன்னைத் தொட வேண்டாமென்று சொன்ன பெரியம்மா, இப்போதும் அப்படிச் சொன்னால் என்னால் தாங்க முடியாது.. அவ்வளவுதான் சொல்லிவிட்டேன்..”

ரவிக்கு நான் சில விஷயங்களை சொல்லியிருக்கக் கூடாதோ என்றுதான் மனத்தில் பட்டது. இருந்தாலும் மனத்திலே வைத்திருந்து பாதுக்காக்கக்கூடிய விஷயமா இது.. எனக்கு ஒரு முறை ஏற்பட்டது, நாளை இவனுக்கும் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்..? எனக்குப் பழகிப் போன ஒரு விஷயம்.. என்னால் எளிதில் ஜீரணிக்கக்கூடிய விஷயம்தான்.. இதெல்லாம் நம் இந்தியத் திருநாட்டில் புதிதாகவா வந்த வழக்கம்… ஆண்டாண்டாக மறக்காமல் அப்படியே பின்பற்றி வரும் வழக்கம்தானே..

அன்று அந்தப் பதின்மூன்று வயதுச் சிறுமியாக என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிந்ததை இப்போது என் இருபது வயதுப் பையன் இன்னமும் ஏளனமாக நினைத்துக் கவலைப்படுகிறான். மலைக் காற்று வேகம் என் முந்தானையை சற்று இறுக்கப் பிடிக்க வைத்தது. சமஸ்தானம் போனால் இந்தப் புடவை கட்டிக்கொள்வோமா.. இல்லை.. தெரியவில்லை.. பார்ப்போம்..

“என்னம்மா யோசிக்கிறாய்.. உங்கள் ஊர் ரொம்ப மாறிவிட்டதோ.. ஆமாம்.. இங்கே மலையாளம் அதிகம் பேசுவார்களா.. இல்லை, நம்மைப் போல தமிழ் பேசுவார்களா..”

நம்மைப் போல தமிழ் என்று ரவி சொன்னதும் சிரிப்பு வந்தது. பெரிய ராணியின் கட்டளையும் ஞாபகம் வந்தது. மறக்க முடியுமா.. எத்தனை ஆண்டுகள் போனால்தான் என்ன.. பால பருவத்தில் அதிலும் என் வாழ்க்கையின் திசை திரும்பிய அந்த இரவு.. ஒரு நாள் முழுதும் தூங்காமல் கழித்த அந்த நிகழ்ச்சிகள்..

“இவளுக்கு எல்லாம் சொல்லியாகியாச்சா.. என்ன பார்க்கிறீர்கள், இவள் மடியில் என்ன,, இத்தனை பூக்கள் வைத்திருக்கிறாள்.. அடடே.. நந்தியாவட்டை பூ.. இதெல்லாம் இந்தச் சமயத்தில் எதற்கு..”

மகாராணியின் குரல் என்னைப் பயமுறுத்தியதுதான். ஆனால் தலையைக் குனிந்துகொண்டுதான் கேட்டுக்கொண்டிருந்தேன்..

“இதோ பார் குட்டி, இந்த வேளையில் இந்தப் பூவெல்லாம் கையில் வைத்திருக்கக் கூடாது.. ஏ பெண்களா.. சமஸ்தானத்தில் முல்லைக்கு ஏதாவது பஞ்சமா.. நந்தியாவட்டை, வாசமில்லாத பூ.. இந்தப் பூவை இவ்வளவு அதிகமாகவா கொடுத்து இவளை உள்ளே அனுப்பப் போகிறீர்கள்..”

கோபத்துடன் வந்த பெரிய ராணியின் குரலில் நான் மட்டும் பயப்படவில்லை. அந்த சேடிப் பெண்களும் பயந்துவிட்டிருந்தனர், பழியையும் தாராளமாக என் மீதே போட்டனர்.

“இல்லை ராணி.. நாங்கள் அளவுக்கு அதிகமாகவே முல்லையைப் பறித்து வைத்திருக்கிறோம். ஆனால் இவள், மன்னிக்கணும், சின்ன ராணிதான் ராஜாவின் பாதங்களுக்குப் பூஜை செய்ய இந்த நந்தியாவட்டை மலர்களைப் போடுவதற்குத் தானே பறித்து எடுத்து வந்தாராம்..”

ராணி ஆச்சரியமாக நின்றுகொண்டு கேள்வி கேட்டது, நிமிராத என் முகத்துக்கும் தெரிந்தது. “அது என்ன பாத பூசை”..

”அதுதான் நாங்களும் சின்ன ராணியிடம் கேட்டோம்.. பதில் சொல்ல மறுக்கிறார்கள்..”

“குட்டி என்ன காரணம் சொல்கிறாள்” என்று என்னிடமே கேட்பது எனக்குப் புரிந்தது.

நந்தியாவட்டைமெதுவாக வாயைத் திறந்தேன் “மகாராஜா தெய்வம் போல வந்து என்னைக் கலியாணம் செய்யவில்லையா.. அதற்குத்தான் ஸ்வாமிக்கு  செய்யவேண்டிய பூஜையை அவருக்குச் செய்யவேண்டுமென்று..’

“தாராளமாகச் செய்யேன்.. அதற்காக நந்தியாவட்டைதான் கிடைத்ததா.. முல்லை கிடைக்கவில்லையா”

“நந்தியாவட்டை ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிடித்த பூ.. அதுதான் மகாராஜாவுக்கும் பிடிக்கும் என்று..”

மகாராணி சிரித்தாள். “இத்தனை சின்ன வயதில் ஸ்ரீகிருஷ்ண பூசையைப் பற்றி இவள் பேசுகிறாள் பாரேன்.. இருக்கட்டும், நந்தியாவட்டை என்பது ஜாதியில் குறைந்த பூ, அதுக்கு வாசம் இல்லை.. உனக்கு பழக்கமாக இருந்தால் நாளையிலிருந்து உனக்குத் தோன்றும்படி செய்துகொள்.. இன்று மட்டும் நான் சொல்படி கேள். முல்லையை அள்ளி முகர்ந்து அவர் மேலே அப்படியே தலை முதல் பாதம் வரை கொட்டு.. அவர் சந்தோஷப்படுவார்.. என்ன புரிகிறதா..”

நான் ஒன்றும் புரியாமல் மகாராணியைப் பார்க்க, அவள் விழிகளில் ஏதோ குறும்புச் சிரிப்பு.. சகஜ பாவம்.. கொஞ்சம் தெளிவு என்னுள் வந்ததால் கடகடவென அவளருகே சென்று அப்படியே அவள் பாதம் தொட்டு தலை வணங்கினேன். அப்போதுதான் அவள் கத்தல் அதிர்ந்தது.. நான் துடிதுடித்து எழுந்தேன்.

“என்ன காரியம் செய்து விட்டாய்.. என்னைத் தொடலாமா.. நமஸ்கரிக்கவேண்டுமெனத் தோன்றினால் அங்கேயே விழுந்து தொலைக்க வேண்டியதுதானே.. இப்போதுதான் அலங்காரம் முடித்துப் பூசை செய்து வந்தேன்” என்று கத்தியவள் தன் தலையில் இருந்த பூக்களையெல்லாம் உதறிக்கொண்டும் நகைகளைக் கழற்றிக்கொண்டும் சேடிகளிடம் ஒவ்வொன்றாக வீசிக் வெகு வேகமாக, ஸ்நான கட்டத்துக்குச் சென்றாள். அப்படியே தலையில் நீரை மொண்டு மொண்டு ஊற்றி, என் கண் முன்பே குளித்தவள், மறுபடியும் என்னருகே வந்தாள். எனக்குப் பயம் அதிகம் ஏற்பட்டது.

“இதோ பார் குட்டி! நீ பயப்பட வேண்டாம். எனக்கு உன் மேல் கோபம் இல்லை. எப்போது நந்தியாவட்டையைக் கையில் கொண்டு வந்தாயோ, அப்போதே நான் உன்னைப் புரிந்திருக்க வேண்டும்.. ஆனால் உனக்கு இங்கே சமஸ்தானத்து சம்பிராதாயங்கள் போதவே போதாது. இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். இனிமேல் இப்படிச் செய்யாதே.. சில விஷயங்கள் தெரியவேணும்.. உன்னை அவர் கல்யாணம் கட்டியாயிற்று.. அவர் தொடலாம்தான். அவர் மேல் இருக்கும் உனக்குள்ள உரிமை என் மேல் உனக்குக் கொஞ்சம் கூட கிடையாது. யார் யார் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருந்தால்தால்தான் அழகு. நான் பெரிய அரண்மனையில் இருப்பது எனக்கு அழகு. உன்னுடைய தகுதிக்கு எங்கே இருக்க வேண்டுமோ அங்கேதான் இருக்க வேண்டும்.. எங்கள் குலப் பெருமை வேறு.. உன் குலப் பெருமை வேறு.. வாசமில்லா நந்தியாவட்டையும் வாசமுள்ள ஜாதிமுல்லையும் வண்ணம் ஒன்றுதான்.. ஆனால் தரம் வேறு. இன்று ஒருநாள், அதுவும் உனக்கு அவருடன் முதல் நாள் என்பதால் இந்த இடத்தில் அனுமதி.. நாளையிலிருந்து அடுத்த வீதியில் உனக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனையில்தான் உனக்கு வாசம். அவர் அங்கேயும் வருவார்..”

உடம்பெல்லாம் முடியெல்லாம் தண்ணீருடன் நின்ற கோலத்தில் அவள் சொன்ன அறிவுரையைக் கேட்டு நான் வெலவெலத்துப் போய் நின்ற என் நிலையை யார்தான் உணர முடியும்.

”சரி.. இவளை அவர் அறைக்குக் கொண்டு போய் விடுங்கள்..” என்று சேடிகளுக்குப் பணித்தவள் என்னை மறுபடியும் கூப்பிட்டாள். “குட்டி! உனக்குத் தமிழ் பேச வருமா..” எனக் கேட்டாள்.

தலையை ஆட்டினேன். “நல்லது அவருக்குத் தமிழில் பேசினால்தான் பிடிக்கும்”. தலையைத் துவட்டிக்கொண்டே அவள் போய்விட்டாள். பயத்துடன் நின்ற என்னை இவர்கள் அவர் அறையில் கொண்டுபோய் விட்டு விட்டு வெளியே தாள் போட்டதும் என் செவிக்கு நன்றாகவே கேட்டது.

தலைகுனிந்துதான் உள்ளே போனேன்.. ஒரு சப்தமும் கேட்கவில்லையாதலால் நானே சற்று நிமிர்ந்து பார்த்தேன். உயரமான மஞ்சத்தில் அமர்ந்து அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ”வா இங்கே!” அன்போடுதான் அழைத்தார்.

அது பெரிய அறை என்பதைச் சுற்று முற்றும் பார்த்தபோது உணர்ந்தேன். முதலில் நான் இருந்த இடத்திலிருந்தே அவருக்கு நமஸ்காரம் செய்தேன்.. இவரும் ஒருவேளை மகாராணி மாதிரி ‘என்னைத் தொடாதே’ என்று சொல்வாரோ.. இல்லையே என்னைத் தொட்டு கையைப் பிடித்துதானே தாலி கட்டினார். இவர் என்னை இன்றிரவு தொடுவது பற்றிக் கிண்டலும் கேலியுமாக வேறு நம் அம்மாமார்கள் சொல்லிச் சிரித்தார்களே..

அவருக்குச் சிரிப்பு வந்தது போலும், என்னருகே வந்தார். என்னைத் தோள் தொட்டு தூக்கியதில் கூச்சம் இருந்தது.

“ஏன்.. என்னிடம் பயம் வந்துவிட்டதா..”

மகாராணிக்கும் இவருக்கும்தான் குரலில்தான் எத்தனை வித்தியாஸம்.. ராணியின் சப்தம் இன்னமும் காதில் ஒலிக்கிறதே..

”சொல்லு.. என்னிடம் பயம் ஒன்றும் இல்லையே?”

இல்லையெனத் தலையாட்டினேன்..

“பின் இங்கே வர வேண்டியதுதானே.. ஏன் தயக்கம்”  அவரது குரலில் அன்பு இருந்தது எனக்கு பிடித்துப் போயிற்று. அவரை ஆவலுடன் பார்த்தேன். என் முகத்தில் தெரிந்த ஆவல், அவருக்கும் பிடித்ததோ என்னவோ.. என்னைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்து ஒரு சின்ன முக்காலியில் அமர வைத்தார். அவரும் அப்படியே தரையில் அமர்ந்தார். நான் சட்டென எழுந்தேன். அவர் என் கையைப் பிடித்து இழுத்து அழுத்தி மறுபடியும் அமரவைத்தார்.

“என்னிடம் பயமில்லை என்று சொன்னாய்.. இப்போது மட்டும் பயப்படுகிறாயே”

நான் மெதுவாகத்தான் சொன்னேன்…

“இல்லை.. நீங்கள் தரையில்..”

சிரித்தார் அவர்.. “உன் வயதை ஒத்த பையன்களிடம் எப்படிப் பேசுவாயோ அப்படியே என்னிடம் பேசு. சரியா..”

அவரைச் சற்று ஆவலோடு பார்த்தேன். ஆனால் எதுவும் பேசவில்லை.

“முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்.. நான் உன்னைக் கல்யாணம் செய்தது நீ பிடிவாதம் பிடித்ததால்தான்.. இல்லையா..’

மெதுவாகத்தான் அவர் கேட்டார். நான் தலையசைத்தேன். “தெரியும், நான் அழுதேன்.. அதனால் கலியாணம் நடந்தது.. இல்லையென்றால் என் கொடிய மாமன் என்னைக் கொடுமை செய்திருப்பான்”

“உன் மாமனை இனி மறந்துவிடு.. அவனுக்கு ஒரு தோட்டம் கொடுத்துச் சமாதானப்படுத்திவிட்டேன்.. உன்னுடன் உன் கூடப் படிக்கும் பையன், பெண் இவர்களோடு பேசுவது போல என்னுடன் பழகு.. என்ன புரிகிறதா.. சரி.. உன் வயது என்ன..”

கைவிரல்களை மடித்து எண்ணிக்கொண்டே ‘பதின்மூன்று’ என்றேன். மறுபடியும் சிரித்தார். “என் வயது என்ன தெரியுமா?”

நான் முழித்தேன்.

”எனக்கு அடுத்த மாதத்தில் நாற்பது வருகிறது. அதாவது எனக்கும் உனக்கும் எத்தனை வயது வித்தியாசம் என்று கணக்குப் போட்டுச் சொல்லு!”.

எனக்கு உண்மையாகவே இந்த விளையாட்டு பிடித்திருந்தது. என் தாய்மார்கள் என்னென்னவோ பெரிய விஷயங்களையெல்லாம் இந்த இரவில் நடக்கும் எனச் சொல்லி பயமுறுத்தி இருந்ததெல்லாம் அப்படியே பொய்.. நான் அவர் கேட்ட கேள்விக்காக உற்சாகமாக விரல்களை மடக்கிக் கணக்குப் போட்டேன். “ம்.. மொத்தம் நாற்பது, இல்லையா.. நான் பதின்மூன்று, பிறகு பதினான்கு, பதினைந்து.. என்று பத்து விரல்களையும் மடக்கிக் காண்பித்துக்கொண்டே மனத்திலும் கணக்கு போட்டேன்..

“ஹை.. 27 வருகிறது.. அப்படியானால் உங்களுக்கு என்னை விட 27 வயது அதிகம்..” ஆச்சரியத்தால் சொன்னது அவருக்குச் சிரிப்பை வரவழைத்தது.

“நன்றாகவே கணக்கு போடுகிறாய்..”

”27 என்பது என் வயதை விட இரண்டு பங்கு அதிகம், அப்படியும் மேலும் ஒரு வருடம் மீந்துகின்றது.. சரிதானா”

”சரிதான்,…”

“இருங்கள்.. உங்களுக்கு இன்னும் நாற்பது வரவில்லை இல்லையா.. அப்படியானால் முப்பத்தொன்பதுதானே.. அதாவது என் வயதை விட முன்று பங்கு அதிகம்” என் மூன்று விரல்களைக் காட்டினேன்.

அவர் சிரித்தார். “சரியாகச் சொல்கிறாய்.. பள்ளிக்குச் சென்று படித்தாயா..”

ஆமாம் எனத் தலையாட்டினேன்..

”ம்..போன வாரம் வரை படித்து வந்தேன்..:நீங்கள் கட்டி வைத்த பள்ளிதான்..”

உட்கார்ந்திருந்தவர், என் மோவாயை நிமிர்த்தி என்னை உற்றுப் பார்த்தார். அவர் பார்வை என்னவோ செய்தது.

“ஓ.. மேலே படிக்கிறாயா”

“ஐய்யய்யோ.. அப்படி எல்லாம் இனிமேல் செய்யக்கூடாதாமே..”

“யார் சொன்னது”

“எல்லோரும்தான்”

“எல்லோரும் என்று சொன்னால் எப்படி? இங்கே இந்த ஊருக்கு, இந்தச் சமஸ்தானத்துக்கு யார் ராஜா?”

நான் சட்டென் எழுந்து நின்றேன்.. “நீங்கள்தான்”

மறுபடியும் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார் .”இதோ பார்.. இங்கே ஏதாவது சொல்லவேண்டுமென்றால் நான் சொல்லவேண்டும் இல்லையா.. நான் ராஜா.. நான் சொல்கிறேன்.. நீ இனிமேல் படிக்கலாம்..”

“ஐய்யோ.. என்னை இங்கே எல்லோரும் ஒரு மாதிரி பார்ப்பார்கள், யாரும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்,”

“தெரியும்.. அதனால்தான் சீமைக்கு அழைத்துப் போய் படிக்க வைக்கப் போகிறேன்..”

”சீமையா..!” ஆவென வாயைப் பிளந்தவளைத் தன் கையால் அப்படியே மூடினார் அவர்.

“ஆமாம்.. அதுவும்.. நாளை காலையே நாம் பிரயாணம் செய்கிறோம்.. இது நான் ஏற்கனவே திட்டமிட்ட பிரயாணம்தான். உன் கல்யாணத்தினால் சற்று தாமதமாகிவிட்டது. நாளை காலை கொழும்புக்குப் பிரயாணமாவதாகச் சித்தம் செய்துள்ளேன். இப்போது உன்னையும் அழைத்துக் கொள்கிறேன்.. அங்கேயிருந்து சீமைக்குக் கப்பல் பிரயாணம்.. லண்டனில் எனக்குத் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நானே லண்டன் சீமையில்தானே படித்தேன்.. அங்கே போய்ப் படித்துவிட்டு வரப் போகிறாய்..”

என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.. எல்லாமே வேடிக்கையாக இருந்தது.. என் கல்யாணம், மகாராணியின் திடீர்க் குளியல், இதோ மகாராஜா சீமைக்கு அழைத்துப் போய் என்னைப் படிக்க வைக்கப் போகிறார்.. ஸ்ரீகிருஷ்ணா.. என்ன இது..

கிருஷ்ணா என்றதும்தான் என் நினைவுக்கு வந்தது. என் மடியில் நந்தியாவட்டைப் பூக்கள் கட்டிக்கொண்டிருந்தது.. மகாராணியின் திடீர்க் குளியலால் சேடிப் பெண்கள் என் நந்தியாவட்டையை மறந்துவிட்டு உள்ளே அப்படியே அனுப்பி விட்டிருந்தனர். சட்டென எழுந்து என் மடியை அவிழ்த்து அத்தனை பூக்களையும் அவர் பாதங்களில் சமர்ப்பித்தேன்.

“அட என்ன இது” என்று ஆச்சரியத்துடன் எழுந்து என்னைப் பார்த்தார். ”அட.. நந்தியாவட்டை பூ.. எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வெண்மை நிறம், கள்ளங்கபடமில்லா நிறம். உன்னைப் போல மனம் கொண்டவர்கள் நிறைய பேர் பூமியில் இருக்க வேண்டும் என ஆண்டவனால் சூசகமாக படைக்கப்பட்ட பூ.. சரி, இதை எதற்கு இங்கு கொண்டு வந்து என் காலடியில் போட்டாய்..”

“பாத பூஜை, என்னை என் மாமனிடமிருந்து காப்பாற்றியவர்.. நான் உங்களைத் தொடலாமா..”

ஆச்சரியம் சிறிதும் விலகாமல் என்னைத் தொடச் சொல்லித் தலையசைத்தார். அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து பூக்களில் ஒன்றை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டேன்.

“இது, நான் தினம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு செய்யும் பாத பூசை..”

அவர் கண்களில் தெரிந்த அபரிமிதமான அன்பு, அவர் பேச்சிலும் வந்தது. “உனக்கு வயது பதின்மூன்று இல்லை.. இன்னும் பெரியவளாகத்தான் என் மனத்துக்குப் படுகிறாய்.. போ.. அந்தப் படுக்கையில் படுத்து நன்றாக உறங்கு.. இன்னும் இருபது இருபத்தைந்து நாட்களுக்குச் சரியாக உறங்க முடியாது” என்று சொன்னவர் என்னை அழைத்துக்கொண்டு போய் அந்த உயரமான மஞ்சத்தில் படுக்க வைத்தார்.

“ஒரு விஷயம்.. உன்னிடம் எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை.. நாளைக் காலை சேடிப்பெண்கள், மகாராணியர் வரும்போது உன்னை ஏதாவது கேள்விகள் கேட்டுத் தொல்லை செய்வார்கள். ம்ம்.. நீ கொஞ்சம் மௌனமாக இருப்பது போல காண்பித்துக்கொள்ள வேண்டும்.. தலையை அப்படியே குனிந்து கொள்ளவைத்துப் பழகிக்கொள். அவர்களை ஏறெடுத்துப் பாராதே.. என்ன கேள்வி கேட்டாலும் தலையைக் குனிந்துகொண்டே தலை ஆட்டிவிட்டு ஓடுவது போல ஓடு.. நாளை பகல் ஒரு பொழுதுதான் நீ அப்படி இருக்கவேண்டும்.. பிறகு நம் பிரயாணம் ஆரம்பித்துவிடும்”

அவரை அப்படியேப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. தாய்மார்கள் சொன்னது மறுபடி நினைவுக்கு வந்தது.. அவர் என்னை என்னவெல்லாமோ செய்வார் என்றார்களே.. தலையைக் குனிந்துகொண்டேன்.

“இப்படித்தான் தலையை இப்போதிலிருந்தே குனிய வைத்துக்கொள்” என்றவர் என் கன்னத்தில் கிள்ளி விட்டு வெளியே சென்றுவிட்டார்.

“அம்மா”

சட்டென கத்திய குரல் கேட்டு திடுக்கிட்டேன். ரவிவர்மன் என்னை கோபமாகப் பார்த்தான்.. “ஓஹோ பழைய ஞாபகமா.. ஏம்மா.. பெரியம்மாவிடம் பயப்படுகிறாயா.. அப்போது போனவள் இப்போது மாட்டிக்கொண்டாய் என்று சொல்வார்களென்று நினைக்கிறாயோ.. ஏனம்மா.. இந்தத் தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதியெல்லாம் இன்னமும் இருக்கிறதா.. ஆமாம்.. உங்கள் அப்பா தாழ்ந்த சாதியென்றால் எப்படி இவர்கள் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள்.. ஏதாவது பந்தயமா.. கொஞ்சம் சொல்லுங்களேன் உங்கள் திருமணத்தைப் பற்றி..

“போடா.. அதையெல்லாம் ஏன் கிளறுகிறாய்.. உயர்ந்த சாதி ஆண்கள் யாரை வேண்டுமானாலும் கல்யாணம் கட்டலாம். அதனால் என்ன.. எனக்கு அமையும் கணவர் மிக நல்லவராக அமைய வேண்டுமென தெய்வத்தின் அருள் இருக்க, இந்தச் சாதி பற்றியெல்லாம் ஏன் யோசிக்கிறாய்..”

london-bigben“இல்லையம்மா.. எப்படி பெரியம்மா உன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள் என்று கேட்கிறேன்.. இதே நம் லண்டனில் நடந்தது என்றால் உன் மீது ஏராளமான மான நஷ்ட ஈடு கேஸ்கள் போட்டு ஒரு வழி பண்ணிவிடுவார்கள்..”

ரவி சொல்வது என்னவோ உண்மைதான். ஆனால் இந்தியா வேறு.. லண்டன் கலாசாரம் வேறு. லண்டனில் எத்தனையோ சமயங்களில் என்னைக் கூட முதலில் எத்தனையோ தோழிகள் என் கல்யாணம் பற்றியும் என் கணவர் பற்றியும் துருவித் துருவி விசாரித்ததும் நினைவுக்கும் வந்தது. லண்டன் அந்தச் சின்ன வயதில் போய்ச் சேர்ந்ததும், ஒன்றாம் பாரத்தில் அவர் என்னைச் சேர்த்ததும், ஒரு வீட்டைக் கட்டி அங்கே பாதுகாப்பாக, தெரிந்த குடும்பங்களுடன் விட்டு வைத்தது, அதன் பிறகு எத்தனை முறை லண்டன் வந்து சென்றிருக்கிறார் அவர். எல்லாமே எனக்காகத்தானே.. என்னுடைய பதினெட்டாவது வயதில் என் கர்ப்ப காலம் பூராவும் என் அருகே இருந்தது, ரவி பிறந்ததும் அவனை வளர்த்துச் சீராட்டியது, என்னை மருத்துவக் கல்லூரியில் அங்கே சேர்த்து மருத்துவராக்கியது, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை லண்டன் வருவது.. தந்தை என்ற முறையில் அனைத்தையும் அவனுக்கு அள்ளி வழங்கியவரல்லவா..

”ரவி, என் கல்யாணம் என்பது ஏறத்தாழ ஒரு பந்தயம் போல நடந்தது. குதிரை வண்டிப் பந்தயத்தில் என் மாமன் மீசையை முறுக்கிக்கொண்டு சப்தம் போட்டு, என்னைப் பெண் கேட்டான். குடிகாரக் கும்பல் அது. அந்தப் பந்தயத்தில் அவன் ஜெயித்தால் நான் சின்னாபின்னமாகப் போயிருப்பேன்.. என்னுடைய ஸ்ரீகிருஷ்ணன் அப்படி செய்யவிடாமல் உன் தந்தையை அல்லவா அனுப்பியிருந்தார் அப்போது.. அவர் மட்டும் அந்தப் பந்தயத்தில் தலைமை தாங்குவதோடு நின்றிருந்தால் என்னவாகியிருக்கும் என் கதி.. அவர் பந்தயத்தில் கலந்துகொண்டு ஜெயித்தது வாஸ்தவம்தான். ஆனால் என்னைத் திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஜாதிக்காகப் பார்க்க வேண்டாம் என்று நான்தான் அழுது புரண்டு பிடிவாதம் பிடித்தேன்..”

“தெரியும்.. ராணி அந்தஸ்து போய்விடுமே என்ற பயத்தில் அழுதிருப்பீர்கள்!”

சிரித்தேன்.

“அப்போது என் வயசு பதின்மூன்று தெரியுமோ.. ராணி அது இது என்றெல்லாம் நினைப்பே கிடையாது. அந்தக் குடிகார மாமன் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்கிற ஒரே நினைப்புதான். ஆனால் அன்று அழுது புரண்டு திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்காவிட்டால் இன்று நான் டாக்டராகி இருக்க முடியுமா.. இல்லை.. உன் பெரியம்மாவுக்கே மருத்துவம் பார்க்க வந்திருக்க முடியுமா.. இல்லை.. இதோ என் பக்கத்தில் மகிழ்ச்சியாக காரை ஓட்டிச் செல்லும் என் அன்பு மகனைத்தான் பெற்றிருக்க முடியுமா..:”

“என் மகிழ்ச்சியெல்லாம் சமஸ்தானம் போய்ச் சேரும்போது போய்விடும்.. என்னோட ஒரே நினைப்பு நீ டாக்டராயிற்றே, பெரியம்மா கையைப் பிடித்துப் பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளதே, என்பதுதான்.. அம்மா.. நான் ஒன்று கேட்கிறேன்.. நீ டாக்டர் படிப்பு முடிந்து ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற போது இந்தப் பெரியம்மா சம்மதிக்கவில்லை என்றுதானே நாம் லண்டனிலேயே இருந்தோம். அப்பா வந்தபோதெல்லாம் நீ எத்தனையோ முறை கேட்டபோதும் அவர் உண்மையை ஒளிக்காமல் சொல்லி இருக்கிறார் இல்லையா.. பெரியம்மா விரும்பும்போது நிச்சயம் அழைத்துச் செல்வேன் என்பார். இப்போது படுக்கையில் படுத்ததும் உன் சேவை தேவைப்படுவதால் அழைத்துள்ளார்.. அவ்வளவுதான். ”

”ரவி! அதிகம் அதைப் பற்றியே கவலைப்படாதே. நான் பெரிய ராணிக்குக் கடமைப்பட்டுள்ளேன்.. அதற்காகவாவது அவரைப் பார்க்கவேண்டும். உன்னைப் பொறுத்தவரை நீ ராஜகுலேந்திர உதய வர்மரின் மகன் ரவி வர்மன்.. அந்த மரியாதையை எல்லோருமே உனக்கு எப்போதுமே தருவார்கள்..போதுமா”

“இல்லையம்மா!. நான் உயந்த ஜாதியுமில்லை, தாழ்ந்த ஜாதியுமில்லை. உண்மையில் ஜாதியின் சமான புத்திரன், சரிதானே..”

“எப்படியோ.. சாதியைப் பற்றி அதிகம் பேசாதே.. என்னைப் பற்றிய கவலையை விடு. தொட வேண்டுமென்றால் ஸ்டெதஸ்கோப் மூலம் தொடுகிறேன் போதுமா. வண்டியை இன்னும் மெதுவாக ஓட்டு.. ஓ அதோ பார் உன் அப்பா.. முன்னதாகவே உனக்காகக் காத்திருக்கிறார் பார்..

அவர் எங்களைக் கட்டிக்கொண்டு வரவேற்றதும் கூட்டிக்கொண்டு அரண்மனை நுழையும்போதே அவரிடம் பெரிய ராணியின் விவரம் அறிந்து கொண்டேன். சூசகமாக ரவியின் கவலைகளைக் கூட அவருக்குத் தெரிவித்தேன்.

”உங்கள் இருவரையும் இங்கு வந்தவுடன் ஓய்வு எடுத்து விட்டுச் சந்திக்கச் செய்யலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் ராத்திரி ராணிக்கு உறக்கம் இல்லை. ஒரே பேச்சு.. பேச்சுதான்.. மனத்தில் இருந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டாள். ம்ம்.. சின்ன வயதில் உன்னைத் தொட வேண்டாம் என்று பயமுறுத்தியது அவளுக்கு மிகவும் கஷ்டத்தை உண்டாக்கிவிட்டது.. அந்தக் கஷ்டம்தான் அவளுக்குச் சந்தானத்தைத் தரவில்லை என்று வேறு பிதற்றுகிறாள். உன்னைச் சீமைக்கு அனுப்பாமல் தன் கூடவே இருக்க வைக்காமல் செய்துவிட்டேனே என்று ஒருசமயம் அழுகிறாள்..போகட்டும். அவளையும் உன் போலவே படிக்க வைத்திருந்தால் இந்தக் குட்டியைச் சட்டென அப்படி சொல்லியிருப்பேனா என்று என்னையும் சாடுகிறாள்…”

கணவர் முகம் சோகமாகத்தான் இருந்தது.. “நானே கேட்டேன் ராணியை.. அப்படி என்றால் சின்னவள் படித்து மருத்துவரான உடனே ஏன் அழைத்துக்கொள்ளவில்லையென்று.. அதற்கும் என்னைக் குறை சொல்கிறாள்.. நான் சரியாக எடுத்துச் சொல்லவில்லையாம்.. பார்த்தீர்களா.. குட்டி எத்தனை பெரிய படிப்பு படித்திருக்கிறாள், என்று பெருமை ஒரு பக்கம்… சின்னவள் நல்ல குணம் என்று ஒருசமயம் உன்னைப் புகழ்கிறாள்.. உங்களைச் சந்தித்தால்தான் உறக்கம் வரும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நீ வந்ததும் உன்னை அப்படியே கட்டி அணைத்து உச்சி முகர வேண்டுமாம்.. ராத்திரி அதையே திருப்பித் திருப்பிப் பேசுகிறாள்.. எல்லாம் நல்லதுக்குதான்… சரி வா.. வா.. ஒருமுறை அவளைப் பார்த்துவிட்டால் அவளுக்குத் திருப்தியாக இருக்கும். உற்சாகத்துடன் பழைய ராணியாக மாறி விடுவாள்.. பிறகு நிதானமாக உன் மருத்துவச் சேவையை ஆரம்பிக்கலாம்.”.

மூச்சு விடாமல் பேசிக்கொண்டே எங்களை கூட்டிச் சென்ற கணவரை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே பின் தொடர்ந்தோம். .

பெரிய ராணி, நான் ஒரே ஒரு நாள் படுத்த அந்தப் பெரிய மஞ்சத்தில்தான் படுத்திருந்தார்கள். என் கணவர், அவர் அறைதான் அது, அந்த முதல்நாள் என் கணவருக்காக நான் எப்படி கதவருகே நின்றேனோ அப்படியேதான் அன்றும் நின்றேன். ஏதோ தோன்றியது, இருந்த இடத்தில் இருந்தே ஒரு நமஸ்காரம் செய்து வைத்தேன்

lord-sri-krishnaஆனால் பெரிய ராணி எங்கள் பக்கம் பார்க்கவில்லை. ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்தவள் களைப்புடனே கண் மூடிக் கிடந்தது தெரியவந்தது. போர்வை முழுவதும் மூடிக் கிடக்க சன்னல் வழியாக வந்த வெளிச்சத்தில் பெரிய ராணியின் முகம் அழகாக இருந்தது. ஒரு முறைதானே அப்போது பார்த்தோம். அவள் அன்று அல்ங்காரத்துடன் கம்பீரமாக நம் முன்னே அசைந்து நின்ற கோலம் என்ன.. காலில் என் தலை பட்டதும் திடீரென குதித்துத் துள்ளி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டே குளிக்கச் சென்ற கோபமென்ன.. தண்ணீர் சொட்டச் சொட்ட என்னை இவர் அறைக்கு அனுப்பும்போது கூட கரிசனமாக ’அவரிடம் தமிழில் பேசு, அவருக்குப் பிடிக்கும்’ என்ற வாத்சல்யம் என்ன, இதோ இன்று நோயில் படுத்துக் கிடந்த அலங்கோலம்தான் என்ன.. சே..என்ன வாழ்க்கை இது..

அங்கேயே சற்று நேரம் நின்று கொண்டிருந்தோம். சுற்று முற்றும் பார்த்தேன்.. அவள் தலை மாட்டில் ஸ்ரீகிருஷ்ணன்.. சிலை வடிவில் நின்று புல்லாங்குழலோடு சிரித்துக்கொண்டிருந்தான். அவன் காலடியில் நந்தியாவட்டைப் பூக்கள் சிதறிக் கிடந்தன.

என் பார்வையை அவர் கவனிக்கத் தவறவில்லை. “நான் சொல்ல மறந்துவிட்டேன்.. உனக்குப் பிடித்த பூ என தினம் நந்தியாவட்டைப் பூக்களால் கஷ்டப்பட்டாவது பூஜை செய்கிறாள். இன்று கூட படுத்துக்கொண்டே பூக்களால் பூசை செய்தாள். அவளுக்கு வசதியாகத்தான் ஸ்ரீகிருஷ்ணரையே அவள் பக்கத்தில் வைத்துவிட்டேன்…” என்றவர் மெல்ல அவளிடம் நெருங்கினார்.. அவள் உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டாம் என்று சைகையாய் சொன்னேன்.. ஆனால் அவர் மெதுவாக ரானியின் போர்வையைச் சற்று நீக்கி “ராணி.. உன்னைப் பார்க்க உன் குட்டி வந்துவிட்டாள் பார்.. ராத்திரியெல்லாம் புலம்பிக்கொண்டிருந்தாய்.. குட்டி வந்தால் அவளைக் கட்டிப் பிடிக்க வேண்டுமென்று.. இனி உன் இஷ்டம்தான்.. குட்டி உன் கூடவே இருப்பாள்..” என்றார்.

எனக்கு ஏதோ தட்டியது. என் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து தைரியமாக அவள் போர்வையை முழுதும் விலக்கிச் சோதனை செய்தேன்.. இல்லை.. மார்புத் துடிப்பு கேட்கவில்லை.. அவள் கையைப் பிடித்துத் தொட்டுப் பார்த்தேன். சில்லிப்பு வந்துவிட்டது. அப்படியே இடிந்து போய் அவள் மீதே சாய்ந்தேன்.

என் கணவர் புலம்பிக்கொண்டிருந்தது எங்கோ வானத்தில் கேட்பது போலக் கேட்டது. ‘குட்டி வந்தால் அவளைத் தொட்டுத் தொட்டுப் பேசவேண்டும் என்று ராத்திரியெல்லாம் புலம்பினாயே’.

கண்ணிருடன் சுதாரித்துக்கொண்டு அவள் இரண்டு கைகளையும் விரித்து என் மேலெல்லாம் பரப்பிக்கொண்டேன்.. அவள் விரிந்த கைகளில் இருந்து நந்தியாவட்டை மலர்கள், பாவம் எனக்காக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள், அப்படியே நசுங்கிய நிலையில் என் மேல் விழுந்தன…

****************************************************************

படங்களுக்கு நன்றி –  தமிழ்க் கொங்கு, devotionalonly.com, விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “நந்தியாவட்டை பூ

  1. தங்களின் கதை படித்தேன்! வழக்கம்போல பிரமிப்பாக இருந்தது நிஜம்!காட்சிகள் கண்களில் தெரிந்தது!

    நான் பிறந்த ஊரில் ஒரு பெண் வசதிக்குறைவினால் நீண்ட நாள் திருமணம்ஆகாமால் இருந்தவளுக்கு இப்படி அவளை விட இரண்டு மடங்கு வயதான கணவரின் முதல் மனைவி தனக்கு பிள்ளை பிறக்கவில்லை என்று தன் கணவருக்கு தானே பெண்(இவளை) பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

    இவளை கண்ணின் இமைபோல (சகல வசதிகளுடன் )
    காத்து அன்பு செலுத்திய கணவர் கிடைத்தது அவளின் பூர்வ புண்ணியம் என்று ஊரே பேசியது!

    தங்களின் கதை சரசுவின் நினைவை மீட்டெடுத்தது!.நன்றி.
    பிரசுரித்த அண்ணாகண்ணன் அவர்களுக்கும் நன்றி.

    மீனா

  2. அருமையான கதை, மெல்லிய உணர்வுகளின் பிரதிபலிப்பு அருமை. ரசித்தேன்

  3. அருமையான் கதை.
    காலத்தின் கட்டாயத்திலிருந்து யாரால் தான் மீள முடியும்.
    திவாகருக்கே உண்டான நடை.
    நிறைய எழுது நண்பா

  4. வித்தியாசமான சூழல். கதையின் களமும் வேறு.கண்முன்னால் ஒரு சரித்திரம் நடந்த உணர்வு ஏற்படுகிறது. வெகு அருமையான நடை. நன்றாக இருந்தது திவாகர் ஜி.

  5. அண்ணா.. சூபர்.. எனக்கெல்லாம் எப்படி பாராடணும்னு சரியா எழுத வரலெ, and at the end it gave us lot of inputs. படிக்கறவங்களை நிறைய யோசிக்கவைக்குது.

  6. இது கதையல்ல. நீண்டதொரு பின்னனியை லேசாக சுமந்து வந்த நிதர்சனம். லேசு, நிதர்சனத்துக்கு மட்டும். கதைசொல்லிக்கல்ல. திவாகரின் சாதனை இலக்கியம் என்று கூட, ‘எம்டன்’ படித்து மதிப்புரை எழுதாத நான் சொல்லுவேன். சாதனை, ஒரு நுட்பத்தை, ஒரு புஷ்பத்தின் உருவகமாக அமைத்தது. ஆனால், உரையாடல் நீண்டதாக அமைந்தது, சிக்கலவிழ்ப்பதை தாமஸம் செய்து விட்டதோ என்ற ஐயம். இந்த சமஸ்தான பின்னணி ஒரு நினைவை முன் கொணர்கிறது. நான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை பார்த்தவன். முந்திய தலைமுறையில் ஒரு தொண்டைமான், ஒரு ஆஸ்ட்ரேலிய பெண்மணியை மணர்ந்து, அவரை இங்கு கொணர்ந்தார். சமஸ்தானம் அவளை விந்தையாக பார்த்தது, ஒரு சிக்கல். தொண்டைமான், இந்த பிரச்னையை லாகவமாக கையாண்டதாக செவிவாய் செய்தி. என்ன காரணமோ, அதை நினைத்துக்கொண்டேன். பெண்ணாய் பிறந்தாலே…
    இன்னம்பூரான்

  7. இயல்பான ஆற்று நீரோடை போன்ற கதை சொல்லிய பாங்கு அருமை..

    எதிர்பாராத முடிவு… நம் வாழ்க்கையைப் போல….

    ஓவியர் ரவிவர்மனுக்கு இவருக்கும் தொடர்பு உண்டா…? அல்லது கற்பனைப்பாத்திரம் தானா?…

    நன்றி…

  8. இந்த கதையின் இயல்பான நடையைப் படித்து ஆச்சரியப்பட்டு உணர்வுகள் ஒரு சிறுகதை கதையையும் படித்து முடித்துவிட்டு தமிழில் இத்தனை எளிமையாக எழுத்தா என்ற வியப்பினில் ஆழ்ந்து அதில் இருந்து என்னால் விலகமுடியவில்லை. திவாகர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். உடனே வாங்கிப் படிக்க ஆவலாக உள்ளேன்.

  9. nandhiyavattai flower, the only available flower in all seasons. The way of Story telling is so sweet and I was fortunate enough to read Thiru Dhivakar’s stories. Thanks to my friends at fb.

  10. வாசமில்லா நந்தியாவட்டையும் வாசமுள்ள ஜாதிமுல்லையும் வண்ணம் ஒன்றுதான்.. ஆனால் தரம் வேறு. 

    இயல்பான நடையில், நிதர்சனமாக நிகழ்வுகளை கண்முன் நிறுத்தி மனதில் நிலை பெற்ச்செய்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

Leave a Reply to பொன்னிவளவன்

Your email address will not be published. Required fields are marked *