வைரமுத்து பிறந்தநாள் – ஒரு வரலாற்றுப் பிழை

1

வித்வான், முனைவர் ச.சுப்பிரமணியன்

இரண்டு நாள்களாக நன்கு சிந்தனை செய்து இந்தப் பதிவினை இடுகிறேன். ஆனால் வருத்தத்தோடு இடுகிறேன்!

தமிழன் வரலாற்றைப் பதிவு  செய்யத் தெரியாதவன் என்பது நீண்ட  நெடுங்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. சரி!

வைரமுத்து பிறந்தநாள் என்று கட்டற்ற தகவல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நாள்  13/07/1953

இதனைவிட ஓர் அகச்சான்று, அவர் எழுதிப் பதிப்பித்த கவிதை நூல்களுள் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’  என்ற நூலின் இறுதிக் கவிதைத் தலைப்பு ‘உயில்’

அந்த உயிலில்

“என் கல்லறையில்
தோற்றம் எழுதுங்கள்!
13/07/1953”

இது அவர் கைப்பட எழுதிய வரிகள்!

காவ்யா சண்முகசுந்தரம் 2013-இல் வைரமுத்து அவர்களுடைய 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பணியைச் செய்தார்.

அந்தப் பணி என்னவென்றால், தமிழகப் பல்கலைக்கழகங்களில் வைரமுத்து அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய ‘ஆய்வியல்நிறைஞர்’, முனைவர் ஆகிய பட்டங்களுக்காகப் பணிந்தளிக்கப்பட்ட ஆய்வேடுகளில் இருந்து அறுபது சிறந்த கட்டுரைகளைத் (இயல் பகுதிகளை) தொகுத்து “வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். அந்தத் தொகுப்பில் என்னுடைய மேற்கண்ட இரண்டு பட்டங்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சான்றுகளால் வைரமுத்தின் பிறந்தநாள் 13/07/1953 என்பது உறுதிப்படுகிறது!.

அப்படியென்றால் 13/07/2020 அன்று அவருக்கு அகவை என்ன?

நிறைவான அகவையைச் சொல்ல வேண்டுமானால் 67 என்று சொல்லியிருக்க வேண்டும்.

தொடங்குகின்ற அகவையைச் சொல்ல வேண்டுமானால் (இதுதான் முறை) 68 என்று சொல்லியிருக்க வேண்டும்.

இரண்டுமில்லாமல் 66 என்றே அத்தனை ஊடகங்களிலும் “வைரமுத்து 66’ என்றே லோகோ போட்டுக் காட்டினார்கள்.

ஸ்டாலின், ‘அவருக்கு வயது 66, அவர் கவிதைக்கு வயது 16’ என்றும் கூறியிருந்தார்.

இன்றைக்குத் தமிழகச் சமுதாயச் சூழலில் இதுபோன்ற பதிவுகள் எந்த மனிதரின் தனிமனித வாழ்விலும் எந்த வளர்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

இருந்தாலும் நாடறிந்த கவிஞர் ஒருவரின் பிறந்தநாள் பற்றிய தெளிவான பதிவைக்கூட நாம் செய்ய இயலாதபோது நம் முன்னோர்களைக் குறைசொல்வது என்ன நியாயம்?

செய்வன திருந்தச்செய்! இது எல்லாருக்கும் பொருந்தும், வைரமுத்து உட்பட!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வைரமுத்து பிறந்தநாள் – ஒரு வரலாற்றுப் பிழை

  1. வணக்கம்! நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியான தரவுகளோடு இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்து முன்வைக்கப்படின் வல்லமை அதனையும் மனமுவந்து வெளியிட வேண்டும் என்பதையும் அன்புடன் வலியுறுத்துகிறேன். ஓர் உண்மையைப் பதிவு செய்கிறபோது பிடிவாதம் எதற்குஃ இத்தகைய பிழைகள் அவ்வப்போது களையப்படல் வேண்டும் என்பதும் பதிவு தவறென்றால் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் சரியான பதிவாயின் பிறரும் அதனைப ;பின்பற்றுதல் வேண்டும் என்பதும் ஒரு நீண்ட இலக்கிய பயணத்தைக் கொண்ட தமிழுக்குத் தேவைதானே! மீண்டும் ஒரு முறை நன்றி கூறி அமைகிறேன்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *