மாற்றங்களின் விதை (சிறுகதை)

0

இராகராமன்

காலையில் காலிங் பெல் அடித்து ஓய்ந்தது.

அரைத்தூக்கத்தில் எழுந்து வெளியில் சென்று கதவில் மாட்டி இருந்த மஞ்சள் பையில் பால் பாக்கெட்டுகளை எடுக்கப் போனேன். பால்காரர் “என்ன சார் உங்கள் லிப்ட்ல மட்டும் லிப்ட் பட்டன்களை அழுத்த மரக் குச்சிகளைத் தனியாக வைக்கவில்லை. பட்டன்களை முதுகாலும் கை முட்டியாலும் நெற்றியாலும் அழுத்த எத்தனை கஷ்டமாக இருக்கு” என்று அலுத்துக்கொண்டார்.  மரக்குச்சிகள் காலியாகிவிட்டன போலும்.

வாசக் கதவின் பக்கத்தில் புதிதாக வைக்கப்பட்டு இருந்த வாஷ் பேசினில் ஹாண்ட் வாஷ் மூலம் கையை அலம்பிக்கொண்டு பால் பாக்கெட்டுகளை உள்ளே எடுத்து வந்தேன். ஊரடங்கு அனுபவத்திற்கு அப்புறம் எல்லார் வீட்டிலேயும் வாசல் கதவின் பக்கத்திலேயே வாஷ் பேசின் வைத்துக் கொடுத்த ப்ளாட் ஓனர் மிகத் தங்கமானவர் தான். இல்லையென்றால் அரசாங்க உத்தரவுப் படி நம் செலவில் வாசலில் வாஷ் பேசின் வைக்க வேண்டும். நல்லவேளை கால் அலம்பத் தனியாகக் குழாய் வைக்கவில்லை. வைத்திருந்தால் வீட்டு வாசலே பார்க்க ஒரு மாதிரி தோற்றமளிக்கும்.

பால்பாக்கெட்டுகளை அதற்காக வைக்கப்பட்டிருந்த சோப்பில் நன்றாக அலம்பி வைத்துவிட்டு, திரும்ப படுத்துக்கொண்டு கொஞ்சம் கண்ணயர்ந்தேன்.

அப்பா வாசல் பக்கத்தில் “அய்யோ….. அம்மா……“ என்று கத்தும் சப்தம் கேட்டு உடனே வேகமாக எழுந்து போய் பார்த்தேன். அப்பா வாசல் கதவைத் திறந்து வாசல் பக்கத்தில் வீசப்பட்டிருந்த நியூஸ் பேப்பரை ஆசையோடு எடுத்திருக்கிறார். தற்போது பேப்பர்கள் அனைத்தும் வைரஸ் ப்ரீயாக ஹாட் கேசில் கொதிக்கக் கொதிக்க வருவதால் அவசரப்பட்டு கை பொத்துவிட்டது  “அப்பா கொஞ்சம் வெயிட் பண்ணி ஆறியவுடன் பேப்பரை எடுக்கணும் னு எத்தனை தடவை சொல்றது”. சமாதானப்படுத்திவிட்டு இன்று இனி தூக்கம் இவ்வளவு தான் என்று தேற்றிக்கொண்டு பல் தேய்க்கத் தயாரானேன்.

எதிர்பாராத வகையில் திரும்ப ஒரு சத்தம், கிச்சனிலிருந்து வந்தது.  மனைவி அங்கிருந்து “பால் பாக்கெட் எடுத்து வச்சீங்களே. பாக்கெட்டுகளை சோப்பு போட்டு கழுவினீங்களா? எப்போதும் மறந்துடுவீங்களே” என்று அதட்டல் குரலில் சத்தமாகக் கேட்டாள்.  “எல்லாம் வாசல் வாஷ் பேசின்லேயே கழுவியாச்சு” டக்குனு பதில் சொன்னேன். காலையிலேயே இப்படி எல்லாம் கஷ்டப்படுவோம்னு கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

அதற்குள் காலேஜில் பைனல் இயர் படிக்கும் பையன் “அப்பா! நியூஸ் பாத்தீங்களா? இன்னிக்கு ஒரு நல்ல நியூஸ். “காலேஜ் வரைக்கும் இந்த வருடம் ஆல் பாஸ் தானாம். நல்ல படிச்சவங்கள நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு”  என்றான். எல்கேஜி, யூகேஜி மாதிரி காலேஜ் வரை ஆல் பாஸ் என்றால் எதற்குப் படிப்பு என்று தெரியவில்லை. ரொம்பவும் எல்லோரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

பல்தேய்த்து முகம் கழுவி வருவதற்குள், ஹாலில் அப்பா வழக்கம் போல டிவி யில் நியூசை ஓட விட்டு, பேப்பருக்கு இடையிடையே எட்டிப் பார்த்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தார். பேப்பர் படிக்கிறாரா? அல்லது நியூஸ் பார்க்கிறாரா? இரண்டையும் எப்படி பார்த்துப் புரிந்துகொள்வது என்பது அவரிடமிருந்து தான் படிக்கவேண்டும்.

டிவியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன… விளம்பரங்கள் ஒவ்வொன்றாக ஓடி முடிந்ததும்…….

“இன்றைய தலைப்புச் செய்திகள்.

நாட்டில் நகரங்களில் காற்று மாசு முழுவதுமாக குறைந்து உள்ளதாலும் நதிகளிலும் குளங்களிலும் தண்ணீர் நிறைந்து உள்ளதாலும் கிராம மக்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பு. அமெரிக்கா வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு திரும்ப ஆர்வம்.

உலக அளவில் பெட்ரோல் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டதால் சர்வதேச ஆயில் விலை பீப்பாய் ஒன்றுக்கு ஐந்து டாலராக வீழ்ச்சி.

இந்தியாவில் அனைத்து டீசல் மற்றும் பெட்ரோல் வண்டிகள் புழக்கம் நிறுத்தப்பட்டு எலக்ட்ரிக் வண்டிகளாக மாற்றப்பட்டதால் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் சார்ஜ் நிலையங்களாக மாற்றம்.

டாஸ்மாக் சரக்குகள் அனைத்தும் மாதக் கணக்கில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாலும் மக்கள் முழுவதுமாகக் குடிப்பழக்கத்தை மறந்துவிட்டதாலும் உடன் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த அவசரக் கூட்டம். மந்திரிகள் விரைவு. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தொழில் அதிபர்கள் முதலாளிகளாக உள்ள சரக்கு தயாரிக்கும் கம்பெனிகள்  பெரும் அதிர்ச்சி.

சாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் கிடப்பதால் அனைத்து நாட்களிலும்  மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் பயணிக்கலாம். அரசு உத்தரவு.

எல்லோரும் சோசியல் டிஸ்டான்ஸ் கடைப்பிடிப்பதால் சிறிய ரக வீடுகள் விற்பனையில் கடும் வீழ்ச்சி.

இனி விரிவான செய்திகள்.”

முகத்தை டவலால் துடைத்துக்கொண்டே தலைப்புச் செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருக்கும் போது வாசலில் திரும்பவும் பெல் சத்தம். பக்கத்து வீட்டுச் சாரதி எட்டிப் பார்த்தார்.

“சூடா பேப்பர்ல என்ன போட்டிருக்கான்” கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

“ஒண்ணுமில்லை மாமா” அப்பா காலையில் அவசர அவசரமாக பேப்பரை எடுத்து சூடு போட்டுக்கொண்டதை சொன்னேன். “அதனால தான் நாம் சுடச் சுட நியூஸ் படிக்க முடிகிறது இல்லையா?” என்று சிரித்துக்கொண்டார்.

சரி… சரி…. மாமா நல்ல நேரத்தில் தான் வந்தேள்.  கொஞ்சம் கஷாயம் சாப்பிடுங்கோ.  எங்க வீட்டிலேயும் காப்பி டீ யை நிறுத்தி பல மாதங்களாச்சி. இரண்டு வேளையும் கஷாயம் தான். கொஞ்சம் கசப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அப்பாவுக்கு மட்டும் காபி தனியாக கொடுக்க வேண்டியிருக்கு. “காபி தான் எனக்கு உயிர்” ன்னு அவ்வப்போது மிரட்டுவது பயமா இருக்கு” என்றாள் மனைவி.

காபி சாப்பிடும் அப்பாவைப் பார்க்கும்போது ”கொடுத்து வச்ச மனுஷன்…..” என்று நினைக்கத் தோன்றியது.

கொஞ்ச நேரத்தில் அவள் கிச்சனிலிருந்து தலையை நீட்டி “இந்தாங்க இன்னிக்கு வந்த வாட்ஸ் அப் நியூஸைப் படிங்க” என்று செல்போனை மூஞ்சிக்கு நேரா நீட்டினாள். என்ன தான் கரடியாகக் கத்தினாலும் பக்கத்தில் வந்து அவள் செல்போனை நீட்டியது ஆரோக்கியக் குறைவாகவே இருந்தது. “கீப் சோசியல் டிஸ்டன்ஸ்!” என்று சொல்லி அதை வாங்கி மெசேஜைப் படித்தேன். எல்லா ஐடி கம்பெனிகளும் இனிமேல் ஒர்க் ப்ரம் ஹோம் தானாம். வருடம் ஒரு முறை மஸ்டரிங் மாதிரி ஒரு நாள் வந்து முகத்தை நேரடியாகக் காண்பித்துப் போக வேண்டுமாம். இதைப் படித்ததும் மயக்கமே வந்துவிட்டது. ஒர்க் ப்ரம் ஹோம் வீடுகளில் ஆண்கள் படும் பாடு சொல்லி மாளாது. எதற்கு எடுத்தாலும் “நான் ஆபிஸ் வேலையா இருக்கேன். நீங்களே ஏதாவது சமையல் பண்ணி எனக்கும் வையுங்களேன்..” என்று எல்லார் வீட்டிலேயும் இந்தக் கூத்து தான்.

இந்த நேரத்தில் ப்ளாஷ் நியூஸ் திரும்பத் திரும்ப டிவியில் ஓடியது. அப்படி என்னதான் ஓடுகிறது என்று பார்த்தால்….

”மதுப்பிரியர்கள் வாங்கி வைத்திருந்த பாட்டில்களை கோபத்தில் குப்பைத் தொட்டியில் போட்டு உடைத்ததால் அதை குடித்த தெரு நாய்கள் ஆட்டம் போட்டு மட்டையாகின.”

“டிவி காரனுக்கு வேற வேலை இல்லை. இது ஒரு ப்ளாஷ் நியூசா” என்று அப்பா தலையில் அடித்துக்கொண்டார். அடிக்கடி ப்ளாஷ் நியூஸ் வருவதால் மெயின் நியூஸ் என்ன? என்பதை தேடித்தான் பிடிக்கவேண்டும்.

இதற்குள் காலையிலேயே குளித்துவிட்டு, கோவிலுக்குச் சென்று திரும்பி வந்த அம்மா தானும் சேர்ந்துகொண்டு தன் பிரச்சினையைச் சொன்னாள்.

“ஏன்டா கோவில்லே அடிக்கிற கூத்து தாங்க முடியலைடா.  சோஷியல் டிஸ்டன்ஸ் என்று ஆறு அடிக்கு ஒருவர் நிற்கறதாலே கியூ இரண்டு மைல் தூரம் நீள்றது… ஒருத்தருக்கு ஒருத்தர் எதுவும் பேச முடியவில்லை. மணிக் கணக்காக நின்று உள்ளே போனா பட்டாச்சாரியார் துளசியை அஞ்சடி தூரத்திலிருந்து தூக்கி எறியறார். தீர்த்தம் வெளியிலே குழாய்ல வரும், வாயைத் திறந்தால் இரண்டு சொட்டு விழும்” ங்கிறார். நல்லவேளை தேங்காய் கொண்டு வர தடை விதிச்சதுனால நல்லதாப் போச்சு… அதையும் தூக்கிப் போட்டுப் பிடிச்சுக்குங்க என்று சொன்னால்……. நினைக்கவே பயமா இருக்குடா”. அம்மா அலுத்துக்கொண்டாள்.  “சாமியையும் அம்பாளையுமே சோஷியல் டிஸ்டன்ஸ் என்று சொல்லி அஞ்சடி தள்ளித் தள்ளித் தான் வெச்சுருக்கா…. அப்பத்தான் நமக்கெல்லாம் ஒரு தெளிவு பிறக்கும் என்று சொல்றா…..எல்லாம் காலத்தின் கோலம்….” அம்மா சொல்லி வருத்தப்பட்டாள்.

அதற்குள் இன்னொரு பெல். வாசலில் காலிங்பெல் இரண்டு மூன்று முறை ஒலித்தது. என்னவென்று திறந்து பார்த்தேன். முகத்தில் கருப்புக் கலரில் இரண்டு பக்கமும் மண்டையோடு படம் போட்ட மாஸ்க் போட்டுக்கொண்டு இரண்டு பேர். திருட்டுக் கும்பலோ என்று ஒரு கணம் பயந்து உடம்பு வேர்த்துவிட்டது. மாஸ்க் போடுவதால் வந்திருப்பவர் யார் என்று தெளிவாக முகம் தெரிவதில்லை. அதுவும் மாஸ்க் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு என்னென்னவோ படம் போட்டு மாஸ்க் தயாரிக்கிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது.

நானும் உள்ளே சென்று மாஸ்க் போட்டுக்கொண்டு வந்தேன்.

ஆன்லைனில் ஒரு பெரிய மளிகைப் பொருட்கள் ஒரு அட்டைப் பெட்டியில் வந்திறங்கியது. அத்துடன் ஒரு ரோஸ் கலர் ஐந்து லிட்டர் கேன் இருந்தது.  “என்ன இது?….. ஹாண்ட் வாஷ் 5 லிட்டர் கேன் நான் கேட்கவே இல்லையே?…. இதை எதற்காகக்  கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“சார்.. நீங்கள் இரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு ஆர்டர் செய்திருக்கிறீர்கள்…இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தால் அஞ்சு லிட்டர் ஹாண்ட் வாஷ் கேன் இலவசம்” என்று கூறிய போது தலை சுற்றியது. குடும்ப பட்ஜெட்டில் இப்போது இவற்றுக்குத் தான் அதிகச் செலவாகிறது.

“இதைப் பார்த்தே யோசிக்கிறீங்களே…..இதுவே உங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தான் வரும்…குறைஞ்சது ஒரு நாளைக்கு இருபது முறையாவது கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்..” என்று கூடவே வழக்கமான அட்வைஸ் பண்ணி விட்டு நின்றுகொண்டிருந்தான்.  கைகளை சோப்புப் போட்டு கழுவிக்கொண்டு டெபிட் கார்டில் பணம் கொடுத்தேன். சோஷியல் டிஸ்டன்ஸ் என்பதால் ஐந்து அடி தள்ளி இருந்து கார்டை அவர்கள் பாக்கெட்டை நோக்கிக் காட்டினால் அவர்கள் பாக்கெட்டில் உள்ள மெஷினில் பணம் டெபிட் ஆகி எனக்கு மெஸேஜ் வந்துவிட்டது… “என்னென்ன மாற்றங்கள் இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட வைரஸால் ஏற்பட்டுவிட்டன? என்று நினைத்து அசந்து போய்விட்டேன்.

நமது முன்னோர்கள் ஆச்சாரம், சுத்தம், சுகாதாரம் என்று குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்தி அடித்துக்கொண்டவையே இவை என்பதை நினைக்கும் போது காலச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதையும் எண்ணிப் பார்த்தேன்.

திடீர் என்று ஓடிக்கொண்டிருந்த மின்விசிறிச்  சப்தம் நின்றது. உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது. மனைவி “என்ன….இவ்வளவு நேரம் தூங்கினது போறாதா? எழுந்திருங்க” என்று தண்ணியைக் கொட்டாத குறையாக, மின்விசிறியை “டொக்” என்று அணைத்துவிட்டு நான் எழுந்திருப்பதற்குக் காத்திருந்தாள்.

“இவ்வளவு நேரம் கண்டது கனவா?”

கனவில் கண்ட மாற்றங்கள் முழுவதுமாக எப்போது வரும்? என்று சிரித்துக்கொண்டே கொலைகார வைரஸ்- க்கு மனதார ஒரு கும்பிடு போட்டேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *