செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

1

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீவித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு.
ramachandran.ta@gmail.com

உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ரா என்று அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவரின் பள்ளிப் படிப்பும் குடும்பச் சிக்கலும் யதார்த்த சமூகச் சூழலும் பிற்கால வாழ்க்கைச் சிந்தனையைக் கட்டமைத்தன. குழந்தைப் பருவமே ஒரு மனிதனை உருவாக்கும் என்பதற்கு இவரின் வாழ்க்கை, சிறந்த உதாரணமாகும்.

ஆண்டன் செகாவ் தனது வாழ்க்கையை இரண்டு தளங்களில் பிணைத்துக் கொண்டார். ஒன்று அவரின் மருத்துவப் பணி. மற்றது இலக்கியப் பணி . இதனைச் செகாவ் ‘மருத்துவம் எனது மனைவி’ என்றும் ‘இலக்கியம் எனது காதலி’ என்றும் கூறியுள்ளார்.

செகாவின் இத்தகைய வாழ்க்கையை மிகைபடாமல் யதார்த்தமாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இவரின் வாழ்வியல் தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது கூடுதல் வலிமை சேர்க்கிறது. 1890ஆம் ஆண்டுகளின் ரஷ்யாவையும் அம்மக்களின் வாழ்வியல் மாற்றங்களையும் இதனூடாகக் காண முடிகிறது. மேலும் மிகத் தெளிவான வாசிப்பு அனுபவத்தையும் வழங்குகின்றது.

செகாவின் ஆளுமை என்பது பன்முகத்தன்மைக் கொண்டதாக இருந்துள்ளதை மிக நேர்த்தியாகக் கூறியுள்ளார். பள்ளி நாட்களில் நாடகத்தின் மேல் அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. என்றாலும் சிறுகதை எழுத்தாளராகவே அறியப்பட்டார். பிறகு நாடக முயற்சியில் ஈடுபட்டு முதலில் தோற்றாலும் பிறகு புகழ் பெற்ற நாடகங்களை எழுதி, புகழின் உச்சங்களைத் தொட்டார்.

செகாவின் தந்தை, உலகின் விளிம்பு நிலை மக்களின் துன்பங்களை உணரும் வாழ்வியல் சிந்தனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் காரணமாக ஏழைகள், உழைப்பாளர், பணமற்றவர், விவசாயிகள் இவர்களின் மருத்துவர் என்று பெயரெடுத்து இயல்பான வாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட சூழல் நிலையை எடுத்துரைக்கிறது இந்நூல்.

அனைத்துச் சகிப்புத்தன்மைகளோடும் விட்டுக் கொடுத்தலோடும் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் அவமானம், ஏமாற்றம், இழப்புகள் என்று வாழ்க்கையின் வெறுமைக்கே சென்றுவிட்டவர் செகாவ்.

காசநோயால் பாதிக்கப்பட்டாலும் அதனைப் பற்றி ஒருபோது கவலைப்பட்டதில்லை. ஆனால் வாழ்க்கையில் அவர் சந்தித்த முரண்பாடுகளும் மனைவியின் புறக்கணிப்பும் அவருக்கு மனத்தளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சமகாலத்தில் வாழ்ந்த டால்ஸ்டாய், புனின் போன்றவர்களின இலக்கியப் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தளத்தில் இயங்கினார் செகாவ். டால்ஸ்டாய் – செகாவ் உரையாடலை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. செகாவின் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்கள் ரஷ்யாவின் சமூக முரணையும் ஏற்றத் தாழ்வையும் மாறி வரும் சமூகப் போக்கையும் விரிவாக எடுத்துக் கூறின.

காலரா நோயால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, ஏழை மக்களைப் பாதுகாக்கத் தீவிரமாகச் செயல்பட்ட அவரின் மனித நேயப் பண்பையும் ஷகிலின் தீவில் தண்டனைக் கைதிகள் கொடூரமாக நடத்தப்படுவதைக் கேட்டு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, அரசுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதியதும் இந்நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதநேயத்தை நோக்கிய செயல்பாடாகத் தனது கதைகளை முன்னெடுத்த செகாவ், மனித குலம் இருக்கும் வரை வாழ்ந்து வருவார். உலகச் சிறுகதையின் தந்தை செகாவ், தனது எழுத்துகளால் வாழ்க்கையின் அடிநாதத்தைப் பிடித்து, அன்பெனும் பேரிசையை மீட்டிய கதை இது. அனைவரும் படிப்போம், வாழ்க்கையின் சாரத்தை உணர்வோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

  1. மிக அருமை ஐயா வணக்கம்
    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *