நாங்குநேரி வாசஸ்ரீ

39. கற்புடை மகளிர்

பாடல் 381

அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.

பெறுதற்கரிய கற்பினையுடை இந்திராணியையொத்த
பெரும்பெயர் பெற்ற மகளிரேயாயினும்
தன்னைச் சேர நினையும் ஆசையால்
தன்பின்னே ஆடவர் நில்லா முறையில்
தம்மைக்காக்கும் நல்லொழுக்கமுடையாளே
தம்கணவனுக்கு நல்மனைவி.

பாடல் 382

குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

குடத்துத் தண்ணீரைக் காய்ச்சிக்குடிக்கும்
கொடும் வறுமை வரினும் பருகினால்
கடல் நீரே வற்றுமளவு சுற்றத்தார் வரினும்
கடமையாகிய குணத்தை ஒழுக்கமாகக்
கொண்ட இன்மொழி பேசும் பெண்
கொண்ட இல்வாழ்விற்க்கு மேலானவள்.

பாடல் 383

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் – மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

சுவர்கள் இடிந்தமையால் நால்பக்கமும் வழியாகி
சிறியதாகி எப்புறமும் கூரையின் மேலிருந்து
மழைநீர் வீழினும் இல்லற நெறியில் வல்லவளாய்
மேன்மைமிகு கற்புடன் ஊர்புகழத் திகழும்
மனைவியுடை இல்லமே சிறந்த இல்..

பாடல் 384

கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; – உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.

அன்புடைக் கண்ணுக்கு இனியவளாய் கணவன்
ஆசையுறுமாறு அலங்கரித்துக்கொள்பவளாய்
அச்சம் உடையவளாய் ஊர்ப்பழிக்கு நாணுபவளாய்
அன்புக்கணவனுடன் சமயமறிந்து ஊடல் கொண்டு
அவன் மகிழுமாறு ஊடல்நீங்கி இன்பந்தரும்
அக்கபடமில்லாப் பேச்சுக்களுடையவளே நற்குலப்பெண்.

பாடல் 385

எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; – எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

நாளும் எம் கணவர் எம் தோளைத் தழுவி
நீங்கினும் முதல் நாளின் நாணம் போலவேயின்றும்
நாணம் கொள்கின்றோம் என்றிருக்க பொருளாசையால்
நாணமின்றிப் பலரின் மார்பைப் பொதுமகளிர் எப்படி
நாடித் தழுவுகின்றனரோ?

பாடல் 386

ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; – தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.

நல்ல கொடையுள்ளம் கொண்டவனின் செல்வம்
நுண்ணறிவாளன் கற்றகல்வி போல் பயன்
நல்கும் எல்லோருக்கும்,  நாணமிகு பெண்ணின்
நல்லழகோ தெளிந்த அறிவுடையோன் கைக்கூர்வாள்
நெருங்குதற்கு அரியதுபோல் அரியதாம்.

பாடல் 387

கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; – ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.

தாழ்ந்த கருங்கொள்ளையும் உயர் செங்கொள்ளையும்
தராதரமின்றி பணத்துக்கு ஆறுமரக்காலென வாங்கினானொரு
சிற்றூரான் அதுபோல் எம்மோடு ஒப்பில்லா அழகிய
சிறு நெற்றியுடைப் பொதுமகளிரைத் தழுவிய மலைமார்பன்
குளிக்காது என்னையும் தழுவ வருகின்றான்.
(தூணி- நான்கு மரக்கால், பதக்கு-  இரண்டு மரக்கால், தூணிப் பதக்கு- ஆறு மரக்கால்)

பாடல் 388

கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று – துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.

கொடிய சொற்களைக் கூறாதே பாணனே!
காரணம் நாங்கள் தலைவனுக்கு உடுக்கையின்
இடப்புறம்போல் பயனற்று உள்ளொம், அச்சொல்லை
இங்கிருந்து விலகிச்சென்று உடுக்கையின் வலப்பக்கம்
போலும் அவருக்குப் பயன்தரும் பொதுமகளிருக்குச் சொல்!

பாடல் 389

சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; – தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.

கோரைப்புல் பறித்த இடத்தில் நீர்சுரந்த
குளிர்வயல்சூழ் ஊரிலுள்ள எம்தலைவன் மேல்
ஈ பறந்தாலும் கண்டு வருந்தியவள் நான்
இப்போது தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின்
கொங்கைகள் மோதப்பெற்று சந்தனம்
கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு
கண்டு கொண்டிருப்பவளும் நானே.

பாடல் 390

அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; – கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.

மலரும் அரும்புகள் நிறை
மாலைகள் அணிந்த தலைவன்
எமக்கு அருள்புரிவாரெனும் பொய்யை
எப்போதும் சொல்லாதே பாணனே!
நல்ல கரும்பின் கடைக் கணுக்களுக்கு
நிகரானவர் யாம், ஆதலில் கரும்பின்
இடைக்கணுக்களை ஒத்த பரத்தையிடம்
இப்பேச்சைப் போய்ச் சொல்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *