கவியோகி வேதம் 

“ஊறுகாய்?’ என்றாள்—ஊறியது குஷியும்!!
ஊறுதே அம்மாவின் அன்றைய நினைவுமே!!
ஊறுகிற நாக்கில் அவள்செய்த நெல்லிபதம்
ஓட்டியது வயிற்றுளே கற்சட்டிச் சாதமே!

தயிர்சாதம் என்றால் எலுமிச்சை, மிளகாய்
தழைந்த இஞ்சியுடன் இட்டாலே போதுமே!
அயனான பொங்கலும் மாகாணி ஊறுகாயின்
அடிதொட்டால், நாக்கில் அப்படியே செல்லுமே!

எண்ணெய் மாங்காயாம் கார  ஊறுகாய்!
எந்தஓர் விருந்திலும் நண்பரைக்  கூட்டுமே!
துண்டுபல கடித்தே சுவைத்து ரசிப்பமே!
தூயசின்னப்   பிள்ளைகளாய்   மாறியே   நிற்பமே!

வடுமாங்காய் என்றாலே  எச்சில்  வழியுமே!
வக்கணையாய் எச்சாதமும் நிறையப் போகுமே!
கொடுகொடு எனப்பாலர் கைகள் நீட்டியே
கொட்டமடித்  துண்ணஒரு ஜமா சேருமே!!

மாகாணி என்ற ஒரு  அதிசய  ஊறுகாய்!
மாகாளி  நேர்வரினும்  எங்கே? என்பாளே!!
வேகாத வெயிலிலும் சாதம் கூடையாய்
வெட்டிடவே காரமுடன் நாக்கில் நிற்குமே!

நெல்லிக்காய்  ஊறுகாய் நாவிலே   ஊறுமே!
நிறையவே  மனத் தினில் உற்சாகம் சேருமே!
கொல்லுமந்த  கோங்குரா சட்னி என்றாலே
கொண்டுவா  ஒருசட்டி  சாதம்  என்னுமே!

எத்தனையோ  விதமாந்தர்  தமிழ் நாட்டில்  உண்டடா!
எத்தனையோ ஊறுகாயும்  ருசிப்பதற்கே –  உண்டடா!
அத்தனையும்  தாய்மார்தம்  கற்பனையின் சுவையடா!
அன்னையின் கைகளுக்கே  தனிருசி  உண்டடா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *