இலக்கியம்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி – 260

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (31.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (8)

 1. Avatar

  எமையாளும் இறையிடம்
  சுமையாளன் கேட்கும் வரம்.

  தொடர் வண்டி ஓட்டம் துவங்கிட்டால் எம்
  இடர் வண்டி ஓட்டம் தடைபடும் விரைவாக
  படர் தீ நுண்மி தொற்றினி எமை தொடராது
  சுடர்மிகு இறையே சூழ்ந்தெம்மைக் கா.

  ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்
  கோவை

 2. Avatar

  ஐயம்
  உலக மக்கள் தொகையில்
  இலகுவாக இரண்டாவது
  தொடர் வண்டி துறையில்
  இடர்களுக்கிடையில் நான்காவது…

  இருப்புப் பாதை நீளம்
  பொறுப்பில் தடம் புரள
  நீண்டது ஆண்டுகளே
  கண்டது துண்டுகளே

  ஆண்டொன்றுக்கு ஐநூறு கோடி பயணிகள்
  அன்றாடம் பயணிக்க வளர்ச்சி
  நன்றாக பயணிக்காது போனால்
  நன்றாக சுரண்டல்கள் எங்கோ??

  ஆண்டுகள் நூற்று அறுபத்து ஏழு
  தண்டவாளம் தேய்ந்து இந்திய விவசாயியாய்
  வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினால்
  தண்டவாளங்கள் புத்துயிர் பெறுதலே நலம்

  கடமை தவறாத ஊழியர்கள்
  கடமை தவறாத நிர்வாகம்
  நாணயம் தவறாத பயணிகள்
  நானிலத்தில் ஏன் பின் தங்கல்???

  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
  பசி பட்டினியால் தவித்த சீனா
  தன்னிறைவில் அபரிமித வளர்ச்சி
  சாதாரண விசயம் தானா

  மக்கள் நலனில் அக்கறை இருந்தால்
  சர்வாதிகார ஆட்சி உத்தமம்
  உலகிற்கு சீனா புது பாதை
  இலகுவாக காட்டுகிறதோ???

  உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு
  பெருமை மக்கள் நலத்தில் வளத்தில்
  அதிக சுதந்திரம் தனிமனித உயர்வுக்கும்
  தேச வளர்ச்சிக்கும் என்றானால் நலம்

  பசிக்கும் பிணிக்கும் மூலமே
  ஜனநாயகம் நாயகம் எனில்
  தாயகம் தாங்குமா???

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

  திருத்தம்……..ஐநூறு பயணிகள் …தவறு..
  ஐநூறு கோடி பயணிகள்……..சரி

 3. Avatar

  கண்துடைப்பு
  மாறு வேட காவலன் நான்
  தாறு மாறாய் ஒரு தறுதலை
  ஆறு மாதாய் தப்பித்தலில்
  வேறு விதமாய் பிடிக்கவே

  ஆளுங்கட்சி செல்வாக்கு
  உள்ளூர்வாசி சொல்வாக்கு
  கண்டுக்காத காவல்துறை
  கண்துடைப்பாக அக்கறை

  வயித்து பொழப்பு இப்படி ஓர் கூத்து
  அங்கு தேடினேன் இங்கு தேடினேன்
  எங்கு தேடியும் கிடைக்கலை என்று
  பங்கிற்கு கோப்பில் சேர்க்கனும் நன்று

  பல லட்சிய கனவுகளில் சேர்ந்தவன்
  பல லட்சம் காண்பவர்களின் அலட்சியம்
  பலமாக பாலமாக உள்ள துறை
  பாவமாக பரிதாபமாக ஆள்பவர்களால்

  பொய்யும் புரட்டும் எல்லாத் துறைகளில்
  நீதி நேர்மை நொண்டிக் குதிரையில்
  ஊரோடு ஒத்துவாழ் கட்டியவள் கட்டளை
  சீரோடு வாழ உயிரோடு வாழ என்றாள்

  ஒருகாலத்தில் சத்தியத்தின் செல்லப்பிள்ளை
  இலாகாவிலோ எடுப்பார் கைப்பிள்ளை
  இரத்தம் சிந்தியதால் எடுத்த முடிவு
  இரத்த பந்தம் காண வேண்டும் விடிவு

  பொறுப்பில்லாத மக்கள்
  பொறுப்பில்லாத அமைப்பு
  பொறுப்பின்மை
  பொறுப்பின்மைக்கே
  பொறுப்பினைத் தந்தால்
  வெறுப்பும் விரக்தியும்
  அழையாத விருந்தாளிகள்

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

 4. Avatar

  எப்போது…

  இணையாமலே இருந்து
  மக்களையும் மாநகரங்களையும்
  இணைத்த தண்டவாளங்கள்
  இப்போது
  ஓய்வெடுக்கின்றன,
  ஓடாததால் ரயில்..

  கொரோனாவால் வந்த
  கோளாறு தீர்வதெப்போது
  என்ற
  கேள்விதான் இப்போது..

  தொற்றுப் பயத்துடன்
  கெடுபிடிகள்
  சற்றுத் தளரந்த நிலையில்
  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன்
  புறப்படுகின்றன சில ரயில்கள்..

  எல்லோரும்
  செல்லும் நாள்
  என்று வருமோ…!

  செண்பக ஜெகதீசன்…

 5. Avatar

  தொழிற்சங்களின் அவல நிலை

  தொழிலாளர் களுக்குள் ஒருவரே தலைவர்
  தொழில் வளம் செழிக்கும் நலம் பயக்கும்
  தொழிலே தெரியாதவன் தலைவர் எனில்
  தொழிலும் பாழ் தொழிலாளியும் பாழ்

  சங்கத்தின் ஆண்டு விழா
  சங்க வளர்வோ தேய் நிலா
  தலைமை தாங்க வரும் பாலா
  வராது தவிக்கிறேன் குணபாலா

  இரவெல்லாம் தந்த போதை
  இருக்கலாமோ இன்னும் மீதை
  இறங்கி வந்தால் தரலாம் தலைமை
  கிறங்கி வந்தாலும் தரும் நிலைமை

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

 6. Avatar

  படக்கவிதை போட்டி எண் – 260

  பயணம் முடித்து வருவோரின்
  சுமைகளை இறக்கியேற்றி
  பயணம் ஆரம்பித்து செல்வோரின் சுமைகளை ஏற்றியிறக்கி
  சிந்திய உன் வியர்வையின் குறுதியின்
  வர்ணம் உன் மேலங்கியின் நிறம்

  நீ புலம்பெயர்ந்தவனா?
  இல்லை இங்கேயே பிறந்து வாழ்பவனா?
  எனக்கது தேவையில்லை
  நீ மண்ணின் மைந்தன்
  உழைப்பின் அடையாளம்
  உன்னைக் காக்க மாட்டோமா நாங்கள்?
  கவலையை விடு
  நோய்த் தொற்றில் சிக்காதே
  வண்டிகள் ஓட ஆரம்பித்து விட்டன
  தயாராக இரு
  அடுத்து பயணிகள் சுமையை கையாள்வதற்கு சகோதரா!!
  உன் உடலினைப் பலப்படுத்து
  உறுதியை மனதிலேற்று!!
  உழைப்பே உயர்வு!!

  சுதா மாதவன்

 7. Avatar

  இடிதாங்கி மனிதர்கள்

  நிற்க நேரமின்றி
  பிறர் பாரம் தானேற்று
  வயிறு நிரப்பும்
  சுமைதாங்கி மனிதர்கள்

  கொடும் நுண்ணயிரியால்
  தடைக்காலம் கண்டமையால்
  தடம் பார்த்து நின்றுகொண்டு
  விடைதேடும் வீரர்கள்

  தொடருந்து போல
  துயரங்கள் தொடர்ந்தாலும்
  தப்பியோடும் மார்க்கமில்லா
  இடிதாங்கி மனிதர்கள்….

 8. Avatar

  காத்திருப்போம் காலம் வரும்

  காலை முதல் இரவு வரை கலகலப்பாய்ப் பயணிகளுடன்
  காட்சியளித்த எம் இரயில் வண்டியே என்ன ஆயிற்று இன்று
  காத்துக்கிடந்தோம் கவலையுடன் உன் ஆரவாரம் கேட்க
  கடைசியில் வாயடைத்த தொழிலாளர்களின் வயிற்றலிடித்து
  கூட்டிச் சென்றாயாமே குடிநீரும் இல்லாது நெடுந்தொலைவு
  கடுகளவும் நம்பவில்லை நான் அச்செய்திகளை
  காலம்காலமாய்ப் பயணிகளை உமிழ்ந்தும் விழுங்கியும்
  கொடும் வயிற்றுப்பசி போக்கும் உனக்கு பசிவருத்தம் தெரியாதா
  காரணமின்றி உன்னுள் பயணிகளை இடைவெளி விட்டு அமர்த்தியதாகக்
  கவலைப்படாதே இணையாத இடைவெளியாம் உன் பாதைபோல்
  கிடக்காது விரைவில் தீரும் இப்பிரச்சினை உன்னோடிணைந்து
  கூட்டத்தோடு கலந்து பயணிகளின் சுமை தாங்கிய எம்
  காலமும் இவ்வளவு நாளும் காலனுக்கு இரையாகிப் போனது
  கொரோனா எனும் கொடும் தொற்றின் வரவால்
  காலங்காலமாய்ப் பலரை வாழவைத்த நீ வருந்தாது
  குதூகலத்துடன் கிளம்பிச்செல் நான் சென்று காபி விற்கும் அண்ணனிடமும்
  கைமுறுக்கு விற்கும் அக்காளிடமும் சொல்லிவருகிறேன்
  கொரோனாவை விரட்டிய பின் ஒருங்கே தொடர்வோம் நம் பயணத்தையென.

  -நாங்குநேரி வாசஸ்ரீ

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க