செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(301)

தந்தை மகற்காற்றும் நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

– திருக்குறள் -67 (புதல்வரைப் பெறுதல்)

புதுக் கவிதையில்...

தந்தையொருவன்
தன் மகனுக்குச் செய்யும்
நன்மை,
தன்னைவிடவும்
அதிகமாய் அவனைக்
கல்வி கற்கச்செய்து
கற்றோர் அவையில்
முதன்மையாய் இருக்கவைப்பதே…!

குறும்பாவில்...

தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை,
தனக்குமேலும் படிக்கவைத்து கற்றவர் சபையில்
அவனை முதன்மைபெறச் செய்வதாகும்…!

மரபுக் கவிதையில்...

பொன்னாய்ப் பொருளாய்ப் பணமதாகப்
பெரிதாய்ச் செல்வம் சேர்க்கவேண்டாம்,
தன்னை விடவும் அதிகமாகத்
தன்மகன் கற்றுத் தேர்ந்தேதான்
மன்றம் நிறைந்த கற்றோர்முன்
மதிப்பி லுயர்ந்தே முதல்நிலையில்
நின்று நிலைக்க வைப்பதுதான்
நன்மை தந்தை செய்வதுவே…!

லிமரைக்கூ..

தந்தை மகனுக்காற்றும் உதவி,
நன்றாயவனைப் படிக்கவைத்துப் பெறச்செய்யவேண்டும்
கற்றோரவையில் முதன்மைப் பதவி…!

கிராமிய பாணியில்...

செல்வத்திலயெல்லாம்
பெரியசெல்வம் பிள்ளச்செல்வம்,
அதப்
பேணிக் காப்பாத்துறது
பெத்தவுங்க கடம..

ஒரு தகப்பன்
தன்மகனுக்குச் செய்யிற
பெரிய நன்ம இதுதான்,
தன்ன விடவும் அவன
நல்லாப் படிக்கவச்சி
படிச்சவுங்க சபயில
அவன மொத ஆளா
இருக்க வைக்கிறதுதான்..

அதால
செல்வத்திலயெல்லாம்
பெரியசெல்வம் பிள்ளச்செல்வம்,
அதப்
பேணிக் காப்பாத்துறது
பெத்தவுங்க கடம…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *