அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் 

1

-மேகலா இராமமூர்த்தி

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (Prince Edward Island) ஜான் போப் (John Pope), காத்ரீன் அக்ளோ (Catherine Uglow) இணையருக்கு மகனாக 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பிறந்தவர் ஜார்ஜ் அக்ளோ போப் (George Uglow Pope) என்ற இயற்பெயர் கொண்ட ஜி.யூ.போப். அவர் குழந்தையாக இருந்தபோதே அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள ஹாக்ஸ்டன் (Hoxton) கல்லூரியில் பயின்ற பிறகு, 1839-ஆவது ஆண்டு தமது 19ஆவது வயதில் கிறித்தவ மதபோதகராகத் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள சாயர்புரத்துக்கு வந்தார் போப்.  

சாமுவெல் சாயர் எனும் போர்த்துகீசியக் கிறித்தவரது பொருளுதவியால் வாங்கப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட்ட ஊர் ஆதலின் அதற்குச் சாயர்புரம் என்ற பெயர் ஏற்பட்டதாகத் தெரிகின்றது.

கப்பலில் பயணம் செய்த காலத்திலேயே தமிழைக் கற்றிருந்த போப், சாயர்புரம் வந்தபிறகு ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுஜக் கவிராயர் போன்றோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலும் தம் புலமையை வளர்த்துக்கொண்டார்.

சாயர்புரத்தில் இருந்த சிறுவர்கள் நன்கு கல்வி பயிலவேண்டும், பல்துறை அறிவும் பெறவேண்டும் என விரும்பிய ஜி.யூ.போப், அவர்களுக்கென்று ஒரு கல்லூரியை அங்கே அமைத்தார். அதிலே சிறந்த ஆசிரியர்களை நியமித்து எல்லாப் பாடங்களையும் மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்தார். எல்லாக் கலைகளும் அங்கே போதிக்கப்பட்டதுடன், தமிழ், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் முதலிய மொழிப்பாடங்களையும் மாணவர்கள் தினமும் கற்றனர். இவையல்லாமல் தர்க்கம், கணிதம், தத்துவம் போன்ற பாடங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இவ்வளவையும் சொல்லிக்கொடுப்பதற்குப் பகல்பொழுது போதாமையால் இரவு நேரங்களிலும் வகுப்புகள் தொடர்ந்தன.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடுவதைப் போல் அளவுக்கு அதிகமான பாடச் சுமையால் மாணவர்கள் திணறிப்போனார்கள். விளைவு? சொல்லாமல் கொள்ளாமல் ஒவ்வொருவராகக் கல்லூரியைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால் போப்பும் ஊக்கம் குன்றியவராய்ச் சிலகாலம் வெளிநாட்டுக்கு இளைப்பாறச் சென்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தமிழகம் திரும்பியவர், தஞ்சை, நீலகிரி, கர்நாடகாவிலுள்ள பெங்களூரு போன்ற பல பகுதிகளில் நெடுங்காலம் தொண்டு புரிந்தார். நீலகிரியிலுள்ள ஊட்டியில் பத்தாண்டுகள் பள்ளியொன்றை நடத்திய போப், அம்மலையில் வாழ்ந்துவந்த தோடர் இனத்தவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். தோடர்களின் மொழியில் பாட்டோ வசனமோ ஏதுமில்லை என்பதைக் கண்டறிந்த அவர், அம்மொழியை ஆராய்ந்து அதன் இலக்கணம் குறித்து நூல் எழுதினார்.

தமிழிலுள்ள நீதிநூல்களின்பால் ஜி.யூ.போப்பின் கவனம் சென்றது. பள்ளிச் சிறுவர் முதல் பக்குவமடைந்த பெரியோர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றவகையில் பல்வேறு நீதிநூல்கள் தமிழில் நிறைந்திருப்பது கண்டு வியந்த அவர், அவற்றை ஊன்றிக் கற்கலானார். ”நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற ஆன்றோர் மொழியறிந்த அவர், திருக்குறளையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளலானார்.

ஜி.யூ.போப் காலத்துக்கு முன்பே திருக்குறள் சில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. 1730ஆம் ஆண்டு கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) எனும் இயற்பெயர் கொண்டிருந்த வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்திருந்தார். காமத்துப்பாலை மொழிபெயர்ப்பது கிறித்தவப் பாதிரிமார்களின் தவவொழுக்கத்துக்கு ஏற்றதன்று எனக்கருதியவர் அதனை மொழிபெயர்க்காது விடுத்தார்.

பிரெஞ்சு மொழியில், ஈ.எஸ். ஏரியல் (E.S. Ariel) என்பவரால் திருக்குறளின் ஒரு பகுதி 1848இல் மொழிபெயர்க்கப்பட்டது. கார்ல் கிரால் (Karl Graul) என்பவர் 1856ஆம் ஆண்டு திருக்குறளை ஜெர்மன் மொழியில் முற்றாக மொழிபெயர்த்திருந்தார். பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் ஆங்கிலேயர் திருக்குறளின் பதின்மூன்று அதிகாரங்களை மட்டும் மொழிபெயர்த்திருந்தார். ட்ரூ (William Henry Drew) எனும் ஆங்கிலப் பாதிரியார் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலுமாகச் சேர்த்து  63 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு விட்டிருந்தார். இந்நிலையில் திருக்குறளை முற்றும் ஆய்ந்து அதனை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் ஜி.யூ.போப்பே ஆவார். ’The sacred kural of Tiruvalluva Nayanar’ என்ற தலைப்பில் 1886ஆம் ஆண்டு வெளியீடு கண்ட போப்பின் திருக்குறள் 436 பக்கங்களைக் கொண்டது.

திருக்குறளை மொழிபெயர்க்கும்போது அதில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துக்களில் சில ஏசுநாதரின் இயல்பை விளக்கும் கருத்துக்களாகப் போப்புக்குத் தோன்றின.

சான்றாக,
”ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்” (குறள்: 156)

என்ற குறளைப் படித்தபோது, தீயவர்கள் பலர் ஏசுநாதரைத் துன்புறுத்தினார்கள்; கழியால் அடித்தார்கள்; காறி உமிழ்ந்தார்கள். அதனால் அவர்கள் பெற்ற இன்பமோ ஒருநாள் இன்பமே. ஆனால் அச்சிறுமைகளையெல்லாம் பொறுத்திருந்த ஏசுநாதருக்குக் கிடைத்த புகழோ வையமுள்ள அளவும் வாழும் அழியாப் புகழ் என்று எண்ணினார். 

மற்றொரு குறளில்,

”இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்” (குறள்: 314)
என்று வள்ளுவர் கூறியிருப்பதைக் கண்ட போப், தம்மை இரும்பு ஆணிகளால் கைகளிலும் கால்களிலும் அறைந்து பொறுக்கமுடியாத துயர்விளைவித்த கொடியவர்களிடங்கூட ஏசுநாதர் சினங்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் செய்யும் தீமையை மன்னித்து அருளவே பரலோகப் பிதாவிடம் வேண்டினார். அவ்வகையில் வள்ளுவரின் கருத்து, ஏசுநாதரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கின்றது என்று கருதினார். திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்தபோது அங்குவந்த ஏசுவின் சீடர்களான புனித தாமஸ் (Saint Thomas the Apostle) முதலியோர் செய்த போதனைகளைக் கேட்டுவிட்டே இந்தக் குறட்பாக்களை வள்ளுவர் இயற்றியிருக்கவேண்டும் எனும் பொருள்பட இக்குறட்பாக்களுக்கு விளக்கம் எழுதியிருக்கின்றார்.

இங்கே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறந்த வாழ்வியல் விழுமியங்களையும் அறக்கோட்பாடுகளையும் வலியுறுத்துகின்ற வளமான இலக்கியச் செல்வங்கள் பல செம்மொழியாம் தமிழில் கிறிஸ்து பிறப்பதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே நம்மிடமிருக்கின்றன. எனவே ஏசுநாதரின் வாழ்க்கையையும் மலைப்பொழிவுகளையும் (The Sermon on the Mount) அவர் சீடர்கள் வாயிலாக அறிந்தே வள்ளுவனார் இவைபோன்ற குறட்பாக்களை யாத்தார் என்று ஜி.யூ.போப் உரைப்பது அவருடைய கிறித்தவ மதப் பற்றின் காரணமாகவே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஜி.யூ.போப், வள்ளுவரை தாமசின் சீடராகக் கருதி மகிழும் அதே வேளையில், கமில் சுவலபெல் (Kamil Václav Zvelebil) எனும் செக் (Czech) நாட்டுப் பன்மொழி அறிஞர், திருக்குறளில் பேசப்படும் கொல்லாமை, புலால்மறுத்தல் முதலிய கருத்துக்களை நோக்குகையில் இந்நூல் கிறித்தவ மத அறக்கருத்துக்களைவிட சமணக் கருத்துக்களுக்கே அதிக நெருக்கமாயிருப்பதுபோல் தோன்றுகின்றது என்கிறார்.

தம்முடைய திருக்குறள் மொழிபெயரப்பைத் தொடர்ந்து 1893ஆம் ஆண்டு நாலடியாரை ’The Naladiyar Four hundred quatrains in Tamil’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் ஜி.யூ.போப். அந்நூலின் ஆராய்ச்சி முன்னுரையில், இந்நூல் சமண முனிவர்களால் எழுதப்பட்டது என்பதையும், இதற்கு ’வேளாண் வேதம்’ எனும் மற்றொரு பெயர் இருப்பதையும் குறிப்பிடும் போப், பல நல்ல வாழ்வியல் விழுமியங்களை அழகிய உவமைகளோடும் அரிய உண்மைகளோடும் இந்நூல் விளக்குகின்றது என்பதைப் புலப்படுத்துகின்றார்.

இந்நூலில் காணப்படும் சிறந்த செய்யுட்களில் ஒன்றாகக்

”கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து”
(நாலடி – 135) என்பதைக் குறிப்பிடுகின்றார்.

அத்தோடு நில்லாமல், இந்நூலின் இலக்கண அமைப்பையும் ஆராய்ந்து இதிலுள்ள நானூறு செய்யுட்களில் 300 செய்யுட்கள் நேரிசை வெண்பாவிலும், மீதமுள்ள 100 செய்யுட்கள் இன்னிசை வெண்பாவிலும் இயற்றப்பட்டுள்ளன என்பதையும் வெண்பாவிற்கான அசை, சீர், தளை ஆகியன குறித்தும் அவற்றை அலகிட்டு அறிவது எப்படி என்பது குறித்தும் மிக விரிவாக விளக்கியிருப்பதைக் காணும்போது தமிழிலக்கியத்தில் மட்டுமல்லாது இலக்கணத்திலும் போப்புக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் புலமையையும் நாம் அறியமுடிகின்றது.

ஜி.யூ.போப் ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டுகளின் முடிமணியாகக் கருதப்படுவது அவருடைய  திருவாசக மொழிபெயர்ப்பே ஆகும். ’திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது திருவாசகத்திற்கான தனிச்சிறப்பு. அத் திருவாசகம் போப்பையும் ஈர்த்ததில் வியப்பேதுமில்லை.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த காலமது. அப்போது அவருடைய வயது 77. திருவாசகத்திலுள்ள 658 பாடல்களையும் ஆராய்ந்த போப், அதன் பக்திச்சுவையில் பெரிதும் ஈடுபட்டு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கியிருந்தார். ஒருநாள் மாலைவேளை  தம்மோடு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பரிடம் திருவாசகப் பாடல்களின் சிறப்பைக் குறித்துப் போப் தெரிவித்தபோது, கண்டிப்பாக இந்த நூலை நீங்கள் முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும் என்று அந்த நண்பர்  கூறியிருக்கின்றார்.

”இந்த முதிர்ந்த வயதில் என்னால் அப்பணியை முழுமையாக முடிக்க இயலுமா தெரியவில்லையே நண்பரே! நான் சாகாவரம் பெற்றவனில்லையே!”  என்று வருந்திக்கூறிய போப்பை நோக்கிய அந்த நண்பர், ”அறிஞரே! ஒரு பெரிய வேலையைத் தொடங்கி நடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய ஒரே வழி! அவ்வேலை முடியுமளவும் உயிர் இருந்தே தீரும்!” என்று உறுதிபடக் கூறியிருக்கின்றார்.

அவருடைய வாக்கையே வேத வாக்காக ஏற்றுக்கொண்ட போப், மூப்பின் காரணமாகத் தம்முடல் தளர்வுறும்போதெல்லாம் நண்பரின் மொழியை நினைந்து ஊக்கமும் உற்சாகமும் பெற்று மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடலானார். தம்முடைய 80ஆவது பிறந்தநாளன்று திருவாசகத்தை வெற்றிகரமாக அச்சிட்டு வெளிப்படுத்தினார் என்பதை அறியும்போது நாம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒருங்கே அடைகின்றோம்.

மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பாக ஜி.யூ.போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பு  அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை. எனினும், மாணிக்கவாசகர் தம் பாடல்களில் மிகவும் சாமானிய மானுடனின் பலவீனமான மனநிலையில் தம்மை வைத்துக்கொண்டு, வெளிப்படுத்தியிருக்கும் அனுபவங்கள் சிலவற்றை மாணிக்கவாசகரின் சொந்த அனுபவங்களாகவே கருதி ஜி.யூ.போப் மொழிபெயர்த்திருப்பது சற்று நெருடலை ஏற்படுத்தவே செய்கின்றது.

தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த அருளாளர்களின் இயல்பை, அவர்களின் பாடல்களில் பொதிருந்திருக்கும் ஆழ்ந்த உட்பொருளை அயல்நாட்டைச் சார்ந்த ஒருவர் சிற்சில இடங்களில் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமற் போனதில் குற்றமொன்றுமில்லை. ஆதலால் போப்பின் திருவாசக உரையில் காணப்படும் இவைபோன்ற சிறிய குறைபாடுகளை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. மற்றபடி இதைவிடச் சிறந்தவகையில் திருவாசகத்தை ஆங்கிலேயர் ஒருவர் மொழிபெயர்க்க இயலாது என்றே கூறலாம்.  

திருவாசகத்தின்மீது தீராக் காதல் கொண்டுவிட்ட போப், தமிழகத்தில் யாருக்குக் கடிதம் எழுதினாலும் திருவாசகப் பாடலொன்றை எழுதியபின்பே கடிதத்தைத் தொடங்குவதைத் தம் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் அவ்வாறு ஒருமுறை அவர் தம் நண்பருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தபோது தாம் எழுதிய திருவாசகப் பாடலின் கருத்திலே உள்ளம் உருகிக் கண்ணீர் பெருக்கிவிட, அக்கண்ணீர்த்துளிகள் கடிதத்தில் விழுந்துவிட்டதாகவும் எனினும்  அக்கடிதத்தைக் கசக்கி எறிய  மனமற்றவராய் அதனை அப்படியே தம் நண்பருக்கு அனுப்பினார் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் பலரும் அஃது எந்தத் திருவாசகப் பாடல் என்பதைக் குறிப்பிடுவதில்லை. இக்கருத்து உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு நமக்கு வேறு சான்றுகளும் கிட்டவில்லை. எனவே இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.

ஜி.யூ.போப்பின் பிற தமிழ்ப் பணிகளில் குறிப்பிடத்தக்கவை:  புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு ஆகியவற்றைப் பதிப்பித்தமை, தமிழ் இலக்கணத்தை ’Elementary Tamil Grammar’ என்ற பெயரில் 3 பாகங்களாக எழுதியமை, தமிழ் அறிஞர்கள், தமிழ்த் துறவிகள் போன்றோர் குறித்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை போன்றவை.

தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய ஜி.யூ.போப் 1908ஆம் ஆண்டு தம்முடைய 88ஆம் அகவையில் மறைந்தார். இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் (St Sepulchre’s Cemetery) அவருடைய கல்லறை உள்ளது.

தாம் இறந்தபிறகு தம்முடைய கல்லறையில் ”நான் ஒரு தமிழ் மாணவன்” என்று பொறிக்கப்பட வேண்டும் என ஆசைப்பட்டிருக்கின்றார் போப். அதற்கு ஆதாரமாக, ”Whenever I die, a student of Tamil will be inscribed on my monument” என்று, ஜி.யூ.போப், ”சித்தாந்த தீபிகை” எனும் திங்களிதழின் ஆசிரியரான  நல்லசாமிப் பிள்ளை என்பவருக்கு, 1900ஆவது ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, எழுதிய கடிதம் திகழ்கின்றது. ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை.

அதனால் என்ன?

ஜி.யூ.போப் தமிழுக்கு ஆற்றியிருக்கும் அளப்பரிய பணிகளுக்காகவும் அருந்தமிழ் நூல்கள் மூன்றனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் பெருஞ்சாதனைக்காகவும் அவருடைய பெயரைத் தமிழ்மக்கள் தம் நெஞ்சில் எழுதிவைத்து என்றும் போற்றுவர்!

**********************************

கட்டுரைக்கு உதவியவை

1. https://en.wikipedia.org/wiki/George_Uglow_Pope

2. கிருஸ்தவத் தமிழ்த்தொண்டர் – ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல்., எஸ்.ஆர். சுப்பிரமணியப் பிள்ளை பப்ளிஷர்ஸ், திருநெல்வேலி.

3. https://archive.org/details/tiruvalluvanayan00tiruuoft

4. https://archive.org/details/Naladiyar/page/n13/mode/2up

5.. https://archive.org/details/tiruvacagamorsac00maniuoft/page/xxiv/mode/2up

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் 

  1. திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற உயர்ந்த தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழ்ப் படைப்புகளை உலகுக்கு அறிவித்து, தமிழை உயர்தனிச் செம்மொழியாக்கிய ஜி.யூ போப்பைப் பற்றி எழுதிய மேகலா இராம மூர்த்தியைப் பாராட்டுகிறேன்.

    போப்பின் திருக்குறள் 436 பக்கங்களைக் கொண்டது. என்னிடம் ஒரு பிரதி உள்ளது.

    திருக்குறளை ஜோதிர்லதா கிரிஜா ஆங்கிலத்தில், 2015 இல் மொழிபெயர்த்த ஒரு பிரதியும்
    உள்ளது.

    சி. ஜெயபாரதன், கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *