நாங்குநேரி வாசஸ்ரீ

24. கூடா நட்பு

பாடல் 231

செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், – கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கருமம் முற்றும் துணை.

கரிய மலைகளிலே மிகுந்த அருவிகள்
கொண்ட மலைநாட்டு அரசனே!
கட்டு இல்லாப் பழைய கூரை வீட்டிலே
மேலிருந்து விழும்நீரைப் பாத்திரத்திலேந்தியும்
மழைநீர் உட்புகாவண்ணம் சேற்றினால்
வாகாய் அணைகட்டியும் புகுந்த நீரை
வெளி இறைத்தும் தம் காரியம் முடியும்
வரை நம்முடன் இருந்து பின் நீங்கும்
வகையாரின் நட்பு இனிதன்று..

பாடல் 232

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் – மாரி
வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு.

வெண்அருவிகளுடை நாட்டின்
வேந்தனே! உயர்ந்தவர்களின்
நட்பு மேலான சிறப்புடையதாய்
நல்ல மழைபோலும் பயனுள்ளதாம்.
நற்குணமற்றோர் நட்புமிகுந்தால்
மழையற்ற வறண்ட காலம்போல்
மோசமான பயனற்றதாய் அமைந்துவிடும்.

பாடல் 233

நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் – நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.

நுட்ப அறிவுடையாருடன்
நட்பு செய்து பயன் அனுபவித்தல்
மேலோகத்து இன்பம்போல்
மேன்மையுடையது நுட்பமான
நூலறிவில்லாப் பயனற்றவருடன்
சேர்தல் நரகங்களுள் ஒன்றைச்
சார்ந்ததுபோல் துன்பம் தரத்தக்கது.

பாடல் 234

பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் – அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
பந்தமி லாளர் தொடர்பு.

பக்கங்களிலெல்லாம் சந்தனச் சோலை
பெருகிக்கிடக்கும் மலைநாட்டு மன்னனே!
அன்பு இல்லாதவருடன் கொண்ட நட்பு
அளவிற்பெருகி வளர்வது போலத்தோன்றி
அதன்பின் கணப்பொழுதும் நில்லாது கெடும்.

பாடல் 235

செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் – மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.

செய்ய முடியாத செயலையெல்லாம்
செய்வோம் எனச் சொல்லலும்
செய்யமுடிந்ததைச் செய்யாமல்
சந்தியில்விடுத்து காலம் கடத்தலும்
சத்தியமாகவே இன்பத்தை வெறுத்த
சந்நியாசிகளுக்கும் அப்பொழுதே
சங்கடத்தை விளைவிக்கும்.

பாடல் 236

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.

ஒரே குளத்தில் தோன்றி
ஒன்றாகவே வளர்ந்தாலும்
மணம்வீசும் குவளைக்கு அல்லி
மலர் ஒப்பாகா சிறந்த குணம்
பொருந்தியவரின் நட்பைப்
பெற்றினும் நற்குணமில்லாதார்
செயல் வேறுபடும்.

பாடல் 237

முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

முதிராத சிறு குரங்கு எதிரே தன்
முன் வந்த தந்தையாகிய பெரும்
குரங்கை பயற்றம் நெற்றைக்
கண்டாற் போலும் விரல்களால்
கையை முறுக்கிக் குத்தி
கனியைப் பறித்துக்கொள்ளூம்
மலைநாட்டுடை மன்னனே!
மனம் பொருந்தாதவரின் நட்பு
மகிழ்ச்சியளிக்காது.

பாடல் 238

முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் – நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
நெடுமொழி வையம் நக.

என் நண்பன் துன்புற்றபோது விரைந்து
என் ஆருயிரை அவன் கையில்கொடுத்து
அவன் துன்பத்தைக் களையாவிடின்
அதிகப் புகழுடை இவ்வுலகம் சிரிக்குமாறு
அவன் மனைவியைக் கற்பழித்த பாவி
அடையும் நரகத்திற்கு நான் செல்வேனாக!

பாடல் 239

ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ – தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.

தேன்கூடுகள் சேர்ந்த மலைநாட்டு மன்னனே!
தக்க நன்மையை அறிவாரோடுள்ள நட்பை
நீக்கி அற்ப அறிவுடையாரோடு கொண்ட
நட்பு பசுநெய் ஊற்றும் பாத்திரத்தில் அதை
நீக்கி வேப்பெண்ணெயை ஊற்றினாற் போலாம்.

பாடல் 240

உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
விரிபெடையோடு ஆடிவிட் டற்று.

அழகுடையவனிடத்தில் உதவும் குணம் இல்லாமை
அருந்துவதற்கு வைத்த பாலில் நீர் கலந்தது போலாம்
அறிவுடையோர் தீயோரைச் சார்ந்து கெடுதல்
அரும் நாகம் பெட்டைவிரியனுடன் புணர்ந்து
ஆருயிர் நீத்தது போலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *