கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 2

1

-மேகலா இராமமூர்த்தி

மானுடம் வெல்லவேண்டுமாயின் அது புலனொழுக்கத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்று விரும்பிய கம்பநாடர், தம் காப்பியத்தின் தொடக்கமாக அமைந்த பால காண்டத்தின் முதற்படலமான ஆற்றுப் படலத்திலேயே கோசலநாட்டு மக்களின் ஒழுக்கத்தைப் பற்றித்தான் பேசுகின்றார்.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
(கம்ப: ஆற்றுப்படலம் – 12)

பொதுவாக மனிதர்களைத் தம் ஒழுக்கத்திலிருந்து விலகச் செய்யும் ஐம்பொறிகள் எனும் அம்புகளும், பெண்களின் கண்களாகிய அம்புகளும் ஒழுக்கநெறியினின்று விலகிச் செல்லாத கோசல நாட்டை அணிசெய்கின்ற சரயு என்ற ஆற்றின் அழகினை நான் இப்போது கூறுகின்றேன் என்று ஆரம்பிக்கும் கம்பர், ஆற்று வருணனையைச் சாற்றுவதற்கு முன்பாகவே கோசல நாட்டு மக்களின் நல்லொழுக்கத்தைப் பேசுவதைக் காண்கையில் நிலவளத்தைவிடவும், நீர்வளத்தைவிடவும் மக்களின் குற்றமற்ற மனவளத்தையே பெரிதும் போற்றும் பெற்றியுடையவராய் அவர் திகழ்ந்தார் என்பது புலனாகின்றது.

இவ்விடத்தில் பாட்டரசி ஔவையின் சங்கப் பாடலொன்றை நாம் பொருத்திப் பார்க்கலாம்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
(புறம்: 187– ஔவையார்)

”நிலமே நீ ஓரிடத்தில் நாடாகவும், மற்றோர் இடத்தில் காடாகவும், வேறோர் இடத்தில் கடலாகவும், பிறிதோர் இடத்தில் மலையாகவும் தோற்றமளிக்கின்றாய். ஆனால் நிலஅமைப்பின் அடிப்படையிலா நீ பெருமை பெறுகின்றாய்? இல்லை! எந்நிலத்து ஆடவர் நல்லவரோ அவ்விடத்தில் நீயும் சிறப்படைந்துவிடுகின்றாய்” என்கிறார்.

பாட்டரசி, ஆடவரின் ஒழுக்கத்தாலேயே நிலம் சிறக்கும் என்று செப்ப, கவிச்சக்கரவர்த்தியோ இன்னும் ஒருபடி மேலேபோய் எங்கே ஆடவர் பெண்டிர் இருதிறத்தாரும் புலனொழுக்கத்தில் சிறந்திருக்கின்றனரோ அந்நிலமே சிறக்கும் என்றுரைத்து நிலத்தைச் சிறப்படையச் செய்வதில் பெண்டிருக்கும் பங்குண்டு என்பதைத் தெளிவுபடுத்திவிடுகின்றார்.

அடுத்து, கோசலத்தை அணிசெய்யும் மாசற்ற சரயு எனும் ஆற்றின் தன்மை குறித்துப் பேசத் தொடங்குகின்றார்.

இரவிதன் குலத்து எண்ணில் பல் வேந்தர்தம்
பரவுநல் ஒழுக்கின் படிப் பூண்டது
சரயு என்பது தாய் முலை அன்னது இவ்
உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். 
(கம்ப: ஆற்றுப்படலம் – 23)

சூரிய குலத்தை ஆண்ட வேந்தர்கள் கணக்கற்றோர். அவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட பொதுப்பண்பு, உலகம் போற்றும் ஒழுக்கநலம் வாய்ந்தோராய் அவர்கள் அனைவருமே விளங்கியமையாகும். அவர்களைப் போன்றே போற்றத்தக்க நல்லொழுக்கினை மேற்கொண்ட சரயுவானது, கோசல நாட்டின் உயிரினங்கள் அனைத்திற்கும் பாலூட்டி வளர்க்கின்ற தாயின் முலைபோன்றதாகும். தாய்முலையானது பால்சுரந்து குழந்தைகளைப் பேணிவளர்ப்பது போன்றே சரயுவும் நீர்சுரந்து கோசல மக்களைப் புரக்கின்றது என்பது கம்பர் காட்டும் உவமை.

ஒழுக்கு என்ற சொல் இங்கே இருவேறு பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது. அரசர்களுக்கு அஃது இடையறாத ஒழுக்கப் பண்பையும், ஆற்றுக்கு இடையறவுபடா நீர் ஒழுக்கினையும் குறிப்பதாக அமைகின்றது.

கம்பரைப் பொறுத்தவரை அவர் தமிழகத்தைத் தாண்டி வேறெங்கும் சென்றதாகத் தகவல்கள் இல்லை. அவர் பார்த்ததெல்லாம் சோழநாட்டையும் அதனை வளப்படுத்தி, சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையவைத்த, காவிரியையும்தான்! எனவே சரயுவின் இயல்புகளாகக் கம்பராமாயணத்தில் அவர் குறிப்பிடுவதெல்லாம் ’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி’யின் இயல்புகளாக அவர் கண்டவற்றைத்தாம்!

சரயுவை எப்படித் தாய்முலைக்குக் கம்பர் ஒப்பிடுகின்றாரோ அதுபோன்றே ’ஈன்றணிமை தீர்ந்த குழந்தையைத் தாய்முலைப்பால் காப்பதுபோல் தன்னுடைய நீர்வளத்தால் சோழநாட்டைக் காக்கின்றது காவிரி’ என்று காவிரியைத் தம் புறநானூற்றுப் பாடலில் போற்றுகின்றார் புலவர் கோவூர்கிழார்.

புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்…
(புறம் 68 – கோவூர் கிழார்)

எனவே கம்பரின் சரயு குறித்த கற்பனைக்குக் கோவூர் கிழாரின் இந்தப் பாடலடிகள் அடிப்படையாக அமைந்திருக்கக்கூடும்.

நாட்டு வளத்தைப்பற்றிப் பேசுமிடத்து மீண்டும் கோசலநாட்டு மக்களின் பண்பு நலன்களைப் பரக்கப் பேசுகின்றார் கம்பர்.

கோசல நாட்டில் வறுமையில்லாததால் அங்கே வள்ளன்மைக்கு வேலையில்லை; அங்குள்ளவர்களிடையே பகைமை இல்லாத காரணத்தால் வலிமையானவர் யார் எனும் ஆராய்ச்சிக்கு வழியில்லை. கோசலத்தில் அனைவருமே உண்மைவிளம்பிகளாய், அரிச்சந்திரனின் வாரிசுகளாய் விளங்கியமையால் உண்மைக்கென்று தனித்த மதிப்பில்லை. அம்மட்டோ? அங்குள்ளோர் அனைவரும் கல்வி கேள்விகளில் மிக்கோராய்த் திகழ்ந்தமையால் அறியாமைக்கும் இடமில்லாமற் போய்விட்டது என்பது கம்பர் தீட்டும் கோசலத்தின் கவினார் சித்திரம்.

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
(கம்ப: நாட்டுப்படலம் – 84)

”எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ எனும் சமதர்மச் சமுதாயத்தை தம் பாடலில் படைத்துக் காட்டியிருக்கின்றார் கம்பர்.

கிபி 15/16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த தத்துவவியல் அறிஞரும், மனிதநேயவாதியுமான தாமஸ் மூர் (Thomas More) தம்முடைய உட்டோப்பியா (Utopia) நூலில் கட்டமைத்த, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாட்டாளி மக்களின் பிதாமகரான கார்ல்மார்க்ஸ் கனவுகண்ட, ஏற்றத்தாழ்வற்ற ஓர் உயர்ந்த சமூகத்தை, 12ஆம் நூற்றாண்டிலேயே தம் காப்பியத்தில் காணச்செய்திருக்கும் கம்பநாடரைப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் முன்னோடி என்று நாம் பெருமையோடு கருதலாம்.

கோசல மக்களின் மேன்மைப் பண்புகளை மேலும் சில பாடல்களிலும்  விதந்தோதுகின்றார் கம்பர். அவற்றுள் ஒன்று!

கூற்றம் இல்லை ஓர் குற்றம் இல்லாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தனையின் செம்மையால்
ஆற்ற நல் அறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.
(கம்ப: நாட்டுப்படலம் – 70)

கோசல நாட்டில் குற்றங்களே நிகழாமையால் கூற்றுவனுக்கு அங்கே வேலையில்லை என்கிறார் கம்பர். அப்படியானால் கோசலத்தில் யாருமே இறக்கவில்லை என்று பொருளா?

அப்படியில்லை! மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். எனவே கூற்றமில்லை என்பதைக் கோசலமக்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்தார்கள் என்று பொருள்கொள்ளாமல், மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமையால் சமூகக் குற்றங்களினால் நிகழும் கொடூரக் கொலைகள், அகால மரணங்கள் கோசலத்தில் இல்லை என்றே நாம் பொருள்கொள்ள வேண்டும். மக்களின் சிந்தனை செம்மையாக இருந்தமையால் யார்மீதும் யாருக்கும் சீற்றமோ சினமோ இல்லை. நல்லறங்களைத் தவிர பொல்லாச் செயல்களில் மக்கள் ஈடுபடாமையால் கோசலத்தில் ஏற்றமிருந்ததே தவிர இழிவில்லை என்பது கம்பரின் வாய்மொழி.

இப்படியோர் பண்பட்ட மக்கட் சமுதாயம் எங்கிருந்தாலும் அந்த நாடு நலமும் வளமும் பெற்றுச் சிறப்பதில் வியப்பில்லைதானே?

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 2

  1. //நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே//

    ஆடவர் — ஆண்கள் அன்று — ஆட்சி செய்பவர் என்றே தோன்றுகிறது.

    யதா ராஜா ததா ப்ரஜா — என்ற செங்கிருத வாக்கும், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்னும் தெள்ளுத் தமிழும் சொல்வது ஒன்றே. எனவே பசுமையோ, வறட்சியோ, மலையோ மடுவோ நிலைமை ஏதாயினும்  மன்னன் ஆட்சி சிறப்பாய் இருந்தால் மக்கள் வாழ்வு சிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *