11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

1

அண்ணாகண்ணன்

2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

கடந்த ஆண்டு, தொழில்நுட்பச் சிக்கல்களால் வல்லமை 37 நாள்கள் முடங்கியது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, மீண்டது. இப்போது செம்மையாகச் செயல்பட்டு வருகிறது. நமது வழங்கியை (Server) மாற்றினோம். தரவுகளைப் பாதுகாக்க, தரவு சேமிப்பகத்தைத் (Data back-up) தேர்ந்தோம். தொழில்நுட்ப ஆதரவு (Technical support) நிறுவனத்தைத் தேர்ந்தோம். இவையனைத்தும் கட்டணச் சேவைகள். எனினும் உரிய நேரத்தில் எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நாங்குநேரி வாசஸ்ரீ, திருச்சி புலவர் இராமமூர்த்தி ஆகியோர் வழங்கிய நன்கொடையால், தளம் நிமிர்ந்தது. கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், பெரியவர் இன்னம்பூரான் உள்ளிட்டோர் மேலும் நன்கொடையும் உதவிகளும் வழங்க இசைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள்.

தரமான, நடுநிலையான, கூர்மையான மின்னிதழாக வல்லமை தொடர்ந்து மிளிர்ந்து வருகிறது. ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பிட்டு, ஆய்வறிஞர்கள் வழங்கும் மதிப்புரைகள், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுதலாய் அமைகின்றன. நாம் இன்னும் நிறையப் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆக்கப்பூர்வமான படைப்புகளையும் ஆய்வுகளையும் ஊக்குவித்து வளர்த்தெடுக்க, வல்லமை உறுதி பூண்டுள்ளது. இதற்குத் தொடர்ச்சியான நன்கொடைகள் தேவை. உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவுங்கள். ஆர்வமும் நேரமும் தமிழறிவும் படைத்தவர்கள், வல்லமை ஆசிரியர் குழுவில் இணையலாம். வாய்ப்புள்ளோர், வல்லமையில் விளம்பரங்கள் வெளியிடலாம்.

வல்லமை 11ஆவது ஆண்டில் நுழைந்துள்ள இந்த நாளில் வல்லமை யூடியூப் அலைவரிசையை அறிமுகப்படுத்துகிறோம். இதில் அன்பர்கள் உறுப்பினராக இணைந்து (Subscribe), ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வருமாறு அழைக்கிறோம்.

வல்லமை யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்: http://www.youtube.com/channel/UCnjxyY8wTI3_HHFCD162IIA?sub_confirmation=1

இதன் இடுகைகளுக்கு விருப்பக்குறியிட்டு, பின்னூட்டங்கள் அளித்து, உங்கள் நண்பர்களுக்கு இந்தப் பதிவுகளையும் அலைவரிசையையும் பகிர்ந்து, அவர்களையும் இணையுமாறு ஆற்றுப்படுத்த வேண்டுகிறோம். இந்த முயற்சியின் பயன், பலரையும் எட்ட வேண்டும் என்பதே நம் நோக்கம்.

இந்த அலைவரிசையில் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்களின் காலந்தோறும் சங்க இலக்கியம் என்ற இணையவழி உரையை முதல் பதிவாக அளித்துள்ளோம்.

தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பிலான எனது முனைவர்ப் பட்ட வாய்மொழித் தேர்வின்போது வழங்கிய திரை உரைக் காட்சித் தொடரையும் நீங்கள் காணலாம்.

இந்த அலைவரிசை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆய்வுக் கட்டுரைகள், இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கங்களை இதில் காணொலியில் (வீடியோவில்) பதிந்து ஏற்றலாம். நீண்ட கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் முழுமையாகப் படிப்பதற்கு முன்னால், அதன் சாரத்தை ஓரிரு நிமிடங்களில் வழங்கினால், வாசகருக்கு அல்லது பயனருக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் இது, முழுக் கட்டுரையைப் படிப்பதற்குத் தூண்டுகோலாக அமையும். இது, ஒரு திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னால், அதன் முன்னோட்டத்தைப் பார்ப்பது போலாகும்.

வாய்ப்புள்ளோர், முழுக் கட்டுரையின் செய்திகளையும் முழுமையான உரையாகவும் வழங்கலாம். இது ஒரே நேரத்தில் ஓர் உள்ளடக்கத்தைக் காணொலி வடிவிலும் எழுத்து வடிவிலும் வழங்குவதாகும். இதில், எழுத்தில் காட்ட முடியாத தொனியையும் குறிப்பையும் உணர்வுகளையும் பாவங்களையும் காட்ட இயலும். மேலும் காட்சி வடிவச் சான்றுகளையும் இதர இணையப் பக்கங்களையும் காணொலிகளையும் எடுத்துக் காட்டலாம்.

இவை மட்டுமின்றி, தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் போன்றவை அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் இவை அனைத்தும் இணையம் வழியே நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு பயிற்சி வகுப்புகளும் இணையத் தொடர்களும் முழு வீச்சில் நடக்கின்றன. இவை அனைத்தையும் ஆவணப்படுத்த, வல்லமை விழைகிறது. இவற்றின் முழுமையான காணொலிப் பதிவுகள், திரைஉரை காட்சித் தொடர்கள் ஆகியவற்றை இந்த அலைவரிசையில் ஆவணப்படுத்த விரும்புகிறோம்.

அன்பர்கள் தாங்கள் உருவாக்கும் பவர்பாயின்ட் உரைகளை நமக்கு அனுப்பினால், அவற்றைக் காணொலியாக மாற்றி, வெளியிட இயலும். எனவே, காணொலிப் பதிவாக இருந்தாலும் பவர்பாயின்ட் ஆக இருந்தாலும் பிடிஎப் ஆக இருந்தாலும் எந்த வடிவில் உங்கள் காட்சியுரை இருந்தாலும் எங்களுக்கு அனுப்புங்கள். எங்கே, என்றைக்கு, எந்த நிகழ்வில் இதை வழங்கினீர்கள் என்ற விவரத்தைக் குறிப்பிட்டு அனுப்புங்கள். இவற்றை நாங்கள் உரிய முறையில் ஆவணப்படுத்துவோம். யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவதோடு, அவற்றை வல்லமை மின்னிதழிலும் காட்சிப்படுத்துவோம்.

தொழில்நுட்பம் வழங்கியுள்ள அளப்பரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ் உள்ளடக்கத்தையும் தமிழாய்வையும் வளர்த்தெடுக்க, வாருங்கள்.

உங்கள் இலக்கியப் படைப்பு அல்லது ஆய்வுக் கட்டுரை அல்லது முனைவர் பட்டம் குறித்து, சுருக்கமாக / விளக்கமாகப் பேசி ஒரு பதிவை கூகுள் டிரைவ் வழியாக vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். பேச்சின் இடையே உங்கள் முனைவர் பட்ட ஆய்வேட்டினைக் காட்டலாம். அதில் உள்ள முக்கிய தரவுகள், சான்றுகளை எடுத்துக் காட்டலாம். அதன் தனிச் சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.

வல்லமை எவ்வாறு உங்களுக்குப் பயனளிக்கின்றது என்றும் இன்னும் என்னென்ன செய்யலாம் என்றும் அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறோம். வல்லமையின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர், ஆய்வுலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வாசகர்கள், நன்கொடையாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு நல்கும் எல்.கார்க்கிக் உள்ளிட்ட நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன், மிகச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். பிழை திருத்துவதில் முனைவர் அருணன் கபிலன் பங்களிக்கிறார். தரமான படைப்புகளாலும் படக்கவிதைப் போட்டி முடிவுகளாலும் மேகலா இராமமூர்த்தி, வல்லமைக்கு அணிசெய்து வருகிறார். சாந்தி மாரியப்பனும் ராமலக்ஷ்மியும் உரிய படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கி வருகின்றனர். வல்லமையின் மதிப்பாய்வு அறிஞர்கள், சிறப்பான மதிப்பீடுகளை வழங்கி வருகின்றனர். இவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி.

தரமான இதழாக வல்லமை தொடர்ந்து பயணிக்கும். உங்கள் அனைவரின் தொடர்ச்சியான நல்லாதரவினை வேண்டுகிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  1. பதினொராம் ஆண்டில் கால்பதிக்கும் வல்லமை
    தமிழுலகில் பல்லாண்டு நிலைத்திட வாழ்த்துகிறேன்
    அருமைக் கருத்துக்களை அனைவருக்கும் அளிக்கும்
    பெருமைமிகு வல்லமையே பெருவிருட்சமாய் வளர்க !

    வாழ்த்தி மகிழுவது
    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *