நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 7

வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
அஞ்சுவார்க் கில்லை அரண்

பழமொழி-  அஞ்சுவார்க்கு இல்லை அரண்

காலைச் செய்தி பாத்தீங்களா. இன்னிக்கு தலைநகர்ல நம்ம தலைவருக்கு சிலை வைக்கறாங்களாம். பெரிய விழா ஏற்பாடு ஆகியிருக்காம். எல்லாரும் பேசிக்கிடறாங்க.

பஞ்சாயத்துத் திண்ணையில உக்காந்து மாசாணம் சொல்றான். தலைவர் தலைவர்னு உசிர உட்டுட்டுத் திரிஞ்சீங்க. அவருடைய ஆத்மார்த்தமான தொண்டர்னு பெயர் வேற. உங்களுக்கு அழைப்பு வரலியா. நக்கலாகக் கேட்டுக்கொண்டே வந்தாள் என் மனைவி.

தலைவர் செஞ்ச உயிர்த் தியாகத்துக்கு அவருக்குசிலை வைத்து மரியாதை பண்ணறாங்க. அதுக்கென்ன. நல்ல விசயம்தானே. வெளியில் சொன்னாலும் மனசு அசை போடத் தொடங்கியது.

சில நேரங்களில் வெளியில் நிசம் போலப் பேசப்படும் பல செயல்களுக்கான உண்மை வேறாக இருக்கும். ஒருவிதத்தில் இதுவும் அப்படித்தான். நான் தலைவர் கூடவே இருந்ததால அவரப் பத்தி நல்லாத் தெரியும். என்ன நடந்தது என் மனம் பின்னோக்கிச் சென்றது.

பத்து நாளா மக்கள் காய்ச்சல் பீதியில கலங்கியிருந்தாங்க. தலைவர் கண்டுக்கவே இல்ல.. அது என்னமோ காக்கா எச்சத்தால பரவற தொற்றுநோய் போல.. வேகமா பரவிட்டு வந்தது. ஒருநாள் போலத் தலைவருக்கு அந்த வேலை இந்த வேலைனு சொல்லி சமாளிச்சுப் பாத்தோம். கட்சிக்காரங்க நாங்க மட்டும் போய்ச் சமாதானம் பேசினா ஊர் சும்மா இருக்குமா. ஓட்டு வாங்கற சமயத்துல மட்டும் ஒரு இண்டுஇடுக்கு உடாம உங்க தலைவர் அத்தன இடத்துக்கும் வருவாரே இப்போ இந்தக் காய்ச்சலுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்னு குடைந்து தள்ளிட்டாங்க. சாலை மறியல் வேற பண்ண ஆரம்பிச்சாங்க. காய்ச்சல் வந்தவங்க உடல் வலியாலஅவதிப்பட்டாங்களே தவிர எந்தவித உயிர்ச்சேதமும் இல்ல. விவசாயிகள் நிறைஞ்ச இந்த ஊர்ல வயலுக்குப் போக முடியாம ஆனதால மக்களுக்குக் கோபம். கடைசியில ஒருவழியா தலைவர ஒத்துக்க வச்சி அரசு ஆஸ்பத்திரியில நேர்ல நோயாளிகளச் சந்திக்க வச்சோம்.

அதுக்குமுன்ன அவர் பண்ணின ஆர்ப்பாட்டம் இருக்கே அப்பப்பா. டாக்டர வீட்டுக்கு வரச் சொல்லி முதல் முறையா அந்த தொற்றுவியாதி எப்படிப் பரவுதுனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த கையுறை எல்லாம் வாங்கி அணிச்சிக்கிட்டுதான் மருத்துவமனைக்கே வந்தார். அங்க அவரப் பாத்த சந்தோசத்துல ஒருத்தன் ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கிட்டான். அத எதிர்பாக்காத அவர் எங்க தனக்கும் அந்தவியாதி தொற்றிக்கிடுமோன்னு பயந்து அந்த பயத்துலயே நெஞ்சடைப்பு ஏற்பட்டு உயிர உட்டுட்டார்.

அவர் மனைவி எங்களைக் கூப்பிட்டு பயத்துல அவர் உயிர விட்டதா சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டதால பரவுகிற வியாதி பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யப்போன இடத்தில் காய்ச்சல் தொற்றி தன் உயிரைத் தியாகம் செய்தார் எனப்பரப்பினோம். இவரக் கட்டிப்பிடிச்சுக்கிட்டவன் இன்னும் உயிரோடதான் இருக்கான். எல்லாருக்கும் காய்ச்சலும் குணமாகிட்டுவருது.  ஆனா இவர் மட்டும் தியாகிங்கற பெயரோட கொண்டாடப்படறாரு.

யோசனையிலிருந்த மீண்ட நான் எல்லாம் தெரிஞ்ச என் மனைவிகிட்ட பேச ஆரம்பிச்சேன். உனக்குத்தான் தெரியுமே என்ன நடந்துச்சுன்னு. இவரப் போல கோழைகளுக்குத்தான் அஞ்சுவார்க்கு இல்லை அரண் ங்கற பழமொழியே இருக்குபோல. போருக்குப்பயந்தவனப் பாதுகாப்பா இரும்புக்கோட்டைக்குள்ள வச்சாலும் அவன் தன் பயத்துல செத்துருவாங்கறதுதான் அதோட அர்த்தம்.

என்னமோ போங்க நீங்களாச்சு உங்க தலைவராச்சு. அவர் புண்ணியத்துல இன்னிக்குஒரு பழமொழி தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. சொல்லிவிட்டு வெளியேறினாள் என் மனைவி.

பாடல் 8

தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்‘.

பழமொழி- அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்

என்ன குட்டியம்மா சோகமா இருக்கீங்க. புதுசா குடிவந்த அம்மாகிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தீங்க போல. என்ன சொன்னாங்க. கேட்டுக்கொண்டே அவளருகே சென்றேன்.

ஆமாம். சரிதான். நல்லாப் பேசறாங்க. எனக்குக் கூட நெறைய பயனுள்ள அறிவுரைகள் சொன்னாங்க. உங்க பள்ளிக்கூடத்துலதான் வேல பாக்கறாங்களாமே. பெரிய பதவி போல. பள்ளி ஆசிரியையான நான் சுதாரித்துக்கொண்டேன். அப்படியா. எங்க அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்.

நான் வேண்டாம்னு சொல்லச்சொல்ல தலைமை தாங்கற தகுதி உங்களுக்குத்தான் இருக்குன்னு  சாதாரண ஆசிரியரா அந்தப் பள்ளியில சேர்ந்த என் தலையில தலைமைப் பொறுப்பக் கட்டி விட்டுட்டாங்க. என் படிப்ப மதிச்சு ஒருத்தர் கொடுக்கும்போது வேண்டாம்னா சொல்லமுடியும். ஏத்துக்கிட்டேன். இப்போ வேலைச்சுமையால அவஸ்தப் படறேன்.

உன் தோழி சுகன்யாகூட எங்க பள்ளியிலதான் வேல பாக்கறாங்க. அவுங்க சாதாரண ஆசிரியர்தான். நல்லா மரியாதயா இருப்பாங்க. இந்த மாதிரி நெறைய சொன்னாங்க.

அடப்பாவி இப்படியா சொன்னா. மேல சொல்லு. உற்சாகப்படுத்தினேன்.

அவங்களக் கேக்காம கீழ உள்ளவங்க வேலயே பண்ணமாட்டாங்களாம். அவங்களோட மாணவர்களும் அவங்கள உற்சாகப்படுத்த தினமும் ஏதாவது பரிசு குடுத்துக்கிட்டே இருப்பாங்களாம்.  பல விஷயங்களுக்குமுடிவு எடுத்து அவுங்களுக்கு தினமும் தலையே சுத்துமாம். பாவம். கஷ்டமான வேலையில்ல. பரிதாபப் பட்டாள் என் தோழி குட்டியம்மா.

இவ்வளவுநாள் நீ கேக்காததால என் வேலையப்பத்தி சொல்லல. இப்போ சொல்றேன். எங்க பள்ளி பாலர் பள்ளி. அதுல மொத்தமே நாற்பத்தைந்து குழந்தைகள்தான் படிக்கறாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் பதினைந்து குழந்தைகளுக்கு இரண்டு ஆசிரியர்கள். இந்த அம்மா போனவருசம்தான் சேர்ந்தாங்க. குழந்தைங்க புது ஆசிரியரக் கண்டா பழகமாட்டாங்க இல்ல. அதனால போன வருசம் முழுசும் இந்த அம்மா அந்த வகுப்புல குழந்தைகளுக்கு உதவியா தாள்கள வெட்டறது, ஒட்டறது, வகுப்புக்கு மத்தியிலகொடி கட்டி அதில குழந்தைகளோட வேலைகள அலங்காரமாத் தொங்கவிடறது இப்டி பண்ணிட்டிருந்தாங்க.

இந்த வருசம் குழந்தைகள் அவங்ககிட்ட பழகிட்டதால வகுப்பு எடுக்க உடறாங்க. அதத்தான் அந்தம்மா தலைமைப் பதவிங்குது. கூடவேலபாக்கற இன்னொரு ஆசிரியையும் இவுங்களும் கலந்தாலோசிச்சு அன்னிக்கு பலூன் வரையச் சொல்லணுமா, இல்ல ஆப்பிள் படம்வரைஞ்சு குடுத்து கலர் பண்ணச் சொல்லணுமா போன்ற முடிவுகள எடுப்பாங்க. இதத்தான் பொறுப்பான முடிவுகள் அப்டிங்குது.. எல்லா சின்னப் பிள்ளைகளும் எத வரைஞ்சாலும் உடனே டீச்சருக்கோ,அம்மாவுக்கோ குடுப்பாங்க. ஏன் உன் குட்டி தினமும் கார்ட் பண்றேன்னு குட்டி குட்டியாபேப்பரக் கிழிச்சு கலர் பண்ணுதுனு நீ சொல்லமாட்டியா. அதத்தான் அந்தம்மா மாணவர்கள் தரும் பரிசுங்குது.

அடப்பாவி. இதுல வேற அந்தம்மா நீங்க படிச்சுட்டு இப்டி வீட்ல சும்மா இருக்கக் கூடாது. என்னய மாதிரி வீட்டயும் பொறுப்பா பாத்துக்கிட்டு வெளியிலயும் போய்ப் பழகுங்க. இல்லையின்னா கொஞ்ச நாள்ல உங்க வீட்டுக்காரரும், பொண்ணும் மதிக்க மாட்டாங்கன்னு சொன்னதாலதான் சோகமா வந்தேன். நல்ல வேள உங்களப்பாத்து உண்மயத் தெரிஞ்சுக்கிட்டேன்.

அடப் போங்க குட்டியம்மா. இந்தம்மா மாதிரி தற்பெரும பேசிட்டுத்திரியறவங்க நெறையபேர் இருக்காங்க. ஆனா அவுங்க பேச்ச நம்பி புகழறாங்களே அது அடுப்பங்கரையில முடங்கி கெடக்கற நாயப் பாத்து புலின்னு சொல்ற பொய்ப் புகழ்ச்சிக்குச் சமானம். அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல் அப்டிங்கற பழமொழிய நீங்க பள்ளிக்கூடத்துல படிச்சதில்லையா என்ன எனக் கேட்டுவிட்டு குட்டியம்மாவுக்குப் புரிய வைத்த சந்தோஷத்தில் நான் கிளம்பினேன் அங்கிருந்து..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *