வெ. சுப்ரமணியன்

பூமி சூரியனைச் சுற்றும் அதே பாதையில் சந்திரனும் பூமியைச் சுற்றி வந்தால் இரண்டின் சுற்றுப் பாதைகளும் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். அந்த மாதிரியான நிலையில் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணமும், ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணமும் நிகழும். காரணம் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே அச்சில் நேராக அமையும் போது கிரகணம் நிகழ்கிறது.

பூமியின் சுற்றுப்பாதையும், சந்திரனின் சுற்றுப்பாதையும் நீள்வட்டமாக உள்ளன. மேலும் சந்திரனின் சுற்றுப்பாதை 5.1o  கோணம் புவியின் சுற்றுப்பாதைக்குச் சாய்வாக அமைந்துள்ளது. ஆகவே கிரகணத்தளமும், சந்திரனின் சுற்றுத் தளமும் ஒன்றாக இல்லை. இதனால் இம் மூன்றும் ஒர் அச்சில் நேராக அமைவது 34.5 நாட்கள் இடைவெளிக்குள் மட்டுமே நிகழ இயலும். இதையே கிரகணப் பருவம் என்கிறோம்.  கிரகணம் கிரகணப் பருவங்கள் (Eclipse seasons) என்பவை வானில் திரும்பத் திரும்ப நிகழும் சுழற்சிகளில் ஒன்றாகும். கிரகணப்பருவங்கள் ஆறு நாட்காட்டி மாதங்களுக்குச் (Calendar months) சற்றுக் குறைவாக 173.3 நாட்கள் சுழற்சிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.   எனவே பெரும்பாலான நேரங்களில் புது நிலவு (New moon) அதாவது அமாவாசை அல்லது முழு நிலவு(Full Moon) அதாவது பௌர்ணமி கிரகணம் நிகழும் கிரகணப் பாதைக்கு (Ecliptic path) வெகுதூரம் வடக்கே அல்லது தெற்கே விலகி நகர்ந்திருக்கும். எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டில், நமக்கு 12 அமாவாசைகள் மற்றும் 13 பௌர்ணமிகள் இருக்கும் என்றாலும் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 4 சந்திர கிரகணங்கள் மட்டுமே நிகழும். இதனை எளிதாக  விளங்கிக் கொள்ள கிரகணப் பருவங்களை நாம் முதலில் புரிந்து கொள்வோம்.  கிரகணப் பருவங்களைக் (Eclipse seasons) குறித்து அறிந்து கொள்ளத் தேவையான சொற்களில் முக்கியமானவை கிரகணப் பாதை (Ecliptic path), கிரகணத் தளம் (Ecliptic plane) மற்றும் சந்திரக் கணுக்கள் (Lunar nodes) என்பவை. கிரகணப்பாதை என்பது சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப்பாதை.  கிரகணத் தளம் என்பது சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப்பாதை அமையும் தளம். அல்லது புவியின் பார்வையில் வானில் சூரியன் செல்லும் பாதையின் தளம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை, சந்திரன் பூமியைத் தனது சுற்றுப்பாதையில் வட்டமிடுகையில், பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தைச் சந்திரக் கணுக்கள் (Lunar nodes) எனப்படும் புள்ளிகளில் கடக்கிறது. அதாவது பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தை, சந்திரனின் மாதாந்திர சுற்றுப்பாதை இரு இடங்களில் வெட்டும். இந்த வெட்டுமிடங்களே சந்திரக் கணுக்கள் (Lunar nodes) என்பவை. இவ்விரு வெட்டுப் புள்ளிகளையும் இணைக்கும் நேர்கோடு கணுக்கோடு (Line of  nodes) என்று அழைக்கப்படுகிறது. கணுக்கோடு சூரியனுக்கு நேராக அமையும் போது கிரகணம் ஏற்படும்.

ஒரு கிரகணப் பருவம் என்பது  பூமியின் பார்வையில், கிரகணம் நடக்க அனுமதிக்க சூரியன் சந்திரக் கணுவிற்கு அருகில் இருக்க வேண்டும். பௌர்ணமியில் சூரியன் ஒரு சந்திர கணுவிற்கு அருகில் இருந்தால், நாம் ஒரு சந்திர கிரகணத்தைக் காண்கிறோம். அமாவாசையில் சூரியன் சந்திர கணுவிற்கு அருகில் இருந்தால், சூரிய கிரகணத்தைக் காண்கிறோம்.இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சந்திரன் அதன் கணுக்களில் ஒன்றைக் கடக்கும்போது சந்திரன் புது நிலவாகவோ (New moon) அல்லது முழு நிலவாகவோ (Full moon) மாறினால் ஒரு கிரகணம் (Eclipse) ஏற்படுவதை நிச்சயமாகத் தவிர்க்க முடியாது.

சந்திர மாதம் (Lunar month) என்பது அடுத்தடுத்த புதிய நிலவுகள் (அமாவாசைகள்) அல்லது அடுத்தடுத்த முழு நிலவுகளுக்கு (பௌர்ணமிகள்) இடையிலான காலம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 29.5 நாட்கள் அளவில் இருப்பதால், குறைந்தபட்சமாக, சூரியகிரகணத்தைத் அடுத்து ஒரு சந்திரன் கிரகணமோ அல்லது சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து ஒரு சூரியகிரகணமோ ஆக இரண்டு கிரகணங்கள் கிரகண பருவத்தில் நிச்சயமாக நிகழ்கிறது. அதிகபட்சம் மூன்று கிரகணங்கள் சாத்தியப்பட (சந்திர / சூரிய / சந்திர, அல்லது சூரிய / சந்திர / சூரிய), கிரகணப் பருவத்தின் முதல் கிரகணம் 29.5 நாட்கள் முடியும் முன் மூன்றாவது கிரகணத்தை அனுமதிக்க மிக விரைவாக வர வேண்டும். சூரிய கிரகணம் அமாவாசையில் மட்டுமே நிகழும். சந்திர கிரகணம் பௌர்ணமியில் மட்டுமே நிகழும். கூடுதலாக ஒரு கிரகணம் ஏற்பட  அமாவாசை அல்லது பௌர்ணமி ஒரு கிரகணப் பருவத்திற்குள் நிகழ வேண்டும். இல்லையெனில், அமாவாசை சூரிய கிரகணம் நடைபெறுவதற்கு சூரியனை விட வடக்கே அல்லது தெற்கே செல்கிறது, மற்றும் பௌர்ணமி ஒரு சந்திர கிரகணம் நடைபெறுவதற்கு பூமியின் நிழலில் வடக்கே அல்லது தெற்கே வெகுதூரம் செல்கிறது.

சந்திரன் தெற்கிலிருந்து வடக்கே நகர்ந்து சென்றால், அது சந்திரனின் ஏறு கணு (Ascending node) என்றும், சந்திரன் வடக்கிலிருந்து தெற்கே நகர்ந்தால், அது சந்திரனின் இறங்கு கணு (Descending node) என்றும் அழைக்கப்படுகிறது. மே 24, 2020 அன்று சந்திரன் அதன் ஏறு கணுவில் கடைசியாக இருந்தது, அடுத்து ஜூன் 6, 2020 அன்று அதன் இறங்கு கணுவை அடையும்.

நடைபெறும் இருபத்தோராம் நூற்றாண்டில் (கிபி 2001 முதல் கிபி 2100 வரையிலான நூறு ஆண்டு காலத்தில்)  224 சூரிய கிரகணங்களும் 228 சந்திர கிரகணங்களும் ஆக மொத்தம் 452கிரகணங்கள் நிகழும். பொதுவாக ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கிரகணப்பருவங்கள் (Eclipse season) இருக்கலாம். அது போலவே ஒரு கிரகணப்பருவத்தில் குறைந்தது இரண்டு கிரகணங்களும் அதிகபட்சமாக மூன்று கிரகணங்களும் நிகழலாம்.

ஓராண்டில் நான்கு கிரகணங்கள் நடப்பது மிகவும் இயல்பானது. ஒரு கிரகணப்பருவத்தில் சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து சூரிய கிரகணமோ அல்லது சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணமோ நிகழ்வது மிகச் சாதாரணமான ஒன்றுதான். ஒரு கிரகணப்பருவத்தின் காலம் (Eclipse season) என்பது முப்பத்தைந்து (35) நாள் கொண்டது எனலாம். இந்த முப்பத்தைந்து நாட்களில் குறைந்தது ஒரு சூரிய கிரகணமும் ஒரு சந்திர கிரகணமும் ஆக இரண்டு கிரகணங்கள் உறுதியாக ஏற்படும். அவ்வாறான நிகழ்வு இந்த நூற்றாண்டில் எண்பத்திரண்டு (82) முறைகள் நிகழும்.

அடுத்தது சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான ஒரு நாள்காட்டி ஆண்டில் (Calendar year) குறைவான எண்ணிக்கையில் மூன்று சூரிய கிரகணங்கள் மற்றும் அதை விடக் குறைவான எண்ணிக்கையில் நான்கு சூரிய கிரகணங்களும் அபூர்வமாக ஐந்து சூரிய கிரகணங்களும் கூட ஏற்படுவதுண்டு.

இந்த நூற்றாண்டைப் பொறுத்தவரையில்,  2018, 2019, 2036, 2038, 2054, 2057, 2058, 2069, 2083, 2084, 2087, 2098 ஆகிய 12 ஆண்டுகளில் மூன்று முறை சூரிய கிரகணமும் ,  2011, 2029, 2047, 2065, 2076, 2094 ஆகிய ஆறு ஆண்டுகளில் நான்கு முறை சூரிய கிரகணமும் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடக்கும் 21 ஆம் நூற்றாண்டில் எந்த ஒரு ஆண்டிலும் ஐந்து (5) சூரிய கிரகணங்கள் ஏற்படும் நிகழ்வு இல்லை.

ஆனால் அத்தகைய அபூர்வ நிகழ்வு 23 ஆம் நூற்றாண்டில் 2206 ஆம் ஆண்டில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டின் சனவரி 10, ஜூன் 07, ஜூலை 07, டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 30 ஆகிய நாட்களில் சூரிய கிரகணம் ஏற்படும். பார்க்கத்தான் நாம் இருக்கப் போவதில்லை. இருப்பினும் என் சந்ததியில் யாராவது இக் கட்டுரையைப் படிக்க மிக மெல்லிய வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

ஒவ்வொரு நாள்காட்டி ஆண்டிலும் (Calendar year) அதாவது சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான ஆண்டுக் காலத்தில் குறைந்த பட்சமாக நான்கு (4) முதல் அதிக பட்சமாக ஏழு (7) கிரகணங்கள் நிகழக் கூடும். ஒரு காலண்டர் ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழ்வது மிகவும் அரிதானது.

இத்தகைய நிகழ்வு கடைசியாக நடந்தது 1982 ஆகும். நடக்கும் இருபத்தோராம் நூற்றாண்டில் முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​2038 மற்றும் 2094 ஆண்டுகளில் இரண்டு (2) முறை மட்டுமே ஒரு நாட்காட்டி ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழும். 2038 ஆண்டில் நிகழவிருக்கும் கிரகணங்களில் 3 சூரிய கிரகணங்களும் 4 சந்திர கிரகணங்களுமாக இருக்கும் அதுவே 2094 ஆம் ஆண்டில் 4 சூரிய கிரகணங்களும் 3 சந்திர கிரகணங்களுமாக இருக்கும்.

ஒரு காலண்டர் ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழும்  போது அதில் 5 சூரிய கிரகணங்களும் 2 சந்திர கிரகணங்களும்  நிகழ்வது மிக மிக அரிதானது. இது கடைசியாக 1935 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. மீண்டும் இத்தகைய அபூர்வ நிகழ்வு 2206 ஆம் ஆண்டு வரை நிகழாது. அதே போல ஒரு காலண்டர் ஆண்டில் 2 சூரிய கிரகணங்களும் 5 சந்திர கிரகணங்களும் கூட நிகழலாம். மிக அரிதான இத்தகைய நிகழ்வு கடைசியாக 1879 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. 2132 ஆம் ஆண்டு வரை இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காது. ஆக மேற் சொன்ன இரண்டு அபூர்வ நிகழ்வுகளுமே எதுவுமே இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடக்கப் போவதில்லை.

ஆனால் அதுவே சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என்ற கட்டுப்பாடு இல்லாமல் வெறும் 365 நாட்கள் கொண்ட ஆண்டுக்காலமாக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு ஆண்டில் 7 கிரகணங்கள் வருவது அத்தனை அரிதானது இல்லை. 21 ஆம் நூற்றாண்டில் மட்டும் எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் கணக்கில் 7 கிரகணங்கள் 29 முறை நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்காட்டி ஆண்டுக்கும் (Calendar year), 365 நாட்களைக் கொண்ட ஓராண்டுக்கும் (365 days year) மேற் சொன்ன கருத்தை விளங்கிக் கொள்ள நடப்பு 2020 ஆம் ஆண்டையே  எடுத்துக் கொள்ளலாம்.

முதலில் 2020 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான நாட்காட்டி ஆண்டை எடுத்துக் கொள்ளலாம்.  இக்கால கட்டத்தில் மொத்தம் ஆறு (6) கிரகணங்கள் அதில் நான்கு சந்திர கிரகணங்களும் இரண்டு சூரிய கிரகணங்களும் அடங்கும். நான்கு (4) சந்திர கிரகணங்கள் முறையே சனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 என்றும் இரண்டு (2) சூரிய கிரகணங்கள் முறையே ஜூன் 21 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளன.

இதுவே 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15 முதல் 2020 டிசம்பர் 14 வரையிலான 365 நாட்கள் கொண்ட ஓராண்டுக் காலத்தைக் கருதுவோமானால் மொத்தம் ஏழு (7) கிரகணங்கள். காரணம்  மேற் சொன்ன நாள்காட்டி ஆண்டின் ஆறு கிரகணங்களுடன் மூன்றாவதாக 2019 ஆண்டின் டிசம்பர் 26 ஆம் நாளில் நடந்து முடிந்த சூரிய கிரகணமும் கணக்கில் சேர்ந்து கொள்ளும். இப்போது இந்த வேறுபாடு உங்களுக்கு விளங்கியிருக்கும்.

கடந்த 2019 ஆண்டின் முதல் கிரகணப்பருவம் சனவரி 6 ஆம் நாள் தொடங்கியது. அது ஒரு சூரிய கிரகணம். தொடர்ந்து அடுத்த 15 ஆம் நாளில் சனவரி 21 அன்று சந்திர கிரகணம். அடுத்த இரண்டாம் கிரகணப்பருவம் சூரிய கிரகணமாக ஜூலை 2 ஆம் நாள் தொடங்கியது. அதிலிருந்து 14 நாட்களில் இப்பருவத்தின் சந்திரகிரகணம் ஜூலை 16 அன்று நிகழ்ந்தது.

2019 ஆண்டின் மூன்றாவது பருவம் மறுபடியும் ஒரு சூரிய கிரகணமாக டிசம்பர் 26 ஆம் நாள் நிகழ்ந்தது. இதற்கான சந்திர கிரகணம் அடுத்த 15 நாட்களில் நிகழ்ந்தது. அதாவது 2020 ஆம் ஆண்டின் ஜனவரி 10 ஆம் நாள் அந்தச் சந்திர கிரகணம் ஏற்பட்டது. சில ஆண்டுகளில் ஒரு கிரகணப் பருவத்தின் கிரகணம் அல்லது கிரகணங்கள் அடுத்து வரும் ஆண்டிற்குச் சென்று விடும். நிகழ்ந்து அது மூன்று கிரகணப் பருவமாக இருந்தால் தொடர்புடைய மற்ற இரு கிரகணங்களும் அடுத்த ஆண்டுக்குச் சென்று விடும். ஒரு ஆண்டின் டிசம்பர் கடைசியில் ஒரு கிரகணம் இப்படித்தான் சில ஆண்டுகளில் நமக்கு முந்தைய ஆண்டின் கிரகணப்பருவத்தின் கிரகணம் அல்லது கிரகணங்கள் அடுத்த ஆண்டில் கிடைக்கின்றன.

நடக்கும் 2020 ஆண்டின் முதல் கிரகணப்பருவத்தின் முதல் கிரகணம் ஜூன் 5, 2020 அன்று ஜூன் பௌர்ணமியுடன் கழிந்தது. ஜூன் மற்றும் ஜூலை 2020 கிரகண பருவத்தில் மூன்று கிரகணங்கள் இடம்பெறுகின்றன.

ஜூன் 5 – 6 தேதிகளில் (சென்னயில் ஜூன் 5 ஆம் தேதி இரவு மணி 23.15. 51 மணிக்குத் துவங்கிய கிரகணம் மறுநாள் ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 02.34.03 மணிக்கு முடிவடைந்தது) அன்று சந்திர கிரகணம் நடந்து முடிந்து விட்டது. இனி வரப்போவது ஜூன் 21 அன்று சூரிய கிரகணம். அடுத்து ஜூலை 4 – 5 அன்று இந்தக் கிரகண பருவத்தின் மூன்றாவது கிரகணமாகச் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. நடக்கும் 2020 ஆம் ஆண்டின் ஜூன் – ஜூலை  கிரகணப் பருவம் மூன்று கிரகணங்களை முறையே சந்திர கிரகணம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற வரிசையில் கொண்டது. அடுத்து  2029 ஆம் ஆண்டில் ஜூன் – ஜூலை கிரகணப் பருவத்திலும் மூன்று கிரகணங்கள் 2020 ஆம் ஆண்டிலிருந்து சற்று மாறுபட்ட வரிசையில் முறையே சூரிய கிரகணம், சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்ற வரிசையில் ஏற்படும்.

2020 ஆம் ஆண்டு இரண்டு கிரகணப் பருவங்களுடன் நிறைவடையும். நவம்பர் 29 – 30 தேதிகளில் சந்திர கிரகணமும், டிசம்பர் 14 அன்று சூரிய கிரகணமும் நிகழும். 2020 இல் சந்திர கிரகணங்கள் அனைத்துமே துரதிர்ஷ்டவசமாக, மங்கலான மற்றும் பார்க்கக் கடினமான புறநிழல் சந்திரக் கிரகணங்களே.


கட்டுரையாசிரியரைப் பற்றி

வெ. சுப்ரமணியன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சொந்த ஊராகக் கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னையில் கோயம்பேடு பகுதியில் வசிக்கிறார். முப்பத்தாறு ஆண்டுகள் அரசு மேனிலைப் பள்ளி, மணலியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி 2015ஆம் ஆண்டில் பணி நிறைவு பெற்றார்.

தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான நல்லாசிரியர் விருதினை 2011ஆம் ஆண்டில் பெற்றார். இவருடைய பணிக் காலத்திற்குப் பின்னர் சிறுகதைகள், வானியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதித் தமது வலைப்பூவில் வெளியிட்டு வருகிறார்.  மருத்துவம் சார்ந்த சுமார் 12 கட்டுரைகள் ஹெல்த் கேர் (தமிழ்)  என்னும் மருத்துவ மாத இதழில் வெளியாகியுள்ளன. 26 சிறுகதைகள், சிறுகதைகள்.காம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

இவரது வலைப்பதிவு முகவரி – https://weyes57.blogspot.com/


 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கிரகணங்கள் – ஒரு பார்வை

  1. கிரகணங்கள் ஒரு பார்வை அருமையான படைப்பு. மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர் சுப்ரமணியன். பூமியின் சுழற்சி மற்றும் சந்திரனின் பாதை, தளம் lunar nodes ஆகியவற்றை இதைவிட தெளிவாக யாரும் விவரிக்கமுடியாது. இந்த ஆண்டில் ஏற்படும் கிரகணங்கள் மங்கலாக இருந்தாலும் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *