கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3

0

-மேகலா இராமமூர்த்தி

ஒரு நாடு மேன்மையுற அந்நாட்டு மக்கள் புலனொழுக்கம் மிக்கவர்களாய் இருத்தல் இன்றியமையாதது என்பதைக் காப்பியத்தின் தொடக்கத்திலேயே வலியுறுத்திய கம்பர், அடுத்து அந்நாட்டை ஆளுகின்ற மன்னன் எவ்வாறிருக்கவேண்டும் என்பதையும் கோசலநாட்டு மன்னனான தயரதனை வைத்து விளக்குகின்றார்.

தாய்ஒக்கும் அன்பில் தவம் ஒக்கும் நலம் பயப்பில்
சேய்ஒக்கும் முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப்புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் அன்னான்.
(கம்ப: அரசியற் படலம் – 171)

தயரதன் குடிமக்களிடம் அன்புகாட்டுவதில் தாயைப் போன்றவன். மக்களுக்கு வேண்டிய நன்மைகளையெல்லாம் அளிப்பதில் தவம் போன்றவன் என்று அவன் பண்புகளை விவரிக்கத் தொடங்குகின்றார் கம்பர்.

தவத்தைச் செய்வோரின் நோக்கமே ஏதேனுமொன்றைப் பெறவேண்டும் என்பதே. அதனால்தான் வள்ளுவப் பேராசானும்,

”வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்”
(265) என்று அதன் இயல்பை விளம்புவார்.

தயரதனும் வேண்டியதைத் தரும் தவத்தை ஒத்தவனாக மக்களுக்கு விளங்கியிருக்கின்றான். அடுத்து அவன் சேயைப் போன்றவன் என்கிறார் கம்பர். மக்கள் பிள்ளைகளைப் பெறுவதன் நோக்கம், தமக்குத் துன்பம்வந்த காலத்தில் அவர்கள் உதவுவார்கள்; முதுமைக் காலத்தில் அவர்கள் தம்மை அரவணைப்பார்கள் என்பதே!

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி – 197)

கறையான்களால் அரிக்கப்பட்ட (முதிய) ஆலமரத்தை அதன் விழுது வீழாது தாங்குவதுபோல், முதுமைவந்து குதலைமை தோன்றிவிட்ட தந்தையைப் புதல்வன் தாங்கினால் தந்தையின் துயரம் மறையும் என்று நாலடியார் அறிவுறுத்தியிருப்பது ஈண்டு எண்ணிப்பார்க்கத் தக்கது.

அப்படிப்பட்ட நன்மகனாய்த் தயரதனும் தன் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு இருந்திருக்கின்றான்.

அடுத்து, மக்களுக்கு ஏதேனும் நோய் எனில் அதனைத் தீர்க்கும் மருந்தாகத் தயரதன் இருந்தான் என்கிறார் கம்பர். எனவே மக்களுக்குச் சங்கடங்கள் நேரும் காலத்தில் ஓர் அரசனானவன் அதற்குத் தீர்வாக இருக்கவேண்டுமே தவிர தானே சங்கடத்தைத் தருபவனாக – சிக்கல்களை உருவாக்குபவனாக இருக்கக்கூடாது என்பதையும் இதன்மூலம் நாம் உய்த்துணரமுடிகின்றது. இதனை இந்நாளைய ஆட்சியாளர்களும் உளங்கொள வேண்டும். அதுபோல் அரசனென்பவன் நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர்க்கு உதவும் அறிவுபோன்றிருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார் கவிச்சக்கரவர்த்தி.

எனவே, அரசப்பதவி என்பது மரபுவழியாக வருவது; அப்பதவியில் அமர்வதற்கு அரசமரபில் உதித்தவனாக இருத்தலே போதுமானது என்ற நடைமுறை விதிகளைத் தாண்டி, அரசனென்பவன் அப்பதவியை வகித்தற்குரிய தகுதியும் திறனும் படைத்தவனாகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத்தரக்கூடிய அனைத்து உயர்குணங்களும் கொண்டவனாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயத்தைச் சூரியகுலத் தோன்றலான தயரதன்வழி நமக்கு அறியத்தருகின்றார் கம்பர்.

நாட்டு மக்களைத் தயரதன் எப்படிப் பாதுகாத்தான் என்பதை இன்னொரு பாடலின் வழியாக நமக்குத் தெளிவாக்குகின்றது இராமகாதை.

வயிரம் முதலிய அணிகலன்களை அணிந்தவனும், சிங்கம்போன்ற ஆற்றலுடையவனுமான தயரதன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல் காத்துவரும் இயல்பினைக் கொண்டிருத்தலால், குற்றமற்ற இவ்வுலகின்கண் உள்ள இயங்குகின்ற, இயங்காது நிலையாயிருக்கின்ற அனைத்து உயிர்களும் உறைகின்ற உடம்பாயினான் என்கிறது இப்பாடல்.

வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர்எலாம் தன்உயிர் ஒக்க ஓம்பலால்
செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ்
உயிர்எலாம் உறைவதுஓர் உடம்பு ஆயினான்.
(கம்ப: அரசியற் படலம் – 177)

இங்கே அரசனை உயிர்களுக்கு உடம்பு போன்றவன் எனும் கம்பரின் சிந்தனை அதுவரைத் தமிழ்ப்புலவோர் சொல்லாத புதுமையான ஒன்று. ஆம்! ”மக்களுக்கு உணவாகும் நெல்லோ நீரோ அவர்கட்கு உயிராகா; அகன்ற உலகத்தையும் அதன்கண் வாழுகின்ற மக்களையும் காக்கின்ற அரசனே அவர்கட்கு உயிர்போன்றவன். எனவே அதனை உணர்ந்து அதற்குத்தக்க வகையில் நடத்தல் வேந்தற்குக் கடன்” என்கிறது மோசிகீரனாரின் புறநானூற்றுப் பாடல்.

நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
 (புறம் – 184)

ஆனால் கம்பரோ அரசனே நாட்டுக்கு உயிர்போன்றவன் என்ற சங்கச் சிந்தனையை மறுக்கின்றார். நாட்டிலே மக்களே முதன்மையானவர்கள்; நாட்டுக்கு உயிர்போன்றவர்கள். அந்த உயிர்களைப் பாதுகாக்கின்ற உடல்போன்று – கவசம்போன்று இருப்பதுதான் ஒரு நல்ல அரசனுக்கு அழகு என்ற மாற்றுச்சிந்தனைக்கு அவர் தோற்றுவாய் செய்திருப்பது, மக்களை முதன்மைப்படுத்தும் மக்களாட்சித் தத்துவத்தில் அவருக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. அவ்வகையில் கி.பி. 9 அல்லது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் கம்பர் மக்களாட்சி குறித்து அப்போதே சிந்தித்த முன்னோடிச் சிந்தனையாளராகக் காட்சியளிக்கின்றார்.

மக்களைத் தாயாகவும் சேயாகவும் காத்துவந்த தயரத மன்னனுக்கு நெடுங்காலம் மக்கட்பேறில்லை. தவமாய்த் தவமிருந்து அவன்பெற்ற புதல்வர்கள் இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன் ஆகிய நால்வர்.

தம்முடைய காப்பியத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்திருக்கும் கம்பர், தயரதனின் பிள்ளைகளைப் போற்றிப் பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் சிலவேனும் பாடியிருந்தால் காப்பியச்சுவை மேலும் கூடியிருக்கும். ஏனோ அவர் அதைச் செய்யவில்லை. தம்முடைய மகன் அம்பிகாபதியை அகாலத்தில் பறிகொடுத்த துக்கமே கம்பரைப் பிள்ளைத்தமிழ் பாடவியலாத மனநிலைக்குத் தள்ளிவிட்டது என்பர் சிலர். அதன் உண்மைத்தன்மையை அறியக்கூடவில்லை!

தயரதப் புதல்வர்கள் நால்வருமே குணத்திலும் வீரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். அதிலும் மூத்தவனான இராமன் மக்கள் கொண்டாடும் கல்யாண குணங்கள் பலவும் கொண்டவனாய்த் திகழ்ந்தான்.

ஒருநாள் தயரதனின் அவைக்கு வந்த விசுவாமித்திர முனிவர்,

”தயரதா! காட்டில் நான் செய்யவிருக்கும் தவ வேள்விக்கு அரக்கர்கள் பெரும் இடையூறு செய்யக் காத்திருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து என் வேள்வியைக் காத்துத்தர நின் புதல்வர்களில் கரிய செம்மல் ஒருவனைத் தருதி!” என்று கேட்கின்றார். கரியசெம்மல் என்றதுமே அவர் இராமனைத்தான் கேட்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட தயரதன் பெருங் கலக்கம் அடைகின்றான்.

அப்போது அவனடைந்த துயரத்தை,

எண்இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணில் ஆம்பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்
உள்நிலாவிய துயரம் பிடித்து உந்த
   ஆர்உயிர் நின்று ஊசலாட
கண்இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
   கடுந் துயரம் கால வேலான்.  (கம்ப: கையடைப் படலம் – 328) 

என்கிறார் கம்பர்.

எண்ணருந் தவங்களை மேற்கொண்டவரான விசுவாமித்திரர் சொன்ன இந்தச் சொற்களானது, மார்பின்மேல் எறிந்த வேல்பாய்ந்த புண்ணாகிய புழையிலே, கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போலத் தயரதன் காதுகளில் புகுந்தது. அப்போது அவன் உள்ளத்திலே நிலைத்திருந்த துயரமானது உயிரை வெளியே தள்ள, அவனுடைய ஆருயிர் ஊசலாட, கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படித் தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினால் வருந்தினான் என்பது கம்பர் தீ(கா)ட்டும் தயரதனின் உளச்சித்திரம்.

இங்கே இரண்டு உவமைகளைக் கையாளுகின்றார் கம்பர். வேல்பாய்ந்து குழியாகிப்போன புண்ணிலே தீ நுழைந்தது போல என்பது அவற்றில் முதலாவது. நாம் இக்காலத்தில் ”வெந்த புண்ணில் வேல்பாய்ந்தது போல” என்று சொல்வதைத்தான் ”வேல்பாய்ந்த புண்ணிலே தீ நுழைந்தது போல” என்று மாற்றிச் சொல்லியிருக்கின்றார் கம்பர் எனக் கொள்ளலாம்.

அடுத்து, ”கண் இலான் பெற்றிழந்தான்” எனும் அரிய உவமை. கண்கள் இல்லாதவன் காலம் முழுவதுமே கண்ணில்லாமல் – பார்வையில்லாமல் இருந்துவிட்டால் பார்வையின் பயன் என்னவென்றே அவன் அறியாதிருந்துவிடுவான். ஆனால், அவனுக்கு இடையில் கண்பார்வை கிடைத்துவிட்டால் அவன் அந்தப் பார்வையின் துணையோடு பல்வேறு நற்காட்சிகளைக் காணும் பேறுபெற்றுப் பார்வையின் அருமையை அறிந்தவனாகிவிடுகின்றான். அந்தச் சமயத்தில் திடீரென்று மீண்டும் அவன் பார்வை பறிக்கப்படுவதென்பது எத்தகைய கொடுமை?

அதுபோல்தான் நெடுங்காலம் மகப்பேறின்றி வாடிய தயரதன், பின்னர்ப் புதல்வர்களைப் பெற்று, இப்போது மீண்டும் முனிவரால் அவர்களை இழந்துவிடுவோமோ என்று அஞ்சிய நிலை இருந்தது என்கிறார் உவமைகளைப் படைப்பதில் ஒப்பற்றவரான கம்பநாடர்.

அந்த வேதனையோடு முனிவரை நோக்கிய தயரதன், ”ஐயா! இராமன் சிறுவன்! அரக்கரை அழிக்கும் பணியோ பெரிது; அத்தோடு கடிது. ஆதலால் அப்பணியை முடித்துத்தர நானே வருகின்றேன்” என்கிறான். முனிவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. சீற்றத்தோடு தம் ஆசனத்திலிருந்து எழுகின்றார். அப்போது தயரதனைச் சமாதானப்படுத்தி இராமனை விசுவாமித்திர முனிவரோடு அனுப்பிவைக்க உடன்படச் செய்கின்றார் தயரதனின் குலகுருவும் ஆசானுமான வசிட்டர்.

அதைத்தொடர்ந்து இராமனும் அவனைப் பிரியாத இளவலான இலக்குவனும் விசுவாமித்திர முனிவரோடு காட்டுக்குப் புறப்படுகின்றனர் தயரதன் சம்மதத்தோடு!

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *