நாலடியார் நயம் – 26

நாங்குநேரி வாசஸ்ரீ
26. அறிவின்மை
பாடல் 251
நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; – எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.
பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு இழந்த
பேடியும் கண் விரும்பிக் காணத்தக்க அணிகளை
அணியாளோ? ஆராய்ந்தால் நுட்பமான
அறிவின்மையே உண்மையில் வறுமையாம்
அது உடைமையே மிகப்பெரும் செல்வமாம்.
பாடல் 252
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்லல் உழப்பது அறிதிரேல் – தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
பூவின் கிழத்தி புலந்து.
பலவித நிறைந்த கேள்விகளின்
பயனை உணர்ந்த நல்லறிஞர்
தம் பெருமைகெட்டு வறுமையால்
துன்புறும் காரணம் அறிய விரும்பினால்
கூறுகிறேன் கேளுங்கள்! பழஞ்சிறப்புடை
கலைமகள் வாசம் செய்தலால் பூவில் உறையும்
திருமகள் வெறுப்புற்று அந்நல்லவரிடம் சேராள்.
பாடல் 253
கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் – மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
தந்தை கல்வி கற்கச் சொல்லியும் அச்சொல்லைத்
தள்ளி மதியாது கல்லாமல் இருந்தவன்
பலர் முன் மெதுவாய் எழுத்தோலையைப்
படிக்கச் சொல்லி நீட்டும்நேரம் வெகுண்டு
தாக்கத் தடிகோலைக் கையிலெடுப்பான்.
பாடல் 254
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு – மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
கல்வி கற்காமலேயே வளர்ந்த ஒருவன்
கற்ற நல்லறிவாளர் அவைபுகுந்து
சும்மா இருந்தாலும் நாய் இருந்தது போலாம்
சும்மாயிராது பேசினும் நாய் குரைத்தது போலாம்.
பாடல் 255
புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் – கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
அறிவோடு பொருந்தாப் புலவர்
அவையில் புகுந்து தாம் கல்லாததையும்
அற்பர் எடுத்துரைப்பர் தாம் கற்றதைக்கூட
அடுத்தவர் கேட்டால் பொருளோடு பொருந்தாது
அமைந்துவிடுமோ என எண்ணி
ஆராய்ந்து சிந்திக்காது சொல்லார்
அறிவுடையார்.
பாடல் 256
கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி.
நூல்களைப் படித்து உட்பொருளை அறிந்த
நாவினையுடைப் புலவர் பேசினால் பிழை
நேருமோ எனப் பயந்து கண்டபடி பேசார்
நூலறிவற்றவர் மனம்போனபடி பேசுவர்
நன்குயர்ந்த பனைமரத்தின் உலர் ஓலைகள்
நாளும் கலகலவென ஒலி எழுப்பும்
நல்ல பச்சை ஓலை எப்போதும் ஒலிப்பதில்லை.
பாடல் 257
பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகும் செவிக்கு.
பன்றியின் கூழ்வார்க்கும் தொட்டியில்
பழுத்தினிக்கும் மாங்கனிச்சாற்றை ஊற்றுவது
போலாம் நன்மையறியா மாந்தரிடம் நல்லறவழி
பற்றிப் பேசுதல் குன்றின் மேலடிக்கப்படும்
முளைக்குச்சியின் நுனி சிதைந்ததனால்
மலைக்குன்றில் இறங்காததுபோல் அறவுரையும்
அவர்தம் காதுகளின் உள் நுழையாது சிதறிப்போகும்.
பாடல் 258
பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு.
பாலால் கரியைக் கழுவிப் பல நாள்
உலர்த்தினும் வெண்மை பெறாது அதுபோல்
உறும் கோலால் அடித்துக் கூறினும்
உற்ற புண்ணியம் இல்லாதோன்
உடம்பில் அறிவு புகாது.
பாடல் 259
பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், – இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
தேனைப் பொழிந்து நறுமணம் வீசினும்
தேடிச் செல்லாது ஈ அத்தேனை உண்ண
தகுதியற்ற இழிகுணம் கொண்ட மனத்தோர்க்கு
தக்க பெரியோரின் தேன்போல் இனிக்கும்
தெளிவான சொற்கள் தரும் பயன்தான் என்ன?
பாடல் 260
கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; – மற்றுமோர்
தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
கற்றவர் சான்றோர் அவையில் உரைக்கும்
குற்றமற்ற நுட்பமான கருத்துக்களைக்
கொள்ளாது தன் நெஞ்சம் உதைத்துத் தள்ளுவதால்
கீழ்மகன் தன் போலும் ஒரு அற்பனின் முகம் நோக்கி
அதிகம் தெரிந்தவன்போல் தானும் பேசத் தொடங்குவான்.