அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

0

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலகம் கொள்ளுப்பிட்டியில். 1973-1975 காலப் பகுதியில் திரு பேரின்பநாயகமும் நானும் அங்கு வாரம் ஒரு முறையாவது செல்வோம்.

தலைவர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான், செயலாளர் திரு செல்லச்சாமி இருவரையுமோ அல்லது ஒருவரையோ சந்தித்து வருவோம். அக்காலங்களில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர்.

திரு சௌமியமூர்த்தி தொண்டமான் வாழ்ந்த காலங்களில் அவர் வழிவந்த திரு ஆறுமுகம் தொண்டமான் எனக்கு அறிமுகமானார்.

1994 இல் சந்திரிகாவின் அமைச்சரவையில் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்தார்.

சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு மருத்துவராக இருந்த என் அருமை நண்பர் என்னை அழைத்தார். அமைச்சர் தொண்டமான் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் எனச் சொன்னார்.

மருத்துவர் கீழ்ப்பாக்கத்தில் இருந்தார். எனவே அவரிடம் நேரே போனேன். அங்கே திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார்.

சென்னை புரசைவாக்கத்தில் மேனாள் காங்கிரசு அமைச்சர் திருமதி அனந்தநாயகி அவர்கள் இல்லத்தில் அமைச்சர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் தங்கியிருப்பதாகவும் அங்கு வர முடியுமா? எனவும் திரு ஆறுமுகம் என்னிடம் கேட்டார்.

இருவருமாகச் சென்றோம். சீனா – பிரித்தானியா அரசுகள் பேசிக் கொண்டிருந்த காலம். ஒங்கொங்கு தீவின் எதிர்காலம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. சீனாவின் பகுதியாக ஒங்கொங்கு மாறும். ஆனால் ஒங்கொங்கு தனது தனித்துவத்தைப் பேணும் என்ற வகையில் தீர்வுகளை நோக்கி வரைவுகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தொண்டமான் என்னிடம் கூறினார்.

அதை ஒத்த தீர்வு ஒன்றினை இலங்கையிலும் ஏற்படுத்தலாம் எனத் திருமதி சந்திரிகாவுடன் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் அமைச்சர் தொண்டமான் கூறினார்.

பிரபாகரனின் ஒப்புதலைப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமைச்சர் தொண்டமான் கருதினார்.

பிரபாகரன் இதற்கு ஒப்புவாரா? அல்லது இத்தகைய பேச்சுவார்த்தையை நோக்கித் தாம் முன்னெடுத்தால் பிரபாகரன் சார்பில் கலந்து கொள்வார்களா? என்றெல்லாம் அமைச்சர் தொண்டமான் என்னிடம் கேட்டார்.

வெளியே வந்த நான் திரு பழ. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் இருவரையும் சந்தித்துத் திரு தொண்டமான் சொன்ன முன்மொழிவுகளை எடுத்துக் கூறினேன்.

அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று திரு தொண்டமான் உடன் பேசலாமா? என கேட்டேன்.

திரு பழ நெடுமாறன் வருவதற்கு ஒப்புக்கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பிரீசு விடுதியில் அமைச்சர் தொண்டமானைச் சந்தித்தோம். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

என்னிடம் கூறிய அதே செய்தியை அமைச்சர் தொண்டமான் திரு பழ நெடுமாறனிடம் கூறினார். தனது முன்மொழிவுகள் தொடர்பாக ஆதரவான கடிதமொன்றைத் திரு பிரபாகரனிடம் பெற்றுத் தர முடியுமா என அமைச்சர் தொண்டமான் கேட்டார்.

முயற்சி செய்யலாம் எனக் கூறித் திரு பழ நெடுமாறனும் நானும் வெளியே வந்தோம். திரு பிரபாகரனிடம் இது தொடர்பாகப் பேசும் பொறுப்பைத் திரு பழ நெடுமாறன் ஏற்றுக்கொண்டார்.

சில வாரங்களின் பின் திரு பிரபாகரனிடம் இருந்து கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து திரு பழ நெடுமாறன் என்னிடம் கொடுத்தார். அமைச்சர் தொண்டமானிடம் சேர்க்குமாறுகூறினார்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை அமைச்சரவையில் தொடருங்கள். அமைச்சரவையில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுங்கள் என்ற கருத்து அந்த ஆறு வரிக் கடிதத்தில் இருந்தது.

கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவரிடம் நேரில் சென்று செய்தி சொன்னேன்.

1991 க்குப் பின் தமிழகம், ஈழத்தமிழர் தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு அளிக்க முடியாத நிலையில் இருந்தது. இந்திய அளவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் சட்டம் இருந்தது.

1991 இராசீவரைச் சந்திக்கச் சென்றமை தொடர்பாக மல்லிகையில் என்னையும் சேர்த்து விசாரித்துக் கொண்டிருந்த காலம்.

விடுதலைப்புலிகள் தலைவர் திரு பிரபாகரன் தந்த கடிதம் என் இல்லத்தில் இருந்தது. மருத்துவருக்கு மட்டுமே விவரம் தெரியும். திரு பழ நெடுமாறனுக்கும் விவரம் தெரியும்.

ஒரு வாரம் கழித்து மருத்துவர் என்னை அழைத்தார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்றார். கடிதத்துடன் சென்றேன். அங்கு திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார். அவரிடம் கடிதத்தைக் கையளித்தேன்.

அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை அறியேன்.

1996ஆம் ஆண்டு மொரிசியசு நாட்டுத் துணைப் பிரதமர், எனக்கு அருமை நண்பர் திரு பெரஞ்சே என்னை அழைத்தார். தனது கட்சியின் வெள்ளிவிழா அந்த ஆண்டு நடைபெறுவதாகவும் இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர் ஒருவரை அழைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார்.

அடுத்த வாரம் கொழும்பு செல்ல உள்ளேன். வேறு ஒரு பணிக்காகச் செல்கிறேன் அங்கு உள்ளோரிடம் உசாவிப் பதில் சொல்கிறேன் என அவரிடம் கூறினேன்.

கொழும்பு சென்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமை அலுவலகக் கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அமைச்சர் தொண்டமான் சிறிய அலுவலகத்தில் இருந்தார். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

மொரிசியசுத் துணைப் பிரதமரின் செய்தியைக் கூறினேன். போய் வருவீர்களா? எனக் கேட்டேன். நாடு, அங்குள்ள அரசியல் நிலைமை, கட்சியின் கொள்கை, விழாவின் இயல்பு, என என்னிடம் விவரங்கள் கேட்டார்.

அங்கிருந்தே மொரிசியசுத் துணை பிரதமருக்கு அழைப்பு எடுத்து இருவரையும் இணைத்தேன்.

கட்சியின் பெயர் Mauritius Militant Movement. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் அங்கு இருந்தார். Militant என்ற பெயர் இருப்பதால் அதுவும் விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்பாக இருக்குமோ என என்னிடம் வினவினார்.

ஆட்சியில் உள்ள கட்சியினர் அழைக்கிறார்கள் என திரு ஆறுமுகம் தொண்டமான் எடுத்துச் சொன்னார்.

திரு பிரஞ்சே அழைப்பை ஏற்ற திரு தொண்டமான் மொரிசியசு சென்றார். வெள்ளி விழாவில் கலந்துகொண்டார். சிங்கப்பூர் வழியாகச் சென்று மீண்டார்.

நேற்று இரவு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் என்ற செய்தி அறிந்ததும் என் கண்கள் பனித்தன. மூத்த தொண்டைமானைப் போலவே இவரும் ஈழத் தமிழர் நலனில் மிக்க ஈடுபாடு உடையவர்.

அவரோடு பழகிய நாள்கள் நெஞ்சில் நினைவு அலைகளாக மோதுகின்றன. இனிமையான பொறுப்பு வாய்ந்த மனிதநேயமிக்க ஒருவரை இழந்து வாடும் இல்லத்தார், செந்திலார், சீவகனார், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார், மலையக மக்கள் யாவருக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *